முஸ்லிம் அல்லாதோருக்கு ஸலாம் அல்லது வாழ்த்துக் கூறல்

4

O (சிறு பான்மை முஸ்லிம்களுக்கான பிக்ஹு)

முழு மனித  வர்க்கத்திற்கும் அருட் கொடையாக அருளப்பட்ட இஸ்லாம் இனத்துவக் குழுக்களுக்கிடையிலான நல்லுறவுகள் குறித்து மிகவும் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

ஸுரத்துல் ஹுஜ்ராத்தில் வரும் மேற்படி வசனம் முழுமனித குல ஒற்றுமையை வலியுறுத்துகின்ற அதேவேளை  “நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்” இந்த வசனத்தில் வரும்  “தா ஆரபூ” என்ற அரபுப் பதம் வெறும் அறிந்து கொள்தல் என்பதற்கப்பால் “நல்லுறவைப் பேணிக் கொள்தல்”, “புரிந்து கொள்தல்” “பரஸ்பரம் நன்மை செய்து கொள்தல்” என்ற பறந்த விரிவான கருத்தோட்டத்தை கொண்டுள்ளது. அரபு மொழியில் அதன் வினையடி அதுபெரும் மாறு பட்ட சொல் வடிவங்கள் இதனை உணர்த்டுவதனை காணலாம். அதே போன்று இந்த வசனத்திற்கு முன்வந்துள்ள வசனங்கள் இந்த சூரத் அருளப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை என்பன மனித உறவுகளை நெறிப்படுத்து கின்ற அடிப்படை வழிகாட்டல்களை வழங்குவதாகவே அமைந்துள்ளன.

முஸ்லிம்களோடு போரிடாத , முஸ்லிம்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றாத முஸ்லிமல்லாதவர்கள் விடயத்தில் நல்லுறவு பேணுவதன் அவசியத்தை சூரத்துல் மும்தஹிநாவில் வரும் கீழ் காணும் இரு வசனங்களும் மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன:

“மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்”.  (அல்  மும்தஹினா  60:08)

“நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்”. (அல்  மும்தஹினா 60:09)

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.

(இப்ராஹீம்  14:24/25)

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.

(பகறா  2:63)

Unityமனித உறவுகளின் அரிச்சுவடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்வதும் சுக துக்கங்களின் போது சந்தர்ப்பங்களுக் கேட்ப வாழ்த்து, ஆறுதல் ,கவலை தெரிவித்துக் கொள்ளும் உயரிய பண்பாகும்.  இத்தகைய உயரிய மானுட விழுமியங்களை முன்னுள்ள சமூகங்களுக்கும் அல்லாஹ வலியுருத்தியிருந்ததை அல்குரானிய வசனங்களிலிருந்தும் ஹதீஸ் களிலிருந்தும்  அறிந்து கொள்ள முடிகின்றது.

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).

ஆதம்  அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்த அல்லாஹ் “இப்போது நீர் அதோ இருக்கின்ற வானவர்களிடம் சென்று அவர்கள் உம்மை எவ்வாறு வாழ்த்து கின்றார்கள் என்று கவனமாக கேளும் ; அதுவே உமக்கும் உமது சந்ததியினருக்குமான வாழ்த்தாகும் ” என கூறியபோது ஆதம் அலைஹிஸ்ஸலாம் வானவர்கள் பக்கம் சென்றார் , வானவர்கள் அவரைப் பார்த்து “அஸ்ஸலாமு அழைக்கும் ” என்று வாழ்த்துக் கூறினர். என்ற ஹதீஸ் புஹாரி முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

“என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்). ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து “ஸலாமுன்” என்று கூறிவிடும்; (உண்மைமை பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல் சுஹுருப்  43:88-89)

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள். (அல்- கஸ ஸ்- 28:85) 19:47] தமிழ்

(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார். ( அல்-மர்யம் 19:47)

ஆனால்   முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு ஸலாம் கூறக் கூடாது என்ற ஒரு கருத்து தொன்று தொட்டு நிலவி வருகின்றது , இறை தூதர்  (ஸல்) அவர்கள் ஒருமுறை ” நான் நாளை யுத்தத் திற்காக புறப்படுகின்றேன் வேதத்தயுடையவர்களுக்கு நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள் ,அவர்கள் பாதையில் ஒதுக்குப் புறமாக செல்வதற்கு நீங்கள் வழிவிட்டுச் செல்லுங்கள் ” என தெரிவித்த ஒரு ஹதீஸ் அபூ ஹுரைரா (ரலி) அவர்களது அறிவிப்பில் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்தே முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற கருத்தை பல முன்னோர்கள் கொண்டிருந்தனர், ஆனால் சஹாபாக்கள் காலம் முதல் சலபுஸ் சாளிஹீன்கள் தொடக்கம் இன்று வரை இதற்கு மாற்றுக் கருத்துடைய அறிஞ்சர்கள்,உலமாக்கள் ஷாபி ஹன்பலி உட்பட மத்ஹபுக் காரர்கள்   இருக்கவே செய்கிறார்கள். இறை தூதருடனான உடன்பாட்டை மீறிய பனூ குறைழா வர்க்கத்தினருடன் யுத்தம் பிரகடனப் படுத்தப் பட்டிருந்த சூழ்நிலையில் முஸ்லிம்களை தமது தலைமைத்துவ கட்டுக் கோப்பில் வைத்திருக்க ரசூலுல்லாஹ் விடுத்த கட்டளையாகவே இதனை கருத வேண்டும் என அவர்கள் அபிபிராயப் பட்டிருந்தனர்.

உண்மையில் திடீரென இவ்வாறானதொரு -விதி விலக்கான- தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டமை  முஸ்லிம்கள் வேதத்தை உடைய்யவர்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் சலாம் சொல்ல அனுமதிக்கப் பட்டிருந்தனர் என்பதற்கு தர்க்க ரீதியிலான ஆதாரமாக தெரிகின்றது.

இறைதூதர் (ஸல்) அவர்கள் வேதத்தையுடையவர்கள் குறிப்பாக யூதர்கள் விடயத்தில் சலாம் கூறுவதை தடை செய்வதற்கான மற்றொரு காரணமும் இருந்தது ஒருமுறை யூதர்கள் ஒரு குழுவினர் ரசூளுல்லாஹ்விடம் வருகை தந்த போது “அஸ்ஸாமு அழைக்கும்” “உம்மீது மரணம் சம்பவிக்கட்டும்” என கூறினார்கள் அதற்கு “வா அழைக்கும்”  “உங்கள் மீதும்” என நபியவர்கள் பதிலளித்தார்கள் என   ஹசரத் ஆயிஷா நாயகி அறிவித்ததாக புஹாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இது போன்ற இன்னும் சில அறிவிப்புக்களை வைத்து தடை விதிக்கப் பட்டிருந்தாலும் அவை தடை விதிப்புக்கான நியாயம் அல்லது காரணம் அல்லது சூழ்நிலை அகன்று விட்டபோது அல்லது இல்லாத போது சுமுகமான உறவுகள் பேணப் படும் பட்சத்தில் தெளிவாக சலாம் கூறப்படின் சலாம் கூறுவதும் கூறப்பட்டால் பதில் கூறுவதும் ஆகுமானதாகும் என மாற்றுக்  கருத்துடைய இமாம்களும் உலமாக்களும் கருதுகின்றனர்.

இமாம் இப்னுல் கய்யிம் அல்-ஜவ்சி ,இமாம் அவ்சாஈ , இமாம் இப்னு ஹஸ்ம் உட்பட பலர் அஹ்லுல் சிம்மத் என அழைக்கப்படும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் வாழுகின்ற பிறமத சிறுபான்மையினர் விடயத்தில் சலாம் கூறுவது பற்றி குறிப்பிடுகையில் ” நீங்கள் சலாம் கூறினால் உங்களுக்கு முன்னுள்ள நல்லோரும் கூறியிருக்கிறார்கள், நீங்கள் கூறாதிருந்தால் உங்களுக்கு முன்னிருந்த நல்லோர் சிலரும் கூறா திருந்திருக்கிரார்கள் ” என கருத்து தெரிவித்திருக் கின்றார்கள்.

பொதுவாக மேற்படி பிக்ஹுச் சட்டங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற சூழ்நிலைகளை கருத்திற் கொண்டே பெறப்பட்டுள்ளன. அனால் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் அந்த நாடுகளில் சமூகங்களில் புழக்கத்திலுள்ள வாழ்த்து முறைகளை நாம் அவர்களுடன் பிரயோகிப்பதும் ,பதில்  கூறுவதும் குறித்து தெளிவின்மை நிலவுகிறது.

“உங்களுக்கு ஒரு வாழ்த்து  கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) வாழ்த்து  கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.” (அல்-நிஸாஉ  4: 86)

Greetingசிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எமது மரபாகிய சலாத்தை கூறுவதுமில்லை அல்லது அவர்களது வாழ்த்தும் முறைகளை பிரயோகிப்பதில் அல்லது பதில் கூறுவதில் தயக்கமும் காட்டுகின்றோம், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஆங்கில மொழி வாழ்த்துக்களை பிரயோகிப்பதிலும் பதிலளிப்பதிலும் நாம் தயக்கம் காட்டுவதில்லை ஏனெனில் நமது அடிப்படை விசுவாசத்துடன் முரண்படும் முறைகள் அல்லது பிரயோகங்கள் அங்கு இல்லை.

அனால் தமிழ் நாட்டிலும் இங்கும் இந்து மக்கள் தமது வாழ்த்து முறையாக கைகூப்பி “வணக்கம்”  என்று சொல்கின்றார்கள். அதேபோல் பௌத்தர்கள் கைகூப்பி “ஆயு போவன் ” சொல்லுகிறார்கள். ஹிந்து கிறிஸ்தவ பௌத்த மக்கள் தமது சமய வழி பாடுகளிலும் கைகூப்புவதனால் அவர்களுக்கு ஒப்பாதல் தமது அடிப்படை விசுவாசத்துடன் முரண்படும் ஒரு செயல் என முஸ்லிம்கள் கருது கிறார்கள்.

உண்மையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாட்டு முறைகளான ருக்கு உ ,சுஜூது  என்பவற்றை மனிதர்களுக்கு செய்வதே இணை வைத்தலாகும், கைகூப்புதலை ஒரு சமூகத்தின் வாழ்த்து முறையாக நாம் கருதுகின்ற பட்சத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கவனத்திற்கொண்டு நாம் கைகூப்பி வாழ்த்து தெரிவிப்பதை ஆதார பூர்வமாக மறுப்பதற்கான நியாயங்கள் இல்லை என்பதே உண்மையாகும்.

“வணக்கம்” என்ற பிரயோகத்தை நாம் இறைவணக்கத்திற்கு வலிந்து  ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை, தொழுகை என்ற பதத்தையே நாம் பரவலாக இறை வணக்கத்திற்கு பயன் படுத்துகின்றோம். அதே வேலை எமது சன்மார்க்க வழிபாட்டு மொழிப் பிரயோகங்களை பொறுத்தவரை நாம் தமிழ் மொழிப் பிரயோகங்களை இரவலாகவே பெற்றிருக்கின்றோம்.  எனவே ஒரு தமிழ் சகோதரர் நம்மைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லும்போது நாம் நெஞ்சில் கைவைத்து நகைத்து நிற்பது இஸ்லாத்தை பற்றிய ஒரு பிழையான புரிதலையே அவரிடம் ஏற்படுத்தும்.

எண்ணங்களை பொறுத்தே கருமங்கள் கணிக்கப்படுவதாக இஸ்லாம் தெளிவாக சொல்லியிருக்கின்ற நிலையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்காகவும் , குரோதங்களை தவிர்ப்பதற்காகவும் அதேவேளை முஸ்லிம்களின் நற்பண்புகளை ,மானுட விழுமியங்களை எடுத்துக் காட்டுவதற்காகவும் நமது நாட்டில் பெரும் பான்மை சமூகங்களுடன் அவர்களது வாழ்த்து முறைகளை பிரயோகிப்பதில் எந்த தவறும் கிடையாது என்பது எனது கருத்தாகும்.

“ஆயு போவன்”  என்ற சிங்கள பெரும் பான்மை மக்களின் வாழ்த்து முறை ” உங்கள் ஆயுள் நீலமாகட்டும்” என்ற அழகிய வார்த்தைப் பிரயோகமாகும், அதே வாழ்த்துப் பிரயோகம் அரபு மொழியில் “தால உம்ரக் ” என  புழக்கத்தில் உள்ளதை நாம் அறிவோம். இன்று அரச அலுவலகங்களிலும், உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கும் போதும் பல்வேறு உத்தியோக பூர்வ சந்திப்புக்களின் போதும் நாம் சிங்கள பௌத்த சகோதரர்களால் வாழ்த்தப் படும் பொழுது நாமும் அசௌகரியத்துக் குள்ளாகி அவர்களையும் அசௌகரியப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கை சோனக பாரம்பரியத்தில் கைலாகு கொடுப்பதற்கு பதிலாக , கைகூப்புதளுக்கு நிகராக இருவர் தமது கரங்களை நெஞ்சு வரை உயர்த்தி பற்றிக் கொண்டு சலாம் கொடுக்கும் பாரம்பரியம் இருந்து வருகிறது ,இந்தோனேசியா ,மலேசியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களும் கைகூப்பி மரபு ரீதியிலான வாழ்த்து முறைகளை சலாத்தை சொல்வதை அவதானிக்க முடிகிறது.

நமது முன்னோர்கள் பேணுதலுக்காக சில வரை முறைகளை வைத்திருந்தாலும் தற்போதைய கால சூழ் நிலைகளை கருத்திற் கொண்டும் நாம் சிறுபான்மை சமுகமாக  எதிர் கொள்கின்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்காகவும்,  எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் தமது மானுட விழுமியங்களை தம்மிடமுள்ள மகத்தான தூதை இந்த சமூகங்களிடம் எடுத்துச் செல்வதற்கும் மிகவும் முக்கியமான வாழ்த்துக் கூறும் விடயத்தில் மிகவும் பரந்த நோக்குடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

About author

4 comments

  1. Asfaq 7 April, 2018 at 05:08 Reply

    Jazakkalah Inamullah Brother. You have enlightenment me on a very long dispute i was looking for a solution.

    May Allah bless us all with peace and harmony.

Post a new comment

வரலாறு படைக்கும் மகத்தான பணியில் பார்வையார்கள் அன்றி பங்காளராகுங்கள்.

Post Views: 658   முஸ்லிம் சமூக எழுச்சி என்பது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது, அதில் அரசியல் ரீதியிலான விழிப்புணர்வும் எழுச்சியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது,  ஒரு சமூகத்தின் எழுச்சியில் இளைஞர்களின் வகிபாகம் பிரதானமானது, ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com