Monday, September 27, 2021

மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் கபூரி (எம்.ஏ) வாழ்நாள் சாதனையாளர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையிலும் தேசத்தைப் பொறுத்த வரையிலும், இஸ்லாமிய கற்கைகள், கல்வி, உயர் கல்வி சமூகப்பணிகள், தேசிய பங்களிப்புக்கள் என அளப்பரிய சேவைகளைச் செய்த செய்கின்ற ஆரவாரமற்ற அமைதியான அடக்கமான எளிமையான ஒரு மிகப் பெரிய ஆளுமையாக மௌலவி ஏ.எல்.எம் இப்ராஹீம் அவர்களை அறிமுகம் செய்தால் என்னோடு எவரும் முரண் பட மாட்டார்கள்.

மாவனல்லை உயன்வத்தையில் 1937  ஆம் ஆண்டு பிறந்த மௌலவி இப்ராஹீம் அவர்கள் நூராணியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். 1948 ஆம் ஆண்டு கபூரியா அறபுக்கல்லூரியில் இணைந்து சுமார் 9  வருடங்கள் கற்று 1957 ஆம் வருடம் அல்-ஆலிம் அல்-கபூரி பட்டத்தைப் பெற்று பின்னர் இரண்டு வருடங்கள் அங்கு விரிவுரையாளராக பணியாற்றினார்.

1959 ஆம் ஆண்டு அறபு ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட மௌலவி இப்ராஹீம்  1963 ஆம் ஆண்டு அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்து கொண்டார்.

1968  ஆம் வருடம் கொழும்பு பலகலைக் கழகத்தில் GAQ கற்களையும் பின்னர் பேராதெனிய பலகலைக் கழகத்தில் கலைமாணி (BA) கர்கைகளையும் நிறைவு செய்து முதல் தரத்தில் (Hons)  தேறினார், 1973 ஆம் ஆண்டு பேராதெனிய மற்றும் களனி பல்கலைக் கழகங்களில் இஸ்லாமிய நாக்ரீகத்துறை விரிவுரையாளராக  இணைந்து கொண்டார்.

1987  ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக சவூதி அரேபியா சென்று 1989 ஆண்டு நாடு திரும்பிய பின்னர் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அமீராக தலைமைப் பொறுப்பை ஏற்று 1992 ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார்.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவராக இருந்த காலங்களில் தப்ஹீமுள் குரானை சிங்கள மொழியில் கொண்டுவருதற்கு முன்னோடியாக இருந்து செயற்பட்டதன் மூலம் சிங்கள மொழியில் அல்-குரானையும் அதே போல் தப்ஸீரையும் வெளிக்கொணர அவரது பங்களிப்பு மகத்தானது.

இஸ்லாஹிய்யா ஆண்கள் பெண்கள் கல்லூரிகள், ஆயிஷா சித்தீகா மகளிர் கல்லூரி என்பவற்றின் ஸ்தாபக முன்னோடி உறுப்பினர் அவர் என்பதை நாம் அறிவோம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இன்று சிங்கள மொழி மூல தாயிகளையும் உலமாக்களையும் உருவாக்குகின்ற தன்வீர் அகடமியின் ஸ்தாபகரும் அவர் என்பது அவரது சேவைகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆயிஷா சித்தீகா மற்றும் தன்வீர் நிறுவனங்களிற்கு வருகை தந்து அவற்றின் கற்கைகள் குறித்த சுயமான மதிப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அவர் என்னை பலதடவைகள் வேண்டிக் கொண்டுள்ளார்கள்.

மதீனாவில் உள்ள இஸ்லாமிய பலகலைக் கழகத்திற்கு இலங்கை மாணவர்களை அனுப்புவதற்கான முன்னோடி முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டதோடு பல சர்வதேச இஸ்லாமிய பலகலைக் கழகங்களிற்கு இலங்கை முஸ்லிம் மாணவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அதி முக்கிய பிரமுகராக இருந்து அவர் உலமாக்களிற்கும் தேசத்திற்கும் ஆற்றிய சேவைகள் மகத்தானவை,.

கபூரியா அரபிக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரபல சன்மார்க்க அறிஞர் உமர் ஹஸரத்தின் மாணவர்களுள் ஒருவரான அவர் ஜாமியா நளீமியா உருவாக்கத்தின் பொழுதும் அதன் பாடவிதானத்தை தயாரிக்கின்ற பொழுதும் பிரதான பங்களிப்பினைச் செய்தவர்.

ஜாமியாஹ் நலீமியாஹ் எனும் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஸ்தாபிக்க எண்ணம் கொண்ட பொழுது அறிஞர் எ.எம் எ அசீஸ் அவர்களின் தலைய்மையில் அமைக்கப் பட்ட 10 பேர் கொண்ட தூதுக் குழுவில் நீதிபதி அமீன், மர்ஹூம் தாசீம் அல்-அஸ்-ஹரி , மர்ஹூம் மஸ்-ஊத் ஆலிம், கலாநிதி ஷுக்ரி, ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோருடன்  மொலவி எ.எல் .எம் இப்ராஹீம் அவர்கள் இருந்தது மாத்திரமல்லாது நலீமிய்யாவின் முதலாவது பாடத்திட்டத்தை வரைந்தவரும் கூட என்பதனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

திஹாரியில் அமைந்துள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினர்களிலும் ஒருவர் மாத்திரமன்றி பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களில், மாநாடுகளில் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தியவர்.

சவூதி அரேபியாவை மையமாகக் கொண்ட சர்வதேச இஸ்லாமிய இளைஞர் அமைப்பினது ஸ்தாபக உறுப்பினர் மாத்திரமன்றி, குவைத் சரவதேச இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமாவார். ஆனால் இன்றுவரை வெளிநாட்டு நிறுவனங்களினதோ உள்நாட்டு நிறுவனங்களினது நிலையான கொடுப்பனவுகள் பெறாது சொந்த உழைப்பில் வாழ்க்கை நடத்துபவர்.

இஸ்லாமிக் புக் ஹவுஸ் இருக்கின்ற ஜமாத்தின் தலைமையக கட்டடம் அவரது காலத்திலேயே நிறுவப்பட்டு ஜமாஅத் நிறுவன மயப்படுத்தப்பட்டது எனலாம், அங்கு பல மனித நேயப்பணிகள், ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்குரிய நிறுவன (SIRD) ஒழுங்கமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

அவரது காலத்தில் பிரபோதய என்ற சிங்கள இஸ்லாமிய சஞ்சிகையும் The Trend எனும் ஆங்கில சஞ்சிகையும் இன்னும் பல தமிழ் சிங்கள ஆங்கில பதிப்புக்களும் வெளிக் கொண்டுவரப்பட்டன.

பேராதனை பல்கலைக் கழகத்தில் அறபு இஸ்லாமிய துறைக்கு அவர் பீடாதிபதியாக இருந்த பொழுது தான் நானும் அறபு இஸ்லாமிய நாகரிக துறையில் சிறப்புக் கற்கையை நிறைவு செய்து BA (Hons) பட்டச் சான்றிதழை பெற்றுக் கொண்டேன். தேசிய மற்றும் இஸ்லாமிய பத்திரிகைகளில் வெளிவரும் எனது ஆக்கங்களை அவ்வப்பொழுது வாசித்து விட்டு உளமாற பாராட்டி ஆலோசனைகளும் வழங்கியுள்ளார்.

துரதிஷ்ட வசமாக கலாநிதி ஷுக்ரி அவர்கள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு பேராசிரியர் இன்மையால் மௌலவி இப்ராஹீம் அவர்களுக்கு இலங்கையில் கலாநிதி கற்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது, அவர் கலாநிதி கற்கைகளை நிறைவு செய்திருந்தால் இன்று பலரும் இலங்கையிலேயே அந்தத் துறைகளில் கலாநிதி கற்கைகளை நிறைவு செய்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

தான் பிறந்த மாவனல்லை பிரதேசத்தில் இஸ்லாமிய தஃவா மற்றும் கல்வி மறுமலர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானதாகும்.

முஸ்லிம் சமூக அமைப்புக்களை ஐக்கியப்படுத்துகின்ற பல முயற்சிகளை ஏனைய உலமக்களோடு புத்திஜீவிகளோடு இணைந்து மேற்கொண்ட அறிஞர் இப்ராஹீம் ஹசரத் 1980 களில் மஸூத் ஆலிம் (ரஹ்) மௌலவி ரியாழ் (ரஹ்) போன்ற பிரபல உலமக்களுடன் இணைந்து இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை (இன்றைய தேசிய ஷூரா சபை போன்ற) நிறுவும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

பின்னர் பல சமூக முக்கியஸ்தர்களுடன் இணைந்து UNITY FORUM என்ற அமைப்பை ஸ்தாபிக்க அரும்பாடுபட்டார், இன்று பல்வேறு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளும் முரண்பாடுகளுக்கு அப்பால் இணைந்து செல்கின்ற அழகிய மரபினை உருவாக்கிய சமாதான சகவாழ்வு முயற்சிகளை முன்னெடுத்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.

சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் ஒன்றை வடிவமைப்பதில் அமுலாக்குவதில் தேசிய வாழ்வில் முஸ்லிம் சமூகத்தை சரியான பரிமாணங்களில் வழி நடத்துவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.

தேசிய ஷூரா சபை உருவாக்கத்தின் பொழுது அவரை அணுகி நாம் ஆலோசனைகள் கேட்ட பொழுது UNITY FORUM இத்திஹதுல் முஸ்லிமீன் ஆகிய முயற்சிகள் இதே இலக்குகளுடன் தான் ஆரம்பிக்கப்பட்டன என்று வலியுறத்தி மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு மாத்திரமன்றி அவர் சற்று சுகயீனமுறும் வரை அதன் நிறைவேற்றுக் குழுவிலும் இருந்து வழி நடத்தியவர்.

மொத்தத்தில் இப்ராஹீம் மௌலவி அவர்கள் ஒரு அறிஞராக புத்திஜீவியாக கல்விமானாக மாத்திரம் இருந்துவிடாது தான் கற்ற சிந்தனைகளை அறிவை அமுலாக்கம் செய்வதில் மிகப் பெரும் செயல் வீரனாக வாழ்ந்துள்ளார், இன்றைய பல முன்னோடி தாஈகளுக்கு சமூக செயற்பட்டாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த முன்னோடியாய் முமாதிரியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு சிறந்த தேகாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

உண்மையில் முஸ்லிம் சமூக/ தேசியத் தளத்தில் மௌலவி ரியாழ் (ரஹ்) போன்று மகத்தான சேவையாற்றிய பெருந்தகை இப்ராஹீம் ஹசரத் அவர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்க முடியுமா? என்பதனையும் முஸ்லிம் சமூக தேசிய அமைப்புக்கள் ஹசரத் போன்ற பெருந்தகைகளை அழைத்து தேசிய அளவிலான கௌரவத்தை வழங்க முடியுமா என்பதனையும் பரிசீலனை செய்தல் அவசியமாகும்.

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் என்றும் எனது அன்பிற்கும் கண்ணியத்திற்குமுரிய அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவின் முன்னாள் போத்புச் செயலாளர், (அதனை தனது கைப்பை காரியாலயத்தில் சுமந்து  கால் நூற்றாண்டிற்கும் மேலாக கட்டிக் காத்து வளர்த்தெடுத்த)    மௌலவி ரியாழ் கபூஃரி (ரஹ்) அவர்கள் பற்றிய ஆக்கம் ஒன்றை பதிவு செய்வதற்கு தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கின்றேன்!

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles