புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்!

0

ஸல்மானுல் பாரிஸி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.

Iftharஇதில் எவர் நற்காரியத்தைச் செய்கிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போலாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு விசுவாசியினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம். இதில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பகவும் நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படாது.

அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதத்தில் மனிதர்களை புனிதர்களாக்குவதற்காகவே நோன்பு கடமையக்கப்பட்டிருக்கின்றது, நாம் பெறும் உயரிய ஆன்மீக, தார்மீக, பண்பாட்டு பெறுமானங்களின் வெளிப்பாடுகளாக பரோபகாரம்,தயாளகுணம், இல்லாதவர், இயலாதவர் மீதான கருணை, ஏழை எளியவர் மீதான கரிசனை போன்ற செயல் வடிவங்கள் காணப்படுகின்றன.

ஒருவரை நோன்பு துறக்கச் செய்பவருக்கு நோற்றவரின் நன்மையில் எதுவித குறைவுமில்லாமல் அதற்கீடான நன்மைகள் கிடைப்பதாக எங்கள் உயிரிலும் மேலான இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) கூறியுள்ளதன் மூலம் சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்கள், நிர்க்கதியில் உள்ளவர்கள், வழிபோக்கர்கள் என தேவையுடைய அனைவர் மீதான சமூக அக்கறையையும் உம்மத்தின் மீது வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அல்-குரானும் சுன்னஹ்வும் வலியுறுத்துகின்ற சமூககடப்பாடுகளின் அடிப்படை இலக்குகளை ஆழமாக மனதில் இருத்தியவாறே நாம் இப்தார் ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

இப்தார் ஏற்பாடுகளை வெறுமனே மற்றுமொரு நூதனமான சடங்காகவோ,சம்பிரதாயமாகவோ, விஷேட விழாவாகவோ, ஆடம்பரமான கொண்டாட்டமாகவோ, தனிநபர், இயக்க ,வியாபார விளம்பரங்களாகவோ நாம் மேற்கொள்வோமாயின் நிச்சயமாக நல்லதே செய்வதாக எண்ணிக் கொண்டு மிகப்பெரும் தவறினையே நாம் இழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏழை எளிய மக்கள், பசி ,பட்டினி, வறுமையில் உள்ளவர்கள் சஹர் செய்வதற்கே போதுமான உணவுப் பொருட்களை கொண்டிராத பொழுது வகை வகையான சிற்றுண்டிகளையும், வகையறாக்களையும், ஆடம்பரமான உணவுவகைகளையும் அளவுக்கதிகமாக கொண்ட இப்தார் ஏற்பாடுகளை செய்வதில் இருந்து அல்லது அவற்றை “இப்தாருஸ் ஸாயிம்” எனற அடையாளத்துடன் செய்வதில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

iftarநோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளுடன் இஸ்லாமிய வழிகாட்டல் விழிப்புணர்வு மற்றும் சன்மார்க்க வரையறைகளை மீறாத சமாதான சகவாழ்வு நிகழ்வுகள் அத்தோடு நோன்பு தரும் ஆன்மீக பண்பாட்டு ஒழுக்கவியல் மாண்புகளை அடுத்த சமூகங்களும் புரிந்து கொள்ளச் செய்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் ஆகுமானவையே.

என்றாலும் நாம் வாழுகின்ற சூழல், கள நிலவரங்கள் என்பவற்றையும் அடுத்த சமூகங்களின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்து மிகவும் சமயோசிதமாகவும் சமுதாய மற்றும் மஹல்லாக்களின் கூட்டுப் பொறுப்போடும் உலமாக்கள், புத்திஜீவிகள் சமூக ஆவலர்களின் ஆலோசனைகளோடும் அவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நாம் வாழ்கின்ற சூழலில் புனித ரமழான் எமக்கு வழங்குகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் பிரதிபலிப்புக்களான தாராளத் தன்மையும், தாள குணமும் பரோபகாரமும் அடுத்த சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்ற அழகிய செயல் வடிவ முன்மாதிரிகள் விண்ணைப் பிளக்கும் ஒலிபெருக்கிப் பீரங்கிப் பிரசங்கங்களினை விடவும் ஆக்க பூர்வமான பிரதிபலன்களை கொண்டிருக்கும்.

விஷேட இப்தார் நிகழ்வுகளுக்கு என சமூக அமைப்புக்களும், இளைஞர் மாதர் அமைப்புக்களும், பலகலைக்கழக சமூகத்தினரும் ஏற்பாடுகள் செய்கின்ற பொழுது ஒருவர் வளவாளராகவும் மற்றெல்லாம் வலவலார்களாகவும் இருக்கின்ற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், குறிப்பாக அடுத்த சமூக சகோதரர்கள் வருகை தந்திருக்கும் நிலையில்   நாம் எத்தகைய நடைமுறை வியாக்கியானத்தை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதனையும் கவன்த்த்சில் எடுக்க வேண்டும்.

அவ்வாறு ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவோர் அதான் சொல்லும் வரை வெளியில் நின்று அரட்டையடிப்பதும் அல்லது இறுதி நேரத்தில் வருகை தருவதும் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகளை தருவதில்லை எனபதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதான் சொன்னவுடன் குறுகிய நேரத்திற்குள் நோன்பை துறந்து விட்டு மஃரிபுத் தொழுகையை உரிய முறையில் எல்லோரும் நிறைவேற்றுவதனை அதற்காக அமைதியாக தயராவதனை நாம் உறுதி செய்து கொள்ளுதல் கட்டாயமாகும்.

மஸ்ஜிதுகளில் ஆண்களுக்கு மாத்திரம் தொடர்ந்து இப்தார் ஏற்பாடுகளை செய்வதும் பெண்களையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் மறந்து விடுவதும் முறையான இப்தார் ஏற்பாடுகளாக இருக்கவே மாட்டாது. அவர்களை மஸ்ஜிதுகளுக்கு அழைத்துவர முடியாத நிலை இருப்பதனால் அவற்றிற்கான மாற்றீட்டு ஏற்பாடுகள் குறித்து மஹல்லாக்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

Datesஇப்தாருக்காக கிடைக்கப்பெருகின்ற பேரீத்தம் பழங்கள் மற்றும் இன்னோரன்ன உலருணவுப் பொருட்களை மஸ்ஜிதுகளூடாகவே எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வினியோகம் செய்தல் வேண்டும், இயக்கங்கள் அமைப்புக்கள் தமக்கு கிடைப்பவற்றையும் மஸ்ஜிதுகளூடாகவே வழங்குதல் வேண்டும், அவ்வாறு கிடைப்பவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்காக வக்பு செய்யப்பட்டவை என்பதானால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதனை மஸ்ஜிதுகள் வழக்கபப்டுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் இசலாமிய போதனைகளின் அடிப்படை இலக்குகளை மறந்து விடாது உரிய வரை முறைகள் பேணி எமது இப்தார் நிகழ்வுகளை நாம் அமைத்துக் கொள்ள முயற்சிப்போம், எமது குறை குற்றங்களை மன்னித்து அனைவரது உளத் தூய்மையான அனைத்து செயற்பாடுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவானாக!

About author

No comments

தலைமைத்துவ வெற்றிடமும் அடிமட்ட ஷூரா அமைப்புகளின் அவசியமும்….!

இன்று முஸ்லிம் சமூகம் குறிப்பாக போருக்குப் பின்னரான இலங்கையில்  எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, இருப்பு மற்றும் இன்னொரன்ன விவகாரங்களிலான   சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என சிந்திப்பது சமூகத்தின் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com