முஸ்லிம் தனியலகு கோரிக்கை பரந்துபட்ட உள்ளக கலந்துரையாடலுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்.

0

1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை சிபாரிசு செய்த அ திகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அன்று வட கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைப்பதாகவும் பின்னர் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வடகிழக்கில் நடத்கதுவதாகவும் தீர்மானிக்கப்பட்டு 1988 இல் தேர்தல்களும் இடம் பெற்றன.

கிழக்கில் சுமார் 45% அரசியல் வலுவினைக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் இணைந்த வடகிழக்கில் 17% அரசியல் வலுவற்ற சிறுபான்மையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வடக்கையும் கிழக்கையும் தொடர்ந்தும் இணைத்து வைப்பதா அல்லது தனித்தனி அதிகார அலகுகளாக மாற்றுவதா என்ற வாக்கெடுப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக மாற்றுகின்ற உபாயமும் அபாயமும் உணரப்பட்டது.

அவ்வாறான ஒரு சூழ் நிலையில்தான் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற அதிகார அலகு ஒன்றுவேண்டும் என்று ஆரம்பத்திலும், பின்னர் தென்கிழக்கில் ஒரு அதிகார அலகு வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைகளை முன்வைத்தது.

இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள், இந்தியப்படைகள், தமிழ் தேசியபபடையணி, மாகாண அரசு வடகிழக்கு முஸ்லிம்களை கையாண்ட விதமும் இலங்கை அரசின், இராணுவத்தின் பாராமுகமும் யுத்தமாயினும் சமாதானமாயினும் முஸ்லிம்கள் செலுத்திய விலை வரலாறாகிவிட்டது.

என்றாலும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாதிக ஹெல உறுமய கட்சி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பின் மூலம் வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் வேறாக பிரிக்கப்பட்டது. 2008 இல் மாகாணசபை தேர்தலும் கிழக்கில் இடம் பெற்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அன்று அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ் மாத்திரமே வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்குமாறு பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார், பின்னர் அதற்கான நன்றிக் கடனாகவே தான் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்.

இப்பொழுது மீண்டும் இணைந்த வடகிழக்கில் அரசியல் தீர்வொன்றை தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் புலம் பெயர்ந்தோர் வேண்டி நிற்கும் நிலையிலும் சரவதேச மற்றும் இந்திய அழுத்தங்களின் பின் புலத்திலும் இந்த விவகாரம் முஸ்லிம் அர்சியல் மற்றும் சிவில் தலைமைகளால் மிகவும் நன்றாக ஆய்விற்கு உற்படுத்தப்டுதல் வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரத்தில் மீண்டும் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளால் மாற்றப்படும் அபாய உபாயங்கள் தென்படுகின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் பரந்துபட்டு வாழும் முஸ்லிம்கள், வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் புதிய அரசியல் கள நிலவரங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் என்பவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

மாறாக கடந்த காலங்களில் நாம் மனனமிட்ட சுலோகங்களை கிளிப்பிள்ளைகள் போல் உச்சரிப்பது ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது. இது குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்களை ஆய்வுப்பணிகளை முஸ்லிம் சமூக புத்தி ஜீவிகள் மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டயமாகும்.

தற்பொழுது புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளை ஆராய்ந்து வரும் தேசிய ஷூரா சபை மேற்படி விவகாரம் குறித்தும் முஸ்லிம்சிவில் மற்றும் அரசியல் தலைமைகளை அழைத்து ஆராய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.

About author

No comments

முஸ்லிம்களது கோரிக்கைகள் பரந்துபட்ட உள்ளக கலந்துரையாடல்களிற்கு உற்படுத்தப் படல் வேண்டும்.

அரசியல் தீர்வுகளிற்கான நகர்வுகள்: முஸ்லிம்களது கோரிக்கைகள் பரந்துபட்ட உள்ளக கலந்துரையாடல்களிற்கு உற்படுத்தப் படல் வேண்டும். முஸ்லிம் தனியலகு, கரையோர மாவட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரங்கள் பரந்து பட்ட உள்ளக கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படல் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com