ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்திலும் பாரிய மாற்றம் வேண்டும்.

0

O முஸ்லிம் அரசியல் அமானிதம் பாழ் படுத்தப்படுகின்றதா ? பங்காளர்களும் பார்வையாளர்களும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும், அல்லாஹ்வை, அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிக் கொள்ளுங்கள்.

“அமானிதம்” எவ்வளவு பாரதூரமானது, அது எவ்வளவு மகத்தானது என்பதனை மிகச் சிறந்த உவமான உவமேயங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு உணர்த்துகின்றான்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]

ashruffஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள்  தலைவர் அஷ்ரஃப் அவர்களது வபாத்திற்குப் பின்னர் இடம்பெற்று வரும் பிளவுகள் அந்தப் பேரியக்கத்தை நிறுவிய ஆரம்பகாலப் போராளிகள் அந்தப் பாசறையில் இன்று வரை தொண்டர்களாக இருந்து பணியாற்றும் சகோதர சகோதரிகள் என அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

குறிப்பாக, உள்ளே இருக்கின்ற ஆயிரக்கணக்கான உயர்மட்ட அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அபிமானிகள் கட்சித் தலைமையின் பக்கமுள்ள தவறுகளை சகித்துக் கொண்டு பொறுமை காப்பது அவர்கள் அவற்றை நியாயப் படுத்துவதற்காக அல்ல என்ற உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், கட்சி யாப்பிலும் கட்டமைப்பிலும் மற்றம் வரவேண்டும் என்பதில் அவர்களும் கவலை கொண்டுள்ளனர், என்றாலும் முஸ்லிம்களின் கண்நீராலும் செந்நீராலும் அர்பணிப்புக் களாலும் கட்டி எழுப்பபட்ட தமது அரசியல் பாசறையை, முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தந்த பேரியக்கத்தை துறந்து வெளியே வர முடியாத அளவு அதன் மீது பற்றையும் பாசத்தையும் கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.

அதேபோன்றே, தத்தமது சொந்த அபிலாஷைகளுக்காக அன்றி கட்சிக்கு வெளியில் இருந்து இதயசுத்தியோடு குரல்  குரல் கொடுக்கும்  ஆரம்பகாலப் போராளிகளும் அபிமானிகளும் முஸ்லிம்களின் கண்நீராலும் செந்நீராலும் அர்பணிப்புக் களாலும் கட்டி எழுப்பபட்ட தமது அரசியல் பாசறையை, முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தந்த மக்கள் பேரியக்கத்தை சீர்திருத்தங்களுக்கு உற்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்றும் பிரிந்து நின்று செயற்படுபவர்களை பொதுவான இலக்குகளில் ஒன்றுபடச் செய்ய வேண்டும் என்றே எதிர்பார்கின்றனர்.

tree-3தேசிய அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுமே அரசியல் நீரோட்டத்தின் பிரதான கட்சிகளாகும், அரசியல் கூட்டணிகள் அமைவதாக இருந்தாலும் அவற்றை மையமாக வைத்தே ஆட்சிகளும் அமைகின்றன, அதேபோன்றே முஸ்லிம் அரசியலில் குறிப்பாக வடக்கு கிழக்கில் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கமே பிரதான அரசியல் சக்தியாகும் அதனை மையமாக வைத்தே பிராந்திய மற்றும் தேசியக் கூட்டணிகள் அமைய வேண்டும் என போராளிகள் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் பாரிய சீர்திருந்த்தங்கள் வரவேண்டும் என குரல் கொடுக்கின்ற பலரும் பிரிந்து நின்று குழுக்களாக செயற்படுகின்ற மாற்று அணிகள் குறித்து திருப்திப் படுவதற்கும் இல்லை, ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் ஏற்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக முன்வைக்கப் படுகின்ற பல்வேறு குற்றச் சாட்டுக்களில் கடந்தகலங்களில் அவர்களும் பங்காளர்களாக இருந்திருக்கின்றார்கள், சமகாலத்தில் அவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வேண்டும் என்றே புதிய தலைமுறை இளைஞர்கள் எதிர்பார்கின்றார்கள், உள்ளிருந்தும் புறமிருந்தும் மாற்றங்களை நோக்கி தமது தலைமைகளை இழுத்துச் செல்வதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள், அவ்வாறான இலக்குகளுடனேயே “மாற்றத்திற்கான இளைஞர் செயலணி” களத்தில் இறங்கியுள்ளது.

Change5இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் கட்சியின் பிரதானிகளால் மீறப்படுகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும், அசிங்கங்களை அரங்கேற்றி அலகு பார்ப்பதற்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது, பிழையான முன்மாதிரிகளை ஒரு பொழுதும் இளம் தலைமுறையினர் மத்தியில் நியயப் படுத்தவோ அவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை, தவறுகள், குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், அராஜகங்கள் , ஊழல் மோசடிகள் இடம் பெறுவதனை அறிந்தும் அறியாமல் அருகாமை வேண்டி உறவு கொள்ளும் பார்வையாளர்களும் பெரும் பாவங்களின் பங்காளர்களே என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

உட்கட்சி ஜனநயகம் மறுக்கப்பட்டு எதேச்சாதிகார தலைமை ஒன்றை உருவாக்கும் கட்சியின் யாப்பு அத்தகைய பிணக்குகளிற்கும், பிளவுகளிற்கும் காரணமாக இருக்கின்றது, கட்சியின் தலைமைத்துவ கட்டமைப்பு அதிகாரங்கள், அரசியல் அதிகாரங்கள், மாகாண மாவட்ட உள்ளூர் மட்ட தலைமைகள் என எல்லா மட்டங்களிலும் நீதியும் நியாமுமான முறையான தலைமைத்துவக் கட்டமைப்புப் பொறிமுறை யாப்பில் இருந்தாலும் அமுலில் இல்லாமையே அடுத்த மிகப் பெரும் குறையாகும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் மட்டுப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் கொண்ட முறையாக மாற்றப்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு துறை ரீதியாக சுயாதீனக் குழுக்கள் அமைக்கப் பட்டது போன்றதொரு முற்று முழுதான யாப்பு மாற்றம் ஒன்றை கட்சி மீல்வரிவு செய்வதன் மூலமே இந்த மக்கள் பேரியக்கத்தை மீள் நிர்மாணம் செய்ய முடியும்.

SLMCஎல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சிய, கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Collective Responsibility, Transparency and Accountability) உள்ள ஒன்றுபட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் மாத்திரமே எமது இருப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்.

அவ்வாறான அடிப்படைப் பண்புகளை இழந்தமையினாலேயே எமது போராட்ட அரசியல் தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு சூதாட்ட அரசியலாக பரிணாமம் அடைந்து பங்காளிச் சண்டைகளுக்குப் பலியாகி இன்று தேசிய அரங்கில் கையாலாகாத சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்டும் அரசியலில் அனாதையாகி அந்தரப்பட்டு நிற்கின்றது.

எமது வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கான மாற்றீடு குறித்து சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமூகத்தின் ஒவ்வொரு ஆண் பெண் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையாகும்.”

ஒரு குழுமச் செயற்பாட்டில் துரோகிகள் அதிருப்தியாளர்களாக அவதாரம் எடுக்கலாம், காட்டியும், கூட்டியும் கொடுக்கலாம், ஆனால், அதிருப்தியாளர்கள் எல்லோரும் துரோகிகளாக இருக்கமாட்டார்கள், உண்மையான  துரோகிகள் குழுமத்தின் உச்சத்தில், அதிகார மையத்தில் அமர்ந்திருப்பார்கள்.

SLMC2போராட்டங்கள் சூதட்டங்களாக மாறுகின்ற பொழுது கொள்கைக்கும்,தேசத்திற்கும், சமூகத்திற்குமான விசுவாசம் உண்மைப் போராளிகள் உள்ளங்களில் மேலோங்கி நிற்கின்றன, அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் போலிகள் போராட்ட சுலோகங்கள் தாங்கி மக்களின் பாமரத்தனத்தில் சவாரி செய்வார்கள், உண்மைப் போராளிகள் புரியப்படாதவ்ர்களாய்,புறந்தள்ளப்பட்டு சமூகத் தளத்தில் அனாதரவாகி விடுவார்கள்.

உள்ளிருக்கும் துரோகிகளும்,வெளியேறும் துரோகிகளும்  போராட்டங்களை சலுகைகளுக்காய் விலை போவதை சாணக்கியம், சாமர்த்தியம் என்பார்கள், சாதனைகள் என்பார்கள், ஒன்று மட்டும் உண்மை தேசத்தையும், மக்களையும், சமூகத்தையும் ஏமாற்றுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள நீண்ட காலம் எடுக்க மாட்டது.

முஸ்லிம் அரசியல் அமானிதம் பாழ் படுத்தப்படுகின்றதா ? பங்காளர்களும் பார்வையாளர்களும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும், அல்லாஹ்வை, அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிக் கொள்ளுங்கள்.

கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள். கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள், ஊடகப்பணிகள், பத்திரிக்கை தர்மங்கள்,முடிவுகள் சகலதும் அமானிதங்களாகும். வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள் அமானிதங்கள் ஆகும், சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும்.

“அமானிதம்” எவ்வளவு பாரதூரமானது, அது எவ்வளவு மகத்தானது என்பதனை மிகச் சிறந்த உவமான உவமேயங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு உணர்த்துகின்றான்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]

Shoora4உண்மை,நேர்மை, நீதி, நியாயம், நன்மை, சத்தியம், அன்பு, கருணை, மனிதாபிமானம் என எல்லா உயரிய மானுட விழுமியங்களையும் போற்றி நாம் வாழ்வது எவ்வளவுக்கெவ்வளவு பிரதானமானதோ அதைவிடவும் பன்மடங்கு பிரதானமானது அவற்றைப் பேணும் சான்றோர் பக்கம் சார்ந்து நிற்பதும் அவர்களுக்கு தோள் கொடுப்பதும் ஏனெனில் கூட்டு வாழ்வில் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் சத்தியத்தை மேலோங்கச் செய்வது எங்கள் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்டுள்ள தலையாயகடமையாகும்.

மேற்படி அம்சங்களை கவனத்திற் கொள்ள முடியாத அளவு ஆன்மீக படித்தரங்களை அடையாது அசத்தியத்தையும் அதன் காவலர்களையும் ஆதரிக்கும் தனி நபர்களும் குழுக்களும் “க்ஹியானத்” எனும் அமானித மோசடிக் காரர்களாகும், உலகில் போலிகளின் கவர்சிகள்கள், அவர்கள் வசமுள்ள செல்வம் செல்வாக்கு அதிகாரங்கள் எம்மை குருடர்களாக, செவிடர்களாக மாற்றிவிடுமாயின் யுக முடிவின் பொழுது “தஜ்ஜால்” சதி வளையில் அசத்தியத்தில் அறிந்து கொண்டே விழுகின்ற துர்பாக்கியசாளிகளாக நாங்கள் ஆகிவிடுவோம்.

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி மற்றும் நிர்வாகம் புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.

Solar-Map-நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, “அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு,  தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)  நூல்: முஸ்லிம் 3729

அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும் போது அவர்களைக் கடக்க விடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.

(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 329

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 8:28)

அமானிதங்களை உரிய முறையில் ஒப்படைக்காமல் ஏமாற்றுபவர்கள் பெரும் பெரும் அழிவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

death1ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை” என்றனர். வேறு சிலர், “அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, “மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) “அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்” என்றார். அப்போது “அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” எனக் கேட்டார். அதற்கு, “எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: புகாரி (59)

 

About author

No comments

பாலஸ்தீன் காஸாவின் நிலை கிழக்கு முஸ்லிம்களுக்கு வந்து விடக் கூடாது!

உள்ளூராட்சித் தேர்தல்களில் நாம் வழங்கும் மாக்கள் ஆணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது! ஆபத்து உள்வீட்டில் காத்திருக்கிறது. பாலஸ்தீன் மக்கள் தமது தேசத்தைப் பறி கொடுத்திருக்கிறார்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் அவர்களை காஸாவிலும், மேற்குக்க் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com