Friday, July 30, 2021

புதிய ஹஜ் சட்டமூலம் தயாராகிறது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

இலங்கையில் ஹஜ் உம்ரா யாத்திரிரை பயண ஏற்பாடுகள் தனியார் துறையினாலேயே பெரிதும் மேற்கொள்ளப்பட்டலும் அவை தொடர்பான சவூதி அரசு மற்றும் ஹஜ் உம்ரா சார் நிறுவனங்களுடனான பூர்வாங்க பேச்சுவாரத்தைகள் உடன்பாடுகள் மாத்திரமன்றி இன்னோரன்ன உத்தியோகபூர்வமான முகாமைத்துவம் மேற்பார்வை ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் ஜித்தாவில் உள்ள இலங்கை தூதாண்மை காரியாலயமும் கவனித்து வருகின்றமை நாம் அறிந்த விடயமாகும்.

என்றாலும் இதுவரைகாலமும் ஹஜ் உம்ரா செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முகாமை செய்யும் மேற்படி செயற்பாடுகளை சட்டரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாமல் இருந்தமையால் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை சகல தரப்பினரும் எதிர்கொண்டுவந்துள்ளனர், சில சந்தர்ப்பங்களில் மேற்படி விவகாரங்கள் நீதிமன்றம் வரை சென்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்டகாலமாக ஹஜ் விவகரங்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் ஒரு ஹஜ் குழுவை நியமித்து முஸ்லிம் அலுவல்கள் திணைக்களத்துடன் மேற்படி விவகாரங்களை கையாண்டு வந்த பொழுதும் அவை உத்தியோக பூர்வமான பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட பொறிமுறைக்குள் கொண்டுவரப்படாமை பெரும் குறையாகவே இருந்து வந்தது, பல்வேறு சந்தர்பங்களில் ஹஜ் சட்ட மூலம் தயாரிக்கப் பட்டாலும் அந்த முயற்சிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.

அல்ஹம்துலில்லாஹ், தற்பொழுது முஸ்லிம் கலாசார விவகரங்களிற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஹலீம் அவர்கள் ஹஜ் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றமை வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும், தற்பொழுது ஹஜ் சட்டமூல நகல் வரைவு  ஒன்று தயார் செய்யப்பட்டு பல்வேறு தரப்புகளினதும் கலந்தாலோசனைக்கு உற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மேற்படி ஹஜ் உம்ரா சட்ட நகல் வரைபு கடந்த பெப்ருவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையாக கேட்போர் கூட அரங்கில் இடம்பெற்ற முஸ்லிம் சமூக அமைப்புகள் ஹஜ் முகவர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மற்றும் அமைச்சு  அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப் பட்டது, அதனைத் தொடர்ந்து நேற்று 21 மார்ச் மாதம் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, பாராளுமன்ற கட்டடத் தொகுதி குழு அறையொன்றில் அமைச்சர் ஹலீமினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 21 உறுப்பினர்களில் கரிசனையுடன் 7 உறுப்பினர்களே பங்குபற்றியிருந்தனர்.

மேற்படி கலந்துரையாடல்களுக்குப் பின்னர் மற்றுமொருமுறை முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொள்ளும் மற்றுமொரு (இறுதிக்கட்ட) ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் அதைத் தொடர்ந்து நகல் சட்டமூலம் தயாரிக்கப் படுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப் பட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

உத்தேச சட்ட மூலம் முழுமையானதா ?

தற்பொழுது வரையப்பட்டுள்ள நகலின் படி அது அதிகாரமளிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட ஒரு ஹஜ் குழுவை நியமிப்பது தொடர்பாக மாத்திரமே எழுதப்பட்டுள்ளது, இதில் கணிசமான உறுப்பினர்கள் ஹஜ் விவகார அமைச்சரினால் நியமனம் செய்யப்படுவர் என்பதனை அமைச்சர் இருவரையும் ஏனையவர்கள் பிரதான சமூக நிறுவனங்களின் சிபாரிசின் பேரிலும் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளையும் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை ஹஜ் குழு தெரிவு மாத்திரமன்றி ஹஜ் உம்ரா நிறுவனங்களின் பதிவு தொடர்பான நிபந்தனைகள், நிதி கையாளுகை, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை சார் நியமங்கள், பயண ஏற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல்கள், முஸ்லிம் விவகாரத் திணைக்களம் ஜித்தவிலுள்ள இலங்கை கொன்ஸல் ஜெனரல் காரியாலயங்களுடன் தொடர்புபடும் பணிகள்,  சட்டங்கள் மீறப் படுகிற பொழுது எடுக்கப் படுகின்ற நடவடிக்கைகள், பாதிக்கப்படும் தரப்புக்கள், யத்திரிகர்களது நலன்கள், இழப்பீடுகள் என இன்னோரன்ன பின் இணைப்புக்களும் தயரானதன் பின்னர் முழுமயான சட்ட வரைவை அவசரப்படாது சட்டமா அதிபர் திணைக்களத்தில் சட்ட வரைஞர்களிடம் ஒப்படைப்பதே சிறந்தது என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் மேற்படி விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டு அவசரப்படாது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தினை முஸ்லிம் விவகார அமைச்சும் திணைக்களமும் மேற்கொள்வதே சிறந்ததாகும்.

இன்றேல் உத்தியோகபூர்வமாக நியமிக்கப் படும் ஹஜ் குழுவினதும் ஏனைய தரப்புக்களினதும் நியாயாதிக்கங்கள், கடப்பாடுகள் வரைமுறை எல்லைகள் அவர்களது அதிகாரங்கள் ஹஜ் உம்ரா நிறுவனங்கள் மீதான நிபந்தனைகள் கடப்பாடுகள் நிதி கையாளுகை தொடர்பான வழிகாட்டல்கள் எதுவுமே இல்லாத நிலையில் உத்தேச ஹஜ் குழுவினரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படும்!

நுகர்வோர், பயனாளிகள், சேவை பெறுனர்களது நலன்கள் குறித்து தெளிவான சட்ட திட்டங்கள் உள்ளடக்கப் படாது எந்தவொரு அதிகார சபைகளுக்கும் சட்டங்கள் இயற்றப் பட முடியாது, அதேபோன்று அவர்களது நலன்கள் அதிகார சபைகளின் சுயேட்சையான தீர்மானங்களால் அவ்வப்போது மேலாதிக்கம் செய்யப் பாடவும் முடியாது, ஆகவே முஸ்லிம்களது புனித யாத்திரை குறித்த சட்ட மூலம் தயாராகும் பொழுது பயனாளிகள் அல்லது யாத்திரிகர்களது நலன்கள் எவ்வாறு பேணப்படுகின்றது என்ற தெளிவான சட்டதிட்டங்கள் ஹஜ் உம்ரா சட்ட மூலத்தில் உள்ளடக்கப் படாது சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பப்படுவதோ பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு சட்டமாக்கப் படுவதோ  பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதில்லை.

2002-2004 காலப்பகுதியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் ஹஜ் குழுவிற்கு பொறுப்பாகவும் பின்னர் 2005 -2007  காலப் பகுதியில் ஜித்தாவில் இலங்கை கொன்ஸல் ஜெனரலாகவும் இருந்த காலப் பகுதியில் இந்த ஹஜ் உம்ராஹ் விவகாரம் இங்கும் அங்கும் எவ்வாறு கையாளப்படுகின்றது எத்தகைய சவால்கள் பிரச்சினைகள் சவால்கள் எழுகின்றன என்பது குறித்து ஒரளவு நேரடியாக அறிந்து கொள்ள முடியுமாக இருந்தது.

முகவர் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான நிபந்தனைகள்.

குறிப்பாக ஹஜ் முகவர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களைத் தெரிவு செய்யும் பொழுது சரவதேச அளவிலும் இலங்கையிலும் சுற்றுலாத் துறை மற்றும் பயன் ஏற்பாடுகள் சார்ந்த இன்னோரன்ன கடப்பாடுகள் நிபந்தனைகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதனை உறுதி செய்து பதிவு செய்கின்ற ஒரு பொறிமுற கட்டாயமாகும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சில் அவர்களது சுற்றுலா மற்றும் பயண முகவர்களை செய்வதற்கு  பதிவு பல கண்டிப்பான பல நிபந்தனைகள் இருக்கின்றன.

+ம்: ஹஜ் உம்ரா முகவர்களை பதிவு செய்யும் பொழுது இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை விதிக்கின்ற நிபந்தனைகள் போன்று அவர்களது வர்த்தக பதிவு, காரியாலயம், கணக்காய்வு அறிக்கைகள், ஆதனங்கள், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்த “கிரிப்” அறிக்கை, பொலிஸ் அறிக்கை, சவூதி அரசு விதிக்கும் நிபந்தனைகள் என இன்னோரன்ன ஆவணங்கள் உத்தரவாதங்கள் பெறப்படல் வேண்டும், குறிப்பாக ஊடக விளம்பரங்களிற்கான கட்டுப்பாடுகள், அனுமதிகள, பின்னர் மீளப்பெறமுடியுமான ஒவ்வொரு யாத்திரிகருக்குமான காப்பீட்டு வைப்புத் தொகை, அதேபோன்று பயனளிகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்பாடிக்கை பின் இணைப்பாக சேர்க்கப்பட வேண்டும்.

2003  ஆண்டு என நினைக்கின்றேன் குறிப்பிட்ட ஒரு முகவர் சுமார் 300 ஹஜ் யாத்திரிகர்களுக்கு பயன் ஏற்பாடுகளை செய்துவிட்டு துல்ஹாஜ் 5, 6ஆம் நாட்கள் விமான நிலையத்திற்கு வரவழைத்து விமானம் இல்லாமல் ஹாஜிகளை தவிக்க விட்டார், சவூதி விமான சேவை மற்றும் சவூதி தூதுவர் மூலம் பல முயற்சிகள் செய்தும் விமானம் கிடைக்கவில்லை.

யாத்திரிகர்கள் அமைச்சரையும் எங்களையும் முஸ்லிம் விவாகரத் திணைக்களத்தையும் திட்டித் தீர்த்தனர், அச்சுறுத்தினர், ஆனால் தனியார் துறை பயண ஏற்பாடுகளுக்கு அரசு எவ்வாறு பதில் கூற முடியும்? என்றாலும் அன்றிருந்த சவூதி தூதுவர் முஹம்மத் மஹ்மூத் அல் அலி மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள சில அதிகாரிகளை தொடர்புகொண்டு துல்ஹாஜ் 7  நாள் அதிகாலை யாத்திரிகர்களை அனுப்பி வைத்தோம்.

அதேபோன்று மக்கா மதீனா மினா அரபா போன்ற இடங்களில் யாத்திரிகர்கள் முகவர்களின் கவனஈனங்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சில வேளைகளில் நோயுற்றவர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் உள்ள சவால்களை என இன்னோரன்ன விடயங்களில் தெளிவான வழிகாட்டலாகள் அல்லது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமையை காண முடிந்தது.

ஹஜ் நிதியம், கணக்காய்வுகள்

அதேபோன்றே முஸ்லிம் விவகாரத் திணைக்களம் ஹஜ் குழுவினருடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஜித்தாவில் உள்ள கொன்ஸுலர் காரியாயம் எதிர்கொண்ட சவால்களும் இருக்கின்றன, மக்காவில் உள்ள இலங்கை இல்லத்தை பயன்படுத்துதல், விமான நிலைய தொண்டர் சேவைகள், மருத்துவ சேவைகள், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் என பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, 2007 ஆம் ஆண்டு முதல் எனது வேண்டுகோளின் பின்னரே வெளிவிவாகர அமைச்சினால் முறையான் ஒரு நிதியொதுக்கீடு செய்து தரப்பட்டது.

அதிகாரமளிக்கப்படுகின்ற ஹஜ் குழுவினர் ஹஜ் உம்ரா பயணிகளின் நலன்கள் தவிர்த்து வேறு நிதியங்களை ஏற்படுத்தவோ பொது சேவைகள் மனித நேயப் பணிகள் செய்யவோ, கடமையில்லாத ஏழைகளை ஹஜ்ஜுக்கு அனுப்பவோ இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது, ஆனால் நன்கு ஆராயப்பட்ட கலந்தாலோசிக்கப் பட்ட திட்டங்களை பின்னர் அறிமுகம் செய்வதில் தவறில்லை.

இவாறான கருத் திட்டங்கள் யாத்திரிகர்களிடம் இருந்து பெறப்படும் நிதியினால் மேற்கொள்ளப் படக் கூடாது, ஏனெனில் யாத்திரயை மேற்கொள்ளும் பெரும்பான்மையானவர்கள் வருடா வருடம் சகாத் கொடுக்குமளவு பணக்காரர்கள் அல்ல, தமது அல்லது பெற்றோர்களது வாழ்நாள கனவுகளை நிறைவேற்ற நீண்ட காலமாக சிரமங்களுக்கு மத்தியில் சேமிக்கப்படும் பணத்தினாலும் சிலர் யாத்திறை மேற்கொள்கின்றனர், அதேபோல் ஹஜ்ஜாஜிகளிடமிருந்து ஹஜ் குழு அறவிடப்படும் தொகைகளை யாத்திரிகர்களிடமிருந்தே அவர்கள் பெறவேண்டிய கடப்பாடு இருப்பதனால் யாத்திர்கர்கள் மீதான சுமைகள் அதிகரிக்காத வண்ணம் சட்டங்கள் இயற்றப்படல் வேண்டும்.

இங்கிருந்து தொண்டர்களை அல்லது அதிகாரிகளை அனுப்பும் பொழுதும் கடந்த காலங்களில் ஹாஜிகளிடமிருந்து அறவிடப்படும் பணம் சாட்டக் கணக்காய்வு, பொறுப்புக் கூறல், வெளிப்படைத் தன்மைகள் இல்லாமல் கையாளப் பட்டமை பலரும் அறிந்த விடயமாகும், எனவே இவ்வாறான சேவைகள் குறித்தும் அழைத்துச் செல்லப் படும் தொண்டர்கள் குறித்தும் சில தெளிவான வழிகாட்டல்கள் அவசியப் படுகின்றன.

மக்காவில் உள்ள இலங்கை இல்லம்

எமது முன்னோர்களால் இலங்கை யாத்திரரிகர்களுக்காக புனித மக்காவில் அமைக்கப்பட்ட இலங்கை  இல்லம் ஹரத்தின் விஸ்தீரனத்திற்காக அகற்றப்பட்டு வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டின் மூலம் அதனை பராமரிப்பதற்கும் மீட்டு எடுப்பதற்கும் இலங்கை அரசுடனும் தூதுவராலயங்களுடனும் ஒத்துழைத்த சகலரதும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்குமுரிய இலங்கை சவூதிப் பிரஜை அஷ்ஷெய்க் ஸாதிஹான் அவர்களது முயற்சிகளின் பலனாக இன்று அசீசியாஹ்வில் ஒரு கட்டடம் பெறப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.

எனவே ஹஜ் உம்ரா யாத்திரிகர்களின் நலன்கள் பேணக்கூடிய வகையில் தற்பொழுது இலங்கை இல்லத்தின் மேலாளராக (CARE TAKER) அதிகாரமளிக்கப்பட்டுள்ள அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்களுடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் சவூதியிலுள்ள இலங்கை தூதுவராலயம், ஜித்தாவிலுள்ள கொன்ஸல் ஜெனரல் காரியாலயம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகத் தெளிவான உடன்பாடுகளை வழிகாட்டல்களை உத்தியோகபூர்வமாக செய்துகொள்வது கட்டாயமாகும்.

மக்காவில் அமைந்திருந்த இலங்கை இல்லம் அகற்றப்பட அறிவித்தல் வழங்கப் பட்டிருந்த நிலையில் 2005-2007 காலப் பகுதியில் (சொந்த செலவிலும்) அதனை மீட்கப் போராடிய அல்ஹாஜ் சாதிஹான் மற்றும் இலங்கை தூதாண்மைகளுக்கு ஏற்கனவே வபாத் ஆகிவிட்ட வக்பு செய்த முன்னோர்களின் வாரிசுகளை கண்டறிந்து அவர்களிடமிருந்து அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்கு இலங்கை முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகளை சவூதியிற்கான முன்னாள் தூதுவர்களை கொண்ட ஒரு குழுவினை நியமிக்குமாறு  இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு  அன்று கொண்ஸல் ஜெனரலாக இருந்த பொழுது நான் ஆலோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர்கள், முன்னாள் சவூதி அரேபியாவிற்கான தூதுவர்கள், மக்காவில் உள்ள இலங்கை சவூதிப் பிரஜை தற்போதைய இலங்கை இல்ல மேலாளர் சகலரும் நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

ஹஜ் சட்டத்தில் ஏற்பாடுகள்  இல்லாவிட்டாலும் மேற்படி மக்கா இலத்தினை இலங்கை வக்பு சபையிலாவது பதிவு செய்து கொள்வது சிறந்ததாகும்.

குறிப்பு : தேசிய ஷூரா சபை சார்பாக மேற்படி கலந்துரையாடல்களில் ஒரு குழுவினர் பங்களிப்புச் செய்தனர், என்றாலும் ஜித்தவிற்கான இலங்கை முன்னாள் கொன்ஸல் ஜெனெரல் என்ற வகையிலும் ஹஜ் உம்ரா விவகாரத்தை கையாள்வதில் 2002, 2003,2004 காலப் பகுதியில் ஈடுபட்டவர் என்ற வகையிலும் எனது ஒரு சில அவதனங்களை பகிர்ந்து கொள்கின்றேன், எதிர்வரும் 26ஆம் திகதி கலந்துரையடலிற்கும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளவுள்ள முஸ்லிம் அரசியல், சன்மார்க்க, சிவில் தலைமைகளுடனும் முஸ்லிம் விவகார அதிகாரிகளுடனும் இவற்றை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதற்கும் துறையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்ககுமாகவே இதனை பதிவிடுகிறேன்.

முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போதைய ஹஜ் குழுவினர், அமைச்சின் அதிகாரிகள் சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்! 

உங்கள் கருத்துக்களை அவதானங்களை inaamullahm@gmail.com எனும் மின் அஞ்சலிற்கு அனுப்பி உதவுங்கள்.

.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles