Monday, September 27, 2021

சந்திரமாத சர்ச்சைகள் முடிவிற்கு கொண்டுவர முடியுமானவையே !

இஸ்லாமிய நாட்காட்டியை (கலண்டர்) தீர்மானித்துக் கொள்வதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றமை நாம் அறிந்த விடயம் மாத்திரமன்றி எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் எங்கள் அனைவரையும் “இதற்கு ஒரு முடிவு கிட்டாதா?” என்று கவலை கொள்ளச் செய்கின்ற ஒரு விடயமுமாகும்.

All phases of the moon on a clear dark sky

“பிறைகள்” விசுவாசிகளின்  ஹஜ்ஜு நோன்பு போன்ற இபாதத்துகளின் (இபாதாத்) கால வரையறைகளை தீர்மானிப்பது போன்று பொதுவாக மக்களிற்கு அவர்களது அன்றாட அலுவல்கள் கொடுக்கல் வாங்கல்கள் நிர்வாகங்கள் மற்றும் இன்னொரன்ன (முஆமலாத்) மானுட வாழ்வியல் தேவைகளிற்கான காலக் கணிப்பீடாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்பாகும்.

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.”  (ஸுரத் அல் பகரா 2:189  ஒரு பகுதி)

நோன்பு ஹஜ்ஜு போன்ற எமது பிரதான அமல் இபாதத்துகளோடு மாத்திரமல்லாது   முஸ்லிம் உம்மத்தின் நிலையான  (ஹிஜ்ரி கலண்டர்) நாட்காட்டியுடனும், முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியத்தோடும் தொடர்புபடுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடையமாகையால் இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களிலும் இந்த விடயம் பேசப் பட்டு வந்துள்ளது.

உண்மையில் பரந்து விரிந்த இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தை, அதில் ஓரிடத்தில் வியாபித்து நிற்கும் பால்வெளி மண்டலத்தில் எங்கோ ஓரிடத்தில் இந்த சூரிய குடும்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் படைக்கும் பொழுதே காலநேரத்தை கணிப்பிடும் நுட்பமான ஒழுங்கை அவன் படைத்து விட்டான் பூமி சூரியனை வளம் வரும் ஒழுங்கிலும் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொண்டு சந்திரன் பூமியை சுற்றி வரும் ஒழுங்கிலும் இந்தப் பூமியில் இரவு பகல் மாறி மாறி வரும் ஒழுங்கையும் நேரம் குறிப்பிட்டு அமைத்து வைத்துள்ளான்.

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.” (ஸுரத்துல் அன்ஆம்   6:96)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (ஸுரத்துர் ரஹ்மான் 55:5)

பிரபஞ்சத்தையும் பூமியையும் படைக்கும் பொழுதே மாதங்களின் எண்ணிக்கை பண்ணிரண்டாகவும் அவற்றின் நாட்களின் எண்ணிக்கை சந்திரனின் உதயம் அஸ்தமனத்தை பொறுத்து 29 அல்லது 30 ஆகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வே நிர்ணயம் செய்தும் வைத்திருந்தான், இந்தப் புவியின் அவனது கலீபாவாவாகிய மனித குலம் அவன் விரும்புகின்ற ஒரு உயரிய வாழ்வியல் நாகரீகத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான பிரமாண்டங்களை பிரபஞ்ச நியதிகளை அவனே படைத்து மனிதனுக்கு வசப்படுத்தியும் கொடுத்தான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் (ஸுரத்துத் தவ்பா  9:36)

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லைஅவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.” (ஸுரத்து  யூனுஸ் 10:5)

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.” (ஸுரத்து  பாதிர் 35:13)

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.”  (ஸுரத் அல் பகரா 2:189  ஒரு பகுதி )

சூரியனையும் சந்திரனையும் இரவையும் பகலையும் காலத்தையும் நேரத்தையும் அவற்றை கணிப்பீடு செய்வதற்குரிய எண்களையும் நுட்பத்தையும் கண்டறிவதற்குரிய மூளையையும் அறிவையும் ஞானத்தையும் என எல்லாவற்றையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வே படைத்து அவற்றை மனிதருக்கு கற்றும் கொடுத்து ஆராயும் படியும் அவனது அத்தாட்சிகளை கண்டறியும்படியும் அவனே கட்டளையுமிட்டான், அல்-குர்ஆனில் இவை பற்றி குறிப்பிடுகின்ற வசனங்கள் அதிகம் காணப்படுவதனை நாங்கள் அறிவோம்.

இறுதி இறைதூதர் எமது உயிரிலும் மேலான தூதர் பிறக்கும் பொழுது கூட இந்த அரபு மதங்களும் நாட்கணிப்பீடுகளும் இருக்கவே செய்தன கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையான அரச நிர்வாக தேவைபாடுகள் கருதி நிலையான நாட்காட்டி ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார்கள், அப்பொழுதுதான் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடக் கணிப்பு தீர்மானிக்கப்பட்டது.

புனித ரமழான் மாதத்தினை அடைந்து கொண்டவர்கள் நோன்பினை நோற்குமாறு கட்டளை வந்த பின்னர் சரியாக மாத ஆரம்பத்தை கணிப்பீடு செய்துகொள்ள இலகுவான நம்பகமான முறை ஒன்றை அன்றைய கால சூழநிலையில் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள், அதுதான் “நீங்கள் பிறை கண்டு நோன்பு வையுங்கள், பிறைகண்டு பெருநாள் அனுஷ்டியுங்கள், உங்களிற்கு மேகமூட்டத்தில் பிறை தெரியாவிட்டால் மாத நாட்களின் எண்ணிக்கையை 30 ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்ற கட்டளையாகும்.

உண்மையில் இந்தக் கட்டளை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரியதா அல்லது உம்மத்திற்கு உரியதா என்பதில தான் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்த இஸ்லாமிய பிக்ஹு இமாம்களான இமாம் மாலிக் இமாம் அஹமத் இமாம் அபூஹனீபா, இமாம் இப்னு தைமியாஹ் போன்றவர்கள் அது உம்மத்திற்குரிய கட்டளை என்றும், இமாம் ஷாபி உற்பட பல அறிஞர்கள் அது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய கட்டளை என்றும் கருதுகின்றனர்.

இந்த கருத்து வேறுபாட்டிற்கான பிரதான காரணம்  குறைப் எனும் சஹாபியின் அறிவிப்பாகும்: நான் ஷாம் தேசத்தில் இருந்த பொழுது ஒருநாள் ஜும்மாஹ் தினம் மாலையில் ரமழான் மாத தலைப்பிறை கண்டோம், மாத இறுதியில் மதீனா மாநகர் வந்த பொழுது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நீங்கள் ஷாம் தேசத்தில் எந்த நாளில் பிறை கண்டீர்கள் என்று வினவினார், நாம் வெள்ளி மாலை கண்டோம் என்று கூற நீர் கண்டீரா என்று கேட்டார் ஆம் நானும் கண்டேன் முஆவியாஹ் (ரழி) வும் நேன்பு நோற்றார் என்று கூறினேன்.

நாங்கள் இங்கு சனிக்கிழமை மாலை தான் கண்டோம் எனவே 29 ஆம் நாள் பிறை தென்படாவிட்டால் ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள், அவ்வாறாயின் நீங்கள் ஷாம் ஆளுனர் முஆவியாவின் சாட்சியத்தை ஏற்கவில்லையா என்று கேட்டதற்கு, இல்லை இவ்வாறு தான் எங்களுக்கு ரஸுலுல்லாஹ் கட்டளையிட்டுள்ளார்கள் என பதில் கூறியுள்ளார்கள்.

அதே போன்றே புஹாரி முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள இப்னு உமர் (ரழி) பிறிதொரு ஹதீசும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுகிறது “நாங்கள் கல்வி ஞானமற்ற ஒரு சமூகம், எழுதவும் கணிப்பீடுகள் செய்யவும் அறியாதவர்கள் எனவே மதங்கள் இவ்வாறு இவ்வாறுதான் அமைய வேண்டுமென கணிப்பீடுகள் செய்வதில்லை ஒருமுறை 29 மற்றொருமுறை  30 ஆகவும் அமைகிறது” என்று அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அன்று வழக்கில் இருந்த வான சாஸ்திர கணிப்பீட்டு முறை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே அன்று மக்களால் இலகுவாக நம்பகமாக அறிந்து கொள்ள முடியுமாக இருந்த பிறை பார்த்து ரமழான் நோன்பை ஆரம்பித்தல் பிறை பார்த்து பெருநாள் அனுஷ்டித்தல் முறையினை இறைதூதர் (ஸல்) அவர்கள் காட்டிக் கொடுத்தார்கள்.

மேற்சொன்ன நம்பகமான அறிவிப்புக்களை ஒன்று சேர்த்து பார்க்கும் பொழுது அன்றைய அறபு சமூகம் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியில் உச்ச நிலையை அடைந்திருக்கவில்லை என்பதுவும், அன்றைய வானசாஸ்திர கணிப்பீடுகளை கூட அறபு சமூகம் அறிந்திருக்கவில்லை என்பதுவும் தெளிவாகவே இறுதி இறைதூதர் (ஸல்) அவர்களால் உணர்த்தப் பட்டுள்ளது, எனவே அடுத்து இருக்கின்ற ஒரே நம்பகமான வழிமுறையினையே கைகொள்ளுமாறு அன்றைய சமூகத்திற்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

உண்மையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டங்களை அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்க்கச் சொல்லும் அல்-குரான் அருளப்பட்ட அந்த யுகத்தில் அரபு சமூகத்தின் அன்றைய அறிவியல் ஆராய்ச்சி மட்டம் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பதனை காட்டும் மேற்படி அறிவிப்புக்கள் நிச்சயமாக ஒரு பொழுதும் அல்-குரானும் அல்-சுன்னஹ்வும் அதிகம் வலியுறுத்தும் அறிவியல் ஆராய்ச்சி அந்த அளவோடு இருந்து விட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக எவராலும் கொள்ளப் படக் கூடாது.

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும்ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம்மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.”  (ஸுரத் அல் இஸ்ராஉ:  17:12)

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லைஅவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.” (ஸுரத் யூனுஸ்: 10:05)

பிறை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறை கண்டு பெருநாள் அனுஷ்டியுங்கள் என்ற அறிவிப்பிற்கு மேலதிகமாக “வெற்றுக் கண்ணால்” என்ற வார்த்தை அன்றைய மக்களின் நிலையை வைத்தே பின்வந்த அறிஞர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிவோம், அதில் அவர்கள் பக்க நியாயமும் இருக்கத்தான் செய்கிறது, இல்லாமல் இல்லை.

ஆனால் அந்தக் கட்டளை ஒட்டு மொத்த உம்மத்திற்கும் உரியதா அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரியதா என்ற சர்ச்சையில் அன்றைய கால சூழ்நிலையை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது நிச்சயமாக தத்தமது பிரதேசத்தில் காணுதல் கட்டாயம் என்ற முடிவு நியாயமாகத் தான் தெரிகிறது.

குறிப்பாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்  ஒரு சஹாபி அன்றைய கால சூழ்நிலையில் மேற்கொண்ட ஒரு துணிபு அவரது இஜ்திஹாதின் அல்லது புரிதலின் முடிவாகவே கொள்ளப் படல் வேண்டும் அதனை வைத்து “நீங்கள் அந்த மாதத்தினை அடைந்து கொண்டால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்” என்ற இறை வசனத்தையும், “பிறை கண்டு பிடியுங்கள் பிறை கண்டு பெருநாள் அனுஷ்டியுங்கள்” என்ற வசனங்களை பிரதேசத்திற்குப் பிரதேசம் நாட்டுக்கு நாடு மட்டுப் படுத்துவது நிச்சயமாக இஸ்லாம் வலியுறுத்தி வித்திட்ட அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞான அடைவுகளை முஸ்லிம் உம்மத்து நிராகரிப்பதாகவே அமையும்.

மேக மூட்டம் காரணமாக உங்களிற்கு பிறை தென்படாவிட்டால் நடப்பு மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற இறைதூதரின் வழிகாட்டல் ஒரு சலுகையாகவே தரப்பட்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடியும், அதனால்தான் அவ்வாறு நடப்பு மாதத்தை நாம் முப்பதாக பூர்த்தி செய்து வருகின்ற மாதத்தில் இருபத்தி எட்டாம் நாள் பிறை தென்பட்டுவிட்டால் பெருநாள் தவிர்த்து அடுத்த நாள் ஒரு நோன்பினை நோற்பது கடமையாகிறது.

இவாறு தரப்பட்டிருக்கின்ற சலுகையை பிறை விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள ஒரு சமூகம் அல்லது அந்த சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினரின் நிலைப்பாடு தமக்கு சாதகமாக கொள்கின்ற பொழுது அவர்கள் தவறிழைகின்றார்கள் என்று சர்ச்சைகளை கிளப்புவதும் பிணக்குகளை பிரிவினைகளை வளர்த்துக் கொள்வதும் தவறாகும்.

உண்மையில் புவியின் என்திசையிலும் ஒரே தினத்தில் பிறை தென்படுவதில்லை என்பது அறிவியல் விஞ்ஞான உண்மையாகும், என்றாலும் புவியின் பெரும்பான்மையான பிரதேசங்களிற்கு ஒரு தினத்தில் பிறை தெரிகின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் இஸ்லாமிய உம்மத்தின் சர்வதேச சகோதரத்துவத்தை ஒருமைப்பாட்டை சாட்சியாக எடுத்துக் கொண்டு பிறைகண்டு நோன்பு பிடித்தல் அல்லது பிறைகண்டு பெருநாள் அனுஷ்டித்தல் ஒரு பொழுதும் அல்-குர்ஆணினதும் சுன்னாஹ்வினதும் கூற்றிற்கு அல்லது சலபுஸ் ஸாலிஹுடைய வழிமுறைக்கு மாற்றமான ஒரு நடை முறையுமல்ல.

இஸ்லாமிய தினக் கணிப்பீடு சூரிய அஸ்தமனத்துடனும் சந்திர உதயுத்துடனும் இடம்பெறுவதால் அடுத்த நாள் சுபஹு வரையுள்ள நீண்ட கால இடைவெளியில் விசுவாசிகளின் சாட்சியை உலகின் பலபாகங்களிற்கும் அறியப் படுத்துகின்ற விஞ்ஞான தகவல் தொழில் நுட்பங்களை முஸ்லிம் உம்மத்து பயன்படுத்தக் கூடாது என்று எந்த வித கட்டளையும் எமக்கு பிறப்பிக்கப் படவில்லை மாறாக அறிவியல் விஞ்ஞான வளர்சியிற்கு இஸ்லாம் வித்திட்டிருப்பதனில் பெருமை கொள்ளும் உம்மத்து நாமாகும்.

இலங்கையில் பிறை காண்பதில் நிலவுகின்ற சர்ச்சையைப் பொறுத்தவரை பாரம்பரியமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் பெரிய பள்ளிவாயல் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பிறைபார்த்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்கின்றனர்.

ஆனால் கிழக்கிலும் மேற்கிலும் உலகின் பெரும்பாலான நாடுகளில் பிறைபார்க்கும் தினத்திற்கு அடுத்த நாளே இலங்கையில் பிறை பார்க்கப் படுவதாக குற்றம் சுமத்தப் படுகிறது, என்றாலும் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பிறைபார்த்தே இலங்கையில் அரபு மாதங்கள் தீர்மானிக்கப் படுவதால் தொடர்ந்தும் பிறை பார்க்கும் தினமும் தாமதித்தே வருவதாக தெரிவிக்கப் படுகின்றது, உதாரணமாக ரஜப் மாத இறுதியில் ஷஃபான் பிறை தென்படாவிட்டால் மாதத்தை முப்பது நாட்களாகவே பூர்த்தி செய்கின்றனர், அதேபோன்று ஷாஃபான் மாத இறுதியில் 29ஆம் நாள் ரமழான் பிறை தென்படவில்லை எனில் அந்த மாதத்தையும் முப்பதாகவே பூர்த்தி செய்கின்ற கட்டாய நிலையில் இருக்கின்றனர்.

இத்தகைய தொடர்ந்தேர்ச்சியான மயக்க நிலை அல்லது குழப்ப நிலை ஏற்பட பல கரணங்கள் இருக்கலாம் அதில் புவியில் இலங்கையின் அமைவிடம், கலாநிலை, பிறை பெரும்பான்மையான தேசங்களிற்கு தென்படுகின்ற பரிமாணத்தின், நேர வலயத்தின் எல்லையில் இருக்கின்றமை என சிலவற்றை பலரும் கூறுகிறார்கள், இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் பிறைக்குழு உறுப்பினர்கள், துறைசார் வானிலை நிபுணர்கள் எல்லோருமாக ஒன்று கூடி ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் விஞ்ஞான தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிராந்தியத்தில் பிறை பார்க்கும் தினத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வதில் எந்த தவறுமில்லை, மாறாக அது காலத்தின் கட்டாயமுமாகும்.

சர்வதேச பிறை என்றோ சவூதி பிறை என்றோ இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட எமது நேர வலயத்திற்குள் பிறை தோற்றம் பெறும் சாத்தியப் பாடுகளை மாதக் கணக்கில் வருடக்கணக்கில் நாம் அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பதற்கு, அல்லது அந்த வலயத்திற்குள் பிறை கண்டு நோன்பு நோற்கும் இஸ்லாமிய உம்மத்தின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு எந்த வித ஆதாரபூர்வமான நியாயமுமில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது ?

உண்மையில் பிறை காண்பது தொடர்பாக வந்திருக்கின்ற அறிவிப்புக்களை பார்க்கும் பொழுது அவை பல பிதான கேள்விகளை எழுப்புகின்றன :

முதலாவதாக பிறை சார்ந்த விடயங்களில் நவீன விஞ்ஞான தகவல் தொழில் நுட்பங்களை பாவிக்க மார்க்கம் அனுமதிக்கின்றதா இல்லையா? இரண்டாவதாக குறிப்பிட்ட ஒரு தேசத்தில் பிராந்தியத்தில் அல்லாத ஏனைய தேசங்களில் பிராந்தியங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின் சாட்சியங்களை குறிப்பிட்ட விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள முடியுமா முடியாதா? மூன்றாவதாக உலகளாவிய முஸ்லிம் உம்மத்திற்கு இயன்றவரை முரண்பாடுகள் களையப்பட்ட ஒரு ஹிஜ்ரி கலண்டர் தேவையா ?

இவ்வாறான இன்னொரன்ன கேள்விகளிற்கு விடைகாணுவதில் சர்வதேச அரங்கில் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளை முற்றுமுழுதாக நிராகரிக்கின்ற ஒரு சமூகமாக நாம் எம்மை தனிமைப் படுத்திக் கொள்தல் காலோசிதமானதல்ல என்பதனை சம்பந்தப் பட்ட சகல தரப்புக்களும் புரிந்து கொண்டு நிதானமாக அறிவுபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வருதல் வேண்டும்.

 அல்-குர்ஆன் பற்றி கூறுகின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்,    “அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.” (அன்நிஸாஉ : 4:82)  வானத்தையும் பூமியையும் படைக்கும் பொழுதே சூரியனையும் சந்திரனையும் இரவையும் பகலையும் நாட்களையும் மாதங்களையும் படைத்திருப்பதில் அல்லாஹ் வைத்துள்ள அத்தாட்சிகளை அவற்றின் பரிமாணங்களில் அறிந்து ஆராய்ந்து முரண்பாடுகளைக் களைவதே இஸ்லாமியர்கள் மீதுள்ள தலையாய கடமையாகும்!

“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. “

“அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” “ (ஸுரத் ஆல இம்ரான்  3:191) 

குறிப்பு: பிறை காணுகின்ற விடயத்தில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகளினைப் பொறுத்தவரை ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளிற்கு சாதகமான எதோ நியாயமான ஆதாரங்களை மூலாதாரங்களை கொண்டிருப்பது எப்படிப் போனாலும் அடுத்தடுத்த தரப்பினை நிந்தனை செய்கின்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதனால் எந்தவொரு தரப்பும் தத்தமது நிலைப்பாடுகளில் இருந்து இம்மியளவும் நகர்வதற்குத் தயாராக இல்லை என்பதுவே மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே ஒரு இணக்கப் பாட்டிற்கு வருவதற்கு முன்னர் சகலரும் தமக்கிடையே நிலவுகின்ற வேற்றுமைகளை களைந்து சகோதர வாஞ்சையுடனும் பொறுப்புணர்வுடனும் எதிர்கால சந்ததியினரிற்கான ஒரு தெளிவான வழிமுறையை விட்டுச் செல்ல இதய சுத்தியுடன் முன்வருதல் வேண்டும்!

இது இபாதாத்களோடும் அகீதாவோடும் மாத்திரமன்றி முஆமலாத்களோடும் தொடர்புடைய இஜ்திஹாதிற்கு பரந்த பரப்பைக் கொண்ட ஒருய் விடயமுமாகும் என்பதனை உலமாக்கள் அறிவார்கள்.

இம்முறை ஏற்பட்டுள்ள குழறு படியும் தீர்வை நோக்கிய சாதகமான நகர்வும்!

மேக மூட்டம் காரணமாக பிறை தென்படவில்லை எனில் ஷஃபான் மாதத்தை நாம் முப்பது நாட்களாக நிறைவு செய்கிறோம், என்பதன் அர்த்தம் அங்கு ஒரு சலுகை தரப்பட்டிருக்கிறது என்பது தான், ஏனெனில் பிறை இருந்திருக்கிறது நாம் காணவில்லை, அல்லது நம்பகமாக அறியவில்லை, அல்லது இரண்டாம் நாளே அறிய வருகிறது என்றெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆனால், இங்கு குழறுபடிகளுக்கு இட்டுச் செல்லும் நாம் விடுகின்ற பிழை யாதெனில் பிறைக்குழு கூடிய அதே நாளில் அடுத்த மாத பிறை பார்க்கும் நாளை அன்றே தீர்மானித்துக் கொள்வதுதான், இம்முறை ஹிலால் கமிட்டியை குழப்ப நிலைக்கு தள்ளியதும் அத்தைய தீர்மானமே எனலாம்.

ஏனெனில் மழைமேக முகில் மூட்டங்கள் காரணமாக தெரியாத பிறை இரண்டாம் நாள் தெரியும் பொழுது அது முதல் பிரியா இரண்டாம் பிறையா என்பதனை நாம் ஊர்ஜிதம் செய்துகொள்ள சிரமப் படுவதில்லை, நோன்பை ஒருநாள் தள்ளி ஆரம்பிக்க தரப்பட்டுள்ள சலுகையை நாம் அடுத்த மாதத்தையும் தள்ளியே தீர்மானிக்க ஆதாரமாக எடுப்பதில் தொடர்ந்தும் தவறு விடுகின்றோம்.

converted PNM file

அல்-ஹம்துலில்லாஹ், தற்பொழுது ஹிலால் கமிட்டி குறிப்பாக அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா ஒரு தெளிவான நிலைப் பாட்டிற்கு வந்திருப்பதனை அறிய முடிகிறது, அதாவது நம்பகமான வானியல் அறிஞர்கள் உலகில் அல்லது எமது பிராந்தியத்தில் பிறை காண்பதற்கான சாத்தியப்பாடுகளை எதிர்வு கூறல்களை ஆதாரபூர்வமாக அறியத் தருகின்ற பொழுது பிறை பார்ப்பதனை அல்லது மக்களின் சாட்சியினை ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்திருக் கின்றார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த முறை இலங்கையில் 28 ஆம் நோன்பு தினம் வியாழன் மாலை பிறை தெரிவது ஊர்ஜிதப் படுத்தப் பட்டால் வெள்ளிக் கிழமை பெருநாள் கொண்டாடுவதாகவும் குறைவடையும் ஒரு நோன்பினை சனிக்கிழமை கழா செய்வதாகவும் அறிவித்துள்ளார்கள்.

இப்பொழுது மக்கள் கேட்கும் கேள்வி அன்றைய நாள் ஷக்குடைய நாளாக ஏன் நீங்கள் பிரகடனப் படுத்தி பிறைக்குழு கொழும்பிலும் நாடளாவிய ரீதியிலும் கூடி ஒரு முடிவை அறிவிக்க முடியாது ? என்பதுதான், அதற்கவர்கள் ரமழான் மாத தலைப்பிறை கண்ட தினமே நாங்கள்  ஷவ்வால் பிறை பார்க்கும் தினத்தை நோன்பு 29 இல் அதாவது 15 ஆம் திகதி வெள்ளிக் கிழமையே பார்ப்பதாக தீர்மானித்து விட்டோம் என்பது தான்.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கும் பொழுது இந்த புதிய அணுகுமுறையில் தெளிவாகவே இருந்து அடுத்த மாதப் பிறையை தீர்மாணிக்கும் தினத்தையும் மிகவும் நிதானமாக முடிவு செய்து கொள்வது கட்டாயமாகும்.

இது வரலாற்றில் ஒரு திருப்புமுணை அமையும் இடைக்கால நகர்வாகவே பார்க்கப் படல் வேண்டும், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் “ஹிலால் கமிட்டி” தமது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து பிறை பார்க்கும் தினத்தை அவர்கள் அங்கீகரிக்கின்ற சர்வதேச பிராந்திய மற்றும் நம்நாட்டு வானியல் நிபுணர்களின் துணையுடன் முடிவு செய்து கொண்டால் இந்த வரலாற்றுக் குழறுபடி முடிவிற்கு கொண்டுவரப் பட முடியும் இன்ஷா அல்லாஹ்.

“ஹிஸாப்” கணிப்பீட்டின் படி பிறையை நிணயம் செய்கின்றவர்கள் கூட அன்றைய வானசாஸ்திர அறிவியலின்  அடிப்படையிலேயே சந்திரனின் நகர்வுகளை மையமாக வைத்து கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர், எனவே நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வானியல் சாஸ்திரங்களை அடிப்படியாகக் கொண்டு கணிப்பீடுகளை மேற்கொள்ளும் பொழுது அங்கே பாரிய கருத்து வேறுபாடுகளிற்கு இடம் இருக்காது, ஒட்டகத்தில் பயணித்த நாம் விமானத்தில் பயணிப்பது போன்று சந்திரனின் நகர்வுகளை இன்னும் தெளிவாக கணிப்பீடு செய்யும் விடயத்தில் அவர்கள் புரிந்துணர்விற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

 

 

=====================மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்===========================

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles