Monday, September 27, 2021

முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஓரணி திரட்ட முடியுமா ?

சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும், முஸ்லிம் காங்கிரஸிற்கு முன்னரும் அதன் பின்னரும் என இலங்கை முஸ்லிம் அரசியலை பகுப்பாய்வு செய்வது காலத்தின் கட்டாயமாகும்!

ஆழ அகலங்களிற்குச் செல்லாது மேலோட்டமாக பார்கின்ற பொழுது சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் முஸ்லிம்கள் தேசிய அரசியல் காட்சிகளில் உறுப்புரிமை பெற்ற மேட்டுக் குடி அரசியல் தலைமைகளினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

என்றாலும் எண்பதுகளின் ஆரம்பம் முதல் தீவிரமடைந்த இனப்பிரச்சினை வன்முறைகளாக பின்னர் உள்நாட்டு யுத்தமாக பரிணாமம் பெற்ற கால இடைவெளியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாள அரசியலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டனர்.

உரிமைப் போராட்ட அரசியலாக ஆரம்பித்து 1990 களின் ஆரம்பத்தில் அபிவிருத்தி அரசியல் என்ற தடத்தில் பயணிக்க ஆரம்பித்த பின்னர் இலக்குகள் தவறி தடம் புரண்டு பயணிக்க ஆரம்பித்தமை இன்று வரலாறு ஆகிவிட்டது.

வெறும் கட்சி அரசியல் பற்று பந்த பாசம் என்பதற்கு அப்பால் எமது சமூகத்தின் அபிலாஷைகள் உரிமைகள் மனக்குறைகள் என்பவற்றை எமது தனித்துவ அடையாள அரசியல் தேசிய சர்வதேச அரங்குகளில் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றது என்கிற விடயத்தை அறிவுபூர்வமாக நிதானமாக புள்ளி விபரங்களுடன் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நாம் இங்கு பேசுவதற்கு எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு அத்தகைய பரந்த ஆழமான ஆய்வுப் பரப்பிற்குள் செல்வதில்லை மாறாக சமகால “முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஓரணி திரட்ட முடியுமா? “ என்ற கேள்விக்கான விடைகளை காண முயலும் மேலோட்டமான ஒரு கருத்தடலாகும். இதனை ஒரு ஆய்வுப் பரப்பிற்குள் ஆர்வமுள்ள புத்திஜீவிகள் கொண்டு செல்வதும் வரவேற்கத் தக்கதாகும்.

விடயத்திற்கு வருவோம், முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஓரணி திரட்ட முடியுமா ? என்றால் தற்போதைய சூழ்நிலையில் “முடியாது” என்றும் சிலர் “கூடாது” என்றும் பொதுவாக கூறிவிடுகின்றனர், உண்மைதான் தேசிய அரசியல் நீரோட்டத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐக்கியதேசியக் கூட்டணி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) போன்ற தேசிய அணிகளில் மாத்திரமன்றி ஜே வீ பீ போன்ற பலமான இடது சாரிக் கட்சிகளிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமிருப்பது பன்மைத்துவ ஜனநாயகத்திலும் தேசிய முஸ்லிம் அரசியலிலும் ஆரோக்கியமான அம்சமாக கருதப் படுகின்றது.

இனி, தனித்துவ அடையாள அரசியல் செய்கின்ற குழுக்கள் அல்லது காங்கிரசுகள் தமது அடிப்படை இலக்குகளை மையமாகக் கொண்டு ஓரணி திரள முடியுமா? என்றால் “முடியும்” என்றும் “கட்டாயம்” என்றும் குறிப்பாக வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

அப்படியாயின் அவ்வாறான ஒரு நகர்வில் இருக்கின்ற சந்தர்ப்பங்களை கவனத்திற் கொள்வது போலவே அதில் இருக்கின்ற சவால்கள் மற்றும் தடைகளாக கருதப்படுகின்ற காரணிகள் குறித்தும் நாம் அலசிப் பார்த்தல் அவசியமாகும்!

முஸ்லிம் காங்கிரஸ் ஏன் பல குழுக்களாக பிளவுபட்டது என்பதனை ஆராயும் பொழுது வெளியே பெரிதும் பேசப்படாத ஒரு உண்மை பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும், பிளவுகள் ஏற்பட்ட பொழுது பல உடனடி நியாயங்கள் சொல்லப் பட்ட பொழுதும் அத்தனை பிளவுகளிற்கும் பின்னால் அதிகார அரசியலின் அழுங்குப் பிடி இருந்ததனை அவதானிக்க முடிகின்றது.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் கேட்டாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டவுடன் அன்றைய ஜனாதிபதி டி பி வியதுங்க தலைவர் அஷ்ரப் அம்பாறையில் இருந்து கொழும்பு வர ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்புகிறார் தமக்கு ஆட்சி அமைக்க உதவினால் நான்கு அமைச்சுப் பதவிகளை தருவதாகவும் வாக்களிக்கின்றார், (கிழக்கில் மூன்று மாவட்டங்களிற்கும், வடகிழக்கிற்கு வெளியே ஒன்றும்) ஆனால் கொழும்பு வந்த அஷ்ரப் நேரடியாக தாஜ் சமுத்ராவில் சந்திரிக்கா அம்மையாரை சந்தித்து ஆட்சி அமைக்க உதவுகிறார் அன்று அவர் ஐந்து அமைச்சு கேட்டிருந்தாலும் சந்திரிக்கா அம்மையார் கொடுத்திப்பார் என்ற நிலையே இருந்தது.

ஆனால், தனக்கு மட்டும் ஒரு அமைச்சும் இன்னும் சில பிரதியமைச்சுகளையுமே அவர் கேட்டுப் பெறுகிறார், பல அமைச்சர்கள் அதிகாரத்தில் இருந்தால் தனக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டவர்கள் கட்சியில் இருப்பார்கள் அது தனது மேலாதிக்கத்திற்கும் கட்சிக் கட்டுக் கோப்பிற்கும் அது சவாலாக அமைந்துவிடும் என்ற நியாம் கூறப்பட்டது.

அதேபோன்றே இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களுக்கு ஒத்த அதிகாரங்களும் அன்றைய கால சூழ்நிலையில் கட்சித் தலைவருக்கு அவசியம் எனக் கருதப்பட்டு அதனடிப்படையில் கட்சி யாப்பு அமைக்கப்பட்டது.

துரதிஷ்ட வசமாக தலைவர் அஷ்ரஃபின் விபத்து மரணத்திற்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரவூப் ஹகீம் அதே சர்வாதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளவும் தேவைப் படும் பட்சத்தில் தனது எதேச்சாதிகார நோக்கங்களிற்கு ஏற்ப கட்சி யாப்பையும், கட்டமைப்புக்களையும் அமைத்துக் கொண்டமை தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக சின்னாபின்னமடைவதற்கு பிரதான காரணமாகும்!

முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் அரசியல் பயின்ற வடகிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல சிரேஷ்ட அரசியல் வாதிகள் தத்தமது மாவட்டங்களிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை தமது சகபாடியான ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழ் இழந்தமையே அவர்கள் கட்சியை விட்டும் தூரமாவதற்கான பிரதான காரணமாகும்.

ஒருசிலர்  கட்சியை விட்டு விலகிச் செல்வதற்கான பல்வேறு  நியாயமான காரணங்களும் களநிலவரங்களும் அவ்வப்பொழுது இருந்தமையும் கட்சியின் தலைவர் பிழையான தரப்புகளில் இருந்தமையும் மறுக்க முடியாத உண்மையாகும், அவ்வப்பொழுது பிரிந்து சென்றவர்களுக்கு மாத்திரம் துரோகிகள் என்று பட்டம் சூட்டப் பட்டாலும் தலைவர் உற்பட எல்லோருமே தனித்துவ முஸ்லிம் அரசியலை தடம்புரண்டு பயணிக்கச் செய்துள்ளார்கள் என்பதனை காலம் கடந்தேனும் சகலரும் உணர்ந்திருக்கின்றார்கள்!

தனித்துவ முஸ்லிம் அரசியல் சாதனைகளை விட இன்று சோதனைகளையே அதிகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை போருக்குப் பின்னரான இலங்கை அரசியல் எமக்கு நன்றாகவே உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

இனி நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பதில் எந்த வித பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக  எவ்வாறு எமது அரசியல் பயணத்தை ஒழுங்கமைத்துக் கொள்ளலாம் என்று சிந்திப்பதே காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

அப்படியாயின் எவ்வாறு முஸ்லிம் அரசியல் அணிகளை ஒரு பொதுவான தேசிய வேலைத் திட்டத்திற்குள் கொண்டு வரமுடியும் என்பது குறித்து சமூகத்தின் புத்திஜீவிகள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியலை பொறுத்தவரையில் இன்று அதற்குரிய தேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை பற்றி சிந்திக்காது நாம் அரசியல் கூறுகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற தனிநபர்களை அவர்களோடு அணி சேர்ந்திருக்கின்ற தனிநபர்களைப் பற்றியே சிந்திக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணத்திற்காக வடகிழக்கு முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரல் பற்றி சிவில சமூகத் தலைமைகள் அல்லது புத்திஜீவிகள் ஒருமித்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் ஹகீம் அணி, ரிஷாத் அணி, அதாவுல்லாஹ் அணி களை எவ்வாறு கையாள்வது என்பதுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களது அணியில் இருக்கின்ற சிரேஷ்ட பிரமுகர்களை எவ்வாறு கையாள்வது என்பதுவுமே மிகப் பெரிய சவாலாக முன்வந்து நிற்கின்றது.

ஏனென்ன்றால் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள், பாராளுமன்றம்  அமைச்சரவை என இவர்களது தனிப்பட்ட அரசியல் இலாப நஷ்டங்களை அவர்களது தொண்டர் அணியினரது நலன்களை மையப்படுத்தியே முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாள அரசியல் பற்றி நாம் சிந்திக்கும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று தேசிய அரசியலிலும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையிலும் அடிமட்ட பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து அமைச்சரவை வரையிலுமான பிரதிநிதித்துவங்களில் பாரிய சர்ச்சைகளை நிலவுவதனை நாம் அவதானிக்கின்றோம் தமது அபிலாஷைகளுக்காக கொள்கை கோட்பாடுகள் மறந்து கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் விலை போவதனை நாம் காண்கிறோம், மத்தியிலும் மாகாணங்களிலும் ஏன் உள்ளூராட்சி மன்றங்களிலும் கூட ஸ்திரமான ஆட்சி அமைய முடியாத நிலையே தொடருகிறது.

இத்தகைய வங்குரோத்தடைந்து போன அரசியல் கலாசாரத்திற்கு மாற்றீடு என்பது மிகவும் சிக்கலான ஒரு இலட்சியக் கனவாகவே இருக்கின்றது, நல்லாட்சி விழுமியங்கள் குறித்து பேசுபவர்களை ஏளனமாக பார்க்கின்ற ஒருநிலையே இன்றைய அரசியலில் காணப்படுகிறது.

போராட்ட அரசியலாக ஆரம்பித்த தனித்துவ முஸ்லிம் அடையாள அரசியலைப் பொறுத்தவரையில் இன்று அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் சூதாட்ட அரசியலாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதனை பயனாளிகள் தவிர்ந்த போராளிகள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்!

இன்றைய களநிலை யதார்த்தங்களை கவனத்தில் கொண்டு எமது தனித்துவ முஸ்லிம் அடையாள அரசியலை புனர்நிர்மாணம் செய்து தேசிய அரசியலில் அதன் சரியான பரிமாணத்தில் உள்வாங்கச் செய்வதாயின் சில படிமுறைகளை நாம் கையாளுதல் வேண்டும்.

முதலாவதாக தற்பொழுது பலகூறுகளாக தேசிய அரசியல் அணிகளிலும் முஸ்லிம் அரசியல் அணிகளிலும் பிரிந்து செயற்படுகின்ற அரசியல் தலைமைகள் தாம் இருக்கின்ற தளங்களில் இருந்து கொண்டே வேறுபாடுகளுக்கு மத்தியில் இனம்காணப் படுகின்ற பொதுவான சமூக தேசிய விவகாரங்களில் இணக்கப் பாடுகளை எய்துகின்ற ஒரு கலந்தாலோசனைப் ஒருங்கிணைப்பு பொறிமுறைக்குள் வரல் வேண்டும், தேசிய ஷூரா சபை அவ்வாறான ஒரு பொறிமுறையினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, தமக்கிடையில் கொள்கையளவில் பொதுவான ஒரு நிகழ்ச்சி நிரலினை இனம்கண்டு ஒன்று சேர்ந்து செயற்பட முடியுமான முஸ்லிம் அரசியல் கூறுகள் தத்தமது பிரதிநிதித்துவ தேர்தல் அரசியல் குறித்த சில உடன்பாடுகளிற்கு வருதல் வேண்டும், கடந்த காலங்களில் பிரிவினைகள் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக கருதப்படுகிற விடயங்களை கவனத்திற்கொண்டு தமக்கிடையில் அதிகாரப் பங்கீடுகள் குறித்த ஒரு புரிந்துணர்விற்கு வருதல் வேண்டும்.

உதாரணமாக தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றின் பொழுது வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவது முதல் தாம் பிரதிநிதித்துவம் செய்கின்ற சபைகளில் வகிக்கின்ற பதவிநிலைகள் வரை அனைத்தையும் சர்ச்சைகளை பினக்குகளின்ரி தீர்மானிக்கின்ற பொறிமுறை ஒன்றை கண்டறிந்து அமுலிற்கு கொண்டு வருதல் வேண்டும்.

அதேபோன்று ஆயுட்கால தலைமைகள், பிரதிநிதிகள் என்ற ஏகபோகங்கள் ஒழிக்கப்பட்டு சகலருக்கும் சந்தர்ப்பங்களை வழங்குகின்ற முறைகளையும் கண்டறிதல் வேண்டும், ஏனெனில் இவ்வாறு சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்ற பொழுது அல்லது அவற்றை கட்சியின் தலைமைகள் எதேச்சாதிகாரமாக கையாளுகின்ற பொழுது தான் பிளவுகளும் பிரிவினைகளும் ஏற்படுகின்றன.

பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கின்றது, தற்போதைய அரசியல் களநிலவரங்களின் படி 2020 இல் இடம்பெறவேண்டிய ஜனாதிபதித் தேர்தல் மற்றும்  பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை முற்படுத்தப் படுகின்ற சாத்தியப் பாடுகள் இருப்பதனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து மூலோபாய நகர்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்!

இவ்வாறானதொரு கூட்டணி அமைகின்ற பொழுது பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்யும் அவை யாவும் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களை முற்படுத்திய வேலைத்திட்டங்களூடாக தனிநபர் கட்சி அரசியல் நலன்களை புறம் தள்ளி சுமுகமாக தீர்க்கப் படுதல் வரலாற்றுக் கடமையாகும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles