ஒரு சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் முழு தேசத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும்!

0

மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
பொதுச் செயலாளர் – தேசிய ஷூரா சபை

ஆயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட வரலாற்றையும் பூர்வீகத்தையும் கொண்ட இந்த நாட்டு முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு சமாதன சகவாழ்வை வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள், வரலாற்றின் எத்தகையாதொரு நெருக்கடியான காலகட்டத்திலும் வன்முறையை நாடாதவர்கள், இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் சுயாதிபத்தியம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார சுபீட்சம் என்பவற்றிற்கு எந்தவொரு சமூகத்தை விடவும் குறைவில்லாத பங்களிப்புச் செய்தவர்கள்.

தேசிய ஷூரா சபையின் மூன்றாவது பொதுச் சபைக் கூட்டம் கடந்த ஞாயிறன்று (26/01/2020)  கொழும்பு கொள்ளுப்பிட்டி சசகாவா மண்டபத்தில் இடம்பெற்ற பொழுது அதன் பொதுச் செயலாளர் என்றவகையில் தேசிய ஷூரா சபையின் இலக்குகள அடைவுகள் என்ற தொனிப் பொருளில் உரையாற்றிய ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார், தொடர்ந்து உரையாற்றிய அவர் :

போருக்குப் பின்னரான இலங்கையில்  முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள அத்துணை சவால்களுக்கும் பின்னால் பல்வேறு உள்நாட்டு பிராந்திய சரவதேச சதிநாசகார சக்திகள் இருப்பதாகவே அறிய முடிகின்றது, அத்தகைய சதிவளைகளுக்குள் எமது எமது இளைஞர்களோ தேசத்தின் வேறு ஏதேனும் அங்கமோ உள்வங்கப்பாடாது அவதானமாக இருப்பதுவும் அவர்களை பாதுகப்பதுவும் இந்த தேசத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய காலத்தின் கட்டாயமான தேவையாகும்.

கடந்த மூன்று தசாப்த காலம் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த இன முறுகலும் வன்முறைகளும் உளநாட்டுப் போரும் சுமார் ஒன்றரை இலட்சம் உயிர்களை காவுகொண்டிருக்கின்றது, சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விரயம் செய்யப் பட்டிருக்கிறது, பல பிரந்திய சர்வதேச சக்திகளின் தலையீடுகளுக்குள் இந்த தேசம் அகப்பட்டுக் கொண்டது, ஆசிய தெற்காசிய பிரந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு நாடாகநாம் ஆகியுள்ளோம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் இருக்கும் எமது தேசத்தில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு பிராந்திய சர்வதேசிய வல்லரசுகள் ஆதிக்க சக்திகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன, அவை அரச அரச சார்பற்ற சக்திகளூடாக தமது நிகழ்ச்சிநிரல்களை அமுலாக்கம் செய்வதற்கான நகர்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் சர்வதேச பிராந்திய ஆதிக்க சக்கதிகளின் நகர்வவுகளை விட்டும் தள்ளி இருக்க விரும்பும் ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கை நம்பிக்கை தருகிறது.

தேசிய ஷூரா சபை கடந்த காலங்களில் மேற்கொண்ட பணிகள் செயற்திட்டங்களை அவற்றின் தொகுக்கப்பட்ட ஆவணமாக பொதுக் குழுவினருக்கு சமர்பித்த பொதுச் செயலாளர் இனாமுல்லாஹ் :

தேசிய ஷூரா சபை போருக்குப் பின்னரான மேற்படி சவால்களை சரியான பரிமாணங்களில் இனம் கண்டு கொண்டதால் தான் கடந்த பலவருடங்களாக முஸ்லிம் சமூகத்தை சரியான திசையில் வழிநடத்துவதற்கும் தேசிய வாழ்வில் சரியான பரிமாணங்களில் பங்களிப்புகளை செய்வதற்குமான மூலோபாய நகர்வுகளை அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

ஜனநயாக மைய நீரோட்டத்தில் முஸ்லிம் சமூகம் தேசிய அரசியல் பிரவாகத்தில் இணைந்து சரியான திசையில் பயணிப்பதனை உறுதி செய்வதற்கும் அவ்வப்பொழுது அரசியல் தலைமைகளை அழைத்து கலந்துரையாடுவதற்கும் உரிய நிபுணத்துவ ஆலோசனைகளை தேசிய ஷூரா சபை கண்டிப்பான அரசியல் சார்பினமை நிலைபாட்டில் இருந்து மேற்கொண்டு வந்திருக்கிறது, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு, தேர்தல் சீர்திருத்தச் சட்டங்கள், உள்ளூராட்சி மாகாண சபை எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விவகாரங்களில் நிபுணர்களை அழைத்து ஆய்வுகளை செய்து அரசாங்க அணைக் குழுக்களுக்கு நாம் சமர்பித்துள்ளோம்.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை சமாதன சகவாழ்வை கட்டி எழுப்புவதில் தேசிய ஷூரா சபை விஷேட செயலணியூடாக பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவந்துள்ளது ஏனைய சமூக சமயத் தலைமைகள், சமாதான நல்லிணக்கத்திற்கான செயலணிகள், புத்திஜீவிகள் அழுத்தக் குழுக்கள் என இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் சகல மதரப்புக்களுடனும்  இணைந்தே அத்தகைய வேலைத் திட்டங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பரப்புரைகள் இந்த அழகிய தேசத்தின் சமாதான சகவாழ்விற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூட்டது என்பதற்காக முன்வைக்கப்படுகின்ற தப்பபிப்பிரயங்களை களைவதற்கும் உரிய விளக்கங்களை வழங்குவதற்கும் புரிந்துணர்வைக் கட்டி எழுப்புவதற்கும், திறந்த மஸ்ஜித் நிகழ்வுகளை நடத்தவும் உரிய பிரசுரங்களை வெளியிட்டும் கூட்டங்களை நடத்தியும் ஏனைய சமயத் தலைமைகளை சந்தித்தும் உரிய நடவடிக்கைகளை  இயன்றவரை ஷூரா சபையும் உறுப்பு அமைப்புக்களும் ஏனைய சமய சன்மார்கத் தலைமைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகின்றன.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஓரணிநின்று நிராகரித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இந்த நாட்டு மக்கள்மனதில் ஏற்படுத்தியுள்ள வடுக்களை களையவும் அரச பாதுகாப்புத் தரப்பினர் கொண்டுள்ள கரிசனைகளை கவனத்தில் கொண்டும் இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகளும் ததத்தமது செயற்பாடுகளை வெளிப்படைத்க் தன்மையுடனும் பொறுப்புக் கூறல் கடப்பாட்டுடனும்  எவ்வாறு தமது பணிகளை தகவமைத்துக் கொண்டு முன் செல்ல வேண்டும் என்ற தொனிப்பொருளில் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் ஒரு செயலமர்வக்யும் ஷூரா சபை நடத்தியது, தொடந்தும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு உற்பட ஏனைய அரச நிறுவனங்கலுடன் மேற்படி விவகாரத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட உரிய வழிகாட்டல்களை சமூக நிறுவனங்களுக்கு வழங்கவும் தேசிய ஷூரா சபை உத்தேசித்துள்ளது.  

அதே போன்றே இனமத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த தேசத்தின் சிறார்களை மற்றும் இளைஞர்களை காவு கொள்கின்ற போதப் பொருள் பழக்கம் மற்றும் அபாயகரமான போதைப் பொருள் பாவனை என்பவற்றிற்கு எதிரான தேசிய மற்றும் சமூக மட்டத்திலான வேலைத் திட்டங்கள் அவற்றை ஒருங்கிணைத்தல் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல் போன்ற விடயம் சார்ந்த திட்டமிடல் செயலமர்வுகளை தேசிய ஷூரா சபையின் இளைஞர் பிரிவுனூடாக நாம் மேற்கொண்டு வருகிறோம்!

இத்தகைய உயரிய இலக்குகளை சமூகத்தின் அடிமட்டம் வரை கொண்டு செல்வதற்கும் அவ்வப்பிரதேசத்தில் தத்தமது  கால இட சூழ்நிலைகளுக்கு இவாறான ஒருங்கிணைப்புப் பொறிமுறைகளை ஏற்படுத்தி தமது சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் மக்களை பங்கு கொள்ளச் செய்யவும் தேசிய பிரந்திய வேலைத் திட்டங்களில் பொதுப் பணிகளில் சமூகத்தை ஈடுபடுத்தவும், அரச நிறுவனங்கள், பாதுகாப்பு துறைகளுடன் ஓத்துழைக்கவுமான வழிகாட்டல்களை வழங்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேசிய ஷூரா சபை நாட்டின் பலபாகங்களிற்கும் விஜயம் செய்து கூட்டங்களை நடத்தி வருகிறது.

தேசிய ஷூரா சபையின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்புக் குழு இயற்கை அனர்த்தங்களின் பொழுதும் வன்முறை அனர்த்தங்களின் பொழுதும் அரசின் அனர்த்த நிவாரண திணைக்களம், பிரதேச செயலகங்கள், உறுப்பு அமைப்புகளின் அனர்த்த நிவாரண பிரிவுகள், ஏனைய பொதுநல அமைப்புக்கள் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் என்பவற்றை அணுகி ஒருங்கிணைப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துவதில் பல முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, பணிகளை பொறுப்புக்களை வளங்களை பகிர்ந்து முகாமைசெய்வதில் இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

தேசிய ஷூரா சபை குறிப்பிட்ட ஒரு துறை சார் நிபுணர்களின் தலைமையோ அல்லது சமயத் தலைமையோ அல்லது மற்றுமொரு அமைப்போ இயக்கமோ அல்ல அது எல்லா சமூக அமைப்புக்களினதும் துறை சார் நிபுணர்களினதும் ஒருங்கிணைப்பு பொறிமுறையாகும், சமூகத்தினதும் தேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தி அவ்வப்பொழுது துறை சார் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களை ஆய்வுகளை மேற்கொண்டு  குறுகிய இடைக்கால நீண்டகால கருத் திட்டங்களை உரிய தரப்புக்களிற்கு பெற்றுக் கொடுப்பதுவும் சிந்தன ரீதியான தலைமைத்துவத்தை வழிகாட்டல்களை பெற்றுக் கொடுப்பதுவுமே அதன் முதன்மையான பணியாகும், அந்த வகையில் இனம் காணப்பட்ட சுமார் 17 தொனிப் பொருள்களில் நிபுணத்துவ ஆய்வுகளை தற்பொழுது ஷூரா சபை மேற்கொண்டு வருகின்றது.

தேசிய ஷூரா சபை வெள்ளி விழாவோ, பொன்விழாவோ, வைராவிழாவோ கண்ட ஒரு அமைப்பு அல்ல, ஷூரா சபை அதன் சிறு பிராயத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது, எதிர்பார்க்கப்படுகின்ற கட்டமைப்போ காரியலயமோ, நிபுணத்துவ ஆளணியோ, நிதிவளங்களோ அதனிடம் இல்லை, இங்கு யாரும் ஆயுட்காலப் பதிவிகளை வகிக்கப் போவதில்லை, தேசிய அளவிலும் ஊர்மட்டங்களிலும் உள்ள அமைப்புக்களை நிபுணர்களை புத்திஜீவிகளை, பொதுப்பணியில் ஈடுபடுகின்ற நலன் விரும்பிகளை வர்த்தக சமூகத்தினைரை இனம் காணவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கவும் தேசிய ஷூரா சபை முயற்சி செய்கின்றது,  அதனை நிறுவனமயப்படுத்துவதும்  அதன் பணிகளை முன்னெடுத்துச் செல்வதும் சமூகத்தின் மீது சுமத்தப்படும் அமானிதமாகும்.

மேற்படி நிகழ்வு தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது, முதலாம் அமர்வில் விஷேட அதிதியாகக் கலந்து சிறப்பித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ.என்.நவரத்ன பண்டார அவர்கள் “நாட்டை கட்டியெழுப்புவதில் சிவில் சமூகத்தின் வகிபாகம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். பிரதித் தலைவர் ஷேய்க் பாஃழில் நிபுணத்துவ ஆலோசனைக் குழு கலந்துரையாடல்களை தலைமை தாங்கி நெறிப்படுத்த தேசிய ஷூரா சபையின் பிரதித் தலைவர் சகோதரர் ரிசா யஹ்யா “ஒருங்கிணைந்த குரலாக முஸ்லிம் சமூகம் சவால்களும் சந்தர்ப்பங்களும்” என்ற கருப்பொருளில் உரையாற்றினர், மற்றுமொரு பொதுக் குழு யாப்புத் திருத்தங்கள் மற்றும் புதிய நிறைவேற்றுக் குழுதெரிவிற்கான அமைர்விற்கு தலைமை தாங்கினார், பொருளாளர் ஷேய்க் ஸியாத் இப்ராஹீம் அவர்கள் வடுடாந்த கணக்கறிக்கையை சமர்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு, செயலகக் குழு, பொதுச் சபை, ஷுரா சபையின் உறுப்பு அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்துகொண்ட உலமாக்கள், புத்திஜீவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய நிறைவேற்றுக் குழுவின் தலைவராக அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களும்உபதலைவர்களாக அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பஃளீல், சகோ. ரீஸா யஹ்யா, சட்டத்தரணி ரீ.கே.அஸுர் ஆகியோரும் பொதுச் செயலாளராக ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் அவர்களும் உதவிப் பொதுச் செயலாளர்களாக சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்,சகோ.இஸ்மாயில் ஏ அஸீஸ் ஆகியோரும் பொருளாளராக அஷ்ஷெய்க் ஸியாத் எம் இப்ராஹீம், உப பொருளாளராக அஷ்ஷைக் எஸ்.எல்.எம்.நவ்பர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தேசிய ஷூரா சபையின் தோற்றம்,வளர்ச்சி கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது, நிகழ்ச்சிகளை அஷ்ஷைக் அப்துல்லாஹ் மொஹிதீன் சகோ.இஸ்மாயில் அஸீஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

About author

No comments

நளீம் ஹாஜியார்: ஒரு முன்மாதிரி இஸ்லாமிய ஆளுமை

Post Views: 4,101 அஷ்-ஷெய்க் யு.எல். எம். நிஷாத் நளீமி ( MA – Al-Azhar) ஒரு முஸ்லிமின் சமூக பங்களிப்பு ஈமானும் அறிவும் இணையும் போதே முழுமை பெறுகின்றது. ஈமானும் அறிவும் இணைந்ததன் ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com