ஷரீஆவின் நிலைக்கலனில் பல்வேறு பரிமாணங்களையும் அணுகுதல் வேண்டும்!

1

O நேற்று தென்னகும்புர மஸ்ஜிதில் இடம்பெற்ற தாய்லாந்து தேரர்களிற்கான வரவேற்பு குறித்த சர்ச்சை பற்றிய கீழ் காணும் ஒரு சிறு பதிவை நான் இட்டிருந்தேன்.

எதிர்பாரா தவறு நடந்துள்ளது

தென்னக்கும்புர விவகாரத்தை பூதாகரமாக்காது ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு பதிவுகளையும் பகிர்வுகளையும் நீக்கி விடுவோம்!

சமாதான சகவாழ்வு மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான ஷரீஆவின் உச்ச வரம்புகளை மக்களுக்கு உணர்த்துவோம். ஏற்பாட்டாளர்கள் எதிர்பாராத நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களும் நொந்து போயுள்ளார்கள். பரஸ்பரம் பத்வாக்கள் கொடுப்பதை ஒளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் பரவ விடுவதை உடனடியாக நிறுத்தி உள்ளக விழிப்பூணர்வு பணிகளை செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் எல்லோரையும் மன்னித்து நேர்வழி நடத்துவானாக.

இனாமுல்லாஹ்

ஒரு சமாதான பாத யாத்திரை மேற்கொள்கிற தாய்லாந்து மத குருமாரிற்கு ஒரு சிறிய தேனீர் சிற்றுண்டி அமர்வை ஏற்பாடு செய்ய முடியுமா என மத்திய மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மஸ்ஜித் நிர்வாகம் அந்த வரவேற்பை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

மதகுருமார் ஏனைய தறிப்பிடங்களில் போன்று அவர்களது ஆராதனையில் ஈடுபட்டமை முன்னேற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல் படி நடந்த ஒரு விவகாரமல்ல என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் அந்த நிகழ்வை பார்க்கின்ற பொழுது நிச்சயமாக பலரும் (நான் உற்பட) பல்வேறுவிதமான கருத்துக்களை விமர்சனங்களை நிதானமாக அல்லது ஆக்ரோஷமாக இடுவது தவிர்க்க முடியாத விடயமாகும்.

ஏனென்றால் எம்மிடம் எல்லா விடயங்களிலும் விதவிதமான கருத்து வேறுபாடுகள் பார்வைகள் நிலைப்பாடுகள் இருப்பதுவும் அந்தந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களை வழிகேடர்கள், மடையர்கள், குஃப்பார்கள், முஷ்ரிக்குகள், முனாபிக்குகள் என முண்டியடித்துக் கொண்டு  தீர்ப்பு வழங்கி கண்டிப்பதும் தண்டிப்பதும் வழமையான சமாச்சாரமே!

தனிப்பட்ட முறையில் நாங்களும் நீங்களும் எல்லா இஸ்லாமிய சிந்தனை முகாம்களும் இயக்கங்களும் மிகவும் தெளிவாக கற்றுள்ள அகீதா ஷரீஆ முஆமலாத், இபாதாத், அக்லாக் வரம்புகளை வரையறைகளை கற்றும் கற்றுக் கொடுத்தும் இன்றுவரை தேசத்திலும் சர்வதேசத்திலும் பல்வேறு தாவா பிக்ஹு மற்றும் ஆய்வரங்குகளில் பங்களிப்புச் செய்து கொண்டுமிருக்கும் எனக்கும் தனிப்பட்ட அவதானங்கள் ஆட்சேபனைகள் குறித்த விடயத்தில் இல்லாமல் இல்லை என்பதனை என்னோடு சமூக தேசிய அரங்கில் இணைந்து பணிபுரிபவர்கள் அல்லது எனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் வாசகர்கள் அறிவீர்கள்.

அவ்வாறான விடயங்கள் எங்களது உள்வீட்டு சமாச்சாரமாக இருப்பதனாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகளும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் குறிபாபாக எமது நண்பர் பட்டியல்களில் உள்ள இனவெறியர்கள் அல்லாத அல்லது இன வெறியர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நண்பர்களாலும் அவதானிக்கப்படுகின்றமையாலும் அது வேறுபல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதாலும் நான் நிதானமாக எனது கருத்தை சொல்லியுள்ளேன்.

அரச யந்திரங்களில் பாதுகாப்பு தரப்புகளில் ஊடுறுவி செல்வாக்கு செலுத்துகின்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட பல்தேசிய இனவெறி காழ்ப்புணர்வு கம்பனிகளுக்கு தீணி போடுகிற தடி எடுத்துக் கொடுக்கிற வேலையை நாங்கள் ஆத்திர அவசரத்தில் செய்கிறோமா என்பது பிரதான கேள்வியாகும்.

மேற்படி தீய சக்திகள் மாத்திரமன்றி உள்நாட்டு பிறநாட்டு புலனாய்வு சக்திகள் குறிப்பாக எமது சமூக ஊடக பகிர்வுகளை பதிவுகளை கண்கானித்துக் கொண்டிருப்பதனை கருத்தில் எடுத்து சமூகத்தில் உள்ள உஷார் மடையர்களின் அறைவேக்காடுகளின் ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்களை கட்டுப்படுத்த என்னால் முடியுமான சில நகர்வுகளிற்காகவே எனது கருத்தை வெளியிட்டேன்.

நாங்கள் ஒரு விடயத்தை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான பெரும்பான்மை இன மத சகோதரர்கள் இஸ்லாத்தின் தூதை அடைந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள் மாறாக  இஸ்லாத்திற்கு எதிரான இஸ்லாமிய உலகின் எதிரிகள் கொண்டு செல்லும் இஸ்லாமிய பயங்கரவாதம் அடிப்படைவாதம் தீவிராவாதம் இஸ்லாமோபோபிய பிரச்சாரங்களை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக  அடைந்து கொண்டிருப்பவர்கள், அவர்களது சர்வதேச பிராந்திய சதி வலைகளில் இருந்தும் தேசிய கூலிப்படைகளின் சதிகார நடவடிக்கைகளில் இருந்தும் முதற்கண் அவர்களைப்  பாதுகாப்பது எமது கடையாகும்.

அண்மையில் முகநூலில் எமது சகோதரர் ஒருவர் மற்றொருவருக்கு பதிலளிக்கும் விதத்தில் இட்ட பதிவொன்றின் காரணமாக மதநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்   ICCPR  சட்டத்தின் கீழ் பிணை மறுக்கும் கடுமையான சட்டத்தின் கீழ் முறையீடு பதிவு செய்யப்பட்டமையும் பலவேறு சிரமங்களிற்கு மத்தியில் அவரை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சிவில் அரசியல் தலைமைகள் மேற்கொண்டமையும் நாடறிந்த விடயமாகும், சமூக ஊடகங்களில் கருத்துப் பகிரும் எல்லா நண்பர்களும் பதின்ம வயதினரும் சட்ட நிபுணர்கள் அல்ல என்பதனை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வருகை தந்தவர்கள் நாட்டின் விருந்தினர்கள் மதகுருபீடங்களின் விருந்தினர்கள் மத்திய மாகாண அரசின் விருந்தினர்கள், மஸ்ஜிதுக்கு வந்தவர்கள் எமது விருந்தினர்கள், கடந்த காலங்களில் ஓரிருவர் வெளியிட்ட கருத்துக்கள் இன்றுவரை முஸ்லிம்களுக்கெதிராக பிரயோகிக்கப்படுவதனை நாம் மறந்து விடக்கூடாது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் போருக்குப் பின்னரான இலங்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் சம்பவங்கள் அல்ல மாறாக நன்கு திட்டமிட்டு உள்நாட்டு வெளிநாட்டு பின்புலங்களுடன் சங்கிலித் தொடராக அரங்கேற்றுகின்ற அடாவடித் தனங்களாகும், இவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் முன்னோருபோளுதுமில்லாத வகையில் பல்வேறு செயற்திட்டங்களை ஆராய்ந்து அமுல்படுத்தி வருகின்றன.

உதாரணமாக சமாதான சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டம், பல செயற்திட்டங்கள் உண்மையில் எமக்குப் புதியவை, அவைகுறித்த பல்வேறு கருத்து வேறுபாடுகளும் எம்மத்தியில் நிலவுகின்றன, குறிப்பாக சமாதான சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆவின் உச்ச வரம்புகள் மீறப்படாது இடம் பெறல் வேண்டும் என்பதில் எவரும் முரண்படப் போவதில்லை.

ஆனால் அறியாமையின் காரணமாக அல்லது அனுபவம் முதிர்ச்சி இன்மையின் காரணமாக புதிய களநிலவரங்களை கையாளுவதில் சமூகம் பல தவறுகளை செய்து வருகின்றமை மறுக்கப் பட முடியாத  உண்மையாகும், பலர் இரு முனையிலும்  அதி தீவிரமாக இருப்பதனைக் காணலாம், சமாதான சகவாழ்வு என்ற பெயரில் ஏனைய சமூகங்களை அஞ்சிக் கெஞ்சி அண்டிப் பிழைத்து வாழ முனைகிறோமா..? அல்லது எமது சமய கலாசார வரைமுறைகளை விட்டுக் கொடுக்க முனைகிறோமா ? என்ற சந்தேகங்கள் ஒரு புறம்.

அதேவேளை, குஃப்பார் முஷ்ரிக்குகளுடன் தெளிவான பகைமையே இருக்க வேண்டும் அதென்ன சமாதான சகவாழ்வு, பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு என்று மறுபக்கம் தீவிரமாக சிந்திப்போரும் இருக்கின்றார்கள்.

நேற்று பொறுமை சகிப்புத் தன்மை என்று பேசிய பலர் இன்று அதுவெலாம் வேணாம், என்று வேறு வழிகளை கையாள்வோம் என்று பேசுகிறார்கள். அனால் இரண்டிற்கும் இடையில் உள்ள நிலைப்பாடுகளை மறந்தே போய்விடுகிறார்கள்.

இந்த இருமுனை (EXTREME) தீவிரபோக்குகளிற்கு மத்தியில் நிதானமாக சிந்தித்து இஸ்லாமிய வரைமுறைகள் பேணி களநிலவரங்களை (CONTEXT) குறிப்பாக உம்மத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் கடமைகள் போன்ற பரிமாணங்களை சரியான தளங்களில் ஆராய்ந்து வேற்றுமைகளுக்கு மத்தியில் பொதுவான விடயங்களில் கருத்தொருமைப் பாட்டை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இந்த சமூகத்தினை வழிநடத்த வேண்டிய கடப்பாடு இஸ்லாமிய அறிஞர்கள் புத்தி ஜீவிகளிற்கும் இருக்கின்றது.

தீவிர சிந்தனைகளின்  பால் இளைஞர்களை தள்ளுவதற்கும் அவர்களை வன்முறைகளின் பால் நகர்த்துவதற்கும்  சன்மார்க்க சிவில் தலைமைகளை கருவறுப்பதற்கும் பல்வேறு சக்திகள் பின்புங்களுடன் காத்திருக்கின்றன, இவ்வாறான நிலையில் ஏதேனும் ஒரு சமுதாய கட்டுக் கோப்பிற்குள் நாங்கள் வந்தேயாக வேண்டிய தேவை இருக்கிறது.

இன்றேல் இன்னும் ஐந்து அல்லது பத்து வருடத்திற்குள் உள்வீட்டில் வன்முறைகள் வெடித்துச் சிதறுவதோடு பலமுனைகளில் இருந்தும் பொது எதிரிகளின் தாக்குதல்களிற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும், இதுவே இன்று முஸ்லிம் அரபுலகில் நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது, நேற்று அறபு முஸ்லிம் உலகில் வாயால் (முரண்பாடுகளை) பேசியவர்கள் இன்று துப்பாக்கி ரவைகளால் பேசிக் கொண்டு இஸ்லாத்திற்கு கோரமான அகோரமான வியாக்கியானங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருசில பிரபலங்களின் சாதுரியமற்ற பிழையான நடவடிக்கைகளை முன்வைத்து இயக்கங்களையோ நிறுவனங்களையோ விமர்சிப்பது எவ்வாறு கூடாதோ அதேபோன்றே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை பொதுத் தளங்களில் நாம் திட்டித் தீர்ப்பது ஆரோக்கியமான நடவடிக்கைகள் அல்ல, இலங்கை முழுவதிலும் உள்ள மஸ்ஜிதுகள் மதரஸாக்கள் ஜாமியாக்கள் என சமூகத்தின் உயிர்நாடி மையங்களை உலமாக்கள் பிரதிநிதித்துவம் செய்வதனால் அவர்களை மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் அணுக வேண்டிய தேவையுள்ளது, சமூகத்தின் ஏனைய புத்திஜீவிகள் துறை சார் நிபுணர்களை அங்கீகரித்து எல்லா மட்டங்களிலும் கலந்தாலோசித்து அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவும் சமூகம் எதிர் கொண்டுள்ள சமகால சவால்களிற்கு முகம் கொடுக்க முன்வருதல் வேண்டும்.

என்னிடம் ஒரு விவகாரம் பற்றிய மார்க்கத் தீர்ப்பை அல்லது கருத்தை கேட்கின்றபொழுது ஷரீஆவின் (TEXT) கண்ணோட்டத்தில் சகல பரிமாணங்களையும் (CONTEXT) அலசி ஆராய்ந்து விட்டே ஒரு நிலைப்பாட்டை சொல்கின்றேன், அவற்றை சமூக ஊடகங்களில் விவாதிப்பதனை நான் தவிர்ந்து கொள்கின்றேன், சிலர் மாற்றுக் கருத்துக்களை நான் மதிப்பதில்லை என்று எண்ணுவார்கள், உண்மையில் அவ்வாறு அல்ல, மாற்றுக் கருத்துகளை மதிக்கின்ற “ஷூரா” முறையை என்னை விடவும் இந்த நாட்டில் அன்றாடம் வலியுறுத்தும் ஒரு நபரை நீங்கள் காணமாட்டீர்கள்.

எனது வலைதளத்தை முகநூல் பக்கங்களை சமூக ஊடக பதிவுகளை நீங்கள்  பாருங்கள், அகீதா ஷரீஆ விடயங்களில் என்னுடன் கருத்து முரண்பட/ விவாதிக்க  விரும்புபவர்கள் அரபுமொழி மூலாதாரங்களை நேரடியாக அணுகமுடியுமாயின் என்னோடு சரளமாக அரபு மொழியில் அவற்றை கலந்துரையாட முடியுமாயின் தயவு செய்து முன்வாருங்கள்.

ஜஸாகுமுல்லாஹு கைரன்!

About author

1 comment

Post a new comment

சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும்.

Post Views: 654 சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும். எதிர் வரும் 15 ஆம் திகதியிற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் உத்தியோக ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com