ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு

0

இலங்கை முஸ்லிம் சேவையில் நத்வதுல் அஃப்கார் எனும் ஆய்வரங்க நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்களும் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களும் நிகழ்த்திய கலந்துரையாடலின் சுருக்கம்.

————————————————–

இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.”

அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.

ஹிஜ்ரத் நபியவர்களது வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மட்டுமன்றி, மனித வரலாற்றிலேயே ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்த மாபெரும் நிகழ்வு. அந்த ஹிஜ்ரத்தோடு முஸ்லிம்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கிறார்கள். நபியவர்களின் மதீனா வாழ்வு ஆரம்பமாகின்றது அல்குர்ஆன் அருளப்பட்ட பாணியிலே அதன் கருப்பொருளிலே ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் இஸ்லாமிய சமூக அமைப்புக்கு ஒரு புதிய அத்திபாரத்தைக் கொடுத்து இஸ்லாமிய சமூகத்தின் கட்டுக்கோப்பை ஸ்திரப்படுத்துகின்றது. அது கால ஓட்டத்தில் மனித வரலாற்றிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே, ஹிஜ்ரத் என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. எனினும், சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பாக, மேற்கத்தேய வரலாற்றாசிரியர்கள் ஹிஜ்ரத்தை ஒரு சாதாரண நிகழ்வாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர். ஹிஜ்ரத் என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவரின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற ஓர் இடப்பெயர்வு என சித்திரிக்கின்றனர். இன்னும் சில வரலாற்றாசிரியர்கள் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்தி நபியவர்களும் அவரின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தப்பியோடிய நிகழ்வு என மோசமாக சித்திரிக்கின்றனர். ஆனால், ஹிஜ்ரத் என்பது மதீனா நோக்கிய வீரமும் துணிச்சலும் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணம் ஆகும்.

ஹிஜ்ரத் ஏன்?

வரலாற்றில் பல நபிமார்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டுள்ளனர். இப்றாஹீம், மூஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரின் ஹிஜ்ரத் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து நபியவர்களின் ஹிஜ்ரத் எவ்வாறு வேறுப டுகின்றது? வெறுமனே ஒரு மனிதன், ஒரு சமூகம் ஓர் இடத் திலிருந்து இன்னோர் இடத்திற்கு புலம்பெயர்ந்த நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகின்றோம்?

நபியவர்கள் தான் பிறந்து வளர்ந்த, நேசித்த மக்கத்து மண்ணிலிருந்து புலம்பெயர்வதற்கான தீர்மானத்தை ஏன் எடுத்தார்கள் அதற்குத் தூண்டுகோலாக அமைந்த காரணங்கள் என்ன என்பது பற்றிய தெளிவு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.

நபியவர்கள் இந்தப் பூமிக்குக் கொண்டு வந்த அல்லாஹ்வுடைய தீன் வெறுமனே தனிமனிதர்களை மாத்திரம் உருவாக்குவதை இலக்காகக் கொண்டதல்ல, தனி மனிதர் களை உருவாக்கி, அதன் மூலம் குடும்பங்களை உருவாக்கி அந்தக் குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்கள்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

மக்கத்து மண்ணிலே தனி மனிதர்களாக இருந்து கொண்டு வணக்க வழிபாடுகளை, கிரியைகளைச் செய்வதற்கான வாய்ப்பு ஓரளவு இருந்தது. ஆனால், நபியவர்கள் விரும்பிய இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கு மக்கா நகர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே, தனது இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான ஒரு பூமியைத் தெரிவு செய்து அங்கு செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.

இத்தகைய ஒரு பாரிய இலக்கோடு மேற்கொள்ளப்பட்ட ஓர் இலட்சியப் பயணமே ஹிஜ்ரத். தனது கொள்கைப் பிரசாரப் பணியில் அடுத்த கட்டங்களை அடைவதற்காகவே நபியவர்கள் இத்தகைய ஒரு பயணத்தைத் திட்டமிட்டார்கள்.

DR1ஹிஜ்ரத் திட்டமிடப்பட்ட ஒரு பயணம்

ஹிஜ்ரத்துக்காக நபியவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகளும் அவற்றின் படிப்பினைகளும் ஏராளம் உள்ளன.

1. நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொள்ளத் தயாரானபோது மதீனாவுக்கு புலம்பெயரவிருப்பதை இரகசியமாகவே வைத்திருந்தார்கள். இந்த இரகசியம் அபூ பக்ர், அலி (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஏனெனில், குறைஷிக் காபிர்கள் நபியவர்களின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இப்பயணத்தை மேற்கொள்வதற்காக ஒரு ஒட்டகத்தையும் இரகசியமாகவே கொள்வனவு செய்கிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

2. பயணத்தின்போது மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் செல்லும் வழமையான பாதையை விடுத்து வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்பாதைக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாத ஒருவரை நியமித்தார்கள். முஸ்லிம்கள் பயனளிக்கக்கூடிய தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முஸ்லிமல்லாதவரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற படிப்பினை இங்கு கிடைக்கிறது.

3. அவர்கள் இருவருக்கும் உணவு கொண்டுவந்து கொடுக்கும் பொறுப்பை அஸ்மா பின்த் அபீ பக்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வழங்குகின்றார்கள்.

4. தனது படுக்கையில் தனக்குப் பதிலாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் வழித்தோழராக அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் தெரிவு செய்தமை எவ்வளவு பொருத்தமானது என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

5. உணவு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் வருகின்றபோது அவர்களின் கால் அடையாளங்கள் மணலில் பதியும். அவற்றை வைத்து குறைஷிக் காபிர்கள் அவர்களை வந்தடைந்துவிடக் கூடும் என்று அஞ்சிய தூதர், ஆமிர் இப்னு ஸுஹைரா என்பவரை அடையாளங்களை அழிப்பதற்கு நியமித்தார்கள். அவர் ஆட்டு மந்தையோடு அப்பகுதிக்கு வருவதன் மூலம் அந்த காலடித் தடங்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆட்டு மந்தையி லிருந்து பால் கறந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடும் அத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட பயணமாகவே ஹிஜ்ரத் அமைந்தது.

உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய நோக்கில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அல்லது நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருந்தால் இந்த ஹிஜ்ரத் வெறும் அற்புதமாக நிகழ்ந்திருக்க முடியும். எனினும், தான் முழு மனித சமூகத்துக்கும் முன்மாதிரியாக இருப்பவர் என்ற வகையில் சகலரும் பௌதிகக் காரணிகளைக் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்ற செய்தியை இங்கு சொல்லியிருக்கின்றார்கள்.

நபியவர்கள் மதீனா பூமியைத் தெரிவு செய்தபோது மதீனத்து சமூகம் பொருத்தமா என்பது பற்றி மிக ஆழமாக சிந்தித்தார்கள். அதனை உறுதி செய்து கொள்வதற்காக இரண்டு உடன்படிக்கைகளை (முதலாம், இரண்டாம் அகபா உடன்படிக்கைகள்) செய்தார்கள். மதீனாவின் முக்கியமான இரு கோத்திரங்களான அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் இவ்வுடன்படிக்கையைச் செய்தார்கள். அவ்வுடன்படிக்கையில் இவ்வாறு சொன்னார்கள்.

“நான் மதீனாவுக்கு வந்தால் எனக்கு நீங்கள் அபயமளிக்க வேண்டும் எனக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.”

எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.

திட்டமிடல் என்பது நபியவர்களின் ஸுன்னா. அனைத்து வகையான பௌதிகக் காரணிகளையும் கவனத்திற் கொண்டு எல்லா வகையான முன் ஆயத்தங்களையும் மேற்கொண்டு விட்டு விளைவை, இறுதி முடிவை அல்லாஹ்விடம் விடுகின்ற மனோநிலைதான் தவக்குல். முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும் பாதகமாக அமைந்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்ற மனோநிலையை “தவக்குல்” குறித்து நிற்கிறது. அல்லாஹ் போதுமானவன், அவன் பார்த்துக் கொள்வான் என்று கருதி பௌதிகக் காரணிகள் அனைத்தையும் புறக்கணிக்கின்ற மனோ நிலையை “தவாக்குல்” எனும் இஸ்லாத்துக்கு முரணான நிலை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹிஜ்ரத் நிகழ்வில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவக்குலை மிகச் சரியாக பிரயோகித்துக் காண்பித்துள்ளார்கள்.

Thowrஹிஜ்ரத்துக்கான நபியவர்களின் திட்டமிடல் மதீனாவை மாத்திரம் இலக்காகக் கொண்டதாக இருக்கவில்லை. அதற்கு முன்னர் அபிசீனியாவுக்கு முதல் ஹிஜ்ரத் மேற் கொள்ளப்பட்டது. அந்த ஹிஜ்ரத்தின்போது நபியவர்கள் புவியியல், அரசியல், சமயக் கண்ணோட்டத்தில் மிகத் துல்லியமாக திட்டம் தீட்டினார்கள். அரபுத் தீபகற்பத்தின் எந்தவோர் இடத்தையும் நபியவர்கள் முதல் ஹிஜ்ராவுக் காகத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அரபுத் தீபகற்பத்தின் எல்லாப் பகுதியிலும் குறைஷிகளின் செல்வாக்கு இருந்தது. அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆபத்து விளையும் என்பதை கவனத்திற் கொண்டே அபீசீனியாவை தெரிவு செய்தார்கள்.

மறுபக்கம் பாரசீக, ரோம சாம்ராஜ்யங்கள் அல்லது அவற்றின் ஆதிக்கத்தின் கீழிருந்த பிரதேசங்களுக்கும் முதல் ஹிஜ்ரத்தை மேற்கொள்ள நபியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, ரோம, பாரசீகர்களை நம்ப முடியாமை. இரண்டாவது, அந்தக் காலத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட இரு வல்லரசுகளாக அவை இருந்தன. அவர்கள் இப்புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை ஒருபோதும் வரவேற்கப் போவதில்லை.

சீனா, இந்தியா போன்ற பிரதேசங்களையும் முதல் ஹிஜ்ரத்துக்காக நபியவர்கள் தெரிவு செய்யவில்லை. அதற்குப் பிரதான காரணம், முஸ்லிம்கள் அந்தளவு தூரம் போய் விட்டால் சிலபோது ஹிஜ்ரத்துடைய நோக்கமே பிழைத்து காலப்போக்கில் அவர்களுடனான உறவும் துண்டிக்கப்பட்டு தீனை இழந்துவிடும் ஆபத்து இருந்தது.

அபீசீனியா நடுத்தரமான தூரத்தில் அமைந்திருந்தது. அத்துடன் அபிசீனியாவுக்கும் அரபுத் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு கடலுமிருந்தது. எனவே, குறைஷிக் காபிர்களால் இலகுவாக அங்கு செல்ல முடியாது. சமய ரீதியாகவும் அபீசீனியா மிகவும் பொருத்தமான தளமாக அமைந்தது. அங்குள்ள மக்கள் கிறிஸ்தவர்கள். அல்லாஹுத் தஆலா கிறிஸ்தவர்களை “முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” எனச் சொல்கின்றான்.

அது மட்டுமல்ல, அன்றைய அபிசீனிய ஆட்சியாளர் அஹ்லுல் கிதாபினரைச் சேர்ந்தவர் நீதியான ஆட்சியாளர் என்பதும் சாதகமாக அமைந்தன. அந்த அபிசீனிய அரசனைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும்போது, “அபிசீனிய அரசர் நிச்சயமாக உங்களைக் கவனிப்பார் உங்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்க மாட்டார் என்று நம்புகின்றேன். எனவே நீங்கள் செல்லலாம்” என்றார்கள்.

அல்லாஹ்வின் உதவி

நபியவர்களின் ஹிஜ்ரத் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டதாக இருந்தபோதிலும் அல்லாஹ்வின் உதவி நேரடி யாகவும் மறைமுகமாகவும் இருந்தது என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். உண்மையில் இந்தப் பயணத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.

சுராகா என்பவர் நபியவர்களைக் கொலை செய்யும் நோக்கில் குதிரையிலே துரத்தி வந்தார். சுராகா நபியவர் களை நெருங்கும்போதெல்லாம் அவருடைய குதிரை பூமியில் புதைந்து கீழே விழுந்தது. நபியவர்கள் சுராகாவைக் கண்டார்கள். அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அஞ்சியபோதும், நபியவர்கள் அஞ்சவில்லை. முன்னாயத்தங்களைச் செய்தபோதிலும் அல்லாஹ் தனக்கு நிச்சயம் உதவி செய் வான் என்று உறுதியாக நம்பி தவக்குல் வைத்தார்கள். அல்லாஹ் உதவி செய்தான். சுராகாவின் குதிரை பல தட வைகள் மண்ணில் புதையுண்டு விழுகிறது. இதனைக் கண்ட சுராகா நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவுகிறார்.

நபியவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த எதிரிகளின் கண்களில் படாமல் வெளியேறுவதற்கு அல்லாஹ் எதிரிகளின் பார் வையை மறைத்து உதவி புரிந்தான். நபியவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக வீட்டிலிருந்து வெளியேறினார்கள். எதிரிகள் எவரும் நபியைக் காணவில்லை.

எனவே, நாம் பௌதிகக் காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தவக்குல் வைத்து செயற்படுகின்றபோது, அல்லாஹ்  அறியாப் புறத்திலிருந்து உதவுவான் என்பதற்கு இது நல்லதோர் ஆதாரம்.

ஹிஜ்ரத்தின் விளைவுகள்

ஹிஜ்ரத்தின் பின் நபியவர்கள் அன்ஸாரிகளையும் மு’hஜிர்களையும் சகோதரக் கட்டுக்கோப்பில் பிணைத்தார்கள். அந்த சகோதரக் கட்டுக்கோப்பில் மதீனா சமூகம் உருவாகியது. மக்காவிலே தனிமனிதர்களாக சிதறி வாழ்ந்தவர்கள் மதீனாவில் ஒரு சமூகமாக கட்டுக்கோப்பாக இணைகின்றார்கள்.

மஸ்ஜித் நிருமாணம்

அடுத்ததாக, நபி ஸல்லல்லா'{ அலை’p வஸல்லம் அவர்கள் மேற் கொண்ட பணி மதீனாவில் ஒரு மஸ்ஜிதைக் கட்டி எழுப்பியமை. அந்த சமூகத்தின் மத்திய நிலையமாக, அனைத்து விவகாரங்களுக்குமான கேந்திர நிலையமாக மஸ்ஜிதுந் நபவி அமைந்தது. எனவே, முஸ்லிம் உம்மத் என்பது மஸ்ஜிதை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழலுகின்ற ஒரு உம்மத் என்பதையும் அந்த மஸ்ஜிதின் நிழலிலேதான் முஸ்லிம் சமூகக் கட்டுக்கோப்பு உறுதியும் ஸ்திரமும் அடைய முடியும் என்பதையும் ‘pஜ்ரத்தின் பின்னால் தோன்றிய மதீனாவின் இஸ்லாமிய சமூக அமைப்பிலே அவதானிக்க முடிகிறது.

புதிய ஓர் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் மதீனத்து சமூகத்தில் பள்ளிவாசல் வகித்த பங்கை இன்றைய பள்ளிவாசல்கள் வகிக்கின்றனவா என்பதுபற்றி சிந்திக்க வேண்டும் விடை காண வேண்டும்.

மஸ்ஜிதுந் நபவி கலாசார கேந்திர நிலையமாக, தலைமைப் பீடமாக, முஸ்லிமல்லாதோராக இருந்தாலும் விருந்தாளிகளை வரவேற்குமிடமாக ஏழைகளுக்கு, பயணிகளுக்கு, வழிப்போக்கர்களுக்கு தங்குமிடமாக விளங்கியிருக்கிறது.

நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்களுக்கு வணக்கத்தை நிறைவேற்ற மஸ்ஜிதுந் நபவியில் இடமொதுக்கிக் கொடுத்ததுபோல மற்றnhரு தூதுக்குழு நபியவர்களைச் சந்திக்க வந்தபோது அவர்களை மஸ்ஜிதுந் நபவியிலே தங்க வைத்ததுடன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அக்குழுவைக் கவனிப்பதற்காக நியமித்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பணித்தார்கள்.

இப்னு ருஷ்த், இப்னு பதூதா, அல்மக்திஸி போன்ற வரலாற்றாசிரியர்கள் அன்றைய மஸ்ஜிதுகள் எவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளுக்கு தளமாக இருந்தன என்பது பற்றி நிறையவே எழுதியுள்ளார்கள்.

நீதிமன்றங்களாக, ஸகாத் விநியோகிக்கப்படும் இடமாக, கல்வி நிலையங்களாக முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு விடயங்களை கலந்து பேசு கின்ற ஆலோசனை மன்றங்களாக வரலாற்றில் மஸ்ஜிதுகள் செயற்பட் டிருக்கின்றன. பள்ளிவாசலில் சிகிச்சை நிலையங்கள்கூட செயற்பட்டிருக் கின்றன. ஸ்பெய்னிலே குர்துபா பள்ளிவாசலில் ஒரு பிரத்தியேக மருத்துவமனை இயங்கியதாக வரலாற்றில் அறிய முடிகிறது.

நபியவர்களின் காலத்திலேயே மஸ்ஜிதுந் நபவியில் அறிவுப் போத னைகள், வகுப்புகள் நடைபெற்றி ருக்கின்றன. பிற்பட்ட காலத்தில் எகிப்திலே அமைந்த அம்ர் இப்னு ஆஸ் பள்ளிவாயல் மிக முக்கியமான மஸ்ஜித். அங்கு நாற்பதுக்கும் அதிக மான கல்வி வட்டங்கள் செயற்பட்டி ருக்கின்றன. இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ், இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வகுப்புகள் இப்பள்ளிவாசலில் நடைபெற்றன.

தற்போது மிகப்பெரும் சர்வதேச பல்கலைக்கழகமாக விளங்கும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்தது. டியூனீஸியாவிலுள்ள ஜாமி அதுஸ் ஸைதூனும் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்தது. பக்தாதிலுள்ள ஜாமிஉல் மன்ஸூரிலே பிரபல மான ஹதீஸ் கலை அறிஞர் கதீப் அல்பக்தாதி ஹதீஸ் பாடம் நடத்தினார். இமாமுல் கிஸாகி மொழிப்பாடம் நடத்தினார். அபுல் அஸாஹியா இலக்கியப் பாடம் நடத்தினார். வானவியல், கணிதம் போன்ற வகுப்புகள் பரவலாக நடத்தப்பட்டன.

பன்மைச் சமூகம்

DR3இன்று பன்மைச் சமூகம் எனும் கருப்பொருள் குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. பல இனங்களைச் சார்ந்த ஒரு சமூகம் எவ்வாறு தமக்குள் விட்டுக் கொடுப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண் டும் என்று கலந்துரையாடப்படுகின்றது. இதற்கு மிகச் சிறந்த முன்னுதாரண சமூகமாக மதீனா சமூகம் விளங்கியது. மதீனாவில் வாழ்ந்த யூதர்களுடன் நபிய வர்கள் உடன்படிக்கை ஒன்றைச் செய்து அவர்களின் பரஸ்பர கடமைகள், உரிமைகளை வரையறுக்கின்ற ஒரு சாசனத்தை உருவாக்குகின்றார்கள். அதுதான் மதீனா சாசனம். இதுவே முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது எழுதப்பட்ட அரசியல் சாசனம். முஹாஜிர்கள், அன்ஸாரி களுக்கிடையிலான உறவு, குறிப்பாக யூதர்களுடனான உறவு எவ்வாறு அமைய வேண்டும், அவர்களின் மத சுதந்திரம், தனித்துவம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற சகல உரிமைகளையும் பேணி மதீனா சாசனம் உருவாக்கப்பட்டது.

கி.பி. 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸியப் புரட்சியின் பின்னர்தான் மனித உரிமைகள் பற்றிய சிந்தனை பிறந்ததாகவும் அதனடியாகவே 1948ம் ஆண்டு ஐ.நா.வினால் மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. உலகிலேயே முதலாவது எழுதப்பட்ட அரசியல், மனித உரிமைகள் சாசனமாக ஹிஜ்ரத்தைத் தொடர்ந்து கைச்சாத்திடப்பட்ட மதீனா சாசனமே விளங்குகின்றது என்பதை வரலாற்றை காய்தல் உவத்தலின்றிப் படிக்கும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்வர்.

எனவே, வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. சுதந்திரம், சகிப்புத் தன்மை, மனிதனின் அடிப்படை உரிமைகள் பற்றிய கோட்பாடுகள் அண்மைக் காலத்தில்தான் தோன்றின என்பது போன்ற பிரஜைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், வரலாற்றைப் பொறுத்தவரையில் மனித உரிமை சாசனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே. அன்னார் நிகழ்த்திய அரபா உரை, அன்னார் செய்து கொண்ட மதினா சாசனம், நஜ்ரான் சாசனம் ஆகிய மூன்றும் மனித இனப் பங்களிப்பிற்கு மகத்தான சான்று களாக விளங்குகின்றன.

நஜ்ரான் சாசனம்

நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்கள் நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதீனா வந்திருந்தார்கள். அவர்கள் சமுகமளித்திருந்த நேரம் அவர்களின் வணக்கத்துக்குரிய, நேரமாகவிருந்தது. அவர்களின் வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு மஸ்ஜிதுந் நபவியிலே நபியவர்கள் ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

அடுத்ததாக, வந்திருந்த கிறிஸ்தவர்களோடு ஓர் உடன்படிக்கையும் செய்து கொண்டார்கள். அவ்வுடன் படிக்கையின்படி, கிறிஸ்தவர்கள் தமது கழுத்தில் சிலுவை சின்னத்தை அணிந்து செல்வதற்கு உரிமை வழங்கப் பட்டது. அவ்வாறே சமூக, கலாசார, பண்பாட்டு, மத விவகாரங்களிலே பரிபூரண சுதந்திரத்தை வழங்கி ஷநஜ்ரான்| சாசனத்தையும் கைச்சாத்திட்டார்கள்.

இரண்டாவதாக, எவ்வாறு அன்ஸாரிகளும் முஹாஜிர் களும் ஈமானிய உறவினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அத்தகைய அத்தியந்த உறவு இன்றைய முஸ்லிம் சமூகத்துக்குள் நிலவுகின்றதா? மூன்றாவதாக முஸ்லிமல் லாதோருடன் அன்றைய மதினா சாசனத்துக்கூடாக ஆரோக்கியமான ஓர் உறவைக் கட்டியெழுப்பினார்கள். அப்படிப்பட்ட உறவை நாம் வளர்த்திருக்கின்றோமா என்ற இம் முப்பெரும் கேள்விகளுக்கும் பதில் காண வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அன்று முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கிய மஸ்ஜித் இன்று எந்த நிலையை அடைந்திருக் கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்பதற்குப் பொருத்தமான நேரம் இது.

சகோதரத்துவக் கட்டுமானம்

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை நோக்கு கின்றபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கட்டி எழுப்ப விரும்பிய ஈமானிய சமூகத்துக்கு மிக முக்கியமான அடிப்படையாகக் கருதியது சகோதரத்துவம், ஒற்றுமை, ஐக்கியம் எனும் பண்புகளை யேயாகும்.

நபியவர்கள் சொன்னார்கள்

“ஒரு முஃமின் ஒரு கட்டடத்தைப் போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும்.”

இந்த ஒற்றுமை அன்றைய முஸ்லிம்களின் வெற்றிக்கு எந்தளவு தூரம் துணைபுரிந்தது என்பதை வரலாற்றில் காணலாம். ஆனால், இத்தகைய ஒற்றுமையை இன்றைய முஸ்லிம் சமூகம் இழந்திருப்பதே அதன் பின்னடைவுக்கும் அவல நிலைக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டியெழுப்பிய ஈமானிய சமுதாயத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை. அபீசீனியாவிலிருந்து மதீனா வந்த பிலால் ரழியல் லாஹு அன்ஹு அவர்கள் அச்சமூகத்துடன் இரண்டறக் கலந்து எவ்வித வேறுபாடுமின்றி வாழ்கிறார்கள். பாரசீகத்திலிருந்து வந்த ஸல்மானுல் பாரிசி ரழியல்லாஹு அன்ஹு அச்சமூகத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கின் றார்கள். ரோம் நாட்டின் அடிமையாக வந்த ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அச்சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.

எனவே, பாரசீகத்தின் ஸல்மானும் ரோமின் ஸுஹைபும் அபிசீனியாவின் பிலாலும் எத்தகைய இன, நிற,தேசிய பேதமின்றி இஸ்லாம் எனும் கட்டுக்கோப்பில் தம்மை இணைத்துக் கொண்ட நிகழ்வை மதீனா சமூகத்தில் காணலாம். அன்ஸாரிகளும் முஹாஜிர்களும் தமது சொத்துக்களை பரஸ்பரம் தமக்கிடையில் பரிமாறிக் கொண்டு பொருளாதார நலன்களை விட்டுக்கொடுத்து அந்த சமூகத்தில் இணைகிறார்கள்.

ஆனால், இக்கால இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் இஸ்லாத் தின் விரோதிகள் கையாண்ட முக்கியமான உத்திதான் முஸ்லிம்கள் மத்தியிலே இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தியமை.

ஸ்பெய்னிலே சுமார் 800 வருடங்கள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களிடம் வட அராபியர்தென் அராபியர் எனும் பிரிவைத் தோற்றுவித்து இஸ்லாமிய ஆட்சியை சீர்குலைத் தார்கள். வளம் மிக்க உஸ்மானியப் பேரரசை அராபியர்துருக்கியர் என்ற இனவாதத்தைத் தூண்டி இஸ்லாமிய ஆட்சியை சீர்குலைத்தார்கள். இன்று பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிந்திக்கள்பஞ்சாபிகள்உருது பேசுவோர் என்ற பேதங்கள் தோன்றியிருப்பதைப் பார்க்கிறோம். ஈராக்கில் குர்திகள் பாரசீகர்கள்ஈராக்கியர் என்ற பேதங்கள் தோன்றியிருக்கின்றன.

Madinaஎனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் உறுதியான கட்டமைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பிய சமூகம் பிற்காலத்தில் சீர்குலைந்து முஸ்லிம் சமூகம் சின்னாபின் னமாக சிதறி ஆட்சியையும் ஆற்றலையும் இழந்து, பண்பாடும் நாகரிகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. இந்த நாட்டில் கூட முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் காணப்படுகின்றது. இது பெரும் பிரச்சினை யாக சிலபோது படையெடுப்பதையும் பார்க்கின்றோம்.

ஹிஜ்ரத் எங்களுக்கு உணர்த்துகின்ற பாடம் மதீனா சமூகத்தின் உறுதியான கட்டுக்கோப்பு ஆகும். அது உறுதிகுலையாது என்றுவரை பேணப்பட்டதோ அன்றுவரை இஸ்லாம் மாபெரும் சக்தியாக உலகில் தலைநிமிர்ந்து நின்றிருக்கிறது. எப்போது அந்த சகோதரத்துவ உணர்வு குறுகிய சிந்தனைகளால் தூண்டப்பட்டு சின்னாபின்னப்பட்டதோ அந்த நேரத்தில் முஸ்லிம்கள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். கண்ணி யத்தை இழந்து பிளவுபட்டு சீர்குலைந்திருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

“ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில், இஸ்லாமிய உலகில் தொடர்ந்தும் தான் வணங்கப்படப் போவதில்லை என்பதை உறுதியாக அறிந்து கொண்டான் அவ்விடயத்தில் அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். ஆனால், அவன் நம்பிக்கை இழக்காமல் செயற்படுகின்ற ஓர் அச்சம் தொடர்ந்தும் இருக்கிறது. அதனையிட்டு நான் உங்களை எச்சரிக்கிறேன். அதுதான் முஸ்லிம்கள் மத்தியில் உட்பூசலை ஏற்படுத்துவது. இவ்விடயத்தில் மாத்திரம் அவன் நம்பிக்கை இழக்கவில்லை.”

எனவே, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். முரண்பாட்டில் உடன்பாடு காண்போம் என்ற கோஷத்தோடு இப்புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் அகன்று சந்தோஷமான எதிர்காலம் கிட்ட அனைவரும் பிரார்த்திப்போம்.

About author

No comments

உழ்ஹிய்யாஹ் தொடர்பான சில வழி காட்டல்கள்..

இன்ஷா அல்லாஹ், ஹஜ் பெருநாள் தினத்திலும் தஷ்ரீக் தினங்களிலும் நாம் கொடுக்கும் உழ்ஹிய்யாஹ் தொடர்பான மார்க்க விளக்கங்களை உலமாக்கள் தெளிவு படுத்துவார்கள், என்றாலும் தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com