ஆயுட்காலத் தலைமைகள் சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆரோக்கியமானவையல்ல..!

0

பங்காளர்களாக அன்றி பார்வையாளர்களாக இருக்கும் சமூகமே அவர்களை உருவாக்குகின்றார்கள்.

ஆயுட்காலத் தலைமைகள் சொந்தப் பண்ணைகளுக்கு, கம்பெனிகளுக்கு இருப்பதில் தப்பில்லை, ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல், சிவில், சன்மார்க்க, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இருக்கவே கூடாது.

அது தனிநபர் ஆதிக்கத்திற்கு அடையாளமாகும், அதேபோன்று அவர்களைத் தவிர சமூகத்தில் தகுதியும், திறமையும், அனுபவ முதிர்ச்சியும் உடையோர் இல்லவே இல்லை என்ற செய்தியை மறைமுகமாக எடுத்துச் கொள்வதாகும்.

அரசியல், சிவில், சன்மார்க்க, இயக்க, அமைப்புக்களின் யாப்புக்களில் கூட்டுப் பொறுப்புள்ள ஷூரா முறையிலான தலைமைத் துவ கட்டமைப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப் படல் வேண்டும்.

ஒருவருக்கு இரண்டு முறை மாத்திரமே தலைமை பதவி வழங்கப் படல் வேண்டும், அடுத்தடுத்த படிமுறை தலைவர்கள் அவர்களது பங்களிப்புகள், செயற்திறன், மதி நுட்பம் , சிரேஷ்டம் என்ற காரணிகளை வைத்து அடையாளப் படுத்தப் படல் வேண்டும்.

leadership1எமது யாப்புக்கள் பலரை சர்வாதிகளாக மாற்றியுள்ளன, தேசிய அரசியலில் மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியலில் நாம் அதனை தெளிவாக காண்கின்றோம்.

அடுத்தடுத்த படிகளில் திறமைகளை இயல்பாக வெளிக் கொணரும் பலர் எவ்வாறு ஓரங்கட்டப் பட்டார்கள், துரோகிகள் ஆக்கப் பட்டார்கள், உண்மையான துரோகிகள் உருவாக்கப் பட்டார்கள், உள்வாங்கப் பட்டார்கள், நேற்றைய துரோகிகள் நண்பர்கள் ஆக்கப் பாட்டர்கள், இன்றைய நண்பர்கள் நாளைய துரோகிகள் ஆக்கப் பட்டார்கள் என்பதையெல்லாம் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

இளம் தலைமைகள் உருவாக்கப் படாமைக்கு இந்த எதேசாதிகார யாப்புக்களே பிரதான காரணம்.

தலைமைகளை பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஊழல் மோசடிகள் சந்தோஷங்கள், பதவி பட்டங்கள், மெகா சாப்பாடுகள், கையூட்டல்கள் வழங்கப் படுகின்றன.

சில வேளைகளில் சில்லறைகளுக்காக குரான் ஹதீஸ் கூட விலை பேசப் பட்டு விளம்பரங்களாகின்றன, சமூகத்தை ஏமாற்றுவதற்காக தம்மைத் தாமே ஒரு கூட்டம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆயுட்காலத் தலைமைகள் விலை பேசப் படுகின்றன, கொள்கைகள், இலக்குகள், போராட்டங்கள் விலை போகின்றன. சர்வாதிகாரிகள் தேசத்தில் ஜனநாயக தேர்தல் போல் பொதுச் சபை கூட்டங்கள் இடம் பெறுகின்றன.

ஆயுட் காலத்தலைமைகள் அவர்களது பலவீனங்கள், மோசடிகளை காரணம் அச்சுறுத்தப் பட்டு பணயக் கைதிகள் போல் அதிகார வர்க்கங்களால் நடாத்தப் படுகின்றார்கள், சரணாகதி அரசியல் செய்ய நிர்பந்திக்கப் படுகின்றார்கள்.

இன்று பதவிகள் ஒரு சிலருக்கு அலங்காரமாகவும், சூதாட்டமாகவும் மாறிவருக்கின்றது, அதேவேளை எந்தப் பதவிகளையும் அலங்கரிக்க வல்ல பலர் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள்.

சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்த படிமுறைகளிற்கு வழங்கப் படுகின்ற பொழுது அங்கு பெரறுப்புக்கூரல், வெளிப்படைத் தன்மை, ஆக்கத் திறன், சாதித்துக் காட்டுவதில் ஊக்கம் என பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

நன்றாக திட்டமிடப்பட்ட கௌரவமான ஆயுட்கால ஆக்கிரமிப்புகள் பல நிறுவனங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.

மன்னிக்க வேண்டும் எல்லா ஆயுட்காலத் தலைமைகளும் வங்குரோத்து என்றோ சர்வாதிகாரிகள் என்றோ நான் சொல்லவில்லை ஒரு சில நாள்கவர்களும், சில அப்பாவி பிள்ளை பூச்சிகளும் இருக்கத் தான் செய்கின்றனர்.

சுவாரசியம் என்னவென்றால் முன்னணி உறுப்பினர் சிலர் தமக்கு தகுதி இல்லாவிட்டால் தகுதி உள்ளவர்களுக்கு சென்று விடக்கூடடாது என்ற பொறாமையில் திரும்பத் திரும்ப ஒருவரை கட்டாயப் படுத்துவதாகும், சிலர் தாம் பாதிக்கப் படும் பொழுது தாமும் பங்காளிகளாக இருந்த தலைமை மோசடிகளை பட்டியலிடுகின்றனர்.

அந்த நல்லவர்களை மனதில் வைத்து சட்டங்கள் யாப்புகள் தயாரிக்கப் படக் கூடாது, அடுத்த படிமுறைகளிற்கு அநீதி இழைக்கப் படக் கூடாது.

பொறுப்புக்கள் அம்மானிதங்களாகும், உரியவர்களிடம் உரிய காலங்களில் ஒப்படைக்கப் படல் வேண்டும்.

ஆயுட்காலத் தலைமைகள் சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆரோக்கியமானவையல்ல..! (2)

acjuஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவைப் பொறுத்தவரை குறிப்பாக ஷெய்க் ரிழ்வி முப்தி அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நிறுவன மயப் படுத்தப் பட்டுள்ளது.

சமூகத்தின் ஏனைய தலைமைகளோடு ஒப்பிடுகின்ற பொழுது ஷெய்க் ரிழ்வி முப்தி அவர்கள் அதற்குரிய ஆளுமையை கொண்டிருப்பதால் பல்வேறு குறை நிறைகளுக்கு மத்தியிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தாக்கமுள்ள ஒரு சிவில் தலைமையாக மாற்றியுள்ளார்கள்.

சகல இஸ்லாமிய சிவில் மற்றும் இயக்கத் தலைமைகளை அழைத்து அகிலஇலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் ccc எனும் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான அமைப்பை ஷெய்க் ரிழ்வி முப்தியின் தலைமை ஏற்படுத்தியது.

ஜம்மியாஹ்வும் தலைமையும் விமர்சிக்கப் படுகின்ற பாத்வாக்கள் அரசியல்நிலைப்பாடுகளில் சமூகத் தளத்திலும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இன்று அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா அழகிய ஒரு தலைமையகத்தை கொண்டுள்ளது, அனர்த்த நிவாரண பணிகளுக்கென RCC அமையப் பெற்ற பொழுது ஜம்மியத்துல் உலமாவினதும், ஷெய்க் ரிழ்வி முப்தியினதும் தலைமைத்துவப் பங்களிப்பை காண முடிந்தது.

கடந்த காலங்களிலும் அனர்த்தங்களின் பொழுது ஷெய்க் ரிழ்வி முப்தி அவர்களது வேண்டுகோளின் பேரில் உடனடியாகவே பல இலட்சங்களை தனவந்தர்கள் கொண்டு வந்து தருமளவு விமர்சனங்களுக்கு மத்தியிலும் அவரது ஆளுமை இருந்தது.

அரசியல் அதிகாரமின்றி ஜனாதிபதியுடனோ, பிரதமருடனோ, பொலிஸ் மா அதிபருடனோ, பாது காப்புத் தரப்பினருடனோ தொடர்பு கொள்ளும் சிவில் தலைமை ஆளுமை அவரிடம் இருக்கின்றது, அருகிலுள்ள OIC யிற்கு கூட தொலை பேசியிலாவது பேச ஆளுமையற்ற தலைமகளும் இருக்கத் தான் செய்கின்றன.

“தேசிய ஷூரா சபை” அமைக்கப் பட்ட பொழுது அவரது ஆலோசனைகளை வழங்கி ஆதரவை தந்ததோடு ஐந்து உறுப்பினர்களை அவதானிகளாகவும் தந்துதவினார்கள், சிவில் சன்மார்கத் தலைமைகளை மாத்திரமன்றி அரசியல் தலைமைகளையும் அவ்வப் பொழுது ஜம்மியாஹ்விற்கு அழைத்து ஆலோசனைகளை மேற்கொள்ளும் மரபை உருவாக்கினார்கள்.

அரசியல் தலைமைகள் மௌனித்துப் போயிருந்த நிலைமையில் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் ஜம்மியாஹ்வின் ஊடாக குறை நிறைகளுக்கு மத்தியிலும் விமர்சனங்களிற்கு மத்தியிலும் இயன்றவரை சமூகத்திற்கு ஒரு தலைமையை வழங்கினார்கள்.

MUFTHIஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிற்கு முன்னால் சமூகத்தை அமைதி காக்குமாறு வலியுறுத்தினார்கள், ஜம்மியாஹ் பல்வேறு சமாதான சக வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது, கொள்கின்றது.

எமது புத்திஜீவிகளும் இயக்கங்களும் சர்வதேச அரசியலில் ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது உள்நாட்டில் சவால்களிற்கு நேரடியாக முகம் கொடுத்திருக்கின்றார்கள்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் குறைகாணும் சமூகம் உலமாக்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதனையும் நாங்கள் நிதானமாக ஆய்விற்கு உற்படுத்தல் வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் சூதாட்டமும் சுக போகமும் சொகுசு வாகனங்களும் மாளிகைகளும், சிறப்புச் சலுகைகளும் அனுபவிக்காது, ஆட்சி அதிகாரம் எதுவுமின்றி மக்கள் சேவை செய்யும் சமூக செயற்பாட்டாளர்களை எட்ட நின்று விமர்சிப்பவர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஷெய்க் ரிழ்வி முப்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவரல்ல, பொது வாழ்வில் எவரும் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர்கள் அல்லர், மாறாக பங்காளிகளாக அன்றி பார்வையாளர்களாக நாம் இருந்து கொண்டு பக்கச் சார்பாக விமர்சனக் கணைகளை தொடுப்பது நியாயமாகாது.

 

About author

No comments

யா அல்லாஹ்…

O யா அல்லாஹ்… உனது திருப் பெயரைக் கொண்டே ஆரம்பம் செய்கின்றேன், அகிலத்தாரின் இரட்சகனாகிய உனக்கே புகழும் புகழ்ச்சியும் உரித்தாகும், உனது தூதர் எங்கள் தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com