உயரிய இலட்சியப் பணியிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் காலத்தின் தேவை.

உயரிய இலட்சியப் பணியிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் காலத்தின் தேவை.

(கல்வி அபிவிருத்தியிற்கான முஸ்லிம் மாணவர் அமைப்பு (OMSED) கடந்த 22/04/2017 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடாத்திய “ஆக்கபூர்வமான சமூக ஊடக பயன்பாடு” தொடர்பாக  செயலமர்வினை ஆரம்பித்து பேசிய பிரதான விடயங்ளை இங்கு தருகின்றேன்.)

உலகை ஆளும் ஊடகங்கள்

social-media-1நவீன உலகின் பொருளாதார அரசியல் கலை கலாசார பண்பாட்டு வாழ்வியலில் ஊடகங்களின் ஆதிக்கம் யாவரும் அறிந்த விடயமாகும், சர்வதேச அரசியல் இராணுவ பொருளாதார நகர்வுகள் ஆதிக்க சகதிகளின் நலன்களிற்கு ஏற்ப நகர்த்தப்படுவதில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஊடகங்கள் பாரிய பங்களிப்பினைச் செய்து வருகின்றன.

காலனித்துவ ஆக்கிரமிப்பு சக்திகள் முதலாம் இரண்டாம் உலகப் பேரழிவுகளிற்குப் பின்னைய காலப்பகுதியில் தமது கவனத்தை வளம் கொழிக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பக்கம் குவித்திருப்பதால் மேலைத்தேய மேலாதிக்க சக்திகள் மாத்திரமன்றி உலக வல்லரசுகள் அனைத்தும் மூன்றாம் உலகப் பனிப்போரை அறபு முஸ்லிம் உலகில் திணித்து விடுவதற்கு ஊடகங்களை உச்ச அளவில் பயன் படுத்தி வருகினறனர்.

உலகில் உள்ள சுமார் 65  ஆயுத உற்பத்தி நிறுவனங்களும், 95 வீதமான ஊடக நிறுவனங்களும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் குறிப்பாக யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் உம்மத்தின் பரிதாப நிலை

உண்மையில் மேற்படி மேலாதிக்க ஆக்கிரமிப்பு சுரண்டல் சக்திகளின் அரசியல் இராணுவ பொருளாதார நகர்வுகளிற்கு ஈடு கொடுக்க வல்ல ஊடக பலம் முஸ்லிம் உலகில் முஸ்லிம் உம்மத்திடம் இல்லாமை வேதனைக்குரிய விடயமாகும்.

OMSED2பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் பெற்றோல் வளம் கொழிக்கும் மத்திய கிழக்கு மற்றும் கனிய வளங்கள் நிறைந்த ஆபிரிக்க மற்றும் ஆசிய முஸ்லிம் நாடுகளில் முடுக்கிவிடப்பட்டுள்ள மேலாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் இஸ்லாமிய அடிப்படை வாதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இராக்கிய இரசாயன ஆயுதங்கள், ஈரானிய அணு ஆயுதம், காட்டுமிரடித்தனமான இஸ்லாமிய ஷரீஆ, இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என இன்னோரனன்ன ஊடகப் பிரச்சார முழக்கங்களுடனேயே முடுக்கி விடப்பட்டன.

முஸ்லிம் உம்மத்தைப் பொறுத்த வரையில் நவீன இஸ்லாமிய எழுச்சியுடன் ஊடகங்களின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டாலும் அறபு முஸ்லிம் தேசங்களின் அரசியல் பொருளாதார இராஜ தந்திர இராணுவ நகர்வுகள் யாவும் சர்வதேச பிராந்த்கிய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்பவே நகர்த்தப் படுவதனால் யுகத்தின் சவால்களிற்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவில் பலமான ஊடக வலையமைப்பை முஸ்லிம் உம்மத்து கொண்டிருக்க வில்லை எனபதே உண்மையாகும்.

சமூக ஊடகங்களின் வரவும் ஆதிக்கமும்

இருபதாம் நூற்றாண்டில் இலத்திரனியல் பதிப்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம் என்பன சரவதேச அளவில் ஆதிக்க சக்திகளிடமும், தேசங்களைப்  பொறுத்தவரை அரசியல் சக்திகளிடமும் சிறிய அளவில் ஏனைய சிவில் சன்மார்க்க தலைமைகளிடமும் மாத்திரமே மட்டுப்பட்டு காணப்பட்டது.

OMSED7ஆனால், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து பரஸ்பர தொடர்பாடல் சமூக வலைதள ஊடகங்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை புதிய யுகத்தின் புரட்சிகர மாற்றமாக கருதப்படுகின்றது, இன்று ஊடகங்கள் அதிகார வர்கத்தின் மேலாதிக்க சக்திகளின் பிடியில் இருந்து மக்களின் கரங்களுக்கு மாறியிருக்கின்றது, பொதுசன அபிப்பிராயத்தின் திசையை மேற்படி ஜனரஞ்சக சமூக ஊடகங்கள் தீர்மானிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று வல்லரசுகளின் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் ஆட்சி அதிகாரங்களை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்ற பிரதான ஊடகமாமாக சமூக ஊடகங்கள் மாறி வருகின்றமை அண்மைக்காலமாக உணரப்பட்டு வருகின்றது, பல்தேசியக் கம்பனிகள் கூட இன்று இலத்திரனியல் பதிப்பு ஊடகங்களினை விடவும் அதிகமாக சமூக வலைதள ஊடகங்களின் பக்கம் தமது கவனத்தை குவித்து வருகின்றன.

சமூக ஊடகங்களின் வரவுடன் பல சரவதேச மேலாதிக்க சக்திகளின் இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் அமபலத்திற்கு வர ஆரம்பித்தன தேசங்களுக்கிடையில் நிலவிய பல இரகசிய இராஜதந்திர இராணுவ மூலோபாய திட்ட மிடல்கள் சதிமுயற்சிகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தன, ஆக்கிரமிப்பு சக்திகளின் பிரச்சார யுக்திகள் திரை நீக்கம் செய்யப்பட்டன, ‘விக்கிலீகஸ்” போன்ற தகவல் கசிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

அறபு முஸ்லிம் உலகத்தைப் பொறுத்தவரை சமூக ஊடகங்கள் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அறபு வசந்தம் போன்ற மக்கள் எழுச்சிக்கு பின்னால் பாரிய பங்களிப்பினைச் செய்தாலும் மேலாதிக்க சக்திகள் அறபு வசந்தத்தை காவு கொண்டமையும் இன்று வரை அதனை தமது காலனித்துவ ஆக்கிரமிப்பு மூலோபாய நகர்வுகளிற்கு சாதகமாக கையாண்டு வருகின்றமையும் நாம் அறிந்த விடயமே.

புதிய உலக ஒழுங்கில் அதிகார வர்கத்தினரிடமும் அதிக்க சக்திகளிடமும் இருக்கின்ற அரசியல் இராஜ தந்திர இராணுவ வலிமைகளுடன் கூடிய ஊடகங்களிற்கும் பொது சன அபிப்பிராயத்தில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துகின்ற சமூக வலைதள தொடர்பாடல் ஊடகங்களுக்குமிடையில் மிகவும் தெளிவான மோதல் இடம்பெறுகின்றமை அவதானிக்கப் படுகின்றது.

“அறபு வசந்தம்” போன்று அண்மையில் தமிழ் நாட்டில் இடம் பெற்ற “ஜல்லிக்கட்டு” பேரணியும் இளைஞர் போராட்டமும் எவ்வாறு காவு கொள்ளப்பட்டது என்பதனை நாம் அறிவோம், என்றாலும் புதிய கலநிலவரங்களைக் கையாள்வதில் அதிக்க சக்திகள் போன்று ஜனரஞ்சகமான சமூக ஊடகங்களை கையாளும் மக்கள் சக்தியும் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கின்றது.

தேசத்திலும் சமூகத்திலும் முஸ்லிம் ஊடகங்களின் வகிபாகம்

உண்மையில் சரவதேச அரங்கிலும் முஸ்லிம் உலகிலும் ஊடகத்துறையில் முஸ்லிம்கள் எத்தகைய வீழ்ச்சியையும் பின்னடைவையும் கண்டிருக்கிரார்களோ அதே போன்று இந்த தேசத்திலும் சமூகத்திலும் நாம் ஊடகத் துறையில் பின்தங்கியே இருக்கின்றோம்.

OMSED5தேசத்தில் உள்ள ஆதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரல்களிற்கு முகம் கொடுக்க வல்ல ஊடக வலிமை எம்மிடம் இல்லை, எமது அரசியல் தலைமைகளும் சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் மேலாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களினால் நகர்த்தப் படுகின்றமையும் முற்போக்கு சிந்தனை முகாம்கள் அதிகார மையங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவு தள்ளி நிற்கின்றமையும் அதற்கு பிரதான காரணங்களாகும்.

இலத்திரனியல் பதிப்பு ஊடகங்களைப் பொறுத்தவரை தேசிய அளவில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான ஊடகம் ஒன்று இல்லாமையின் குறை வெகுவாக உணரப்படுகின்றது, அரசியல் ரீதியாக முஸ்லிம்களது இருப்பு பாதுகாப்பு உரிமைகள் பற்றிய நியாயமான மனக்குறைகளை அல்லது அபிலாஷைகளை வெளிக்கொணரக் கூடிய வலிமையுள்ள தேசிய ஊடக வலையமைப்பு ஒன்று எம்மிடம் இல்லை, முச்ளிம்களிற்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இனவாத மதவாத காழ்ப்புணர்வுப்  பரப்புரைகளை முறியடிக்க வல்ல ஊடகம் எம்மிடம் இல்லாமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

முற்போக்கு சிந்தனை முகாம்கள் அல்லது சிந்தனைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அவர்களது ஊடக முன்னெடுப்புக்கள் கூட பாரம்பரிய ஊடகங்களின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது, அல்லது அன்றாட  சமூக அரசியல் பொருளாதார கலாசார மற்றும் தேசிய வாழ்வியலில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் அவை இல்லை என்பதுவும் கசப்பான உண்மையாகும்.

கடந்த அரைநூற்றாண்டு கால இஸ்லாமிய எழுச்சிப் பணியின் செயற்பாட்டாளர்களாக இருக்கின்ற குறிப்பாக அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள பற்றி அதிகம் பேசுகின்ற சிந்தனைப் பள்ளிகளால் சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் ஒன்றை கட்டி எழுப்ப முடியாமல் போயுள்ளதன் விளைவுகளை நாம் இன்று கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றோம்.

அரை நூற்றாண்டு கடந்த பின்பும் அத்தகைய இஸ்லாமியப் பின்புலத்தைக் கொண்ட சில உறுப்பினர்களை பாராளுமன்றத்திலோ, மாகாண சபைகளிலோ, அல்லது உள்ளூராட்சி மன்றங்களிலோ, அதிகார மையங்களிலோ எம்மால் கொண்டிருக்க முடியாது போயுள்ளது, எமது தேசிய வாழ்வில் எம்மை நாமே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றோமா? எமது சமூக அரசியலை தேசிய அரசியலோடு சரியான பரிமாணங்களில் உள்வாங்கச் செய்ய தவறி இருக்கின்றோமா? என்ற கேள்விகள் அத்தகைய பின்னடைவை எமக்கு உணர்த்துகின்றன.

உயரிய இலட்சியப் பணியிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல்

ummathஇந்த யுகத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக பரஸ்பர தொடர்பாடல் சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன, இலங்கை தேசத்தைப் பொறுத்தவரை சனத்தொகையை விடவும் அதிகமான மொபைல் பாவனையாளர்கள் இருப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவிக்கிறது, அதேபோல் தற்பொழுது சுமார் 70  இலட்சம் பேர் வரையில் இன்டர்நெட் பாவனையில் இருப்பதாகவும் அதிகமானோர் மொபைல் தொலைபேசியூடாக இன்டர்நெட் பாவிப்பதாகவும் அவர்கள் சமூக ஊடகங்களில் தொடர்பாடலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலை தளங்களில் ஆகக் கூடுதலாக முகநூல் பாவனை காணப்படுகின்றது, கூகுள் வலையமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கையில் சுமார் 35 இலட்சம் முகநூல் பாவனையாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இந்த நாட்டிலும் அரசியல் தலைவர்கள் கட்சிகள் உற்பட வர்த்தக நிறுவனங்களும் சமூக தொடர்பாடல் ஊடகங்களில் தமது கவனத்தைக் குவித்து வருகின்றன, அண்மைக்காலமாக இலங்கை அரசியலிலும் தேர்தல்களிலும் சமூக ஊடகங்கள் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன, அதேபோன்றே இன மத காழ்ப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வதற்கென தீய சக்திகள் சமூக ஊடகங்களை கையாள்வதற்கான கூலிப்படைகளை அமர்தியிருந்தமையும் நாம் அறிந்த விடயமாகும்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்னும் திட்டமிட்ட உயரிய இலக்குகளிற்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப் படவில்லை என்றே கூறுதல் வேண்டும், இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் சமூகத் தளத்தில்  மேற்கொள்ளுகின்ற விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்காக இன்னும் சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகின்ற பொறிமுறைகளை கண்டறியவில்லை என்றே கூறுதல் வேண்டும்.

தேசிய வாழ்வில் ஒரு சமூகமாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்பவற்றை பொறுத்தவரையிலும் நாங்கள் இன்னும் முறையாக சமூக ஊடகங்களை கட்டுக்கோப்புடனும் பொறுப்புடனும் கருத்தொருமையுடனும் கையாளுகின்ற கட்டமைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ளத் தவறி இருக்கின்றோம் என்றே கூறுதல் வேண்டும்.

Social-Media-Impactஇனி வரும் காலங்களில் சமூக ஊடகங்களின் முறையான பயன்பாட்டின் ஊடாக முற்போக்கு சிந்தனையும் சமூக மற்றும் தேசிய உணர்வுமுள்ள நேர்மையான பாராளுமன்ற பாராளுமன்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை எம்மால் உருவாக்கிக் கொள்ள  முடியுமா ? பெரும் சூதாட்டமாக மாறியுள்ள ஜாஹிலிய்ய அரசியல் கலாசாரத்தை மாற்றீடு செய்ய முடியுமா ? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

சமூக அரசியல் பொருளாதார வாழ்வில் பாரிய மாற்றங்களை விரும்புகின்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் செயற்பாட்டு முகாம்கள் சிவில் சமூக மயப்படாமை இன்று எம்முன்னுள்ள பிரதான சவாலாகும் பிழையான தரப்புக்களால் இடைவெளிகள் நிரப்பப்பட்டு வருகின்றமையால் சமூகம் வரலாற்றில் என்றுமில்லாத சவால்களுக்கு இன்று முகம் கொடுத்து வருகின்றது.

இந்த இடைவேளிய குறைத்து சிந்தனைப் பள்ளிகளை களத்தில் மாற்றங்களை கொண்டுவரும் முகாம்களாக பரிணாமம் பெறச் செய்வதில் சமூக ஊடகங்களிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்ய முடியும்   அரசியல் சமூக பொருளாதார ஜாஹ்லிய்யத்தின் முன்னால் மேற்படி முற்போக்கு சிந்தனை முகாம்கள் இன்று ஒரு இடைக்கால ஹிஜ்ரத்தில் இருப்பதாகவே தெரிகின்றது, இன்ஷா அல்லாஹ் ஒரு மகத்தான மாற்றத்தை நோக்கிய மக்கா வெற்றியில் சமூக ஊடகங்கள் காத்திரமான பங்களிப்பினைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் ஒன்றை நோக்கிய ஊடகப்பணி

நாங்கள் இஸ்லாம், இஸ்லாமிய எழுச்சி, இஸ்லாமிய கிலாபாத், இஸ்லாமிய தஃவா பணி, என்று சிந்திக்கும் பொழுது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைப் பற்றியே அதிகம் பேசுகின்றோம் சிந்திக்கின்றோம், சொந்த நாட்டில் அந்நியப்பட்டு எங்களை நாங்களே தனிமைப்படுத்தி ஒதுங்கி வாழுகின்றோம்.

Social Media 2உண்மையில் முழுமனித குலத்தினதும் விமோசனத்திற்கான மனிதாபிமான தூதினை சுமந்துள்ள ஒரு சமூகம் என்ற வகையில் நாம் வாழும் தேசத்தின் அரசியல் பொருளாதார இராணுவ இராஜ தந்திர  நலன்கள், ஸ்திரத்தன்மை, அமைதி, சமாதனம சகவாழ்வு, பொருளாதார அபிவிருத்தி சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதை வஸ்து பாவனை ஒழிப்பு, பெண்கள் சிறுவர் பாதுகாப்பு, நாட்டின் வளங்களை பாதுகாத்தல் என தேசத்தின் கட்டுமானப் பணியில் ஏனைய சமூகங்களோடு கைகோர்த்து பணியாற்றுகின்ற கடப்பாடு இருப்பதனை மறந்து விடுகின்றோம்.

இன்று தேசத்தின் நலன்கள், தேசத்தின் மீதான பற்றுதல் தொடர்பாக சமூக வளை தளங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் என்பவற்றில் எமது இளம் தலைமுறையினரின் பங்களிப்பு போதாமல் இருப்பது அவதானிக்கப்படுகின்றது, இந்த இடைவெளியை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த வழிகாட்டல்கள் இளம் தலை முறையினருக்கு வழங்கப் படல் வேண்டும்.

சமூக ஊடகங்களின் நேரிடையான பயன்பாடுகள்

சமூக ஊடகங்கள் பொதுவாக குடும்பங்களுக்கிடையில், உறவுகளுக்கிடையில், நண்பர்களுக்கிடையில், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சகாக்களுக்கிடையில், பழைய மாணவர் அமைப்புகளுக்கிடையில் பரஸ்பர தொடர்பாடல் ஊடகமாக பொழுது போக்கு ஊடகமாக அறிமுகமான பொழுதும் காலப்போக்கில் அரசியல், பொருளாதாரம் கல்வி, சுகாதாரம், வர்த்தகம், கலை, கலாசாரம், பண்பாடு, தகவல் பரிமாற்றம் என பல்வேறு பரிமாணங்களில் பயனுள்ள ஊடகமாக மாறிவருகின்றது.

எமது சமூக மற்றும் தேசிய வாழ்வில் இனம் காணப் பட்ட தெளிவான இலக்குகளை நோக்கிய இலட்சியப் பயணத்தில் சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாக கையாளக்கூடிய கூடிய கருத்தொருமையும் கட்டுக்கோப்புமுள்ள ஒரு இளைஞர் அணி தயாராக வேண்டும்.

சமூக ஊடகங்களின் எதிர்மறையான அம்சங்கள்

உலகில் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் சமூக ஊடகங்கள் பல அனுகூலங்களைக் கொண்டிருப்பதுபோல் பிரதிகூலங்களையும் கொண்டிருக்கின்றன, எல்லைகள் வரைமுறைகள் அற்ற பரந்து விரிந்த இன்டர்நெட் உலகிற்குள் வயது பால் வேறு பாடுகளின்றி சகலரையும் சமூக வலைத்தளங்கள் அழைத்துச் செல்கின்றன.

தனக்கு அவசியப்படுகின்ற தகவல்களை மாத்திரமன்றி அவசியமற்ற முன்னுரிமைப்பட்டியளிற்குள் வராத தலவல் பொழுது போக்கு  மற்றும் வினோத சமுத்திரத்திற்குள் எல்லோரையும் அழைத்துச் செல்கின்றன, பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர், அவர்களது கல்வி தொழில் வியாபாரம் கடமைகள் பொறுப்புக்கள் என வாழ்வில் முன்னுரிமைப்படுத்தப் படவேண்டிய விடயங்களை மறந்து போதை தலைகேறிய நிலையில் சமூக ஊடகங்களினூடாக கனவுலகில் சஞ்சாரம் செய்கின்றனர்.

Solar-Map-சகலவிதமான குடும்ப, சமூக, சமய, கலாசார  கட்டுக் கோப்புகளையும் சமூக ஊடகங்கள் தகர்த்தெறிந்து விடுவதனாலும் இளம் பராயத்தினர் நெறி பிறழ்வதற்கான அதிகரித்த சந்தர்பங்கள் மற்றும் தனிமை காணப்படுகின்றமையாலும் தவறான நட்புக்கள் முறைகேடான உறவுகள் பாலியல் நடத்தை பிறழ்வுகள் என பல சமூகத் தீமைகள் அதிகரித்து வருகின்றன.

“கூகுள்” வலையமைப்பின் தரவுகளின்படி கடந்த ஒரு சில வருடங்களாக இன்டர்நெட் ஊடாக பாலியல் தளங்களை அதிகம் நாடிய நாடுகளின் வரிசையில் இலங்கள் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது, இது ஒரு அபாயகரமான சமிக்ஞையாகும்.

தீய சக்திகள் சமூக ஊடகத்தினூடாக தமது வலையை விரித்து இளம் தலைமுறையினரை காவுகொள்ளக் காத்திருக்கின்றன, புகைத்தல், மது பாவனை என்பவற்றில் ஆரம்பித்து அபாயகரமான போதைவஸ்து பாவனைகளுக்கு அவர்களை பலிக்கடாவாக்குகின்ற யுக்திகளையும் சமூக விரோத மாஃபியாக்கள் மேற்கொண்டு வருகின்றன.

சமூக ஊடகங்களூடாக இளம் யுவதிகளை மாத்திரமன்றி குடும்பப் பெண்களையும் ஆண்களையும் சிறுவர்களையும் தமது வலைக்குள் சிக்கவைத்து அவர்களிடமிருந்து அந்தரங்கமாக பெறப்படும் தகவல்கள் புகைப்படங்கள் ஒளி ஒலிப்பதிவுகள் என்பவற்றை வைத்துக் கொண்டு அச்சுறுத்தி பணம் சம்பாதிக்கும் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் சமூக விரோத சக்திகளும் இருக்கின்றன.

அதே போன்று ஆட்கடத்தல், ஆட்களைக் கடத்தி உடல் உறுப்புக்களை கொள்ளையடித்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், போதை வஸ்துக் கடத்தல் கறுப்புப் பணம் உழைத்தல் கொள்ளையடித்தல் பயமுறுத்தி பணம் பறித்தல் என இன்னோரன்ன சமூகத் தீமைகளின் செழிப்பான விலை நிலமாகவும் சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன.

“இறையச்சம்” மாத்திரமே சமூக ஊடகங்களின் தீமைகளில் இருந்து எம்மை பாதுகாக்க முடியும்.

ஒரு விசுவாசி நிஜ வாழ்வில் அல்லாஹ்வின் மீது கொள்கின்ற ஆழமான விசுவாசமும் தக்வா எனும் இறையச்சமும் எவ்வாறு அவனை குடும்ப சமூக சமய கலாசார பண்பாடுகள் பேணுகின்ற மனிதனாக மாற்றுகின்றதோ அதே போன்றே சைபர் உலகெனும் நிழல் வாழ்விலும் அதே அழமான விசுவாசமும் இறையச்சமும் மாத்திரமே அவனை சமூக ஊடகங்களின் தீமைகளில் இருந்து பாதுகாக்க முடியம்.

public-opinionநன்மைகளை எடுத்து நடத்தலும் ஏவுதலும், தீமைகளை தவிர்ந்து நடத்தலும் அவற்றைத் தடுத்தலும் நிஜ வாழவில் போன்றே இந்த சைபர் உலகெனும் நிழல் வாழ்விலும் ஒரு உண்மை விசுவாசியின் மீது கடமையாகிறது.

சைபர் உலகெனும் மென்பொருள் உலகம் விசுவாசிகளான எங்களுக்கு புதிய ஒரு விடயமல்ல, நாங்கள் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தின் இயக்கத்திற்குப் பின்னால் பிரபஞ்ச நியதிகள் எனும் அல்லாஹ்வின் கட்டளைகள் இருப்பதனை விசுவாசிக்கின்றோம்.

ஒருமரத்தில் இருந்து கீழே விழும் இலையாயினும் அது பச்சை இல்லையாயினும் காய்ந்ததாயினும் அல்லாஹ்வின் எல்லாம் வல்ல அல்லாஹ் அதனை அறியாமல் இல்லை, வானிலிருந்து கீழே இறங்குபவற்றையும், பூமியில் இருந்து மேலே ஏறுபவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்கின்றான் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம், நாங்கள் பதிவேற்றம் செயபவற்றையும் பதிவிறக்கம் செயபவற்றையும் அவன் பதிவு செய்து வைத்துள்ளான் நாளை மறுமை நாளில் எமது வலக்கரத்தில் அல்லது இடக்கரத்தில் அந்தப் பட்டோலைகள் எம்மிடம் தரப்படும் என்று நாங்கள் ஆழமாக விசுவாசிக்கின்றோம்.

சமூக ஊடகங்களில் எமக்குக் கிடைக்கும் தனிமை, எமது நட்புக்கள், உறவுகள், தொடர்பாடல்கள் எமது விருப்புக்கள் எமது பதிவுகள் எமது பகிர்வுகள் எல்லாவற்றையும் இரு வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று நாங்கள் ஆழமாக விசுவாசிக்கின்றோம்.

நிஜ வாழ்வில் மஹ்ரம் பேணுதல், நிஜ வாழ்வில் கற்புநெறி பேணுதல், நிஜவாழ்வில் அடுத்தவர் உணர்வுகளை மதித்தல் நிஜ வாழ்வில் தீமைகளை தவிர்ந்து கொள்ளுதல், நிஜ வாழ்வில் பரஸ்பரம் நன்மைகளைச் செய்தல், தீமைகளைத் தடுத்தல் போன்று சமூக ஊடகங்களிலும் பொறுப்பாக விசுவாசிகள் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

சமூக ஊடகங்கள அசுர வேகத்தில் ஒருவரை சுவர்கத்திற்கோ அல்லது அதே வேகத்தில் நரகத்திற்கோ அழைத்துச் செல்லும் ஊடகமாக மாறிவருகின்றது. இன்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்கள் இரண்டில் ஒரு இலக்கிற்கு உங்களை அசுர வேகத்தில் அழைத்துச் செல்கின்றன.

சுவர்க்கம் அல்லது நரகம்.
ஆக்கம் அல்லது அழிவு.

எந்த திசையில் பயணிக்கின்றீர்கள் என்பதை ஒவ்வொருவரது மனச் சாட்சியும் சொல்லும்.

எதை பார்க்கின்றீர்கள்?  எதை விரும்புகின்றீர்கள்?  எதை பகிர்ந்து கொள்கிறீர்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?  யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள்?  எவ்வளவு நேரம் அவற்றில் கழிகிறது?

death3நேரத்திற்கு தொழுகின்றீர்களா? நேரத்திற்கு நித்திரை செய்கிறீர்களா? உறவுகளுடன் எவ்வளவு நேரம் கழிகிறது? கடமைகள் பொறுப்புகளில் கவனம் குறைகிறதா? கல்வி கற்கும் நேரம் காவு கொள்ளப் படுகிறதா? கிடைக்கும் தனிமை எவ்வாறு கழிகிறது?

என்ற பல கேள்விகள் நீங்கள் பயணிக்கும் திசையினை உங்களுக்கு உணர்த்தும் அளவீடுகளாகும்.

பயணிக்கும் திசையில் மாற்றம் வேண்டுமா? ஒவ்வொரு நாளும் சுய விசாரணை செய்து கொள்வோம்.!

சமூக ஊடகங்கள் எனும் மென்பொருள் ஊடகங்களை விட நிலையானதும் நம்பகமானதுமான இறை நியதிகள் எனும் மென்பொருள்கள் இரவிலும் பகலிலும் கூட்டு வாழ்விலும் தனிமையிலும் எங்களை ஆளுகின்றன என்ற நம்பிக்கை ஒன்றே எம்மையும் எமது சந்ததிகளையும் இந்த சைபர் உலகின் தீமைகளில் இருந்து  பாதுகாக்க முடியும்.

 

About author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com