Thursday, March 28, 2024

நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!

இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி மாணவர்கள் கண்கலங்கி முறையிடுகின்றார்கள்.

சான்றிதல்களின் மூலப்பிரதி ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனர், ஜாமியாஹ் நளீமியாஹ் மற்றும் ஓரிரு நிறுவனங்களின் சான்றிதல்கள் அறபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருந்த பொழுதும் அவற்றை முஸ்லிம் விவகாரத் திணைக்களம் அத்தாட்சிப்படுத்திய பின்னரும் அதனை வெளிவிவகார கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்த மறுக்கிறதாம்.

அரச திணைனைக்கலமொன்றின் முத்திரையை அல்லது அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரியின் கையொப்பத்தை உறுதிப்படுத்துவதே கொன்சுலர் பிரிவின் பிரதான கடமை.
கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்தியதன் பின்னரே அறபு நாட்டு தூதுவராலயங்கள் அவற்றை அத்தாட்சிப் படுத்துகின்றன, உள்நாட்டில் தொழில் வாய்ப்புகளின்றி அல்லலுறும் பட்டதாரிகளின் வயிற்றில் அடிக்கும் மட்டரகமான புதிய வரைமுறைகளை கொன்சுலர் பிரிவு கொண்டிருப்பது வேதனை தருகின்றது.

வெளி நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புக்கள் பெறும் மாணவர்களுக்கும் கொன்சுலர் பிரிவின் மேற்படி நடவடிக்கை பாரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தருகின்றது.
இந்த விடயத்தை முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகவே வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரல் வேண்டும், அறபுமதரஸாக்கள், உலமாக்கள் நலன் பேணும் ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புக்கள் இந்தவிடயம் குறித்து கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும், இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.
எந்த மந்திரி தீர்வு பெற்றுத் தருகிறார் என்று இரண்டொரு நாளில் பதிவு வரும் இன்ஷா அல்லாஹ்..

 

இலங்கையில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் தரப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான சுமார் 250 ற்கும்மேற்பட்ட அறபு மதரசாக்கள் இருக்கின்றன, பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உள் வாங்கப் படுகின்றார்கள்.

அதற்கும் மேலாக நூற்றுக் கணக்கில் ஹிப்லு மதரஸாக்கள் இருக்கின்றன அவற்றிற்கு இளம் சிறார்கள் உள்வாங்கப் படுகின்றார்கள்.

வருடாந்தம் சுமார் 2500 ஆலிம் ஹாபிஸுகள் பட்டம் பெற்று வெளியேறுவதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லறமெனும் நல்லறம் போற்றும் இஸ்லாமிய வாழ்வு நெறியில் மதகுரு பீடங்களோ, துறவறமோ, சந்நியாசமோ இல்லை என்பதனால் ஆலிம் ஹாபிஸுகளும் தமக்குரிய வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ள கடமைப் பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஆசாபாசங்களும் தேவைகளும், கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன.

அரசோ சமூகமோ அல்லது வக்ஃபு நிதியங்களோ அவர்களுக்கான தொழில் ரீதியான உத்தரவாதங்களை வழங்குவதில்லை, எல்லோருக்கும் மஸ்ஜிதுகளிலும் மதரசாக்களிலும் தொழில்கள் கிடைப்பதுமில்லை, அவ்வாறு கிடைத்தாலும் உத்தரவாதங்களும், உரிமைகளும் சலுகைகளும் ஓய்வூதியங்களும் அவர்களுக்கு இல்லை.

எமது சமூகத்தையும் தேசத்தையும் பொறுத்தவரையில் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட சகலதரப்புக்களினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான விவகாரமாகும்.

பருவ வயதை எய்தாத பாலகர்கள் சிறார்களின் எதிர்கால வாழ்வை பெற்றார்கள் அல்லது நிறுவனங்கள் தீர்மானிக்கின்ற பொழுது அவர்களது அடிப்படைஉரிமைகள் மீறப்படாமல் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதே போன்றே தேசத்தினது அளப்பரிய செல்வங்களான சிறார்களின் கல்வி வாழ்வை தீர்மானிக்கின்ற அறபு ஹிப்லு மத்ரசாக்களின் பாடவிதானங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு தரப்படுத்தலின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

அவர்களுக்கான வாழ்வாதாரக் கற்கைகள் தொழில் தொழில் நுட்பக் கற்கைகள் பெற்றுக் கொடுக்கப்பபடுதல் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் இலவசமாக வழங்கும் சாதாரண தர மற்றும் உயர்தரக் கற்கைகள் அவர்களுக்கு வழங்கப்படுவது கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும், அவர்கள் பருவமடைந்த பின்னர் அல்லது பதினேழு பதினெட்டு வயதை அடைந்த பின்னர் உயர்கல்வி குறித்த தீர்மானத்தை இன்ஷாஅல்லாஹ் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

உயரிய இஸ்லாமிய பணியிற்காக தமது வாழ்நாளை அர்பணிக்கும் கண்ணியமிக்க உலமாக்கள் ஹாபிஸுகள் விடயத்தில் சமூகத்தின் சிவில், சன்மார்க்க ,அரசியல் தலைமைகள் கூட்டுப்பொறுப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles