வாழ்வு:  வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..

0

உடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்..

விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள்.

சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் நிலையான மறுமை வாழ்வை தீர்மானிக்கப் போகின்றன.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.” (ஸுரத் ஆல இம்ரான் 3:185)

வீடு மனைவி மக்கள் பணம் பதவி செல்வம் செல்வாக்கு அதிகாரம் எல்லாமே சோதனைக்காக தரப்பட்டவைகள், ஆசைகள் தேவைகள் இச்சைகள் எல்லாமே கட்டுக்கடங்காமல் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.” (ஸுரத் ஆல இம்ரான் 3:14)

இந்த ஓட்டம் ஒரு நாள் நின்று விடும்; ஆட்டம் அடங்கி விடும்; வேடங்கள் களைந்து போகும்.

நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே மீளுவோம்.

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, வாழ்க்கை பற்றி எத்தனை எத்தனை கோட்பாடுகள், சிந்தனைகள், சாஸ்திரங்கள், சித்தாந்தங்கள்.

அல்ஹம்துலில்லாஹ், எத்தகையதொரு கோட்பாட்டு சித்தாந்த தத்துவ வித்துவ சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கித் தவித்து வழிகெட்டுப் போகாது மண்ணையும் விண்ணையும் படைத்து பரிபாலிக்கும் ஏக வல்லோன் எதற்காக வாழ்வையும் மரணத்தையும் படைத்தான் என்ற அறிவும் தெளிவும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (ஸுரத்துல் முல்க் 67:2)

பிரபஞ்சம், பிரபஞ்ச கர்த்தா, வாழ்வு, மரணம், மறுவாழ்வு , ஆன்மா என அத்தனை அம்சங்கள் குறித்தும் மிகத் தெளிவான பார்வையை விசுவாசக் கோட்பாடுகளில் தந்து ஆன்மீக அடித்தளத்துடன் கூடிய அழகிய வாழ்வு நெறியை அவன்தன் தூதர்கள் மூலம் ஆதமுடைய மக்களுக்கு அருளிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

அந்த அழகிய வாழ்வு நெறியை நிறைவு செய்து வாழ்ந்து காட்டிய முன்மாதிரியாக இறுதி நாள் வரைக்கும் இறுதி இறை தூதராக இறைவானால் அனுப்பபட்ட உத்தம் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது ஆல் அஸ்ஹாபுகள் மீதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒருமுறையே கிடைக்கப்பெறும் வாழ்வு இன்மை மறுமை என்று நீண்டு செல்கிறது, மிகக் குறுகிய இவ்வுலக வாழ்வை நிலையான மறுமை வாழ்விற்கான விளைநிலமாக சோதனைக்களமாகவே நாம் விசுவாசிக்கிறோம்.

ஒவ்வொரு ஆன்மாவும் தனித்துவமானது, வெவ்வேறு புறக் கோலங்களில் தராதரங்களில், சந்தர்ப்ப சூழ்நிலைகளில், காரணிகளினால் தனித்தனியாகவே அவை சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.” (ஸுரதுஷ் ஷம்ஸ் 91:7,8,9,10)

அமானிதமாக தரப்பட்ட இந்த குறுகிய கால வாழ்வை இச்சைகளுடன் போராடி இறைவன் வகுத்த வழிகளில் வாழ் முயற்சிப்பதிலேயே இந்த வாழ்வின் வெற்றி இருக்கிறது.

இச்சைகளையோ நாம் நேசிக்கின்ற உறவுகளையோ, அழிந்துவிடுமோ என்ற அச்சத்துடன் சேகரிக்கின்ற சொத்து சுகங்களையோ எங்கள் உள்ளங்களை ஆளும் “இலாஹ்” ஆக எடுத்துக்கொள்ளாது அத்தனையையும் நிராகரித்த பின்னரே அல்லாஹ்வை நாம் வணக்கத்திற்கும், துதிப்பதற்கும், புகழ்வதற்கும் பிரார்தனை செய்வதற்குமான “இலாஹ்” ஆக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.” (ஸுரத்துல் ஹதீத் 57:20)

இவ்வுலக வாழ்வில் எம்மோடு எமது பிடரி நாளங்களையும் விடவும் நெருக்கமாக இருக்கின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வே நாளை எமது உடலில் இருந்து ஆன்மா எடுக்கப்பட்ட பின்னரும் எம்முடன் இருக்கப் போகின்றான்.

எமது இச்சைகளும் ஆசாபாசங்களும் எமது பந்த பாசங்களும் நாம் சேகரித்த சொத்து சுகங்களும் பதவி பட்டங்களும் நாம் எடுத்து நடித்த வேடங்களும் என எல்லாமே களையப்பட்டு நாம் அந்த “இலாஹ்” விடம் மீளப்போகின்றோம்.

யா அல்லாஹ் எங்களுக்கு (துன்யா) இவ்வுலக வாழ்விலும் (ஆகிரா) மறு உலக வாழ்விலும் சிறந்ததையே தருவாயாக, நரகத்தின் (அதாபு) வேதனைகளில் இருந்து எங்களுக்கு அபயமளிப்பாயாக!

About author

No comments

ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு

இலங்கை முஸ்லிம் சேவையில் நத்வதுல் அஃப்கார் எனும் ஆய்வரங்க நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்களும் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களும் நிகழ்த்திய கலந்துரையாடலின் சுருக்கம். ————————————————– இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com