இஸ்லாத்தின் பார்வையில் பல்கலைக் கழகங்களில் பகிடி வதை மிகப் பெரிய சாபக் கேடாகும்..!

0

Aமுஸ்லிம் மாணவ மாணவியர்  எந்த கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில் கற்றாலும் உயரிய இஸ்லாமிய பண்பாடுகளை  அணிகலன்களாக கொண்டிருக்க வேண்டும், வளர்ந்தவர்களான  இவர்களது  ஒவ்வொரு நடவடிக்கையும் சொல்லும் செயலும் பண்பாடுகளும் அவர்களது  வாழ்விலும், குடும்ப சமூக  வாழ்விலும்  நேரிடையானதும் எதிர் மறையானதுமான தாக்கங்களை கொண்டிருக்கும் அதேவேளை அவர்கள் ஒவ்வொருவரினதும் ஆன்மீக வாழ்வில் நிச்சயமாக எதிர்  விளைவுகளைக் கொண்டிருக்கும்.

UNIVஇஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை ஹராமாக்கப்பட்ட கொடிய பாவமாகும், ஒரு முஸ்லிமுக்கு மற்றொருவரின் இரத்தம், பொருள், தன்மானம் ஆகிய மூன்று விடயங்களும் ஹராமானதாகும், எவ்வாறு   அடுத்தவரை கொலை செய்யும் உரிமை அல்லது அடுத்தவரது பொருளை தீண்டும் உரிமை மற்றொருவருக்கு கிடையாதோ அதே போன்றே இன்னொருவரை அவமானப் படுத்துவது, கேளி செய்வது , பகிடி பண்ணுவது, நையாயாண்டி பண்ணுவது முற்றிலும் இஸ்லாத்தினால் தடுக்கப் பட்ட விடயங்களாகும்.

ஆன்மீக அடித்தளங்கள் சரியாக இடப்படாமையின் வெளிப்பாடுகளே பல்கலைக் கழகங்களில் பகிடி வதை, அதனை சட்டத்தால் மாத்திரம் கட்டுப் படுத்த முடியாது, சாதாரண தர, உயர்தர மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு முறையான ஆன்மீகப் பயிற்சிகள் வழங்கப் படுதல் வேண்டும், மேலைத்தேய கலாசாரத்தின் எச்ச சொச்சங்களை கீழைத்தேய சமூகங்கள் வரிந்து கட்டிக் கொள்வதன் விளைவாகவே ஆன்மீக கலாசார பண்பாட்டு வரை முறைகள் இளம் தலைமுறையினரால் தகர்த்தெறியப் படுகின்றன.

தனது நாவினாலும் கரங்களினாலும் (செயல்களினாலும்) அடுத்தவர் அபயம் பெரும் வரை ஒருவர் முஸ்லிமாகி விட முடியாது, உலகில் அமைதியையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் தனி மனிதர்களின் உள்ளங்களில் ஆழமாக விதைப்பதற்காகவே முஸ்லிம்கள் ஒவ்வொருவரம் அதிகமதிகம் ஸலாம் சொல்லிக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று மரபு ரீதியாக மொழியாக்கம் செய்யப் படுகின்ற “ஸலாம்” இருவரோ பலரோ சந்தித்துக் கொள்கின்ற பொழுது தங்களுக்கு இடையில் செய்து கொள்கின்ற சமாதான நல்லுறவின் பிரகடனாமாகும். எனது கரங்களினாலும் நாவினாலும் நடவடிக்கைகளினாலும்  உங்களது உயிர் பொருள் மானம் என்பவற்றிற்கோ உங்கள் உள அமைதியிற்கோ எந்த வித பங்கமும் ஏற்பட மாட்டாது என்பது மாத்திரமல்லாது  ஈருலகிலும் உங்களுக்கு ஈடேற்றத்தையே நான் விரும்புகின்றேன் என்ற அழகிய இருதரப்பு உடன்பாடுமாகும்.

raggingபல்கலைக் கழகம் வரும் பருவ வயதை எட்டியுள்ள பட்டதாரி மாணவர்களுக்கு அல் குரானும்  ஸுன்னாவும் போதிக்கும் அழகிய இஸ்லாமிய குண ஒழுக்கங்களை விளாவரியாக எடுத்துச் சொல்வது அவசியமில்லை என்றாலும் எவ்வாறான உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒருசமூகத்தை இஸ்லாம் கட்டியெழுப்ப விரும்புகிறது என்பதனை உணர்த்தப் போதுமான இரண்டு குரான் வசனங்களை ஞாபகமூட்டளுக்காக இங்கு குறிப்பிடலாம்:

“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.” (ஸூரதுல் ஹுஜ்ராத் : 11)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (ஸூரதுல் ஹுஜ்ராத் : 12)

SEUSL-Front-1முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமது வாழ்வியல் ஒழுக்கங்களால் அடுத்த சமூகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும், தனி நபர், குடும்ப, சமூக, மற்றும் தேசிய வாழ்வில் கல்வி கலை கலாச்சாரம் , அரசியல் பொருளாதாரம் என சகல துறைகளிலும் இஸ்லாமிய மாதிரிகளை நடைமுறையில் முன்வைப்பதே இஸ்லாமிய பிரச்சாரமாகும்.

இதனால் தான் அல்குரான் விசுவாசிகளை கேள் காணுமாறு எச்சரிக்கின்றது:     “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?   நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.”  (ஸூரத்    ஸாfப்  12,13)

அந்தவகையில்  எந்தவொரு கல்லூரியாக இருந்தாலும் பலகலைக் கழகங்களாக இருந்தாலும் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களை முஸ்லிம் மாணவர்கள் கண்டிப்பாக கடைப் பிடித்து அடுத்த சமூக மாணவர்களுக்கு அழகிய முன்மாதிரிகளாக திகழுவது ஒவ்வொருவர் மீதும் விதிக்கப் பட்ட கடமையாகும்.

குறிப்பாக தென்கிழக்குப் பல்கலைக் கழகம் அரச பல்கலைக் கழகமாக இருந்தபோதும் அதிகூடிய முஸ்லிம் மாணவர்களுக்காக வென்றெடுக்கப் பட்ட ஒரு வளாகமாகும், அந்த வளாகம் கனவாக இருக்கும் பொழுதே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடன் முஸ்லிம் தேசிய அரசியலில் முழு நேர ஊழியனாக இருந்தவர்களில் ஒருவன் என்ற வகையில் வெறுமனே மக்களின் வரிப் பணத்தில் இயங்குகின்ற ஒரு ஸ்தாபனமாக அதனை நான் பார்க்க வில்லை, அது முஸ்லிம் தாய்மார்களின் கண்ணீரினால், ஸுஜூதிலே   சுட்டுக் கொள்ளப் பட்டவர்களின்  செந்நீரினால், வடக்கிலும் கிழக்கிலும் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சோகங்களினால் கட்டி எழுப்பப்பட்ட தென் கிழக்கின் கலங்கரை விளக்காகும்.

Ragging3ஒவ்வொரு பெற்றோரும் தமது அன்புச் செல்வங்களை படாத பாடு பட்டு வளர்த்து ஆளாக்கி பல்கலைக் கழகம்  வரை கொண்டு வந்திருக்கின்றார்கள், வாழ்வின் ஆரம்ப அத்தியாயங்களை பெரும் கனவுகளோடு தொடங்கும் இளம் மாணவர்களின் மன நிலையை கொடூரமாக பதிக்கச் செய்யும் பகிடி வதைகள் அவர்களுக்கு மாத்திரமன்றி ஆயிரம்  வலிகளோடும் கனவுகளோடும் கண்விழித்து காத்திருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப் படுகின்ற அக்கிரமமாகும்.

உயரிய இஸ்லாமிய விழுமியங்களைக் கடைப்பிடித்து சிறந்த முனாமதிரிகளாக இருப்பது ஒரு புறமிருக்கட்டும், மிகக் கேவலமான கவாலித் தனங்களை முஸ்லிம் பெயர்களுடன் அரங்கேற்றுவதனை முஸ்லிம் மாணவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.! அதுவே நீங்கள் இஸ்லாத்திற்கும் சமூகத்திற்கும் தென்கிழக்குப் பலகலைக் கழக கனவை நிஜமாக்க உழைத்த தியாகி களுக்கும்,  உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்!

ஒரு பல்கலைக் கழக மாணவனுக்காக சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்களை இந்த நாட்டு மக்கள் அர்ப்பனிக்கின்றார்கள், பல்கலைக் கழக வாழ்வை வெறும் கேளிக்கைகளுக்காகவும் வீண் விளையாட்டுக் களுக்காகவும், பருவகால கோளாறுகளுக்காகவும்  பாழ்  படுத்தவது  அமானிதங்களை பாழ்படுத்தும் அக்கிரமமாகும், அது மிகப் பெரிய சாபக் கேடுமாகும்.

Anti_Ragging_03(1)மேலைத்தேய பல்கலைக் கழக கலாசார பாரம்பரியங்களை முழுமையாக ஒரு முஸ்லிமால் உள்வாங்க முடியாது,  பகிடி வதைக்கான கேவலமான நியாயங்கள் எதனையும் இஸ்லாத்திற்கு வேறு எவரும் கற்றுத் தர வேண்டிய அவசியமும் கிடையாது :

“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு  கற்பிக்க விரும்புகின்றீர்களா ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் – அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.” (ஸூ ரதுல் ஹுஜ்ராத் : 16)

இறுதியாக தங்கள் வாழ்வின் அத்திவாரங்களை இடுகின்ற அழகிய இளம் பருவத்தில் பாதிக்கப் படும் மாணவர்களின் அவர்களது பெற்றோரின், சமூகத்தின், கல்விக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்யும் நாட்டு மக்களின்  ஆசீர் வாதங்களையும் பிரார்த்தனைகளையும் நிறையவே பெற்றுக் கொள்ள வேண்டிய பட்டதாரி மாணவர்கள்   மேற்சொன்ன சகல தரப்புக்களினதும் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என தனிப்பட்ட முறையில் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

 

மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

01/06/2013

About author

No comments

அறபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.!

அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள்,யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது. அறபு முஸ்லிம் முஸ்லிம் உலகுடனான எமது உறவுகளை பலப்படுத்துவதற்கும் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com