பதின்மவயதினர் :  புதிய தலைமுறைத் தலைமைகளின் ஆளுமை விருத்தி!

0

பதின்மவயதினர் :  புதிய தலைமுறைத் தலைமைகளின் ஆளுமை விருத்தி

(ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் 7 நாள் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு கடந்த  14.10.2018  ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தபால் தலைமையக நிகழ்வுகள் மண்டபத்தில் இடம்பெற்ற பொழுது ஆற்றப்பட்ட சிறப்புச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்)

எல்லாப் புகழும் புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே உரியன, அவனது தூதர், எம் உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் 7 நாள் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவாற்றுமாறு என்னை கேட்டுக் கொண்ட அமைப்பின் தலைமை  உறுப்பினர்களுக்கு முதலாவதாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன், ஜஸாகுமுல்லாஹு கைஹரன்.

மிகவும் குறுகிய கால இடைவெளியில் அழைப்பு விடுக்கப் பட்டபொழுது தயாரில்லாமல் பங்கு கொள்ள தயங்கிய பொழுதும் வாழ்வில் அதிமுக்கிய பருவமான பதின்ம வயது தாண்டி இருபதுகளில் காலடி வைக்கவிருக்கும் இளம் வயதினராகிய உங்களுடன் ஒரு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

விசுவாசக் கோட்பாடுகளை மீள்பரிசீலனை செய்து கொள்ளும் பருவம்!

நாங்கள் முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்தோம், முஸ்லிம் பாடசாலைகளில் படிக்கின்றோம், அல்லது மஸ்ஜிதுகளினால் வழிநடத்தப் படுகின்றோம், இஸ்லாமிய அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனால் பரம்பரை முஸ்லிம்களாக இருக்கின்றோம், அல்-ஹம்துலில்லாஹ்.

என்றாலும், முஃமீன்களே உங்கள் ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு ஏற்ப பதின்மவயதில் சிந்தனை முதிர்ச்சி, பொறுப்புணர்வு ஏற்படுகின்ற பருவத்தில் எமது விசுவாசக் கோட்பாடுகளை தனியாகவும் கூட்டாகவும் அறிவு பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சுயவிசாரணை செய்து கொள்வது கட்டாயமாகும்.

இறைவன், பிரபஞ்சம், உலகம், வாழ்வு, மரணம் பற்றியெல்லாம் உலகில் பல்வேறு தத்துவங்கள், சித்தாந்தங்கள்  இருக்கின்றன அவைகள்  மனிதனுக்கு வாழ்வதற்கு வழி சொல்வதற்குப் பதிலாக  சிலவேளைகளில் சர்சைகளாகவும், பிணக்குகளாகவும் அடக்குமுறைகளாகவும் அழிவுகளாகவும் மாறிக் கொண்டிருப்பதனை நாங்கள் காண்கின்றோம்.

அல்-ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் சொல்லப்பட்ட விடயங்கள் குறித்த தெளிவான பார்வைகளை பிரபஞ்ச கர்த்தாவிடமிருந்தே அறிந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

இறைவனைப் பற்றி அறிந்திருக்கின்றோம், வாழ்வை, மரணத்தை, கியாமத்தை, கேள்வி கணக்கை  மறுமை வாழ்வை, சுவர்க்கம், நரகத்தை, நபிமார்களை, வானவர்களை நாம் அறிந்து அழமாக விசுவாசம் கொண்டுள்ளோம் அவை எமது விசுவாசக் கோட்பாடுகள்.

இனி இருபதுகளில் கால் வைக்கப் போகும் நாம்  மிகவும் பொறுப்புணர்வோடு எமது ஆளுமை விருத்தி குறித்து கவனம் செலுத்துதல் கடமையாகும், அந்த வகையில் உடல், அறிவு, ஆன்மா ஆகிய மனிதனின் மூன்று பிரதான கூறுகள் குறித்தும் சரியான பார்வை எம்மிடம் இருத்தல் அவசியமாகும்.

வாழ்வு மரணம் பற்றிய இஸ்லாமியப் பார்வை !

மண்ணில் வாழ்வதற்காக மண்ணினால் படைக்கப்பட்ட மனிதன் (பௌதீக உடல்) தனக்கு இறைவனால் வசப்படுத்தி தரப்பட்டுள்ள படைப்புகளை வளங்களை முகாமை செய்வதற்கும் அவற்றை அனுபவிப்பதற்கும் குடும்பமாக சமூகமாக தேசமாக உம்மத்தாக வாழ்வதற்கும் அவனுக்கு (பகுத்தறிவு) “அறிவு” வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியனின் வாழ்வு குறித்த பார்வை விசாலமானது அது இவ்வுலக குறுகிய வாழ்வுடன் முற்றுப்பெறுவதில்லை அது மறுமையிலும் நீண்டு செல்கின்றது, இந்த உலக வாழ்வு மறுமை வாழ்விற்கான விளைநிலமாகும் அத்தகைய ஒரு வாழ்வின் உண்மையான அளவுகோல்கள் பௌதீக பெறுமானங்களால் மதிப்பீடு செய்யப் படுவதில்லை அங்கு “ஆன்மீகம்” முக்கியத்துவம் பெறுகிறது, ஒரு முஸ்லிமின் ஆளுமை ஆழமான ஆன்மீக விசுவாசக் கோட்பாடுகளின் மீது கட்டி எழுப்பப் படுகிறது.

மான்னில் வாழ்வதற்காக மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு உலகை நிர்வகிக்கின்ற ஆறிவையும் ஆற்றலையும் வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஆன்மீக அடித்தளங்களுடன் கூடிய அழகிய வாழ்வு நெறியையும்  அருளியிருக்கின்றான், எனவே இந்த பிரதான கூறுகளான உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்று கூறுகளையும் சமநிலையில் விருத்தி செய்கின்ற ஒருவனுக்கு ஈருலக வாழ்வும் வசந்தமாக அமைந்து விடுகின்றது.

பதின்ம வயதைத் தாண்டும் இளம் வயதினராகிய நீங்கள் தனியாளாக குடும்பமாக சமூகமாக தேசமாக உம்மத்தாக எமது கடமைகளை பொறுப்புக்களை உணர்ந்து வாழ்வை திட்டமிட்டுக் கொள்ளும் பருவத்தில் இருக்கின்றீர்கள்,  இஸ்லாமிய மாணவர் அமைப்பின் வழிநடத்தலில் பொதுத் தராதர சாதாரண உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்து உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்களை பெற்று ஏக காலத்தில் ஆன்மீகப் பயிற்சியையும் பெற்றிருக்கின்றீர்கள், வெற்றிகரமான ஒரு இஸ்லாமிய ஆளுமைக்கான அடித்தளம் இடப்பட்டிருக்கின்றது.

புதிய தலைமுறைத் தலைவர்களாக நீங்கள் இருக்கப் போகின்றீர்கள்!

நானறிந்த வகையில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு இந்த மண்ணில் இளம் இஸ்லாமிய ஆளுமைகளின் உருவாக்கத்தில் மகத்தான பங்களிப்பினைச் செய்து வருகின்றது, இன்று இந்த தேசத்தில் பல்வேறு துறைகளிலும் தலை சிறந்து விளங்குகின்ற சமூகத்தினதும் தேசத்தினதும் நன்மைகளுக்காக தம்மை அர்பணித்துச் செயற்படுகின்ற பல ஆளுமைகள் இந்த அமைப்பில் களம் கண்டவர்கள் என்பதில் பெருமிதம் அடைய முடியும்.

இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் இந்த சமூக தேசிய அரங்குகளில் புதிய தலைமுறைத் தலைவர்களாக நீங்கள் இருக்கப் போகின்றீர்கள், மூன்று தசாப்தங்களிற்கு முன்பிருந்த உலகம் வேறு இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் வேறு, ஒவ்வொரு தலைமுறையினரும் புதிய யுகத்தில் புதிய சவால்களிற்கு முகம் கொடுக்கின்றனர்.

துரதிஷ்ட வசமாக எமது தேசத்திலும் உம்மத்திலும் எல்லா மட்டங்களிலும் அது அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகலாயினும் பாரிய தலைமுறை இடைவெளி ஏற்பட்டிருப்பதனை நாம் அவதானிக்கின்றோம், அதன் விளைவுகளிற்கு நாம் முகம் கொடுத்துக் கொண்டுமிருக்கின்றோம், அத்தகைய தலைமுறை இடைவெளிகளை குறைத்து யுகத்தின் புதிய சவால்களிற்கு முகம் கொடுக்கும் திராணியுள்ள புதிய தலைமுறைத் தலைமைகளை உருவாக்குவதும் அறிமுகம் செய்வதும் இந்த சமூகத்தின் கட்டாய கடமையாகும்.

ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமி, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு போன்ற இன்னும் பல அமைப்புகள் கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் இஸ்லாமிய தஃவா மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை நாமறிந்த விடயமாகும், குறிப்பாக “இகாமதுத் தீன்” எனும் பணி “இஸ்லாஹு தாத்தில் பைன்” என்ற உள்ளக சமூக சீர்திருத்தப் பணிகளுடனேயே பெரிதும் மட்டுப் படுத்தப் பட்டிருந்தது.

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் சவால்கள்!

அண்மைக் காலமாக இஸ்லாமிய அமைப்புக்களின் பணிகளும் பரப்புக்களும் காலத்திற்கு ஏற்ற பரிமாணங்களை எடுத்து பன்முகப் படுத்தப் பட்டு வருவதனை நாம் அவதானிக்கின்றோம், குறிப்பாக பல்லின, பல்கலாசார சமூக சூழலில் கரைந்து விடாமல் கலந்து வாழுகின்ற, சமாதான சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தப் படுவதனை அவதானிக்க முடிகின்றது.

உண்மையில் யுகத்தின் புதிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கான முனைப்புக்களில் சகலதரப்புக்களும் ஒத்திசைவான சிந்தனை போக்குகளை கடைப்பிடிக்கின்றமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும், குறிப்பாக சர்வதேச பிராந்திய அரங்குகளில் போன்று தேசிய அரங்கிலும் முஸ்லிம் உம்மத்து பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இந்த தேசத்தில் எமது பணிகள் மற்றும் வாழ்வொழுங்கு குறித்து தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கடப்பாடு சகல தரப்புக்களாலும் வெகுவாக உணரப்பட்டது.

முஸ்லிம்களது இருப்பு பாதுகாப்பு கேள்விக்கு உற்படுத்தப் பட்டது, வரலாறும் பங்களிப்புக்களும் கேள்விக்கு உற்படுத்தப் பட்டன, சர்வதேச அரங்கில் சந்தைப் படுத்தப் படும் இஸ்லாமோபோபிய பரப்புரைகள் இங்கும் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைப் படுத்தப் பட்டன, களநிலவரங்களின் பாரதூரத் தன்மைகளை உணர்ந்து கொண்ட இஸ்லாமிய அமைப்புக்களும் முஸ்லிம் தலைமைகளும் உச்சக் கட்ட பொறுமை காத்து எதிர்வினைகள் தவிர்த்து சமயோசிதமாக செயற்பட ஆரம்பித்தன.

குறிப்பாக காழ்ப்புணர்வுப் பரப்புரைகளுக்கும் அங்காங்கே கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளிற்கும் எதிர்வினைகளாற்றாது சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் இயன்றவரை பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்களுடன் ஒத்துழைதத்தோடு தீய சக்திகளின் சதிவலைகளை முறியடிப்பதற்காக சமாதான சகவாழ்வை விரும்பும் நேச சக்திகளோடு இணைந்து தேசிய வாழ்வில் எம்மை நாம் முழுமையாக இணைத்துக் கொள்ள முயற்சிகள் செய்தோம்.

அல்லாமா யூஸுப் அல்-கர்ளாவி அவர்களின் அறிவுரை: கரைந்துவிடாமல் கலந்து வாழுங்கள்!

2011 ஆம் ஆண்டு அல்லாமா யூஸுப் அல்-கர்ளாவி அவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தத் பொழுது அந்த நாட்களில் சூடுபிடித்திருந்த தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் மற்றும் ஹலால் விவகாரம் பற்றியெல்லாம் கேட்டறிந்த அவரிடம் இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன உபதேசம் செய்ய விரும்புகின்றீர்கள் என்று வினவினோம், அதற்கவர்:

“இலங்கை முஸ்லிம்களாகிய நீங்கள் உலகளாவிய முஸ்லிம்க் உம்மத்தின் ஒரு பகுதியினர் நீங்கள் தனித்த ஒரு சமூகத்தினர் அல்ல, அண்டை அயல் நாடுகளிலும் அறபு முஸ்லிம் நாடுகளிலுமுள்ள முஸ்லிம்களுடன் உறவை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் களைந்து ஐக்கியமாக ஒன்றிணையுங்கள், இயக்கங்கள் அமைப்புக்கள் ஜமாத்துகள் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்புப் பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், ஒற்றுமைப்பட்ட சிறுபான்மையினர் வேற்றுமைகளால் பிளவுருகின்ற பெரும்பான்மையை விடவும் பலமானவர்கள்.

அதேவேளை, சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் தத்தமது நாடுகளில் உள்ள பெரும்பான்மை மக்களுடன் கரைந்துவிடாமல் கலந்து வாழுகின்ற வால்வொழுங்கை கைக்கொள்ளுங்கள், தேசிய வாழ்வில் தனித்து விடாதீர்கள், பொது வாழ்வில் இஸ்லாமிய வரைமுறைகள் பேணி தனித்துவம் காத்தவர்களாக சேர்ந்து வாழுங்கள்.”  என உபதேசம் செய்தார்கள்.

தேசிய வாழ்வில் முஸ்லிம்கள் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்தல்.

தேசிய வாழ்வில் முஸ்லிம்கள் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதென்பது ஒரு தற்காலிகமான, சமயோசிதமான  பாதுகாப்பு யுக்தி அல்ல, மனித குலத்திற்கான உண்ணத் தூதான்மையை சுமந்திருக்கும் சிறந்த உம்மத்தின் உன்னதமான பணியாகும், மகாஸிதுஷ் ஷரீஆஹ் எனும் இஸ்லாமிய வாழ்வொழுங்கின் அதி உன்னத இலக்குகளின் வெளிச்சத்தில் இந்த நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதிபத்தியம், பாதுகாப்பு, அமைதி, சமாதானம், அபிவிருத்தி, அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக, கல்வி கலாசார சுகாதார சுற்றுச் சூழல் மேன்பாடுகள் என பல்வேறு துறைகளிலும் முன் நின்று செயலாற்றுவது எமது “இகாமதுத் தீன்” சார்ந்த உயரிய இலட்சியப் பணியாகும்.

இந்த நாட்டின் நல்லாட்சி நிலைபெற உழைப்பது, ஊழல் மோசடிகள், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராக போராடுவது, சமூக அநீதிகள் களைய போராடுவது, மது மாது போதை வஸ்துக்கள் அபாயகரமான போதை வஸ்துக்களுக்கு எதிராக போராடுவது, சுகாதாரம் ,சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக பங்களிப்புச் செய்வது என இன்னொரன்ன பணிகளில் நாட்டில் உள்ள ஏனைய முற்போக்கு சக்திகளுடன் தோளோடு தோள் நின்று உழைப்பது முஸ்லிம் உம்மத்தின் பணியும்  கடமையுமாகும்!

புதிய உலக ஒழுங்கில் எமது அழகிய தேசம் எதிர் கொள்ளும் சவால்கள்.

புதிய உலக ஒழுங்கில் எமது அழகிய தேசம் பல புதிய சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது, இந்த தேசத்தின் ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அவற்றிற்கான தீர்வுகள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள், இந்த நாட்டின் நலன்களில் ஏனைய சமூகங்களை விட எந்த விதத்திலும் குறைவில்லாது கரிசனை கொள்கின்ற சமூகம் என்ற வகையில் அவை குறித்து போதிய ஆறிவும் தெளிவும் எங்களுக்கு இருப்பதோடு துறைரீதியிலான நிபுணத்துவப் பங்களிப்புக்களை செய்வதற்கும் நாங்கள் முன்வருதல் வேண்டும்.

அண்மையில் கத்தார் அரச தூதாண்மையின் சார்பில் கொழும்பில் இடம் பெற்ற இரண்டு சர்வதேச மாநாடுகளில் நான் பங்குபற்றினேன், முதலாவது மாநாடு கடந்த ஆகஸ்டு மாதம் 30,31 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது சுமார் 35 நாடுகளில் இருந்து 800 பாதுகாப்பு நிபுணர்கள்,இராணுவ அதிகாரிகள் அதில் பங்குகொண்டனர், இலங்கை இராணுவத்தினால் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு என்ற தொனிப் பொருளில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில், ‘மக்கள் தொகை மாற்றமும் பாதுகாப்பு மீதான தாக்கங்களும்’, ‘தொழில்நுட்ப இடையூறுகள்’, ‘மனித தலையீடு காரணமான காலநிலை மாற்றம்’ மற்றும் ‘அரசியல் தீவிரவாதம் ‘ ஆகிய தொனிப்பொருள்களுக்கு அமைவாக ‘மனித காரணிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு’, ‘உள்நாட்டு இடப்பெயர்வின் உலகளாவிய சவால்’, ’21 ஆம் நூற்றாண்டில் நகர்ப்புற பாதுகாப்பு’, ‘இணைய முரண்பாடுகள் மற்றும் எதிர்கால சக்தி’, ‘சமூக ஊடகங்களும் நம்பகத்தன்மையும்: உலகளாவிய பாதுகாப்பு சவால்கள்’, ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி ஆயுதங்கள்’, ‘பிரதிபலிப்பு ; தணிப்பதற்கான உத்திகள் (பிராந்திய முன்னோக்கு) இராணுவத்தின் பங்கு’,  இராணுவம் தொடர்பான விழிப்புணர்ச்சி மற்றும் உத்திகள் (உலகளாவிய முன்னோக்கு) ‘,’ காலநிலை பூகோள இயந்திரவியல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ‘,’ வன்முறை அல்லாத அரசு வகிபாகம் ‘, ‘ காலநிலை மாற்றம்: போர் எதிர்கால ‘மற்றும்’ வன்முறை தீவிரத்தை குறைப்பதில் தலைமைத்துவம் ‘, ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறன.

இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்!

அடுத்த மாநாடு கடந்த அக்டோபர் 11,12 ஆம் திகதிகளில் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமான அலரிமாளிகை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது, ‘இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்’ என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற மாநாட்டில் சர்வதேச பிரமுகர்கள், மற்றும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் மற்றும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளின் நிபுணர்கள் கலந்து கொண்டனர், அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாடு ஒன்றிற்கான முன்னேற்பாடாகவே இந்த கருத்தாடல் மாநாடு இடம்பெற்றது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான நீண்டகால நல்லுறவுகள், குறித்த சர்வதேச மாநாட்டிற்கான முக்கியமான மையமாக இலங்கையை மாற்றியுள்ளது, எதிர்காலத்தில் சர்வதேச அரசியல் பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க தாழ்வாரமாக மாறிவரும் இந்து சமுத்திர வலயத்தை அமைதி சமாதனம் மற்றும் சமத்துவமிக்க நிலையான அபிவிருத்தி       ஆகியவற்றை உறுதிப் படுத்துகின்ற சர்வதேச சட்டங்களால் விதிமுறைகளால் மேலாண்மை செய்கிற பொறிமுறைகளின் தேவைப்பாடு குறித்தும் அதிலிருக்கின்ற சவால்கள் மற்றும் சந்தர்பங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

இவ்வாறு சர்வதேச பிராந்திய மட்டங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் அரசியல் இராஜதந்திர பொருளாதார பாதுகாப்பு நகர்வுகள் ஒத்துழைப்புக்கள், அபிவிருத்திகளை நோக்கிய முன்னெடுப்புக்கள் குறித்த அறிவும் தெளிவும்  நிபுணத்துவங்களும் புதிய தலைமுறையினருக்கு அவசியமாகும்.

ஒவ்வொரு தலைமுறையினரும் புதிய ஒரு யுகத்திலேயே பிறக்கின்றார்கள், யுகத்தின் சவால்கள் புதியவை, பல தசாப்தங்கள் காலம் கடந்துவிட்ட இலக்குகள் கோஷங்கள் புதிய யுகத்தின் களநிலவரங்கள் மாற்றங்களுக்கு ஏற்ப பரிசீலனைக்கு உற்படுத்தப் படுதல் வேண்டும், அவற்றிற்கேற்ப இளம் தலைமுறையினரை பயிற்றுவித்தல் சமூகத்தின் கடமையாகும்.

வேற்றுமைகளுக்கு மத்தியில் இணைக்கப் பாடுகளை காணுதலின் அவசியம்

கடந்த பல தசபதங்களாக இந்த நாட்டு முஸ்லிம்களை வழி நடாத்துவதில் எமது அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள், இஸ்லாமிய அமைப்புக்கள் அளப்பரிய சேவைகளை செய்து வந்துள்ளமை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும், என்றாலும் மேற்படி சகல அமைப்புக்களும் தலைமைகளும் இருக்கின்றா நிலையில் தான் முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்னொரு பொழுதும் இல்லாதவாறு எல்லாத் திசைகளிலுமிருந்து சவால்கள் விடுக்கப் பட்டன.

எங்கே கோளாறு இருக்கின்றது என்பதனை உணர்ந்துகொள்ள எமக்கு அதிக காலம் செல்லவில்லை, சமூகம் அரசியல் ரீதியாகவும், கொள்கை கோட்பாடுகள் ரீதியாகவும் அமைப்புக்களாகவும் கட்சிகளாகவும் இயக்கங்களாகவும் பிரிந்து கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகளாக, பிரிவினைகளாக வளர்ந்து வருகின்றமை புறமிருந்து வரும் சவால்களை விடவும் எமக்கு அச்சுறுத்தலாக இருப்பதனை நாம் உணர்ந்து கொண்டோம்.

எனவே, அவசரமாகவும் அவசியமாகவும் சகல தரப்புகளிற்கும் பொதுவான விவகாரங்களில் வேற்றுமைகளுக்கு மத்தியிலும்  இணைக்கப் பாடுகளை ஏற்படுத்துகின்ற ஒரு சமூக ஒருங்கிணைப்பு பொறிமுறை உருவாக்கப் படுவதன் அவசியம் பல்வேறு தரப்புக்களினாலும் வெகுவாக உணரப்பட்டது, அந்த அடிப்படையில் தான் உலமாக்கள் புத்திஜீவிகள் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் கலந்தாலோசனைப் பொறிமுறை ஒன்றை ஒரு பலமான சிவில் சமூகத் தலைமைத்துவக் கட்டமைப்பாக தோற்றுவித்து அதனை தேசிய ஷூரா சபை என்று அடையாளப் படுத்திக் கொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் இன்றைய பொதுச் செயலாளர் என்றவகையில் நாட்டின் தேசிய மட்டம் முதல் அடிமட்டங்கள் வரை இஸ்லாம் கற்றுத் தந்துள்ள அழகிய ஷூரா தலைமத்துக் கட்டமைப்பில் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக உங்களை முழுமையாக இணைத்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்,

இது உங்களது யுகம், உங்கள் முன் இன்று தெளிவான பாதை இருக்கின்றது, நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான ஆற்றல்களை திறமைகளை தன்னகத்தே கொண்ட இளம் தலைமுறைத் தலைமைகள், புதிய யுகத்தில் நாம் எதிர்கொள்கின்ற சவால்களிற்கு நம்பிக்கையுடன் முகம் கொடுக்க வல்ல நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமைகள், உறுதியான ஈமானியப் பலத்தோடும், தெளிவான சிந்தனைகளோடும் சமூகத்தின் பாலும் தேசத்தின் பாலும் உம்மத்தின் பாலும் உங்களது கடமைகளைச் செய்ய எல்லாம் வல்ல நல்லருள் பாளிப்பானாக!

ஜஸாகுமுல்லாஹு கைஹரன், வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

About author

No comments

இளம் தலைமுறையினரை காவு கொள்ளும் போதைப் பொருள் பாவனை!

Post Views: 2,204 இன்று இலங்கை மக்கள் எதிர் நோக்கியுள்ள மிகப் பெறும் சவாலாக போதைப் பொருள் பாவனை மாறி வருகிறது, தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com