முஸ்லிம் அல்லாதோர் சகலரும் காஃபிர்கள் என்றோ முஷ்ரிக்குகள் என்றோ பொதுப்படையாக வகைப்படுத்துவது தவறாகும்

0

(அல்-குரான் ஏனைய சமூகங்களின் மொழிகளில் மொழியாக்கம் செய்கின்ற பொழுது ஷிர்கு, குப்ரு, ஜிஹாது போன்ற வசனங்கள் அவை பிரயோகிக்கப்பட்டுள்ள கால சூழ்நிலைகள் என்பவை குறித்த சரியான தெளிவுகள் கட்டாயமாகும்) 

இஸ்லாமியத் தூது முறையாக எத்திவைக்கப்பட்ட பின்னர் அதனை நிராகரிப்போர்களையே “காபிஃர்” என்ற பதம் குறிக்கின்றது, அதேபோன்றே அல்லாஹ்வை அறிந்து கொண்டே அவனுக்கு இணையாக, நிகராக வேறு ஏதேனும் ஒரு சக்தியை அங்கீகரித்து வழிபடுவதே “ஷிர்க்” ஆகும்.

உண்மையை அறிந்த பின் நிராகரிப்பது (குஃப்ரு) 

 “இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.” நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (ஸுரத்துல் பகறா: 41,42 )

“அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (ஸுரத்துல் பகறா 2: 39)

அல்லாஹ்வை அறிந்து கொண்டு இணை வைப்பது (ஷிர்கு)

 “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”  (ஸுரத்துஸ் சுமூர் 39:38)

முஸ்லிம் அல்லாதவர்களில் சிலை வணங்குபவர்கள் இருக்கின்றார்கள், நாத்திகர்களும் இருக்கின்றார்கள், வேதத்தை உடையவர்கள் (அஹ்லுல் கிதாபுகள்) இருக்கின்றார்கள், உண்மையில் இன்றுள்ள அஹ்லுல் கிதாபுகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்ட தவ்ராத்தையோ, இன்ஜீலையோ கொண்டிராததால் அவர்கள் குறித்த இஸ்லாமிய பார்வையும் இன்று வேறுபடுகின்றது.

சிறந்த உம்மத்தின் பணி

 இறுதி இறை தூதருடன் இஸ்லாமியத் தூது நிறைவடைந்து விட்டது என்றாலும் அதனை முழுமனித குலத்திற்கும் எடுத்துச் சொல்கின்ற மகத்தான பணி இந்த கைர உம்மத்திடம் பாரப்படுத்தப் பட்டுள்ளது.

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” ( ஸுரத் ஆல இம்ரான் 3:110)

அல்-குரானும் ஸுன்னஹ்வும் உலக மொழிகளில் இருப்பதாலும், இஸ்லாலாமிய நூல்கள் உலக மொழிகளில் இருப்பதாலும், உலக மொழிகளில் இஸ்லாமிய ஒலி ஒளி மற்றும் இலத்திரனியல் வடிவங்களில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் இருப்பதனாலும் மாத்திரம் இஸ்லாமிய தூது மனித குலத்தை அடைந்துவிட்டதாக கருத முடியாது.

பிறந்தது முதல் எதோ ஒரு நம்பிக்கை கோட்பாட்டில் மூழ்கிப் போயுள்ள மக்களுக்கு அவர்களிடமுள்ள மத நம்பிக்கைகளுக்கும் இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும், வாழ்வு, மரணம், இறைவன், பிரபஞ்சம்,படைப்புக்கள் என அவர்கள் கொண்டுள்ள கொள்கை கோட்பாடுகளில் இருந்து இஸ்லாமிய வாழ்வு நெறி எவ்வாறு வேறுபடுகின்றது என்பது எடுத்துச் சொல்லப்படல் வேண்டும்.

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (ஸுரத்துல் பகறா2:159)

தனிமனித,சமூக குடும்ப அரசியல், பொருளாதார வாழ்வில் இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்குகளின் முன்மாதிரிகளை முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களிடம் கண்டுகொள்ளல் வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் சகலரையும் காஃபிர்களாகவும், முஷ்ரிக்குகளாகவும், முஸ்லிம் உம்மத்தின் எதிரிகளாகவும் கருதுவதும், மரணத்திற்குப் பின் அவர்கள் எல்லோரும் நரகம் செல்வோர்கள் என்று பாமரத்தனமான கருத்துக்களை கொண்டிருப்பதும் அவற்றை ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் இஸ்லாமிய தஃஹவாவிற்கும் செய்கின்ற மிகப் பெரிய கெடுதியாகும்.

அவ்வாறான நிலைப்பாடுகளை நாம் எடுக்கின்ற பொழுதும் அது குறித்து முஸ்லிம் அல்லாதவர்கள் அறிந்து கொள்கின்ற பொழுது மனித குலத்திற்கான விமோசகர்களாக அன்றி மனித குலத்தின் விரோதிகளாக அவர்கள் எம்மை பார்கின்ற மனநிலையை நாம் தோற்றுவித்துவிடுவோம், காபிர்கள், முஷ்ரிக்குகளை பற்றிய அல்-குரானிலும் சுன்னஹ்விலும் வரும் வசனங்களை அவர்கள் மிகச் சரியாக புரிந்து கொள்கின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு  கிடைக்காமல் போய்விடும்.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமல் அல்லாஹ் இன்மையிலும் மறுமையிலும் எவரையும் தண்டிப்பதில்லை.

 அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துச் சொல்லவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் செய்யவும், நரகத்தை குறித்து எச்சரிக்கை செய்யவும் இறை தூதர்களை அனுப்பாது எந்தவொரு சமூகத்தையும் அல்லாஹ் தண்டித்ததில்லை.

“(பின்பு, நாம் சொன்னோம்; “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”

“அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.”

“இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை. ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) – நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.”

(ஸுரதுஷ் ஷுஅரா 26: 208,209)

முழு மனித குலத்திற்கும் அருள் கொடை

 அல்-குரான் முழு மனித வர்க்கத்திற்கும் அருள் கொடையாக, நிவாரணியாக அருளப்பட்டுள்ளது, எமது இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மனித குலத்திற்கும் விமோஷகராக அருள் கொடையாகவே அனுப்பப்பட்டார்கள்.

“இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.( ஸுரத்துல் ஜாதியா 45:20)

“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.” (ஸுரத் சபஉ :34-28)

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்- அன்பியா: 21:107)

மனித குலத்தின் மீதான ஒரு விசுவாசியின் பார்வை கருணை நிறைந்ததாகவும், அவர்கள் எல்லோரும் ஈருலக வாழ்விலும் ஈடேற்றம் பெறவேண்டும் என்பதாகவும் இருப்பதே மிகச் உயர்ந்த உச்சக்கட்ட  மனிதாபிமானமாகும், எமது பிழையான,பாமரத்தனமான கருதுகோள்கள் எமது சமூக தேசிய வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏராளம் கொண்டுள்ளன.

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.

 “மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.

இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.

(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.”

அறபு முஸ்லிம் நாடுகளில் வாழ்வோரை விடவும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்கள் மீது மிகப்பெரிய மனிதாபிமானப் பணி சுமத்தப் பட்டுள்ளது. ஷரீஆவின் அடிப்படை இலக்குகள், பிக்ஹுத் தஃஹவா, பிக்ஹுல் அகல்லியாத் பற்றி கற்கின்ற,பேசுகின்ற சிந்தனைப் பள்ளிகள் மேற்படி அடிப்படை உண்மைகளை உள்வாங்குதல் காலத்தின், மற்றும் களத்தின் கட்டாயமாகும்.

About author

No comments

முஸ்லிம் அல்லாதோருக்கு ஸலாம் அல்லது வாழ்த்துக் கூறல்

O (சிறு பான்மை முஸ்லிம்களுக்கான பிக்ஹு) முழு மனித  வர்க்கத்திற்கும் அருட் கொடையாக அருளப்பட்ட இஸ்லாம் இனத்துவக் குழுக்களுக்கிடையிலான நல்லுறவுகள் குறித்து மிகவும் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com