இனாமுல்லாஹ் ஏன் அரசியல் களத்திற்கு மீண்டும் வருவதில்லை ?

0

public-opinionஎனது எழுத்துக்களில் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மீண்டும்  அரசியல் களத்திற்கு வருமாறு அழைக்கின்றார்கள், இன்னும் சிலர் இல்லை சிவில் சமூக செயற்பாடுகள் போதும், நீங்கள் எழுத்துப் பணிகளோடு நின்று விடாது மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றார்கள்.

அவர்களுக்கு ஒருசில விடயங்களை நான் சொல்ல விரும்புகின்றேன், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை எங்கள் மத்தியில் பல இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கின்றன; தப்லீக் ஜமாஅத், தரீக்காக்கள், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத் அமைப்புக்கள், சலாபி அமைப்புக்கள், இக்வானுல் முஸ்லிமூன் பின்புல ஜமாதுஸ் ஸலாமா, அல்ஷபாப் போன்ற அமைப்புக்களுக்கு  அப்பால் தேசிய முஸ்லிம் இளைஞர் அமைப்பு (YMMA) முஸ்லிம் லீக், சோனக இஸ்லாமிய கலாசார அமைப்பு (MICH) , முஸ்லிம் கல்வி மாநாடு இவற்றிற்குப் புறம்பாக பல தொண்டர் நிறுவனங்கள், முஸ்லிம் எய்டு, அல்-ரஹ்மா, வாமி, இஸ்லாமிய நிவாரண அமைப்பு என இன்னும் பல தேசிய பிராந்திய அமைப்புக்கள் இருக்கின்றன.

பல்கலைக் கழகங்களில் முஸ்லிம் மஜ்லிஸுகள் இருப்பது போல் தேசிய அளவில் இன்னும் பல மாணவர்கள் அமைப்புக்களும் இருக்கின்றன, தளபா SLISM, ஒம்சாத் OMSED, ஓம்சா AUMSA,  இன்னும் பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், ஷூராக்கள், PDA, HEDS போன்ற பல ஊர்மட்ட கல்வி அபிவிருத்தி அமைப்புக்களும் இருக்கின்றன.

ashyஅரசியலைப் பொறுத்தவரை தேசிய அரசியலில் UNP, SLFP, JVP, BJP போன்ற காட்சிகளில் முஸ்லிம்கள் இருப்பது போல் பல முஸ்லிம் கட்சிகளும் இருக்கின்றன, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சி முன்னணி போன்ற அமைப்புக்களும் இருக்கின்றன.

மேற்சொன்ன அத்தனை அமைப்புக்களிற்கும் உள்நாட்டு வெளிநாட்டு வளங்கள், அரச அதிகாரங்கள், நிதி ஒதுக்கீடுகள், தனவந்தர்களின் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புக்கள் என பல்வேறு வருவாய் மற்றும் வளங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

மேற்சொன்ன எல்லா அமைப்புக்களும் தம்மால் இயன்ற பணிகளை செய்து வருகின்றன, அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை உரிமை அரசியல் செய்ய வேண்டியவர்கள் அபிவிருத்தி அரசியல் என்று வழமையான சலுகைகளுக்கான அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றிற்கு மேலாக மேற்சொன்ன பல தரப்புக்களையும் அவ்வப்போது ஒன்றிணைத்து முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து சில நகர்வுகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும், முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் பார்கின்ற பொழுது தனிநபர்கள் தமது சக்தி வரையறைகளுக்குள் நின்று பணி RCC1செய்வது போல், அமைப்புக்கள் அவற்றின் சக்தி மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்குள் பல பணிகளை செய்து வருகின்றன, இவை அனைத்தும் கூட்டாக செய்யமுடியுமான பணிகளில் ஒரு சிலதை அவ்வப்பொழுது தேசிய சிவில் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

இவை தவிரவும் பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்கள் அறிஞர்கள் கல்வி உயர்கல்விச் சமூகத்தினர் என சமூகத்தின் அறிவு முதிசங்கள் தம்மாலியன்ற பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.

மேற்சொன்ன எல்லாத் தரப்புக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவ்வப்போது மேற்கொள்கின்ற பணிகளுக்கு அப்பால் எல்லாத் தரப்புக்களையும் நிரந்தரமாக ஒருங்கிணைப்பதன் மூலம் மாத்திரமே எய்தப்பட முடியுமான பலவேறு இலக்குகள் எமது தேசிய மற்றும் சமூக வாழ்வில் இருக்கின்றன, சொல்லப்பட்ட எல்லாத் தரப்புக்களும் எமது சமூகம் கொண்டிருக்கும் மிகப் பெரிய வளங்கள், அவற்றை மூலோபாயத் திட்டமிடல்களுடன் முறையாக முகாமை செய்கின்ற ஒரு பொறிமுறை இல்லாமை இன்று வெகுவாக உணரப் படுகின்றது.

மேற்சொல்லப்பட்ட பல்வேறு தேசிய அளவிலானது பிராந்திய அளவிலானதும் சன்மார்க்க சிவில் மற்றும் அரசியல் தலைமைகளுடன் கடந்த மூன்று தசாப்தகாலமாக எனக்கு பல்வேறு மட்டங்களில் ஈடுபாடும் அனுபவமும் இருக்கின்றமை உங்களில் பலருக்குத் தெரியும், புதிய தலை முறையினருக்கு தெரியாமலும் இருக்கலாம்.

எனது சிந்தனைகளை கருத்துக்களை நிலைப்பாடுகளை அவ்வப்பொழுது தேசிய ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைத் தளங்களிலும் பகிர்கின்ற பொழுது மேற்சொன்ன எல்லாத் தரப்புக்களும் அவற்றை அறிந்து கொள்வதற்கும் புதிய தலைமுறையினர் மத்தியில் விளிப்புணர்வு ஏற்படுவதற்கும் அவை காரணமாக இருக்கின்றன, எமது தேசிய அரசியல் விவகாரங்கள், சமூக பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார விவகாரங்கள் குறித்த பொது சன அபிப்பிராய உருவாக்கத்தில் என்னாலியன்ற பங்களிப்பினை செய்து வருகின்றேன்.

கடந்த மூன்று தசாப்த கால எனது அரசியல் சமூக தஃவா செயற்பாட்டு அனுபவங்களை மையமாக வைத்து நீண்டகாலமாக நான் வலியுறுத்தி வரும் ஒருசில முக்கியமான விடயங்கள் இருக்கின்றன :

எமது சமூகம் எல்லா மட்டங்களிலும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய தலைமைத்துவக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும், தனி நபர்கள் இயக்கங்கள் கட்சிகள் தேசிய பிராந்திய உள்ளூர் அமைப்புக்கள் என சகல சமூக நிறுவனங்களும் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக் கூறலும் உள்ள இஸ்லாமிய ஷூரா முறைகளை அடிப்படியாக கொண்டிருத்தல் வேண்டும்.

nsc-meசமூக வாழ்விலும் தேசிய வாழ்விலும் இந்த சமூகத்திற்கான தற்காலிக, இடைக்கால மற்றும் நீண்ட கால மூலோபாய திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.

எமது இருப்பு, பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள், கடமைகள், சமாதான சகவாழ்வு, கல்வி, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, சமாதான சகவாழ்வு, தேசிய கட்டுமானத்திற்கான எமது பங்களிப்பு போன்ற விடயங்களில் எமக்கென உயரிய இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் ஒன்று இருத்தல் வேண்டும்.

அந்த அடிப்படையில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் இருக்கும் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு பொறிமுறையை நாம் கொண்டிருத்தல் கட்டாயமாகிறது, எமது தனித்தனி நிகழ்ச்சி நிரல்கள் அமைப்பு ரீதியிலான நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகள் கோட்பாடுகள் என்பவற்றிற்குப் புறம்பாக  வேற்றுமைகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாடுகளை எய்த முடியுமான விவகாரங்களில் எம்மை ஒருங்கிணைக்க முடியுமான ஒரு ஷூரா கட்டமைப்பை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருந்தது.

அந்த அடிப்படையில் தான் கடந்த பல வருடங்களாக தேசிய ஷூரா சபையின் உருவாக்கத்தில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றேன், அல்ஹம்துலில்லாஹ், இன்று தேசிய அளவில் கிளைகளைக் கொண்டுள்ள சுமார் 20 இஸ்லாமிய அமைப்புக்களையும், பல்துறை சார் நிபுணர்களையும் கொண்டுள்ள தேசிய ஷூரா சபை தோற்றம் பெற்றுள்ளது.

“தேசிய ஷூரா சபை” எமது சமூக மற்றும் தேசிய வாழ்வில் பல்வேறு முக்கியமான துறைகளில் நிபுணர் குழுக்களைக் கொண்டு தற்காலிக இடைக்கால மற்றும் நீண்டகால மூலோபாயத் திட்டமிடல்களை வகுத்து பல்வேறு குறை நிறைகள் வளப் பற்றாக் குறைகளுக்கு மத்தியிலும் படிப் படியாக செயற்படத் தொடங்கியுள்ளது.

NSCதேசிய அளவில் இன்று பணிகளை ஆரம்பித்துள்ள “ஷூரா சபை” பிராந்திய அளவிலும் அடிமட்டங்களிலும் சமூகத் தலைமைகளை ஒன்றிணைக்கின்ற வேலைத் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் நாட்டின் அரச தலைமைகள் கூட தேசிய ஷூரா சபையினை இந்தக் குறுகிய காலத்திற்குள் முஸ்லிம் சமூகத்தின் பிரதான சிவில் தலைமையாக அங்கீகரித்துள்ளன, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்களை ஏற்றுக் கொள்கின்ற உடன்பாடுகளுக்கு வந்திருக்கின்றார்கள். அல்-ஹம்துலில்லாஹ்.

இவ்வாறான ஒரு பணி ஆரவரங்களிற்கு அப்பால் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது ஒரு தனி நபராக அரசியலில் ஈடுபடுவதோ, கட்சி அமைப்பதோ, அல்லது மற்றுமொரு இஸ்லாமிய அமைப்பை தோற்றுவிப்பதோ இன்றைய தேவை என நான் கருதவில்லை.

இன்று பல்வேறு தரப்புக்கள் என்னை அரசியலுக்கு வருமாறு அழைக்கின்றன, குறிப்பாக கண்டி அல்லது கொழும்பு மாவட்டத்தில் களமிரங்குமாறு  ஒரு தேசிய அரசியல் கட்சியிடமிருந்து அழைப்பு வந்திருக்கின்றது, அதேபோன்று முஸ்லிம் அரசியல் கூறுகளை ஒருங்கிணைக்கின்ற வேலைத் திட்டமொன்றிற்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருக்கின்றது, என்றாலும் ஒரு தனிநபராக அன்றி பலமான சிவில் சமூகத் தலைமை ஒன்றினூடாகவே நாம் எதிர் கொண்டுள்ள சவால்களிற்கு முகம் கொடுக்க முடியும் என்று மிகவும் உறுதியாக நம்புகின்றேன்.

உரிமைப் போராட்டமாக நாம் அன்று தொடங்கிய தனித்துவ அரசியல் சலுகைகளுக்கான சூதாட்டமாக மாறிப்போனதால் இன்று சிதறுண்டு சின்னாபின்னமாகி தேசிய அரசியல் சக்திகளின் காலடியில் சரணாகதி அரசியல் செய்கின்றது, பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது, இந்த கையாலாகாத அரசியல் சாக்கடைக்குள் மீண்டு செல்வதை நான் விரும்பவில்லை.

இன்ஷா அல்லாஹ், என்னை அரசியலுக்கு வருமாறு அழைக்கின்ற நண்பர்களையும், சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அழைக்கின்ற நண்பர்களையும் தேசிய ஷூரா சபையின் வேலைத் திட்டங்களில் எல்லா மட்டங்களிலும் இணைந்து செயற்பட முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ்,  அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஷூரா அமைப்பு முறை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் சிறந்த தலைமைத்துவக் கட்டமைப்பாக வளர்ந்து வருவதோடு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவ்வப்போது மிகவும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கான மூலோபாயங்களையும் கொண்டிருக்கும்.

Unity3முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் குறுகிய, நீண்ட மற்றும் இடைக்கால நிகழ்ச்சி  நிரல்களை இந்த தலைமைத்துவம் வகுத்துக் கொள்ளும். தனி நபர்களையோ தனி நபர்களை மாத்திரம் நம்பியுள்ள  அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ அல்லது தங்களுக்குள்   கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் வேறு பட்டிருக்கும் இயக்கங்களையோ மாத்திரம்  நம்பியிராது அந்த  சகல தரப்புக்களையும் அரவணைத்துச் செல்கின்ற தேசிய ஷூரா ஒன்றின் அவசியம் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை அல்லது சகோதர சமூகங்களை மாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு  முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப்   பின்னால் சர்வதேச முஸ்லிம்  உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர  முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர  மூலோபாயத் திட்டமிடல்களும் உளவுச் சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.

இவ்வாறான பல்வேறு பல்வேறு பரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் எமது குறுகிய  சமூகத்தை மாத்திரம் மைய்யப்படுத்திய அரசியல், தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை ,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல் சக்திகளோடும் புரிந்துணர்வோடு சமயோசிதமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து செயற்பட  வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

இத்தகைய தலைமைத்துவக் கட்டமைப்புகள், நமது சிவில் மற்றும் அரசியல், இயக்க தலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டிய நிகழ்ச்சி நிரல் களை, வேலை திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, அவர்களது சேவைக் காலத்தையும், தராதரத்தையும், மதிப்பீடு செய்து நிர்ணயிக்கின்ற தகுதியையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.

About author

No comments

இஸ்லாத்தின் பார்வையில் பல்கலைக் கழகங்களில் பகிடி வதை மிகப் பெரிய சாபக் கேடாகும்..!

Aமுஸ்லிம் மாணவ மாணவியர்  எந்த கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில் கற்றாலும் உயரிய இஸ்லாமிய பண்பாடுகளை  அணிகலன்களாக கொண்டிருக்க வேண்டும், வளர்ந்தவர்களான  இவர்களது  ஒவ்வொரு நடவடிக்கையும் சொல்லும் செயலும் பண்பாடுகளும் அவர்களது  வாழ்விலும், குடும்ப சமூக  வாழ்விலும்  நேரிடையானதும் எதிர் மறையானதுமான தாக்கங்களை கொண்டிருக்கும் அதேவேளை அவர்கள் ஒவ்வொருவரினதும் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com