Monday, September 27, 2021

இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்றும் தேசிய தினக் கொண்டாட்டங்களும்!

நாட்டின் 71 ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடி முடித்த கையோடு இதனை எழுதுவதற்கு காரணம் விரக்தி மனப்பான்மையுடன் கூடிய பலரது பதிவுகளாகும், குறிப்பாக முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடுவது பற்றி பல கோணங்களில் நம்மவர்கள் பார்கின்றார்கள், எந்தவொரு தனித்தனி நிலைப்பாட்டிலும் குறைகாண்பதற்காக அன்றி அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு எமது சூழமைவுகளுக்கு ஏற்ப நடுநிலையான பொதுவான ஒரு கொள்கைத் தெளிவை எம்மால் பெற்றுக் கொள்ள முடியமா என சிந்திப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

முதலாவது வகையினர்: கடந்த பல தசாப்தங்களாக தேசிய வாழ்வில் முஸ்லிம்கள் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் எனவே தேசத்தின் மீதான அபிமானத்தையும் பற்றுதலையும் தாமும் தமது அடுத்தடுத்த தலைமுறையினரும் வெளிப்படுத்த இவ்வாறான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப் படல் வேண்டும் என சிவில் சமூகத் தலைமைகள் கருதுகின்றனர்.

இரண்டாவது வகையினர்: கடந்த காலங்களில் இல்லாத அளவு முஸ்லிம்கள் தேசிய தினக் கொண்டாட்டங்களில் அதிக கரிசனை கட்டுவதற்குரிய காரணம் போருக்குப் பின்னரான இலங்கையில் பேரின சக்திகளின் கவனம் முஸ்லிம்களின் பக்கம் திரும்பியுள்ளமை என்றும், அது அச்சத்தின் வெளிப்பாடு என்றும் கருதுகின்றனர்.

மூன்றாவது வகையினர்: இந்த நாட்டில் முஸ்லிம்கள் பல உரிமைகளை இழந்து வாழ்கின்றனர், அவர்கள் மீதான காழ்ப்புணர்வு சக்திகளின் அடக்குமுறைகள் மாறி மாறி வரும் அரசுகளால் கண்டுகொள்ளப் படுவதில்லை, முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப் படுகிறது என இன்னோரன்ன காரணங்களால் பூரண சுதந்திரத்தை அனுபவிக்காத முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்? என்ற மனநிலையிலும் இருக்கின்றார்கள்.

நான்காவது வகையினர்:  இதுமுஸ்லிம் நாடுமல்லஆளுவது இஸ்லாமும் அல்ல சிறுபான்மையினராக ஆளப்படும் நாம் இங்கு சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஐந்தாவது வகையினர் : இரண்டு பெருநாட்களைத் தவிர இஸ்லாத்தில் வேறு கொண்டாடப்படும் தினங்கள் இல்லை, தேசிய கொடியிற்கு மரியாதை செலுத்துவதோ, தேசிய கீதம் பாடுவதோ அதற்கு எழுந்து நிற்பதோ மார்க்கத்தில் இல்லாத நூதன விடயங்கள் என்றும் வாதாடுகின்றனர்.

ஆறாவது வகையினர் : ஒரு தேசம் தீயவர்களின் அடக்குமுறையாளர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டால் மாத்திரமே அதனை மகிழ்ச்சியாக நினைவுகூற முடியும், நல்லவர்கள் யார் எவரை ஆக்கிரமித்து ஆண்டாலும் தப்பில்லை என்றெலாம் வலிந்து மார்க்க விளக்கம் கொடுக்க முனைபவர்கள்.

ஏழாவது வகையினர்: சுதந்திரம் என்றால் என்ன, அல்-குர்ஆனில் சுதந்திரம் சுன்னஹ்வில் சுதந்திரம், இஸ்லாமிய வரலாற்றில் சுதந்திரம், அறிஞர்களின் பார்வையில் சுதந்திரம் என தகவல்களை திரட்டிக் கொண்டு நீண்ட ஆய்வுகள் விளக்கங்களில் காலத்தை கழித்துக் கொண்டிருப்பார்கள், மாறாக காலனித்துவ வாதிகளிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று எத்தகைய நிலையில் இருக்கிறது இந்த நாட்டில் எமது பணி என்ன என்பது பற்றியெல்லாம் பேசாது அறிவுலக மென்பொருட்களாக இருக்கின்றனர்.

எட்டாவது வகையினர்: சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தரப்புக்கள் இந்த நாட்டை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர், அரசியல் வங்குரோத்து நிலை, பொருளாதார நெருக்கடிகள், சமூக பண்பாட்டு சீர்கேடுகள்,  சுற்றுச் சூழல் மாசடைவு, இயற்கை வளங்கள் காவு கொள்ளப் படல், நீருபூத்த நெருப்பை தொடரும் இனமத வன்முறைகள், தீர்க்கப்படாத தேசிய இனப் பிரச்சினை என இன்னோரன்ன காரணிகளை முன்வைத்து ஏன் எவ்வாறு சுதந்திர தினத்தினை கொண்டாட முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.!

பொது வெளியில் சொல்லப்படுகின்ற மேற்படி கருத்துக்களைப் பார்க்கின்ற பொழுது சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் எமது இருப்பு, வாழ்வு,உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த அடிப்படித் தெளிவில்லாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதனை உணர முடிகின்றது.

இவ்வாறான அடிப்படை விடயங்களில் எமது விசுவாசக் கோட்பாடுகளிற்கு சமய கலாசார தனித்துவங்களிற்கு அப்பால் எவ்வாறான கொள்கை கோட்பாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்? என்பதில் தெளிவில்லாமல் தாமும் குழம்பி தமது இளம் தலைமுறைகளையும் குழப்பி ஏனைய சமூகங்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்கின்ற நிலையினையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்!

மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா நிலைப்பாடுகளிலும் அவற்றைக் கட்டமைத்துள்ள காரண காரியங்கள் என்பவற்றிலும் இருக்கின்ற சரிகாண முடியுமான சில நியாயங்கள் உண்மைகள் இருந்தாலும் அவற்றை மொத்தமாக அலசி ஆராய்ந்து பொதுவான தெளிவான நிலைப்பாடுகளை எய்தாமல் ஒவ்வொரு தரப்பினரும் அடுத்த தரப்பினரை பொதுத் தளங்களில் தாறுமாறாக விமர்சிப்பதாலும் சிலவேளைகளில் வழிகேடர்கள் என முத்திரை குத்த முனைவதாலும் பாமர மக்களும் இளைஞர்களும் தவறாக வழிநடத்தப் படுகின்ற அபாயம் இருப்பதாகவே கருதமுடிகிறது.

அல்லாஹ்வின் நாட்டப்படி இந்த நாட்டில் பிறந்து வாழுகின்ற எமக்கு இந்த நாடு தாய்நாடு என்று சொல்லித்தர ஆதார அவதாரங்கள் அவசியமில்லை, வரலாறு பதிவு செய்திருப்பது போல் இஸ்லாத்திற்கு முன்பிருந்து இங்கு வருகைதந்த அரபு வர்த்தக சமூகத்தினரும், இந்த நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மொழி பேசுகின்ற சுதேசிகளும், வட இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆரிய சிங்களவர்கள் போல்  தென்னிந்திய கரையோரப் பிரதேசங்களில் இருந்து இங்கு  வந்து  குடியேறியவர்களுமாக இங்கு ஒரு சோனக சமூகம் ஏனைய சமூகங்களைவிட சமத்துவத்திலும் உரிமைகளிலும் குறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எவ்வாறு பௌத்த மதமும் இந்து மதமும் இந்தியாவிலிருந்தும், கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் இருந்தும் இலங்கைக்கு வந்தனவோ அதே போன்றுதான்  இஸ்லாமும் இந்த நாட்டிற்கு அரபு நாட்டில் இருந்து வந்திருக்கின்றது, குறிப்பிடப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் மாத்திரம் எவாறு வரவில்லையோ அதேபோல் தான் நாங்களும், எங்களுக்கு இந்த தேசத்தின் பிரஜைகள் என்ற வகையில் எல்லாவிதமான உரிமைகளும் இருக்கின்றன.

இஸ்லாமியர் என்ற வகையில் மனித குலத்திற்கான மகத்தான செய்தியொன்றை சுமந்துள்ளவர்கள் என்ற வகையில் எமது விகிதாசார வரையறைகளுக்கு அப்பால் இந்த தேசத்தின் மீதும் இந்த தேசத்தின் மக்கள் மீதும் அபிமானம் கொள்வதும் இந்த தேசத்தின் சுயாதிபத்தியம் ஆள்புல ஒருமைப்பாடு இனங்களுக்கிடையிலான நல்லுறவு, அரசியல் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி, பொருளாதார சுபீட்சம் சமூக கலை கலாசார பண்பாட்டு உயர்ச்சி என இன்னோரன்ன விவகாரங்களில் கரிசனை கொள்வதும் இறைவன் வழங்கிய பகுத்தறிவு சார் உண்மை யதார்த்தமாகும்.

இந்த தேசத்தை ஒல்லாந்தர்கள், போர்த்துக்கீசர்கள், பிரித்தாணியர்கள் ஆக்கிரமித்து அதன் மக்களை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை சூறையாடி தமது காலனித்துவ கட்டுப் பாட்டில் பல நூற்றாண்டுகள் வைத்திருந்ததன் பின்னர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஏனைய சமூகங்களோடு ஒரு தேசமக்களாக முஸ்லிம்களும் தோளோடு தோள்நின்று போராடினர் எனபது வரலாறு, அன்று எமது முன்னோர்கள் தேசப்பற்றுடன் தமது கடமையைத் தான் செய்தார்கள், அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்துநிற்பதை தலையாய கடமையாய் கருதி செயற்பட்டார்கள், அந்த கீர்த்திமிகு வரலாற்றை எந்தவொரு சக்தியாலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்ற வகையில் இந்த மண்ணின் அத்தனை மைந்தர்கள் பாலும் எமக்கு உரிமைகள் இருப்பது போலவே கடமைகளும் இருக்கின்றன, மனித குலத்திற்கான சிறந்த செய்தியை சுமந்தவர்களென பெருமிதம் கொள்ளும் நாம் எமது கடமைகளை சரிவரச் செய்திருக்கின்றோமா? இந்த நாட்டின் அரசியல், பொருளாதா,ர கல்வி, கலை, கலாசார, சுகாதார, சுற்றுச் சூழல் விவகாரங்களில் எமது தூதின் உயரிய செய்தியை எங்களால் எவ்வளவு தூரத்திற்கு முன்வைக்க முடிந்திருக்கிறது.    

உரிமைகள் பற்றி பேசும் நாம் எமதுவரலாற்றுக் கடமைகளை எவ்வளவு தூரம் செய்துள்ளோம், உரிமைகளை அடைந்துகொள்ள எத்தகைய வழிமுறைகளை கையாண்டுள்ளோம் போன்ற விடயங்களை கவனத்திற் கொள்ளாது வெறுமனே இரண்டாவது மூன்றாவது தரப்புகளின் பக்கம் விரல் நீட்டும் பொழுது தான் நாம் அடிமை மனநிலையில் இருக்கின்றோம், எமது அரசியல், சன்மார்க்க சிவில் தலைமைகள் தேசிய வாழ்வில் தேசிய கட்டுமான பணியில் எத்தகைய மூலோபாய நகர்வுகளை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை எங்களால் கூற முடியாதுள்ளது.

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான வரலாற்றுச் சமரில் இந்த உம்மத்து இலக்கு வைக்கப் படுவதனை நன்கு அறிந்து வைத்துள்ள நாம் மிகச் சிறிய விகிதாசாரத்திலான  தீய சக்திகளை எதிர்கொள்வதிலும் பெரும்பான்மையான  நல்ல சக்திகளை அரவணைப்பதிலும் எமது விகிதாசார வரையறைகளுக்கு அப்பால் எத்தகைய பணிகளை முனைப்புக்களை முன்னெடுத்திருக்கின்றோம்?  

இஸ்லாமோபோபிய நிகழ்ச்சிநிரலிற்குள் சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளால் இந்த அழகிய தேசம்    தேசத்தின் அரசியல் தலைமைகள் அல்லது பாமர மக்கள் உள்வாங்கப்படுவதை அறிந்தும் எந்த வித பிரக்ஞையும் அற்ற சமூகமாக இருந்து விட்டு கூலிப்படைகளை குற்றம் சாட்டி முழு தேசத்தின் மீதுமுள்ள எமது அபிமானத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

இந்த நாட்டில் வாழும் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் எதிரான சதி அல்லது கெடுபிடிகள் முழு நாட்டினதும் அமைதி சமாதானம் ஸ்திரத் தன்மை பொருளாதார சுபீட்சம் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றிற்கான அச்சுறுத்தலாகும் என்பதனை ஏனைய சமூகங்கள் புரிந்து கொள்ளும் கருத்தாடலை நாம் மேற்கொன்டிருக்கிறோமா, அல்லது அத்தகைய புரிதல் எம்மிடம் இருக்கின்றதா?

வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து பரிதவிக்கின்ற பழியும் பாவமும் ஏனைய சமூகங்களைப் போல் எங்களிற்கும் இருக்கிறது, இந்த நாட்டில் தமிழர்களைப் போல் முஸ்லிம்களைப் போல் பெரும்பான்மை சிங்கள மக்களும் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள், சர்வதேச பிராந்திய காலனி சக்திகளின் முகவர்களால் விலைபேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனவே இந்த தேசத்தினதும் மக்களினதும் மீதான அபிமானம் எமது தார்மீக கடமையல்லவா?

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் முற்றிய இனப்பிரச்சினை பின்னர் எண்பதுகளில் வன்முறையாக வெடித்து மூன்றுதசாப்தகால குரீர உள்நாட்டு யுத்தமாக இந்த நாட்டில் இரத்த ஆற்றை ஓடச் செய்து அமைதி சமாதானம் பொருளாதார சுபீட்சம் என அனைத்தையும் காவு கொண்டு மொத்த தேசிய உற்பத்தியை போன்று நூறு வீத கடன் சுமையுள்ள நாடாக இலங்கையை மாற்றி விட்டுள்ளமை கசப்பான் உண்மையாகும்.

இன்று எமது பாராளுமன்றம் மாகாணசபைகள் உள்ளூராட்சி மன்றங்களினது உறுப்பினர்களது அடிப்படை கல்வித் தகைமை கேளிவிக்கு உற்படுத்தப் பட்டுள்ளது, அரசியல் பெரும் சூதாட்டமாக மாறி ஊழல் மோசடிகள் மலிந்து போயுள்ளன, அரசியலமைப்பு 19 முறை திருத்தப் பட்டும் கூட இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை, ஸ்திரமான ஆட்சி அமைவதில்லை, பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 கோடி ரூபாய் வரை விலை போகின்றனர்.

இந்த நாட்டின் விவசாயத்துறை இன்று பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது, பெருந்தோட்டத் துறை பல சவால்களிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஆடை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது, வருடாவருடம் சுமார் மூன்று இலட்சம் பேர் நிபுனத்துவமில்லா தொழில்களுக்காக மத்திய கிழக்கிற்கு  படை எடுக்கின்றனர் அவர்கள் அனுப்பும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளாதாரம் தங்கி இருக்கும் நிலை, வருடா வருடம் சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் சாதாரண பரீட்சை எழுதினாலும் 30,000 பேருக்கே பல்கலைக் கழகங்களில் இடமிருக்கின்றது, மனித வள அபிவிருத்தியில் நாம் பின்னடைவை கண்டுள்ளோம்.

இலங்கை போதைவஸ்துக் கடத்தல் மத்திய நிலையமாக மாறி வருவதோடு நாட்டின் பல பாகங்களிலும் இளைஞர்கள் போதை வஸ்து பாவனைக்கு அடிமைகளாகி வருகின்றனர், புகைத்தல் மதுபானம் என ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும்மாதாந்தம் சுமார் 300,000 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படுகின்றது அதனைவிட பன்மடங்கு சுகாதாரத் துறையினால் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.

இத்தைய அரசியல் சமூக பொருளாதார சீர்கேடுகளில் இருந்து இந்த தேசத்தை மீட்டெடுக்கும் பணியில் ஏனைய சமூகங்களில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து பணி செய்வது எமது வரலாற்றுக் கடமை மாத்திரமல்ல மார்க்கக் கடைமையுமாகும், அன்பு உண்மை நீதி நேர்மை சத்தியம் அசத்தியம் போன்ற தார்மீக பண்புகளை நாம் வாழுகின்ற தேசத்தில் கட்டிக் காப்பதும் இனங்களுக்கிடயிலானை புரிந்துணர்வை சமாதான சகவாழ்வை கட்டி எழுப்புவதும் எம்மீது விதிக்கப்பட்டுள்ள அறப்பணியுமாகும்.

இத்தகைய ஒரு பரந்துபட்ட பார்வையை கொண்டுள்ள ஒரு சமூகம் தேசத்தின் மீதுள்ள தனது உரிமையை அபிமானத்தை கட்டுவதற்கான எல்லா சந்தர்பங்களையும் உச்ச அளவில் பயன்படுத்துவதும் ஏனைய சமூகங்களிற்கு முன்மாதிரியாக இருப்பதுவும் குறைத்து மதிப்பிடப் பட வேண்டிய அவசியமில்லை, அண்மைக்கால அழுத்தங்கள் எமது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றமை எமது வரலாற்றை மீளைவிற்கு உற்படுத்தச் செய்திருக்கின்றமை எமக்கு ஒரு தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியமுமில்லை, நாம் தவறுகளில் இருந்து பாடம் கற்பவர்கள், நாம் சவால்களில் சந்தர்ப்பங்களைப் பார்ப்பவர்கள்.

ஒரு தேசத்தின் அடையளமாக ஒரு தேசியக்கொடி இருப்பது ஒரு தேசிய கீதம் இருப்பது அவற்றை மதிப்பது எல்லாம் இன்றைய யுகத்தின் தேவைகள் மரபுசார் பாரம்பரியங்கள் அவை ஒருபொழுதும் எமது அடிப்படை இஸ்லாமிய விழுமியங்களுடன் முரன்படுவதில்லை, தேசிய கீதத்தில் வரும் சில வசனங்கள் குறித்து சர்ச்சைகள் இருந்தால் அவற்றை  எமது விசுவாசக் கோட்பாதுகளுடன் முரண்படாது பொருள் கொள்ள அதமர்த்தமாக எங்களால் முடியும். உதாரணமாக நமோ நமோ என்பதனை தலை வணங்குதல் என்று எடுத்துக் கொள்ளாமல் SALUTE  வாழ்த்து என்று எடுத்துக் கொள்ளலாம், நீயே தாயே எமது வீரம், சக்தி, வளம் ஞானம் என்று வரும் இடங்களில் உன்னிடமிருந்து கற்றோம் என பொருள் கொள்தல் அறிவுடமையாகும்!

அல்லாஹ் ரஸுல் மீதான பற்றை விடவும் எமது சன்மார்க்கத்தின் மீதான பற்றை விடவும் தேசத்தின் மீதான பற்று அதிகரித்து விடக் கூடாது என்று நாம் வளைந்து ஏன் ஆய்வுகள் செய்ய வேண்டும், கலிமா சொன்ன எந்த விசுவாசியும் மாத்திரமல்ல எந்த மதத்தைச் சேர்ந்தவரும் ஒரு பொழுதும் அத்தகைய மனப் பதிவை கொள்ளப் போவதில்லை ஆன்மிகம் என்பதும் வணக்க வழிபாடுகளும் எமக்கு தெளிவாக கட்டித் தரப்பட்டவைகள்.

அதேவேளை, மேற்படி சிந்தனைகளை நிதானமாக உள்வாங்கும் நாம் எமது தேசப்பற்றை வெளிப் படுத்தும் பொழுதும் மிகவும் அறிவுபூர்வமாக அளவோடு எல்லை மீறாது எமது தனித்துவ வரம்புகள் பேணி சுதந்திர தினத்தை கொண்டாடுவது முக்கியமாகும், உதாரணமாக ஒரு ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பாடசாலைகளும், மத்ரசாக்களும், முன்பள்ளிகளும், நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை நிகழ்த்தாது ஓரிடத்தில் நடத்தலாம்.

அதேபோன்று ஒரு வீட்டில் ஒரு கடையில் தேசிய கொடியை போடுங்கள் என்றால் முழுத் தெருவையும் தேசிய கொடிகளால் அலங்கரிக்க வேண்டிய தேவைப் பாடும் இல்லை. சில பிரதேசங்களில் பிரதேசசபை நகரசபை மாகாண சபை மற்றும் அரச அலுவலகங்கள் அதிகாரிகளால் நடத்தப்படும் விழாக்களில் இனமத வேவேறுபாடுகளுக்கு அப்பால் நாம் கலந்துகொள்வதும் பங்களிப்புச் செய்வதும் போதுமானதாகும் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles