சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்!

0

(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்!

இலங்கையில் இதுகால வரை ஷாஃபி மத்ஹபே பின்பற்றப் பட்டு வருகிறது மிகச் சிறிய ஒரு பகுதியினர் ஹனபி மத்ஹபை பின்பற்றி வருகின்றார்கள், இலங்கையில் உள்ள சுமார் 250 ற்கும் மேற்பட்ட அறபு இஸ்லாமிய கலாபீடங்கள் ஷாஃபி மத்ஹபினை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டத்தையே கொண்டிருக்கிறார்கள்.

என்றாலும் ஏனைய பிரசித்தி பெற்ற மூன்று மத்ஹபுகளையும் அதாவது ஹனபி ஹம்பலி மாலிகி மத்ஹபுகளையும் ஏனைய தெற்காசிய நாடுகளில் போன்று இலங்கை உலமாக்கள் அங்கீகரித்து ஒப்பீட்டு கற்கைகளை கற்கும் கற்பிக்கும் ஒரு நெகிழ்வுத் தன்மையை அண்மைகாலமாக கொண்டிருப்பதனை நாங்கள் அவதானிக்கின்றோம்.

அதேபோன்றே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இலங்கையில் ஷாஃபி மத்ஹபினையே பிரதான மத்ஹபாக கொண்டிருக்கிறது, அதன் பத்வாக்குழு அவ்வப்பொழுது தேவைக்கேற்றப ஏனைய நான்கு மத்ஹபுகளினதும் சமகால அறிஞர்களினதும் கருத்துக்களை கவனத்தில் கொள்வதாகவும் அறிய முடிகிறது.

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் போன்று ஜாமியாஹ் நளீமியாஹ்விலும் அவ்வாறு ஒரு பரந்துபட்ட பரப்பிலேயே பிக்ஹுக்கலை கற்பிக்கப் படுகின்றது,  நவீன இஸ்லாமிய அறிஞர்களுடைய சர்வதேச பிக்ஹு கவுன்ஸில்கள் பத்வா சபைகளுடைய அணுகுமுறைகளும் அங்கு கற்பிக்கப் படுகின்றன.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ இலங்கை உலமக்களோ அல்லது பெரும்பான்மையான முஸ்லிம்களோ ஷாஃபி மத்ஹபினை சார்ந்திருப்பது சமகாலத்வரது குற்றமுமில்லை, தெற்காசிய நாடுகளில் இஸ்லாமிய கற்கைகளின் பரிணாமம், இலங்கையில் இஸ்லாமிய கற்கைகளின் பாரம்பரியம் தராதரம் போன்ற பல்வேறு காரணிகள் பின்புலங்கள் குறித்து நாம் அறிந்தும் வைத்திருக்கின்றோம்.

முஸ்லிம் உலகில் கூட பல நாடுகளில் துருக்கி, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பிரதான மத்ஹபாக ஹனபி மத்ஹபினையும், மொரோக்கோ, சூடான், மாலிகி மத்ஹபினையும், குவைத் ஜோர்தான், மாலைதீவு, எகிப்து, இந்தோனேசியா, மலேஷியா ஷாஃபி மத்ஹபையும்  சவூதி அரேபியா ஹன்பலி மத்ஹபையும் பிரதான மத்ஹபுகளாக கொண்டிருக்கின்றன.

மேற்படி எல்லா நாடுகளிலும் உள்ள உலமாக்கள் பிக்ஹு கவுன்ஸில்கள் எல்லா பிரதான மத்ஹபுகளையும் நவீன அறிஞர்களின் கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு தீர்ப்புக்களை பத்வாக்களை வழங்குவதனை நாம் அவதானிக்கின்றோம், அவர்களது பத்வா வெளியீடுகள் சஞ்சிகைகள் அறிக்கைகளில் சமகால விவகாரங்கள் குறித்த பத்வாக்களை அவ்வாறான பரப்புக்களில் காண முடிகிறது.

என்றாலும், உலகின் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் நவீன இஸ்லாமிய அறிஞர்களின் ஆய்வுகளை மையமாக வைத்து முற்றுமுழுதான சட்டவாக்கங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறுதல் வேண்டும், அதிலும் குறிப்பாக பெரும்பான்மையான அறபு நாடுகளில் (அஹ்வால் ஷக்ஷியா) தனியார் சட்டங்கள் தவிர்த்து பொதுச் சட்டங்கள் ஆங்கிலேய   பிரெஞ்சு பின்புலங்களை கொண்டிருப்பதனையே காண்கிறோம்.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் பொழுது முற்றுமுழுதாக மத்ஹபுகளுக்கு வெளியே சென்று இஸ்லாமிய ஷரீஆ என்றோ அல்லது முஸ்லிம் சட்டம் என்றோ பொதுவாக சட்ட வரம்புகளை நிர்ணயிக்க முயல்வது இப்போதைய நிலையில் முடியாத காரியமாகும்.

குறிப்பிட்ட ஒரு மத்ஹபின் அல்லது இலங்கையில் அங்கீகரிக்கப் படுகின்ற பிரதான மத்ஹபுகளின் பிரபல்யமான கருத்துக்களில் உள்ள சட்டங்களை மாத்திரம் தானும் ஆராய்ந்து முழுமயான ஒரு சட்டத் தொகுப்பை உருவாக்குவது என்பது சாதாரண ஒரு விடயமல்ல.

எனவே பொதுத் தளங்களில், பாமர சமூகத்தின் மத்தியில் நாம் ஷாஃபி மத்ஹபிற்கு வெளியேயும், சிலவேளைகளில் இங்கு பிரபல்யமான நான்கு மத்ஹபுகளிற்கு வெளியேயும் செல்வதும் அல்லது அவற்றில் மிகவும் அரிதான கருத்துக்களை கவனத்தில் எடுப்பதுவும் அல்லது நவீன அறிஞர்களின் தனித்தனியான ஆய்வுகளை அல்லது எல்லா மத்ஹபுகளிலும் உள்ள வித்தியாசமான கருத்துக்களை ஆராய்வதும் உடனடியான ஒரு சட்டவாக்க அல்லது சட்ட திருத்தத்திற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

அத்தகைய ஆய்வுகள் உரிய மட்டங்களில் மாத்திரமே மேற்கொள்ளப் படுதல் அறிவுபூர்வமான அணுகுமுறையாகும்.

உண்மையில் ஒருநாட்டின் சட்டவாக்கம் அந்த நாட்டின் களநிலை எதார்த்தங்கள், சாத்தியப் பாடுகள் என பல படிமுறைகளை கவனத்திற்கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. எனினும் ஷரீஆ பிக்ஹு கற்கைகள், பிக்ஹுதுறை வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் என்பவற்றின் பரப்புகளிற்கு எவரும் கடிவாளமிட முடியாது, கால வோட்டத்தில் சமூகத்தி தளத்தில் அறிவியல் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது உலமாக்களின் இஸ்லாமிய அறிஞர்களின் தலையாய கடமையாகும்.

இலங்கையில் பேசுபொருளாக இருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்ட அறிக்கைகளைப் பொறுத்தவரை நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளிற்கும் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை முகாம்களிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை மிகவும் சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் கையாளுகின்ற பிக்ஹு அதன் உஸூல்கள்  மகாஸிதுகள் குறித்து நாம் அதிக பட்ச கரிசனையோடு சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

இன்று சமூகத் தளத்தில் இருவேறுபட்ட அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும், இரண்டு அறிக்கைகளும் பல முன்னேற்றகரமான சீர்திருத்தங்களை முன்மொழிந்திருந்தாலும்  இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க அதிகார சபையான அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா பல விடயங்களில் ஷாஃபி மத்ஹபின் பிரதான சட்ட வரம்புகளை மீறுவதற்கு உடன்படாமை, இரண்டாம் தரப்பினர் ஷாஃபி மத்ஹபிற்கு அப்பால் சென்று பல மத்ஹபுகளில் இருந்தும் நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்களில் இருந்தும் தமது நிலைப்பாடுகளை எடுத்துள்ளமை பெரும் சர்ச்சையாக பேசப்படுகிறது.

மேற்படி எந்தத் தரப்பும் ஷரீஆவின் அடிப்படை வரம்புகளை மீறாத பொழுதும் பொதுமக்களிடம் கருத்துக் கோரப்பட்டுள்ள நிலையில் அதிதீவிரமாக தத்தமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் பரவச் செய்வதில் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டி ஒருதரப்பை மற்றொரு தரப்பு பிற்போக்கு வாதம் என்றும், இன்னுமொரு தரப்பு ஷரீஆவிற்கு வெளியே சென்று விட்டதாகவும் பேசுவது கவலை தருகிறது.

இன்ஷா அல்லாஹ், இயன்றவரை அவசரமாக இந்த இரண்டு அறிக்கைகளையும் அராய்ந்து இந்த தேசத்தின் களநிலவரங்களை கருத்தில் கொண்டு சில இணைக்கப் பாடுகளை எய்துவதற்கு எடுக்கப் படுகின்ற முயற்சிகள் வெற்றிபெறவேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம்.

எனவே இந்த சட்டக் கல்வி (EDUCATION) , சட்ட அறிவு (KNOWLEDGE) , சட்டவாக்கம் (LEGISLATION) என்ற மூன்று விவகாரங்களிலும் கையாளப்பட வேண்டிய வேறுபட்ட அணுகுமுறைகளை பொதுத் தளங்களில் பாமர மக்களுடன் கருத்தாடுவதோ அல்லது அவற்றை புரிந்துகொள்ளும் அங்கீகரிக்கும் மனநிலையில் இல்லாத அதற்குரிய அறிவு முதிர்ச்சியும் பக்குவமும் இல்லாத அவைகளில் பேசுவதோ அறிவு பூர்வமான (ஹிக்மத்) அணுகுமுறையாக இருக்காது.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

About author

No comments

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்கள்.! (2012 இல் எழுதப்பட்டது)

இலங்கையில் இஸ்லாமியர்களை இலக்குவைக்கும் பேரினவாத சக்திகளும், வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்களும்.!   (2012 இல் எழுதப்பட்டது , நவமணி , விடிவெள்ளி, மீள்பார்வை, எங்கள்தேசம் மற்றும் வலைதளங்களில் பிரசுரமாகியது , ...
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com