Monday, September 27, 2021

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்கள்.! (2012 இல் எழுதப்பட்டது)

இலங்கையில் இஸ்லாமியர்களை இலக்குவைக்கும் பேரினவாத சக்திகளும், வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்களும்.!  

(2012 இல் எழுதப்பட்டது , நவமணி , விடிவெள்ளி, மீள்பார்வை, எங்கள்தேசம் மற்றும் வலைதளங்களில் பிரசுரமாகியது , எனது முகநூல் பக்கத்திலும் இன்றும் இருக்கிறது )

 மஸிஹுதீன் இனாமுல்லாஹ்   

பயங்கரவாதத்தின் வேர்கள் அறுபடவில்லை..!

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டின் அமைதி சமாதனம் பொருளாதார சுபீட்சம் என சகல துறைகளையும் காவு கொண்டிருந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும், இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதான சகவாழ்வு கிட்டிய எதிர்காலத்தில் உதயமாகும் என எவராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது. நன்கு ஆராயப்பட்ட அரசியல் தீர்வு ஒன்றின் அடிப்படையில்  இனங்களுக்கிடையில் நிரந்தர சமாதான சகவாழ்வு எட்டப்படும் வரைக்கும் “பயங்கரவாதம்”  ஒழிக்கப் பட்டுவிட்டதாக எந்த ஒரு சமூகமும் நிம்மதிப் பெரு மூச்சு விட முடியாது என்பதே உண்மை.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகளின் பேரினவாத அரசியலும் ,யுத்தம் சமாதானம் இரண்டையும் சாணக்கியமாக கையாளத் தவறிய தமிழ் சமூகமும் இந்த நாட்டில் புரையோடிப்போன இன முருகல்களை பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளில் மேலாதிக்க போட்டா போட்டி இராஜதந்திர சதுரங்க விளையாட்டின் பகடைக் காய்களாக மாற்றியுள்ளன. வன்முறைகளைக் கையிலெடுத்த உரிமைப் போராளிகள் முடக்கப் பட்டிருந்தாலும் முன்னர் இருந்ததைவிட மிகவும் வேகமாக போருக்குப் பின்னரான  இலங்கையில் பயங்கரவாதத்தின் காரணிகள்  மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் வேரூண்டுவதனையும்  அவற்றை உரமிட்டு ஆல விருட்சங்களாய் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை என்றுமில்லாதவாறு சர்வதேச பயங்கர வாதத்திற்கு  இருப்பதனையும் அறிய முடிகின்றது.

முஸ்லிம்களை இலக்கு வைக்கும் நாசகாரிகள்..

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை வட கிழக்கில் அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் கிடப்பில் கிடக்க தென்னிலங்கையில் நாங்கள் நமது இருப்பையும், பாது காப்பையும் மத ரீதியிலான உரிமைகளையும் கேள்விக் குறியாக்குகின்ற புதிய சவால்களை எதிர் கொண்டுள்ளோம், எமது பள்ளி வாயல்களுக்கு எதிரான  சிங்கள பௌத்த இனவாதக் குழுக்களின் அத்துமீறல்கள், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரச்சாரங்கள் அவற்றைக் கண்டும் காணாதிருக்கும் அரசின் அசமந்தப் போக்குகள், தங்களுக்குள் பிளவுண்டு வெறும் ஆவேசத்துடனும் அறிக்கைகளுடனும்  சந்தர்ப்பங்களை சமாளித்துக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் வாதிகள், இன்னும் சரியான கட்டமைப்புக்கும் திட்டமிடலுக்கும் வராத தேசிய மற்றும் பிராந்திய சிவில்த் தலைமைத்துவங்கள் நாளுக்கு நாள் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்குவதாகவே தெரிகிறது. 

 நிலைமை இவ்வாறு இருக்க மேலும் எமது சந்தேகங்களையும் அச்சத்தையும் அதிகரிக்கின்ற பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இலங்கையில் இஸ்ரேலிய தூதுவராலயம் ஒன்றைத் திறப்பதற்கான அனுமதி, இலங்கையில் அல்காயிதா மற்றும்  தாலிபான் அமைப்புக்களின் செயற்பாடுகளை சொத்துக்களை முடக்குவதற்கான சட்ட மூலம், இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை புலனாய்வுத் துறை திரட்டுதல், போன்ற இன்னோரன்ன தகவல்கள் முஸ்லிம்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

கேள்விக்குள்ளாக்கப் படும் முஸ்லிம்களது பூர்வீகம்

முஸ்லிம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள், இவர்கள் இந்த நாட்டை திட்டம் தீட்டி ஆக்கிரமிக்க முணைகின்றனர், நாட்டில் பல பாகங்களிலும் திட்டமிட்டு பள்ளிவாயல்களை கட்டி வருகிறார்கள், இந்த நாட்டில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கின்றன, இந்த நாட்டு பௌத்தர்களை இவர்கள் திட்டமிட்டு மதம் மாற்ற முணைகின்றனர், அரபு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர் பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப் படுகின்றனர். அடிப்படைவாத தீவிரவாத அல்காயிதா ,லஷ்கார் எ தைபாஹ் தாலிபான் போன்ற அமிப்புகளுடம் தொடர்புடை யவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்ற பிரச்சாரங்கள் ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு இணையத்தளங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப் படுவதனையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

வெளியார் சக்திகளின் உள்நாட்டு கூலிப் படைகள்..

இத்தகைய  முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவதானிக்கின்ற பொழுது மிகவும் திட்டமிட்ட  அரசியல் இராஜதந்திர பின்னணிகளைக் கொண்டவையாக தெரிவதோடு மாத்திரமல்லாமல் அவற்றை  கச்சிதமாக திட்டமிட்டு நடைமுறைப் படுத்துகின்ற  சக்திகளுக்குப் பின்னால் ஒரு சில சர்வதேச மற்றும் பிராந்திய உளவுத் துறைகளின் சம்பந்தங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இவ்வாறான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளினை மட்டுப்படுத்தவோ,அல்லது அவற்றிற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ, குறைந்த பட்சம் கண்டிக்கவோ அரசாங்கம் பின்னிற்பதிலிருந்து அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரது ஆசிர்வாதமும் அவர்களுக்கு இருக்கின்றதா என்ற பலத்த சந்தேகமும் முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது.

தேசத்திற்கான  முஸ்லிம்களது விசுவாசம்

குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைவர்கள் எனக் கருதப் படுகின்றவர்களும் கட்சிகளும் கூட்டணி அரசின் பங்காளிகளாக இருந்து நாட்டிற்க் கெதிரான சர்வதேச சூழ்ச்சிகளில் இருந்து அரசையும் அதன் தலைமையையும் பாது காக்க பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற தருணத்தில், முஸ்லிம்களின் அதிமுக்கிய மார்க்க அறிஞர்களின் உயர் அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஜெனீவா வரை சென்று மத்திய அரசு சார்பாக குரல் கொடுத்து  தேசத்திற்கான தமது  விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான அத்துமீறல் நடவடிக்கைகளில் ஒரு சில  சிங்கள பௌத்த அடிப்படைவாத, தீவிரவாத சக்திகள் செயற்படுவதும் அதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதுவும் முஸ்லிம்களை ஆத்திரம் அடையச் செய்துள்ளது மாத்திரமன்றி கூட்டணி அரசில் முஸ்லிம் பங்காளிகளுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

நீதித் துறையை கையாளும் இனவாத சக்திகள் 

 சவுதி அரசினால் கிழக்கிலங்கையில் 2004 சுனாமியால் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவென கட்டிக் கொடுக்கப் பட்ட தொடர்மாடி வீடுகளை பயனாளிகளுக்கு பங்கிடாது தடுத்து நிறுத்த ஹெல உறுமய எனும்  பௌத்த மதவாத சிங்கள இனவாத கட்சியொன்று இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது அன்று அரசின் அமைச்சரவையில் அந்த வீடமைப்புகளுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரால் கூட எதுவும் செய்ய முடியவில்லை, இன்றும் பொது முன்னணி அரசில் பல்வேறு முஸ்லிம் தரப்புகள் பங்காளிகளாக இருந்தும் அரசியல் அழுத்தம் மூலம் தடியுத்தரவை மீளப் பெறவோ அல்லது மாற்று இடங்களை பெற்றுக் கொடுக்கவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ முடியவில்லை என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.

இரண்டாம் தரப் பிரஜைகளாக முஸ்லிம்கள்..

 போருக்குப் பின்னர் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் வடகிழக்கில் இடம் பெயர்ந்த தமிழ்  மக்கள் உடனுக்குடன் மீள் குடியேற்றம் செயப்படுகின்ற அதேவேளை ஆங்காங்கே  சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெற்று வருகின்றன, அனால் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைத தமது பூர்வீக வாழ்விடங்களில்  மீள் குடியேற்றம் செய்ய முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களிடம் இருந்து சதகாவையும் சகாத்தையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்குமளவுக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் தென்னிலங்கை அரசினால் கையாளப் படுகின்றமை இன மத பாகுபாடு எனும் “பேரின பயங்கரவாதம்”   இன்னும் இந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதனை எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிரான அச்சுரத்தல்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம், ஆனால் இந்த நிகழ்வுகளையும் அவற்றின் பின் புலன்களையும் கவனாமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் எடுக்காவிடின் நாம் காலம் கடந்து கைசேதப் படவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

அச்சுறுத்தல்களின் பின் புலன்கள்..

ஏற்கனவே நாம் கூறியது போல் தொடர்தேர்ச்சியாக இடம் பெறுகின்ற முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் அத்துமீறல்கள் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப் படுவதாகவே எமக்கு புலனாகிறது. அத்தகைய  அச்சுறுத்தல்களுக்கும்  அத்துமீரலகளுக்கும்  பின்னால்  அரசியல் இராஜதந்திர வேலைத்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்த நாட்டின் இன முருகல்களை தமது நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளும் உளவு நிறுவனங்களும் முஸ்லிம்களுக்கெதிரான வேலைத்திட்டங்களுக்காக உள்நாட்டு இன மற்றும் மதவாத சக்திகளை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன? 

சர்வதேச பயங்கரவாதம்  இங்கு கால் பதிக்கிறது

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்வையில் அமெரிக்காவும் நேச நாடுகளும் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளுகின்ற  சதி நாசகார வேலைத்திட்டங்கள் இலங்கையிலும் முடுக்கிவிடப்பட்டுல்ளனவா என்ற  நியாயமான ஐயங்களும் தோன்றியுள்ளன.

அல்காயிதா தலிபான் லஷ்கர் எ தைபாஹ் போன்ற இன்னோரன்ன ஜிஹாத் அமைப்புகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு எனும் பேரில் இலங்கையில் அறிமுகப் படுத்தப் படுகின்ற புதிய சட்டவாக்கங்கள் இஸ்லாமிய அறிஞர்களையும் இயக்கங்களையும் நிறுவனங்களையும்  முஸ்லிம்களையும் எதிர்காலத்தில் இலக்கு வைப்பதற்கான முன்னெடுப்புக்களா என்ற வலுவான சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

 இன்றைய  உலகில்  மேலைத்தேய மேலாதிக்க சக்திகளும் உளவுத்தாபனங்களும் மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் தமது செல்வாக்கை அரசியல் இராணுவ பொருளாதார இராஜ தந்திர நோக்கங்களுக்காக விஸ்தரிப்பதற்கான நியாயங்களை தேடுவதோடு அதற்கான கள நிலவரங்களை கச்சிதமாக திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தென்கிழக்காசியாவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதில் அமெரிக்காவும் நேச நாடுகளும் அதிக கரிசனை கொண்டுள்ளன.

ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் தலையீடு

போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசு மேலைத்தேய  நலன்காக்கும்  நோர்வேயினையும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளையும் புறம்தள்ளி இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான் போன்ற பிராந்திய சக்திகளின் ஒத்துழைப்பை நாடியமை மேற்குலகுடனான ஒரு பனிப்போரை ஏக காலத்தில் தோற்றுவித்திருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் அதிகரிக்கும் அமெரிக்க செல்வாக்கு அச்சுறுத்தல் என்பதனால் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதேவேளை இரண்டு பிராந்திய சக்திகளும் இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில் போட்டியிட்டுக் கொண்டும் இருந்தன. 

 எனினும் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இலங்கை அரசுக்கெதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச் சாட்டுகள் என்பவற்றை ஐக்கிய நாடுகள் தாபனத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் முடுக்கிவிட்ட அமெரிக்கா தமிழ் நாட்டு மக்களின் மனோ நிலையை மிகவும் சாணக்கியமாக கையாண்டு இந்தியாவையும் தனது பிராந்திய வேலைத் திட்டத்திற்காக வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை அமெரிக்க உதவியுடன் மட்டுபடுத்துவதற்காக இந்தியாவும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க இணங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் அமெரிக்கவிற்கும் இடையில் இருதரப்பு நலன்கள் பல இருந்தாலும் பாகிஸ்தானிய  காஷ்மீரிய மற்றும்  இஸ்லாமிய தீவிரவாதிகளை முடக்குவதற்கு  “பயங்கரவாதத்திற் கெதிரான போராட்டம்” என்ற பெயரில்  அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பயன் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிராந்தியத்தில் அமெரிக்க இஸ்ரேல் ஒத்துழைப்பு.

1980 களில் இந்திய நலன்களுக்கெதிராக இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிப்பதனை  இந்தியா விரும்பாததாலும் இந்திய இலங்கை உடன்படிக்கை அது குறித்த தெளிவான ஷரத்துகளைக் கொண்டிருந்ததாலும் அமெரிக்க இஸ்ரேலூடாக இலங்கைக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கியமையும் இஸ்ரேல நலன்காக்கும் பிரிவை தனது தூதுவராலயத்தில் திறந்தமையும் நாம் அறிந்த விடயமாகும், அதே போன்று இன்றும் அமெரிக்கா இந்தியாவின் முதுகுக்குப் பின்னால் தனது நலன்களைக் காக்கும்  இஸ்ரேல தூதுவராலயத்தை  இலங்கையில் திணிப்பதாகவே தெரிகிறது.  இவ்வாறான முக்கூட்டு ஒத்துழைப்பு இலங்கை விவகாரத்தில் இடம் பெறுகின்ற சூழலில் மூன்று தேசங்களினது உளவு தாபனங்களின் செல்வாக்கும் செயற்பாடுகளும் இந்த நாட்டில் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒரு நகர்வாகும்.

இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கான ஜே எஸ் பீ சலுகைகளை நிறுத்தி,  சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் உதவி வழங்கும் நாடுகளின் நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்து; ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமரிக்கா விதித்த கையோடு எண்ணெய் இறக்குமதிக்கு பல நேச நாடுகளுக்கு சலுகை வழங்கினாலும் இலங்கைக்கு சலுகைகளை வழங்காது ஒரு செயற்கையான பொருளாதார  நெருக்கடியை இலங்கை மீது திணித்து தற்போது இலங்கையை ஓரளவு பணியச் செய்துள்ளது, ஈரானின் அணுசக்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் மத்திய கிழக்கு அமைதிக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் அமெரிக்கா யூத சியோனிச வேலைத் திட்டம் ஒன்றையே முன்னெடுப்பது உலகறிந்த உண்மையாகும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும், இன்று பாகிஸ்தானிலும் மூக்குடைபட்டுள்ள அமெரிக்க இராணுவ நோக்கங்களுக்காக இலங்கையின் கடல் வான் பரப்புகளையும் இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் என்ன விலை கொடுத்தேனும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

இருதலைக்  கொல்லி பனிப்போர்!

 துரதிஷ்ட வசமாக இலங்கை இருதலைக்  கொல்லி பனிப்போர் ஒன்றினுள் இன்று சிக்கித் தவிப்பதாகவே தெரிகிறது, ஒருபுறம் அமெரிக்க முஸ்லிம் உலகுடன் மேற்கொள்ளும் பனிப்போர் மறு புறம் அமெரிக்க சீனாவுடனும் ஆசிய நாடுகளுடனும் மேற்கொள்ளுகின்ற பனிப்போர், உண்மையில் தமிழ் மக்களது நலன்களை அமெரிக்க தூக்கிப் பிடிப்பதும், சிங்கள தேசத்தின் நலனை சீனா தூக்கிப் பிடிப்பதும் இறுதியில் இந்த தேசத்தின் பாரிய அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க மேற்கொல்வதற்கு இலங்கையின் துறை முகம், விமான நிலையங்கள்  பாவிக்கப் படின் சீனா அதற்கு எதிப்புத் தெரிவிக்கும் , அதே போன்று அல்காயிதா தலிபான் போன்ற சக்திகள் இலங்கைக்குள்ளும் ஊடுருவலாம் என்ற எடுகோளில் இன்று முன்னேற்பாடுகள் இலங்கை அரசின் மீது திணிக்கப் படுவதாகவே தெரிகிறது.

இலங்கையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது இருப்புக்கான நியாயங்களைத்  தேட வேண்டும், இப்பொழுது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இராணுவ மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு களுக்கான  சந்தை வாய்ப்பு குறைந்துள்ளது, எனவே ஈராக்கில் இரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தேடியது போல், ஆப்கானில் பின் லாதைனத் தேடியது போல்,  ஈரானில் அணு குண்டினைத் தேடுவது போல் இலங்கையில் அல்காயிதாவையும் தலிபானையும் தேட வேண்டிய கட்டாயம் அமெரிக்க இஸ்ரேல் போன்ற யூத கிறிஸ்தவ சர்வதேச சதிகாரர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது, அதற்கான கூலிப் படைகள் அண்மைக்காலமாக தமது வெள்ளோட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது.

பள்ளி வாயல்களுக்குள் பலிக்கடாவாகும் முஸ்லிம்கள்..

இலங்கையில் எங்கோ ஒரு மூலையில், ஆற்றங்கரையில் நடைபெறுகின்ற ஒரு இஸ்லாமிய அறநெறிப் பயிற்சி முகாமில் கூட எதிர்காலத்தில் சதிகாரர்கள் ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும் அற்புதங்களை நிகழ்த்தலாம், பள்ளி  வாயல்களுக்கெதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தொப்பி போட்ட சதிகாரர்கள் தாக்குதல் நிகழ்த்தி முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் இருப்பதாக உலகிற்கு சொல்லலாம்.

 அல்லது உணர்ச்சி வசத்தால் பொங்கியெழும் இளைஞர்களை சிலர் தவறான பாதையில் வழி நடாத்தலாம், பள்ளிவாயல்களின் இமாம்களின் அறைகளில் கூட கிரனைட்டுகளையும் கைக்குண்டுகளையும் அதி நவீன ஆயுதங்களையும் சதி நாசகார சக்திகள் கையேடு கொண்டு வந்து கண்டு பிடிக்கலாம் ; ஆயுதமொன்றை ஆயுளில் கண்டிறாத மார்க்க அறிஞர்கள் கூட ஆயுதங்களுடன் கைது செய்யப் படலாம்!

முஸ்லிம் சமூகத்தின் மீதும் முஸ்லிம் உம்மத்தின் மீதும் அக்கறை கொண்ட இஸ்லாமிய நிறுவனகள் கல்விமான்கள் குறிப்பாக சதிகாரர்களை இனம்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிஞர்களைக் கூட பல்வேறு கெடுபிடிகளுக்கு ஆளாக்கலாம், இவைகள் வெறும் கற்பனைகள் அல்ல முஸ்லிம் உலகில் நாள் தோறும் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடந்த பல தசாப்தங்களாக பிராந்திய மற்றும் சர்வதேசிய சக்திகளின் நலன்களுக்காக இந்த நாட்டில் நிலவிய இன முறுகல்கள் கையாளப் பட்டதனால்  இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தது, ஆனால் தற்காலிக வெற்றிக் களிப்பில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் திளைத்திருந்தாலும் மிகவும் நூதனமான புதிய சவால்கள் இந்த தேசத்தின் அமைதியையும் சமாதானத்தையும் காவு கொள்ள “சர்வதேச மேலாதிக்க பயங்கரவாதம்” வலை விரித்து சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதனை அவதானிக்க முடிகின்றது,  இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மாத்திரமன்றி தற்பொழுது தென்னிலங்கை சிங்கள பௌத்த மக்கள் கூட மேலைத்தேய மேலாதிக்க சக்திகளினதும் பிராந்திய சக்திகளினதும் கெடுபிடிகளுக்குள் பல்வேறு பரிமாணங்களில் உள்வாங்கப் பட்டுள்ளனர்.

முஸ்லிம்களால் சவால்களை முறியடிக்க முடியும்…!

 இந்த சவால்களுக்கு முஸ்லிம்கள் மிகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் முகம் கொடுக்க முடியுமாயின் சகல சவால்களையும் முறியடிப்பது மாத்திரமல்ல அவற்றை சந்தர்ப்பங்களாக மாற்றியமைக்கவும் எல்லாம் வல்ல இறைவனின் துணையால் முடியும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம்களது விழிப்புணர்வும் சமயோசிதமான இராஜதந்திர நகர்வுகளும் இந்த நாட்டின் அடுத்த சமூகங்களையும் சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பயங்கரவாத  கெடுபிடிகளில் இருந்தும் இன்னும் பலதசாப்த கால அழிவுகளில் இருந்தும் விடுவிக்கும் என நம்ப முடியும்.

இஸ்லாத்தை நோக்கி வேகமாக விரையும் உலகம்..

இன்று மேற்குலகெங்கும் இஸ்லாம் அதி வேகமாகப் பரவி வருகிறது அறபு நாடுகளில் அறபு வசந்தம் எனும் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் உலகின் அதிபெரும் சக்தியாக முஸ்லிம் உம்மத் திகழப்போகிறது, மேலைத்தேய ஏகாதிபத்திய சக்திகளும் யூத சியோனிச சக்திகளும் இஸ்லாமிய உலகிற்கெதிரான சிலுவைப் போர் ஒன்றை முடுக்கி விட்டுள்ளார்கள், இலங்கையில் முஸ்லிம்கள் இரு மதம் பிடித்த யானைகளின் மோதல்களுக்கிடையில் பற்றைகளாய் சிக்கித் தவித்தது போல் இஸ்லாமிய உலகுடனான  ஏகாதிபத்திய சக்திகளின் சிலுவைப் போரில் இலங்கை போன்ற சிறிய ஒரு நாடு பிழையான தரப்புகளுடன் கைகோர்த்து சின்னா பின்னமாவதை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுமதிக்க முடியாது.

தாண்டப் பட வேண்டிய மிகப் பெரிய தடைக் கற்கள் …  

தற்போதைய நிலையில் தமக்குள்  பிளவுண்டு தனி நபர் வேலைத்திட்டங்களை முன்வைத்து பாமரத்தனமான அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளும், அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை சரியான கோணத்தில் புரிந்து கொண்டு சமூகத்திற்கான சரியான வேலைத்திட்டங்களை சரியான நேரத்தில் முன்வைக்க வல்ல நிபுணத்துவ தகைமைகள் கொண்டதொரு பலமான சிவில் சமூக அழுத்தக் குழு ஒன்று இல்லாமையும், முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய இயக்கங்களாக தமக்குள்  கருத்து வேறுபாடுகளாலும் அணுகுமுறை வேறு பாடுகளாலும் பிளவுபட்டு செயற்படுகின்றமையும்  இன்று எமக்கு முன் உள்ள பிரதான சவால்களாகும்.

இந்த நாட்டில் தென்னிலங்கையில் உள்ள தேசியக் கட்சிகள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முஸ்லிம் அரசியல் வாதிகளையும் குழுக்களையும் கறிவேப்பிலையாகவே பாவித்து வந்துள்ளனர், அதற்கேற்றாற்போல் முஸ்லிம் அரசியல் வாதிகளும் குழுக்களும் விலை போயுமிருக்கிறார்கள். 

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இராமன் ஆண்டாலென்ன  இராவணன் ஆண்டாலென்ன  இடையே வந்த கெரில்லா தான் ஆண்டாலும் நாம் ஐக்கியப் பட்டு ஒரே குரலில் தேசிய சர்வதேச அரங்கில் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்ளாத வரை, அதாவது நமது நிலைமைகளை  சீர் செய்து கொள்ளாதவரை எல்லாம் வல்ல இறைவன் கூட நமது தலைவிதியை மாற்றியமைக்கப் போவதில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles