கல்முனைக் கரையோர மாவட்டம்முஸ்லிம்களின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றீடாக இருக்க முடியாது.

0

கல்முனைக் கரையோர மாவட்டம் என்றோ கிடைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச உரிமை – அதை ஒரு அரசியல் இலஞ்சமாக கருதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்வை முஸ்லிம்கள் எடுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கெதிரான சவால்களை தேசத்திற்கு எதிரான சவலகளாக அணுகி தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தேசப்பற்றுடன் கூடிய அரசியல் நகர்வுகளில் நாம் பங்கு கொள்ளாவிடின் பெரும் வரலாற்றுத் தவறொன்றை இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.

தேசமும் சமூகமும் விரும்பும் புரட்சிகரமான மாற்றங்களின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நாமும் இருக்க வேண்டும்இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல சமூகங்களும் சமமாக மதிக்கப் படுகின்ற ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதில் எமது வரலாற்றுப்பணி தொடர வேண்டும்..!,

மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனைவிட எந்தக் கொள்கை வெல்கின்றது என்பதுவே முக்கியம்.

 

தேசிய அரசியல் பிரவாகத்தில் இருந்து முஸ்லிம்களை மென்மேலும் தனிமைப் படுத்தாதீர்கள்.

கல்முனை கரையோர மாவட்டம் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை கவிக்காமல் இருப்பதற்கு பகரமாக எடுத்துக் கொள்ளலாம், அல்லது திவி நெகும சட்ட மூலத்தை அங்கீகரித்து மகான சபைகளின் அதிகாரங்களை பறிப்பதற்கு துணை போனமைக்கு பகரமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றீடாக அது இருக்க முடியாது.

குறைந்த பட்சம் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்ற நிலைப்பாட்டிற்கோ பகரமாக இருக்கலாம்.

அதிரடி அரசியலும் இராஜ தந்திரமும் ஆட்சியாளரை வெல்வதற்கா அல்லது மக்களை ஏய்ப்பதற்கா ?

ஏற்கனவே மூன்றாவது முறையும் மஹிந்த ராஜபக்ஷ ஜானாதிபதியாவதற்கு வழிவகுத்த18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த நீங்கள் அதே தரப்பில் இருந்து கொள்ளுங்கள்..

தீர்வுகளில் ஒரு அங்கமாக இருக்க முடியாவிடின்
பிரச்சினைகளில் ஒரு அங்கமாக இருந்து நிலைமைகளை மேலும் மேலும் சிக்கலாக்கி விடாதீர்கள்.

தேசிய அரசியல் பிரவாகத்தில் இருந்து முஸ்லிம்களை மென்மேலும் தனிமைப் படுத்தாதீர்கள்.

வேண்டுகோளை பொதுமைப் படுத்துங்கள்.

முஸ்லிம் தனி மாகாண அலகு, தென் கிழக்கு அலகு, என பலதையும் கேட்டு இப்பொழுது கரையோர மாவட்டம் என ஒன்றைக் கேட்கின்றோம்..

உண்மையில் உங்கள் வார்த்தைப் பிரயோகம் முஸ்லிம்கள் குறித்த தப்பிபிராயத்தை பிழையான தரப்புக்கள் சந்தைப் படுத்துவதற்கு போதுமானதாகும்.

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கின்ற வகையில் தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயம் செய்யப்படல், அதே போன்று நிர்வாக கட்டமைப்புக்களான பிரதேச செயலாளர் பிரிவுகள், பிரதேச சபைகள், ஊராட்சி நகராட்சி மன்ற எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் என்று வேண்டுகோளை பொதுமைப் படுத்துங்கள்.

அதேவேளை தென்கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களையும் உள்ளடக்கி சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துகின்ற உத்தரவாதங்களை கேளுங்கள்.

நாளை சிங்கள ஊடகங்கள்” முஸ்லிம்களின் தனியாட்சி கோரிக்கை நிராகரிப்பு, முஸ்லிம்காங்கிராஸ் அரசில் இருந்து வெளியேறியது” என செய்தி வெளிவரும் தொலைக் காட்சிகள் அதனை தூக்கிப்பிடிக்கும் அதுவே சிங்கள பௌத்தபேரினவாதத்திற்கு தீனி போதாவும் போதுமானதாகும்.

அந்த விளம்பரத்துடன் வெளியே வரும் உங்களை பொதுவான எதிர்க் கட்சிக் கூட்டணி நிராகரிக்கும், அவர்களுக்கும் சங்கல பௌத்த மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே இந்த கரையோர மாவட்டத்திற்குள்ளும், ஏனைய வடகிழக்கு பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் தேசிய முன்னணி போன்று பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்..

இன்றேல்.. அல்லாஹ்வுக்காக இந்த சமூகத்தை விட்டு விடுங்கள்…

வெற்றுக் கோஷங்களுக்கு அப்பால்..

கருமலையூற்று கிராமத்தை மொத்தமாக மீட்டுத் தரமுடியுமா?
பள்ளியைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியை கழற்றி எறிய முடியுமா.?
புல்மோட்டையை மொத்தமாக மீட்டுத் தர முடியுமா ?
நுரைச்சோலை வீடுகளை நாளை மறுநாள் உரியவர்களுக்கு பங்களிப்பு செய்ய நீதிமன்ற தடை உத்தரவை நாளை வாபஸ் பெற முடியுமா?
வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற்ற அவர்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க முடியுமா?
இராணுவம் ஆக்கிரமித்துள்ள முஸ்லிம்களது காணிகளை மீட்டு ஒப்பங்களை பெற்றுத் தர முடியுமா.?
எத்தனை முஸ்லிம் புதிய குடியிருப்புக்களை ஏற்படுத்தப் போகிறீர்கள்?
வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பெற்றுத்தரப் போகின்றீர்கள்…
ஹலால் குறியீட்டுடன் உள்நாட்டு சந்தையில் முஸ்லிம்களுக்கு உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்ய அனுமதி பெற்றுத் தருவீர்களா?
கொழும்பில் இடங்களை பறி கொடுத்த முஸ்லிம்களுக்கு என்ன சொல்கின்றீர்கள்..?

தேசிய அரசியல் பிரவாகத்தில் இருந்து முஸ்லிம்களை மென்மேலும் தனிமைப் படுத்தாதீர்கள்.

தீர்வுகளில் ஒரு அங்கமாக இருக்க முடியாவிடின்
பிரச்சினைகளில் ஒரு அங்கமாக இருந்து நிலைமைகளை மேலும் மேலும் சிக்கலாக்கி விடாதீர்கள்.

கருமலையூற்று பள்ளிவாயல் விவகாரம்

கருமலையூற்று பள்ளிவாயல் விவகாரம் இன்று சூடு பிடித்துள்ளது, சுமார் 300 வருங்களாக முஸ்லிம்கள் வாழ்ந்த இயற்கை எழில் நிறைந்த அழகிய கிராமத்தில் இருந்து யுத்தம் நிலவிய காலத்தில் சுமார் 200 குடும்பங்கள்இடம் பெயர்ந்தனர்.

கருமலையூற்று பள்ளிவாயல் தற்பொழுது தரை மட்டமாக
ஆக்கப்பட்டுள்ளது, அதற்குப் பகரமாக சிறியதொரு கட்டடம் அவசர அவசராமாக அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு சுமார் இரண்டரை ஏக்கர் நிலமும் இருக்கிறது. தற்பொழுது விமானப்படை முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்குள் மக்கள் செல்வதாயின் அனுமதி பெற வேண்டிய தேவையும் இருக்கிறது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்களும் அங்கு இருக்கின்றன, தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள சிறிய பள்ளிவாயலையும் அதனைச் சூழ சிறிய பகுதியொன்றையும் தான் முஸ்லிம்கள் பெறுவார்களாயின் அதுவே நிரந்தரத் தீர்வாக அமைந்து விடலாம்.

கல்குடா முஸ்லிம்கள் படும் அவலம் (உதாரணத்திற்காக)

01.  வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகப்பிரிவிர்கான எல்லை நிர்ணயம் இதுவரை செய்யப்படவில்லை. அதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட கிரான் செயலகப்பிரிவிற்கு பூரண நிர்வாக செயலாற்று அனுமதி வழங்கப்பட்டு செயற்படுகின்றது.

02.  வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்கான பிரதேச சபை அமைத்து தருவதாக முன்னால் அமைச்சரும், ஏனைய காங்கிரஸ் கட்சிகளும் வாக்குருதியளித்தும் எட்டாக்கனியாக காணப்படுகின்றது.

03.  மீள் குடியேற்ற கிராம மக்களுக்கு இதுவரை பல்லாயிரக் -கணக்கான காணி உறுதிப்பத்திரங்களோ ஒப்பங்களோ இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை.  வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட 1500க்கும் அதிகமான ஒப்பங்கள் மீள கொண்டு செல்லப்பட்டுள்ளன.

04.  வயற்கானிகளில் சென்று தமது நடவடிக்கைகளை செய்யா முடியாமல் காணி உருத்து பிரச்சினைகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

 

அதிரடித் தீர்வுகள்:  

நடமாடும் செயலகங்களை உடனடியாக அமைத்து முஸ்லிம்களது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

வலக்கரத்தால் கொடுத்து இடக்கரத்தால் பறிக்க முடியுமான தீர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து முகவர்களின் பிரச்சார விளம்பர அனுசரணைகளுக்கு பலிக்கடாவாகது சிவில் தலைமைகள் அவதானமாக இருக்க வேண்டும். (என்றாலும் எமக்கு சேரவேண்டியவற்றை பெற்றுக் கொள்வதில் பின்னிற்க வேண்டியதில்லை.)

நடமாடும் செயலகங்களை உடனடியாக அமைத்து முஸ்லிம்களது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

தலைவர்களுக்காக காத்திராது முஸ்லிம் பிரதேசங்களில் உடனடியாக தீர்க்கமுடியுமான பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை, ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய தருணமிது.

வட மாகாண முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் யுத்தம் நிகழ்ந்த காலப்பிரிவில் விடுதலைப்புலிகளால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை மற்றும் இராணுவத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்படுள்ளமையால் இதுவரை முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

MRK (2)பழைய அகதிகள் என்பதனால் வடபுல முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கு நிதி ஒதுக்க வில்லையாம், 20வருடங்களுக்கு மேல் முஸ்லிம்களது பூர்வீக இடங்களில் அடுத்தவர்கள் குடியிருப்பதால் அவற்றை மீட்டெடுக்க சட்டத்தில் இடமில்லையாம்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐம்பது ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் தமிழ்ப் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று வரை திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேய்ச்சல், விளைச்சல் பாய்ச்சல் காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அனுமதிப்பத்திர காணிகளுக்கான பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமல் அகழ்வாராய்வு, திட்டமிட்ட குடியேற்றங்கள்இராணுவ முகாம்கள், அபிவிருத்தி திட்டங்கள்,பாதுக்காப்பு காரணங்கள்,புராதன சின்னங்கள் பாதுக்காப்பு என பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன.

புல்மூட்டை, ஓட்டமாவடி என பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமது விவசாய நிலங்களுக்கு முஸ்லிம் மக்கள் செல்வதில் இருந்து இராணுவத்தால் தடுக்கபப்டுகின்றனர்.

நுரைச்சோழையில் முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட 500 சுனாமி வீடுகள் இதுவரை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை,மாற்று இடங்கள் வழங்கப்படவும் இல்லை.

தீகவாபி அபிவிருத்திக்கென இறக்காமம் வரை முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் சுவீகரிக்கபபட்டும், அடையாளப்படுத்தப் பட்டும் இருக்கின்றன.

flood 6கரையோரப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் வாழ்விடங்களில் சரியான் உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் அடிக்கடி வெள்ளம் வீடுகளுக்குள் பாய்கின்றமையால் வாழ்விடங்களிலும் மக்கள் நிம்மதி இழந்திருக்கின்றனர்.

அங்குள்ள வாழ்விடங்களை பொறுத்தவரை எதிர்கால சந்ததியினருக்கு மாத்திரமன்றி தற்பொழுதுள்ள தலை முறையினருக்கும் வீடு வளவு என காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் வீடமைப்பு திட்டங்கள், புதிய நகராக்கங்கள், காணிப் பங்கீடுகள், குடியேற்றத் திட்டங்கள் என முஸ்லிம்களுக்காக எந்தக் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவதுமில்லை, முஸ்லிம்கள் அவற்றில்உள்வாங்கப்படுவதுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கிராமசேவகர் பிரிவுகள்,பிரதேச சபை பிரிவுகள், பிரதேசசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மீள் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுகின்றன.

அரச சேவைகளில், அபிவிருத்தி திட்டங்களில், தொழில், சுய தொழில் வாய்ப்புக்களில் நம் அரசியல் தொழிலாளர்கள் எதனை பெற்றுத் தந்தார்கள்..?

தனி அலகு கேட்ட நாம் அலகுக்குள் இருப்பவற்றையும் இழந்த அழகு !

பேரம் பேசல்” என்பது வெற்றி காவு கொள்ளப்படலாம என்ற ஒரே அச்சத்தில்சோரம் பேசல்” அல்ல அது பல தரப்புக்களுடனும் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.. என்று போராளிகள் கவலை.

ஐந்து வருடம் மறுக்கப்பட்ட உரிமைகள், இழைக்கப்பட்ட அநீதிகள் ஐந்து நாட்களில் கிடைத்து விடுமா..? சக்கராத்தில்தண்ணீர் கேட்பது போல் இருக்கிறது.

அதிரடி அரசியலும் இராஜ தந்திரமும் ஆட்சியாளரை வெல்வதற்கா அல்லது மக்களை ஏய்ப்பதற்கா ?

எடுத்தார் கைப்-பிள்ளையாய் இருக்கு மட்டும்-எடுப்பதினும்
முடிவொன்றை எடுக்காமை அறிவு !

போராட்டங்கள் சூதாட்டங்கள் ஆகலாம், ஆனால் ஒருபோதும் சூதாட்டங்கள் போராட்டங்களாக முடியாது.

தமிழ் நாட்டில் சினிமா சில சிறந்த அரசியல்வாதிகளை தந்தது, இலங்கையில் அரசியல் சில சிறந்த நடிகர்களை தந்துள்ளது.

About author

No comments

இனாமுல்லாஹ் ஏன் அரசியல் களத்திற்கு மீண்டும் வருவதில்லை ?

எனது எழுத்துக்களில் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மீண்டும்  அரசியல் களத்திற்கு வருமாறு அழைக்கின்றார்கள், இன்னும் சிலர் இல்லை சிவில் சமூக செயற்பாடுகள் போதும், நீங்கள் எழுத்துப் பணிகளோடு நின்று விடாது ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com