மாற்றத்திற்கான இளைஞர் செயலணியில் எனது வகிபாகம்.

0

O பெப்ரவரி மாதம் (2017) ஐந்தாம் திகதி இரவு 10:30 மணிக்கு எனது முகநூலில் கீழ்காணும் பதிவை இட்டேன்:

“போராட்ட உணர்வுகள் மழுங்கிப் போன இளைஞர்கள் உள்ள வரை சமூகங்கள் எழுச்சி பெறுவதில்லை, காவு கொள்ளப் படுவதோ அவர்களது உலகம்.”

CHANGE8கவலையடைந்த பல நண்பர்கள் நீங்கள் களத்திற்கு வந்து வழிநடத்தினால் மாற்றத்தை நோக்கி பயணிக்க நாங்கள் தயார் என்று பதிவுகளூடாகவும், அழைப்புகளூடாகவும் கேட்டுக் கொண்டனர், அவர்களது உணர்வலைகளை பரிசீலிப்பதற்காக இன்ஷா அல்லாஹ் 10 பத்தாம் திகதி மாலை ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகில் ஒன்று கூடுவோமா? என்று கேட்டேன்.

நான் எதிர்பாராத வகையில் காட்டுத் தீ போல் செய்தி பரவியது உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அழைப்புக்களும் வரவேற்பும் வந்து குவிந்தது, வெள்ளி மாலை நிகழ்வை திட்டமிடுவோம் என பலரும் கேட்டுக் கொண்டனர், ஆனால் எந்த வித தெளிவான் இலலக்குகளும் திட்டமிடலும் முன்னேற்பாடுகளும் இல்லாமல் இளைஞர்களை  ஒன்று கூட்டுவதில் பயனில்லை எனவே தெளிவானதொரு வேலைத்திட்டத்துடனும் மூலோபாய  திட்டமிடல்களுடனும் நாம் “மாற்றத்திற்கான இளைஞர் செயலணி” எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தோம்.

கட்டாரில் இருந்து சகோதரர் அன்வர்அலி (சம்மாந்துறை) அவர்கள் தொடர்புகொண்டு ஷெய்க் நீங்கள் அழைப்புவிடுத்துள்ள இளைஞர் செயலணிக்கு ஒரு முகநூல் குழுமத்தை உருவாக்கவா எனக் கெட்ட பொழுது ஏற்கனவே 2015.12.18 அன்று LOBBY FOR CHANGE என நான் வடிவமைத்திருந்த முகநூல் பக்கத்தை (PAGE) போன்ற ஒரு (GROUP) இணை வடிவமைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் அதனை வடிவமைத்தார்.

public-opinionகட்டாரில் இருந்து என்னை “BROTHERS” வாட்ஸ்அப் குழுமத்தில் சகோதரர் ரிசார்ட் மனாப் (அக்கரைப்பற்று) அவர்கள் இணைத்திருந்தார், வழமைபோல் உடனடியாக அந்தக் குழுவில் இருந்து நீங்கிக் கொண்டேன், பிறகு என்னோடு தொடர்புகொண்ட அவர்: ஷெய்க் நீங்கள் இளைஞர் எங்களை வழிநடாத்துவதாயின் நாங்கள் தயாராக இருக்கிறோம் அதற்குரிய குழுமத்தை அமைக்க விரும்புகின்றேன் என அவரது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார், அதன்படி LOBBY FOR CHANGE  என குழுமங்களை உருவாக்குமாறு வேண்டிக் கொண்டேன், அல்ஹம்துலில்லாஹ் அந்தக் குழுமங்களில் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நண்பர்கள் ஆர்வத்தோடு இனைந்து வருகின்றார்கள்.

தற்காலிகமாக ஒரு வாட்ஸ்அப் ADMIN முகாமைத்துவக் குழு ஒன்றை சகோதரர் ரிஷாத் மனாப் அமைத்திருந்தார் அதில் சவூதி அரேபியாவில் தொழில் புரியும் சகோதரர் சபூர் ஆதம் (அக்கரைப்பற்று) இலண்டனில் உள்ள சகோதரர் அப்துல் வாஜித் (ஏறாவூர்), மற்றும் இலங்கையில் உள்ள சகோதரர்கள் அஷ்ரப் அஹமத், நவ்ஷாத் மஹரூப் (அட்டாளைச்சேனை), ஷம்சுல் ரஷீத் (மருதமுனை) ஆகியோர் சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தனர். இன்னும் பல சகோதரர்கள் நாடு முழுவதிலுமிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கின்றார்கள்.

கண்டிப்பான சில நிபந்தனைகள்:

ஒத்துழைக்க முன்வந்த அனைத்து சகோதரர்களிடமும் மிகவும் தெளிவாக பல விடயங்களை நான் வலியுறுத்திக் கூறியிருந்தேன் அவர்களும் அவற்றையே வலியுறுத்தினார்கள், அதாவது இந்த இளைஞர் அணி களத்தில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளுக்குள் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படப் போவதில்லை, மாறாக எல்லா முகாம்களிலும் குழுக்களிலும் உள்ள இளைஞர்களை ஒரு தளத்திற்கு கொண்டுவந்து எமது சமூக அரசியல் பொருளாதார கல்வி கலாசார வாழ்வில் காத்திரமான மாற்றங்களை நோக்கிய வேலைத்திட்டமாகவே இது இருக்க வேண்டும்.

பத்தோடு பதினொன்றாக இன்னும் ஒரு அணியை தோற்றுவிப்பதும் முரண்பாடுகளை வளர்ப்பதும் பிளவுகளை பிணக்குகளை உருவாக்குவதும் வன்முறைகளை நோக்கி இளைஞரை வழி நடத்துவதும் எமது நோக்கம் அல்ல, கடந்த மூன்று தசாபதங்களிற்கு முன்னர் முஸ்லிம்களது இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் உச்சக் கட்டத்தில் நிலவிய பொழுது இளைஞர்களை எவ்வாறு வன்முறைகளை நாடாது ஜனநாயக வழிமுறைகளை நோக்கி பாதுகாப்பாக வழி நடாத்தினோமோ, அதேபோன்றே உள்ளிருந்து வரும் சவால்களிற்கு முன்னால் இளைஞர்கள் வன்முறைகளை நாடிவிடக் கூடாது அவர்களை பல்வேறு சக்திகள் காவு கொள்ளக் காத்திருக்கின்றன என்பதில் நாம் கரிசனையாக இருக்கிறோம்.

வேறுபாடுகளுக்கு மத்தியில் பொதுவான இலக்குகளில் இணக்கப்பாடுகளை எய்தச் செய்கின்ற சமூக ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற முதற்கட்ட பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கு சில நிபந்தனைகள் இருக்க வேண்டும்,  எந்தவொரு அரசியல் கட்சியிலும் நிறைவேற்றுத் தராதரத்தில் உள்ளவர்கள், அமைப்பாளர்கள், தீவிர ஆதரவாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த அணியில் தற்போதைக்கு இணைந்து கொள்ள முடியாது, அதன் மூலம் அவர்களது நிகழ்ச்சி நிரல்களின் பால் மாற்றத்திற்கான இளைஞர் செயலணியை உள்வங்குகின்ற நிலைமைகள் வந்துவிடக் கூடாது.

ஏன் களத்தில் இன்னும் இறங்கவில்லை..? யார் தீர்மானங்களை எடுப்பார்கள்..?

leadership-and-flowersஇன்ஷா அல்லாஹ், இதுவரை சமூக வலைதளங்களில் நாம் ஏற்படுத்தியுள்ள குழுமங்களில் இணைந்து கொண்டிருக்கின்ற சகோதரர்களை ஊர்வாரியாக தேர்வு செய்து பின்னர் எல்லா மட்டங்களிலும் அவர்களை முன்னோடிகளாக ஸ்தாபக உறுப்பினர்களாகக் கொண்ட அழகிய ஷூரா முறையிலான தலைமைத்துவக் கட்டமைப்பினை இனிமேல் தான் நாம் ஏற்படுத்த வேண்டும்,

கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் உடைய இஸ்லாமிய ஷூரா முறையிலான அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரையிலான தலைமைத்துவ சபைகளே மாற்றத்திற்குரிய இளைஞர் செயலணியின் இலக்குகளை இனம் கண்டு குறுகிய இடைக்கால மற்றும் நீண்ட கால  திட்டமிடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு முறைசார் நிறுவன மயப்படுத்தல் இடம் பெறுமுன்னர் ஷெய்க் இனாமுல்லாஹ்வோ அல்லது முதலில் இணைந்து கொண்ட ஒரு சிலரோ ஏதேனும் பின்புங்களில் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளார்களா ? என்ற நியாயமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன, அதேபோல் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்? ஏதேனும் கூடங்களை நடத்துவதில்லையா ? என்றும் பலர் கேட்கின்றனர், முறையான முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் இல்லாது, திட்டமிடல்கள் இல்லாது, தெளிவான இலக்குகள் இல்லாது களம் இறங்குவதற்கு மாற்றத்திற்கான இளைஞர் செயலணி ஒரு பொழுதும் அவசரப் பட மாட்டது.

அடுத்த பிரதானமான கேள்வி :

ஷெய்க் மஸிஹுத்தீன் இனமுல்லாஹ் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரல்ல அவர் மலையகத்தைச் சேர்ந்தவர் அவர் தற்பொழுது சர்ச்சைக்குரிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர்  ரவூப் ஹகீமுடைய மைத்துனர், அவர் பக்கச்  சார்புடையவராகவே நடந்து கொள்வார் ?

Ashyஉண்மையில் நியாயமான சந்தேகம் தான், முதலாவதாக இது கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு மட்டுமான முன்னெடுப்பு அல்ல என்பதில் எல்லோரும் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும்.

கிழக்கிலிருந்து கொழும்பிற்கு வந்த முஹம்மத் அஷ்ரஃப் எனும் வரலாற்று நாயகனை தலைவனாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் கேட்டு மலையத்திலும் தென்னிலங்கையிலும் மக்களாணை பெற்றுக் கொடுக்க சொந்த எதிர்காலத்தையும் உயிர்களையும் பணயம் வைத்து உழைத்தது மாத்திரமன்றி எமது போராட்டத்தை வெளியுலகிற்கும் கொண்டு சென்று அங்கீகாரங்களைப்  பெற்றுக்  கொடுத்த நாம் இவ்வாறான பிரதேச வாத சிந்தனைகளை கேட்பதற்கு சமகால வங்குரோத்து அரசியலே காரணமாகும்.

இந்த வங்குரோத்து அரசியல் முகவர்களை தோள்களில் சுமந்து கொண்டு அவர்களுக்கு தொடர்ந்தேர்ச்சியிலான அங்கீகாரங்களை கொடுக்கும்  ஒரு சமூகத்தைப் பார்த்து, அவர்களோடு பங்காளிகளாக கைகோர்த்திருக்கும் குறுநில மன்னர்களைப் பார்த்து, பார்வையாளர்களாக இருக்கும் புத்திஜீவிகளைப் பார்த்து அல்லது கிளர்ந்தெழ முடியாத இளைஞர்களை பார்த்தே எனக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தசபதங்களாக இந்த வங்குரோத்து அரசியல் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம்.

இஸ்லாமியப் பின்புலத்தில் இருந்து வந்த காரணத்தினால் தலைவர் அஷ்ரஃபின் நேசத்திற்குரிய தோழனாக இருந்த பொழுதும் அந்த நட்பும் தோழமையும் அவருடன் சொந்த விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் உள்ளிருந்து கொண்டே முரண்படுவதில் இருந்தும் என்னைத் தடுக்கவில்லை அதற்கு வாழுகின்ற சாட்சிகளும் இருக்கின்றார்கள்.

அதே போன்றே கட்சியில் எனக்கு கணிஷ்டரும் தற்போதைய தலைவருமான ரவூஃப் ஹகீமுடன் உள்ள குடும்ப உறவு ஒரு பொழுதும் அவரது பாரிய அரசியல் தவறுகளை உடனுக்குடன் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் எடுத்துக் கூறி நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்கள் கொண்டுவரவும் தடையாக இருக்கவில்லை, இன்று நேற்று அல்ல கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பரீட்சயமுள்ள பல நூற்றுக்கணக்கானோர் இதனை அறிந்து வைத்துள்ளனர்.

ரவூப் ஹக்கீமுக்கு எதிரான விமர்சனங்களை வேறாகவும் எமது கண்ணீராலும் செந்நீராலும் கட்டி எழுப்பபட்ட மக்கள் பேரியக்கத்தை வேறாகவும் பார்ப்பதன் காரணமாகத் தான் கட்சி மீது உண்மையான பாசமும் பற்றும் கொண்டு சகலதையும் சகித்துக் கொண்டு உள்ளிருக்கும் போராளிகளை, ஏதேனும் ஒரு வகையில் தமக்கும் கட்சிக்குமான விமோசனத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களை அபிமானிகளை காயப்படுத்தாது எனது விமர்சனங்களையும் செயற்பாடுகளையும் வரையறை செய்து  கொண்டிருக்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற எனது வலியுறுத்தல் அது உரிய கரங்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே யன்றி எமது அரசியல் முகவரியை சொந்த முகவரிகளாக மாற்றிக் கொண்டவர்களை காப்பற்றுவதற்காக அல்ல.

tree-3ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் பாரிய சீர்திருந்த்தங்கள் வரவேண்டும் என குரல் கொடுக்கின்ற பலரும் பிரிந்து நின்று குழுக்களாக செயற்படுகின்ற மாற்று அணிகள் குறித்து திருப்திப் படுவதற்கும் இல்லை, ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் ஏற்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக முன்வைக்கப் படுகின்ற பல்வேறு குற்றச் சாட்டுக்களில் கடந்தகலங்களில் அவர்களும் பங்காளர்களாக இருந்திருக்கின்றார்கள், சமகாலத்தில் அவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வேண்டும் என்றே புதிய தலைமுறை இளைஞர்கள் எதிர்பார்கின்றார்கள், உள்ளிருந்தும் புறமிருந்தும் மாற்றங்களை நோக்கி தமது தலைமைகளை இழுத்துச் செல்வதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள், அவ்வாறான இலக்குகளுடனேயே “மாற்றத்திற்கான இளைஞர் செயலணி” களத்தில் இறங்கியுள்ளது.

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் கட்சியின் பிரதானிகளால் மீறப்படுகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும், அசிங்கங்களை அரங்கேற்றி அழகு பார்ப்பதற்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது, பிழையான முன்மாதிரிகளை ஒரு பொழுதும் இளம் தலைமுறையினர் மத்தியில் நியாயப் படுத்தவோ அவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை, தவறுகள், குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், அராஜகங்கள் , ஊழல் மோசடிகள் இடம் பெறுவதனை அறிந்தும் அறியாமல் அருகாமை வேண்டி உறவு கொள்ளும் பார்வையாளர்களும் பெரும் பாவங்களின் பங்காளர்களே என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

உட்கட்சி ஜனநயகம் மறுக்கப்பட்டு எதேச்சாதிகார தலைமை ஒன்றை உருவாக்கும் கட்சியின் யாப்பு அத்தகைய பிணக்குகளிற்கும், பிளவுகளிற்கும் காரணமாக இருக்கின்றது, கட்சியின் தலைமைத்துவ கட்டமைப்பு அதிகாரங்கள், அரசியல் அதிகாரங்கள், மாகாண மாவட்ட உள்ளூர் மட்ட தலைமைகள் என எல்லா மட்டங்களிலும் நீதியும் நியாமுமான முறையான தலைமைத்துவக் கட்டமைப்புப் பொறிமுறை யாப்பில் இருந்தாலும் அமுலில் இல்லாமையே அடுத்த மிகப் பெரும் குறையாகும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் மட்டுப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் கொண்ட முறையாக மாற்றப்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு துறை ரீதியாக சுயாதீனக் குழுக்கள் அமைக்கப் பட்டது போன்றதொரு முற்று முழுதான யாப்பு மாற்றம் ஒன்றை கட்சி மீள்வரைவு செய்வதன் மூலமே இந்த மக்கள் பேரியக்கத்தை மீள் நிர்மாணம் செய்ய முடியும்.

GOOD GOVஎல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சிய, கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Collective Responsibility, Transparency and Accountability) உள்ள ஒன்றுபட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் மாத்திரமே எமது இருப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்.

அவ்வாறான அடிப்படைப் பண்புகளை இழந்தமையினாலேயே எமது போராட்ட அரசியல் தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு சூதாட்ட அரசியலாக பரிணாமம் அடைந்து பங்காளிச் சண்டைகளுக்குப் பலியாகி இன்று தேசிய அரங்கில் கையாலாகாத சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்டும் அரசியலில் அனாதையாகி அந்தரப்பட்டு நிற்கின்றது.

அமானிதங்களில் மிகப்பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும், நீதியை நிலை நிறுத்துவது தீனை நிலை நிறுத்துவதாகும், அது எமக்கு வித்திக்கப்பட்ட கடமையுமாகும்.

அக்கிரமங்களில் மிகப்பிரதானமானது ஆட்சி அதிகார அமானிதங்களை பாழ் படுத்துவதாகும், வரம்பு மீராலாகவும் அக்கிராமாமாகவும் அதனை இஸ்லாம் கூறுகிறது. அமானிதங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாத பொழுது யுக முடிவை எதிர்பாருங்கள் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆன்மீக அடித்தளங்களுடன் கூடிய சத்தியத்திற்கும் ஷைத்தானிய இச்சைகளை மையப்படுத்திய அசத்தியத்திற்கும் இடையிலான மிகப் பிரதானமான போராட்டம் வரகாறு நெடுகிலும் இடம் பெற்றிருக்கிறது,    பிரவுன், காரூன், ஹாமான், நும்ரூது, ஆது ,சமூது, அபூ ஜஹல்,உத்பா, உமையா, அவ்சு , கஸ்ராஜு, யஹூது, நஸாரா என அதிகார வர்க்கங்களுடனேயே இடம் பெற்றிருப்பதனை அல் குர்ஆனும், நபிமார்களின் வரலாறும், சுன்னஹ்வும் , சீராவும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

ummathநல்லாட்சி, அதிகாரம், நீதியை நிலை நிறுத்தல், அநீதிக்கு எதிராக போராடுதல், நிதி நிர்வாக சீர்கேடுகளை ஒழித்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், சமாதானம், சமத்துவம் பேணல், தேசத்தின் சமூகங்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தல், சமூக பொருளாதார, கல்வி சுகாதார மேம்பாடுகளுக்காக உழைத்தல் இன மத குல மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இடம் பெறுவதனை உறுதி செய்தல் ஒவ்வொரு விசுவாசியின் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.

நபிமார்களின் வரலாற்றைப் பார்த்தாலும், இறுதித் தூதர் (ஸல்) அவர்களதும் ஸஹாபாக்களது வரலாற்றைப் பார்த்தாலும் அசத்தியம் கோலோச்சுவதும் அதற்கெதிராக சத்தியம் சமர் செய்வதும் பிரபஞ்ச நியதியாய் இருந்திருக்கிறது.

அடியார்களின் அடிமைத் தனங்களில் இருந்து, அல்லாஹ்வின் அடிமைத்தனத்திற்கு மனித குலத்தை விடுவிப்பதென்பது அவனது கட்டளைகளுக்கு மதிப்பளித்து தனிமனித வாழ்வு முதல் சமூகங்களின் தேசங்களின் வாழ்வு வரை அத்தனையும் நீதி நேர்மை சமாதானம், சமத்துவம் கோலோச்சுகின்ற வாழ்வு நெறியை தோற்றுவிப்பதாகும்.

உலகின் நெருக்கடிகளில் இருந்து ஆகிராவின் சௌகரியங்களுக்கு மனித குலத்தை இட்டுச் செல்கிற போராட்டம் என்பது தனிமனித,குடும்ப,சமூக,தேசிய, பொருளாதார,அரசியல், கலை கலாச்சார,பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் இன மத குல நிற மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிரான சமரில் பங்கு கொள்வதாகும்.

எனது தற்போதைய பணி நேரடி தீவிர அரசியலுக்கு அப்பால் பட்டது, சக்தி வாய்ந்த சிவில் தலைமையை தோற்றுவிப்பதும் புதிய தலைமுறை இளம் தலைமுறையினரை வழிநடத்துவதுமாகும்.

எனது தற்போதைய பணி நேரடி தீவிர அரசியலுக்கு அப்பால் பட்டது, புதிய தலைமுறை இளம் NSC-MEதலைவர்களை உருவாக்குவதே எனது இலட்சியமும் கனவுமாகும், எவர் மீதும் சவாரி செய்து அமானிதங்களை பாழ்படுத்தும் நெறிபிறழ்வை வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் தேர்ந்தெடுக்காத நான் ஏன் அந்திம காலத்தில் அத்தகைய பாதாளத்தில் விழ வேண்டும்?

எனது சிந்தனைகளை கருத்துக்களை நிலைப்பாடுகளை அவ்வப்பொழுது தேசிய ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைத் தளங்களிலும் பகிர்கின்ற பொழுது மேற்சொன்ன எல்லாத் தரப்புக்களும் அவற்றை அறிந்து கொள்வதற்கும் புதிய தலைமுறையினர் மத்தியில் விளிப்புணர்வு ஏற்படுவதற்கும் அவை காரணமாக இருக்கின்றன, எமது தேசிய அரசியல் விவகாரங்கள், சமூக பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார விவகாரங்கள் குறித்த பொது சன அபிப்பிராய உருவாக்கத்தில் என்னாலியன்ற பங்களிப்பினை செய்து வருகின்றேன்.

கடந்த மூன்று தசாப்த கால எனது அரசியல் சமூக தஃவா செயற்பாட்டு அனுபவங்களை மையமாக வைத்து நீண்டகாலமாக நான் வலியுறுத்தி வரும் ஒருசில முக்கியமான விடயங்கள் இருக்கின்றன :

எமது சமூகம் எல்லா மட்டங்களிலும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய தலைமைத்துவக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும், தனி நபர்கள் இயக்கங்கள் கட்சிகள் தேசிய பிராந்திய உள்ளூர் அமைப்புக்கள் என சகல சமூக நிறுவனங்களும் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக் கூறலும் உள்ள இஸ்லாமிய ஷூரா முறைகளை அடிப்படியாக கொண்டிருத்தல் வேண்டும்.

NSC-ME 2எமது இருப்பு, பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள், கடமைகள், சமாதான சகவாழ்வு, கல்வி, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, சமாதான சகவாழ்வு, தேசிய கட்டுமானத்திற்கான எமது பங்களிப்பு போன்ற விடயங்களில் எமக்கென உயரிய இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் ஒன்று இருத்தல் வேண்டும்.

அந்த அடிப்படையில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் இருக்கும் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு பொறிமுறையை நாம் கொண்டிருத்தல் கட்டாயமாகிறது, எமது தனித்தனி நிகழ்ச்சி நிரல்கள் அமைப்பு ரீதியிலான நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகள் கோட்பாடுகள் என்பவற்றிற்குப் புறம்பாக  வேற்றுமைகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாடுகளை எய்த முடியுமான விவகாரங்களில் எம்மை ஒருங்கிணைக்க முடியுமான ஒரு ஷூரா கட்டமைப்பை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருந்தது.

அந்த அடிப்படையில் தான் கடந்த பல வருடங்களாக தேசிய ஷூரா சபையின் உருவாக்கத்தில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றேன், அல்ஹம்துலில்லாஹ், இன்று தேசிய அளவில் கிளைகளைக் கொண்டுள்ள சுமார் 20 இஸ்லாமிய அமைப்புக்களையும், பல்துறை சார் நிபுணர்களையும் கொண்டுள்ள தேசிய ஷூரா சபை தோற்றம் பெற்றுள்ளது.

அடிமட்டத்தில் இருந்தே களத்தில் தலைமைத்துவப் பண்புள்ள ஆளுமைகள் இனம் காணப்படுதல் வேண்டும் எல்லா மட்டங்களிலும் எல்லாத்துறைகளிலும் உள்ள ஆளுமைகளிற்கான அங்கீகாரங்களும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுதல் வேண்டும், இல்லாதவிடத்து ஒருசில பிரபலப் பிம்பங்களை தோற்றுவித்து நம்பி இருக்க வேண்டிய துரதிட்ட நிலை ஏற்படுகின்றது.

இன்றைய சன்மார்க்க சமூக அரசியல் போராட்டங்கள் அவற்றிற்கான கட்டமைப்புக்கள் அடிமட்டத்தில் இருந்து பிரச்சினைகளிற்கான சவால்களிற்கான தீர்வுகளை கண்டறிகின்ற பொறிமுறைகளை தோற்றுவிக்காது உயர்மட்டங்களில் இருந்து, மேலிடங்களில் இருந்து, பிற தேசங்களில் இருந்து , இறக்கு-மதிகளில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு அவல நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது.

இனி போராட்டத்திற்குத் தயாராகும் இளம் போராளிகளுக்கு மிகவும் கண்டிப்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன் :

நாம் மேற்கொள்ளப்போவது மற்றுமொரு அரசியல் கட்சியை உருவாக்குகின்ற பணியல்ல மாறாக இருக்கின்ற அரசியல் அணிகளை ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நோக்கி நகர்த்துகின்ற முதற்கட்டப் பணியாகும், எமது இந்தப் பயணத்தில் மேலும் மேலும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை மாறாக வேற்றுமைகளுக்கு மத்தியிலும் உடன்பாடுகளைக் காணுகின்ற ஒற்றுமையை ஐக்கியத்தை ஏற்படுத்துகின்ற மாபெரும் மக்கள் சக்தியை உருவாக்கும் பணியாகும்.

AShyஅவ்வாறான ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை எல்லோருமாக  கலந்தாலோசித்து விவாதித்து இன்ஷா அல்லாஹ் மாற்றத்திற்கான இளைஞர் படையணியின் பிரகடனமாக வெளியிட வேண்டும், அத்தகைய தெளிவான வேலைத்திட்டத்திற்கு சகல முஸ்லிம் அரசியல் குழுக்களும் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் இருக்கின்றது, இல்லாத விடத்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இளைஞர்கள் சிந்திப்பார்கள்.

இனி மேற்படி வரலாற்றுப் பணியின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நீங்கள் இணைந்து கொண்டு உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பங்களிப்புக்களையும் வழங்க முன்வருவீர்கள் என்று எண்ணுகின்றேன்.

மாணவர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், முஸ்லிம் மஜ்லிஸ்கள் கல்வி உயர்கல்விச் சமூகங்கள், பல்கலைக் கழக சமூகங்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாயல் சம்மேளனங்கள் என சகல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகள் மேற்படி முன்னெடுப்பிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழிகாட்டல்களை புதிய தலைமுறைத் தலைவர்களுக்கு இளைஞர்களுக்கு வழங்க முன்வரல் வேண்டும்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்.

இளம் தலைமுறை தலைமைகளை இனமா கண்டு தலைமுறை இடை வெளியை குறைப்போம்

சமூகத் தளத்தில் புதிய தலை முறை ஆளுமைகள் எல்லா மட்டத்திலும் உருவாக்கப் படல் வேண்டும், அவர்களிற்கான அங்கீகாரமும், அவகாசமும் வழங்கப் படல் வேண்டும், சமூகத் தளத்தில் அரசியல், சிவில் சன்மார்க்க , தஃவா களங்களில் இரண்டாம், மூன்றாம் படிநிலை தலைமைகள் ஆளுமைகள் அறிமுகம் செய்யப் படுவதற்கான இயல்பான பொறிமுறைகள் இல்லாமை பெரிய குறைபாடாகும்.

ஒவ்வொரு தலை முறையினரும் புதிய ஒரு யுகத்திலேயே பிறக்கின்றார்கள், காலத்திற்குக் காலம் வெவ்வேறு நூதனமான சவால்களை நாம் எதிர் கொள்கின்றோம், அவற்றை எதிர்கொள்ள வெவ்வேறு புதுப்புது உத்திகளும் யுக்திகளும் தேவைப்படுகின்றன.

SHOORA2தலைமுறை இடைவெளியை கருத்தில் கொள்ளாத எந்தவொரு சமூகத் தலைமையும் சாதிக்கப் போவதில்லை, புதிய இளம் தலைமைகள் பட்டறைகளிலும் பாசறைகளிலுமன்றி சரியான தளத்திலும் களத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப் படுவதன் மூலம் பயிற்றுவிக்கப் படல் வேண்டும்.

நாம் ஒரு உம்மத்து என்ற வகையிலும், ஒரு சமூகம் என்ற வகையிலும், ஒரு தேசத்தவர் என்ற வகையிலும் சமகாலத்தில் எதிர் கொள்கின்ற சவால்களிற்கு முன்னால் எங்களை சரியான தளங்களில் நிலைப் படுத்திக் கொள்வதில் தோல்விக்கு மேல் தோல்வி கண்டு கொண்டிருக்கின்றோம்.

தலைமுறை இடைவெளியினை நாம் விசாலப் படுத்திக் கொண்டு செல்கின்றோம், தனியாட்களாயினும், குழுக்கள் ஆயினும் தம்மால் அடைய முடியாத அங்கீகாரமும் அதிகாரமும் சரியான பிறிதொரு தரப்பிற்கு சென்றடைவதனை நாம் விரும்புவதில்லை, மாறாக பிழையான தரப்புக்களை தக்க கொள்வதில் மறைமுகமான பங்களிப்பினை செய்து வருகின்றோம்.

சந்தர்பங்களை உருவாக்குபவர்களே தலைவர்கள், சந்தப்பங்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள் அல்ல, இன்றைய இளம் தலை முறையினரும் சந்தர்பங்களுக்காக காத்திருப்பவர்களே அன்றி அவற்றை உருவாக்க முனைவதில்லை, சமூக அரசியல் தேசிய நீரோட்டத்தில் தமக்குரிய சரியான தளத்தை இனம் கண்டு இலட்சியக் கனவுகளோடு முன்னே செல்பவர்களே நாளைய தலைவர்கள்.

அதேபோன்றே, சவால்களிற்கு பின்னால் உள்ள சந்தர்ப்பங்களை காணுகின்றவவர்கள் தலைவர்கள், அவர்கள் ஒரு பொழுதும் தளர்ந்து விடுவதில்லை. சவால்களிற்கு இறை நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் முகம் கொடுப்பதே அவர்களின் வாழ்வினை வசந்தமாக்குகின்றது, அவர்கள் பிரகாசிக்கின்றார்கள்.

தொடரும்…..

 

About author

No comments

உம்மத்தின் நிலை குறித்து கவலையா..? நெஞ்சு பொறுக்குதில்லையா..?

O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com