மகாஸித் அல்-ஷரீஆ – ஷரீஆவின் உயர் இலக்குகள்

0

உஸ்தாத் எம் ஏ எம். மன்ஸுர் நளீமி (BA-Hons) MA,

பணிப்பாளர் – அல்-குரான் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி

முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜாமியாஹ் நளீமியாஹ்

இஸ்லாமிய சிந்தனையிலும், சட்டப் பகுதியிலும் இன்று முக்கிய ஆய்வாகவும், வாதப் பொருளாகவும் மாறியிருப்பது மகாஸித் அல்-ஷரீஆ என்ற பகுதியாகும். நாம் வாழும் இந்த உலக நிலை மிகவும் வித்தியாசமானது. இஸ்லாம் தோன்றியதிலிருந்து 15ம் நூற்றாண்டு வரையில் உலகில், மனித வாழ்க்கையில் மிகப் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே அல் குர்ஆன், ஸுன்னா நேரடி சட்ட வசனங்களும், அது பற்றிய ஆய்வாகிய சட்டப் பாரம்பரியமும் அந்த நூற்றாண்டு வரையில் ஓரளவு மாற்றங்களைச் சமாளித்து நிற்கப் போதுமாக இருந்தது. ஏனெனில் தோன்றிய மாற்றங்கள் எளியவை. சிறியவை. வரையறைக்குட்பட்டவை

ஆனால் 15ம் நூற்றாண்டோடு உலகம், மனித வாழ்வு மாறத் துவங்கியது அந்த மாற்றங்கள் பாரியனவாக அமைந்தன. மனித வாழ்வையே தலை கீழாகப் புரட்டி விடும் மாற்றங்களாக அவை அமைந்தன.
வெறுமனே விஞ்ஞான, தொழில் நுட்பங்களால் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் நாம் குறிப்பிடவில்லை. குறிப்பாக மனிதனின் சமூக வாழ்வு பற்றிய சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் இங்கு முக்கியமாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். சமூக வாழ்வு பற்றிய கோட்பாடுகளை ஆயும் முறைமையே மாறியது. மத, புராண, பாரம்பரிய, சடங்கு, சம்பிரதாய போக்குகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு மனிதன் வெளியே வந்தான். பிரபஞ்சம் பற்றிய அவனது பார்வை மாறியது. மனித வாழ்வு பற்றிய பார்வையும் மாறியது. அவன் ஏற்கனவே கட்டி வைத்திருந்த புனிதங்கள் பல உடைந்து விழுந்தன. அவனை இறுக்கியிருந்த சிந்தனைச் சிறைகள் சிதறி விழுந்தன
இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், மனோ தத்துவவியல், இலக்கியம் போன்ற கலைகளில் புரட்சிகள் நிகழ்ந்தன. இவற்றோடு விஞ்ஞான முன்னேற்றமும், கண்டு பிடிப்புகளும், தொழில் நுட்ப உலகில் நிகழ்ந்த புரட்சிகளும் இணைந்து கொண்டன. முற்றிலும் புதிய உலகொன்றை இவை சிருஷ்டித்தன.

இந்நிலையில் பாரம்பரிய சிந்தனை இவ்வுலகுக்கு ஈடுகொடுக்க முடியா நிலை தோன்றியது. பாரம்பரிய சட்ட ஆய்வு முறைகளில் மாற்றம் காண வேண்டிய தேவையும் ஏற்பட்டது. நேரடி சட்ட வசனங்களை மட்டும் நோக்குதல், புதிய நிகழ்வுக்கு பழைய நிகழ்வுகளில் ஒப்புவமை தேடி சட்டமாக்க முனைதல் என்ற நிலைகளின் போதாமை உணரப்பட்டது. இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொண்டு ஆன்மீக விமோசனத்தை மட்டும் தேட முனைந்தால் இந்த பிரச்சினைகள் எதுவும் தேவயில்லை. மண்டை உடைக்கும் ஆய்வுகளும் வேண்டியதில்லை. ஆனால் இஸ்லாம் முழு வாழ்வையும் ஆளவந்த கொள்கை. எல்லாக் காலத்திற்குமான கோட்பாடு. எனவே இந்தக் காலத்திற்குப் பொருந்துவது போல் அதனைப் புணரமைப்பது தவிர்க்க முடியாத தேவை.

இஸ்லாமிய சட்டங்களையும், சிந்தனைகளையும் நவீன காலத்திற்கு இயைய மாற்றி, கூடுதல், குறைத்தல் செய்து பாரியதொரு கருத்துத் திரிபை ஏற்படுத்தி விடுவதல்ல இதன் பொருள். அல்லாஹ் இறக்கிய வழிகாட்டல் எக் காலத்திற்கும் நிச்சயமாகப் பொருந்தும். அப்படியில்லாவிட்டால் இதனை இறுதி இறை தூதாக அவன் ஆக்கி இருக்க மாட்டான். இந்தப் பின்னணியில் அவனது வழி காட்டலை ஆழ்ந்தும், நுணுக்கமாகவும் ஆராய்வதே எமது பொறுப்பாகும்.

இந்த வகையில் நவீன இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் இது பற்றிய ஆய்வுகளை மேற் கொண்டனர். அப்போது அவர்கள் கண்ட உணமையே மகாஸித் அல் ஷரீஆ என்ற கோட்பாடாகும். ஆனால் மகாஸித் அல் ஷரீஆ புதிய அறிஞர்களது கண்டு பிடிப்பல்ல. பழைய இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அது பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. அது பற்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

4ம் நூற்றாண்டு:

இந்த நூற்றாண்டில் முதன்மையாக 3 இமாம்கள் இக்கருத்தை விளக்கியுள்ளனர்.

1) ஹகீம் அல் திர்மிதி – الحكيم الترمذي (ஹி-320 வரை வாழ்ந்தவர்)
الصلاة ومقاصدها – தொழுகையும் அதன் இலக்குகளும்.
كتاب العلل – காரணங்கள் பற்றிய நூல்.

தொழுகைக்கான காரணங்கள், நியாயங்களை அங்கே அவர் விளக்குகிறார். தொழுகையின் ஒவ்வொரு செயலுக்குமான நியாயத்தைக் காணவும் அவர் முயல்கிறார்.

சொல்லின் முதற் பிரயோகம் இதுவாக இருக்க முடியும்.

2) அபுல் ஹஸன் அல் ஆமிரி – أبو الحسن العامري:

الاعلام بمناقب الإسلام – இஸ்லாத்தின் உயர் பண்புகளை விளக்கல்.

மகாஸித் அல்-ஷரீஆவில் அதிகமாகப் பாவிக்கப்படும்: மார்க்கம், உயிர், மனித பரம்பரை, அறிவு, செல்வம் என்ற ஐந்து அடிப்படைகளையும் பாதுகாத்தல் என்ற கருத்தை முதலில் வெளியிட்டவர் இவரே. அந்த ஐந்து அடிப்படைகளையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையின் மீது அனைத்து சமூகங்களும் தமது சட்ட ஒழுங்கை வகுத்துள்ளன என்றும் அவர் விளக்கினார்.

3) அபூ பக்கர் அல் ஷாஷி – القفال الكبير) أبو بكر الشاشي)

இவர் ஷாபியீ மத்ஹபின் சட்ட அறிஞர். எனினும் இஸ்லாமிய சட்டத்துறையின் மிகப் பெரும் இமாம்களில் ஒருவர் என்று கூறுவது மிகப் பொருத்தம்.

இவரது நூல்:

محاسن الشريعة – ஷரீஆவின் அழகுகள்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இந்நூல் சட்டங்களுக்கான நியாயங்களை, அதன் நோக்கங்களை விளக்குகிறது. வணக்க வழிபாடு, கொடுக்கல் வாங்கல்கள் என்ற எந்த விதிவிலக்குமின்றி அனைத்து சட்டங்களுக்கும் நியாயங்கள், இலக்குகள் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சம்.

About author

No comments

கடந்து வந்த பாதையில்: சுகமான சுமைகளும், இனிதான அனுபவங்களும்..

O வாழ்க்கைப் பாடம்: சில உணர்வலைகள் சுகமான சுமைகளும், இனிதான அனுபவங்களும்.. நான் அன்பு வைத்துள்ளோர் சந்தோஷத்திற்காக எனது ஆசாபாசங்களையெல்லாம் கனவுகளோடு மட்டுமே மட்டுப் படுத்திக் கொண்டேன், பலர் என்னை புரிந்து கொள்ள மறுக்கின்ற ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com