தலைமைத்துவ வெற்றிடமும் “ஷூரா” வின் முக்கியத்துவமும்.

0

இஸ்லாமிய வாழ்வில் “ஷூரா” வின் முக்கியத்துவம்!

இஸ்லாம் தனி மனித ஆளுமைகளை ஆழமான ஆன்மீக அடித்தளங்களின் மீது கட்டி எழுப்புவதன் மூலம் அன்பும் அற நெறிகளும் பண்பு ஒழுக்கங்களும் நிறைந்த பரஸ்பரம் ஒத்தாசை, புரிந்துணர்வும் கட்டுக் கோப்புமுள்ள ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப விளைகின்றது, இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அத்தனையும் ஜமாஅத் வாழ்வை வலியுறுத்தி நிற்கின்றன.

அங்கு தனிமனித இச்சைகள், ஆசைகள், தேவைகளுக்கு அப்பால் பொது வாழ்வில் சத்தியத்தைக் கொண்டும், பொறுமை சகிப்புத் தன்மை பற்றி பரஸ்பரம் உபதேசம் செய்து கொள்ளுதலும், நன்மையை ஏவுதலும், தீமையை தடுத்தலும், அறிவு ஞானம், நல்லுபதேசங்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள் மூலம் சத்திய வழி மக்களை அழைப்பதுமாக ஒரு கூட்டு வாழ்வு பொது வாழ்வு வலியுறுத்தப் படுகின்றது.

மனிதர்கள் எவ்வாறு அமைப்பிலும் தன்மைகளிலும் தோற்றத்திலும் ஒருவருக்கொருவர் தனித் தன்மைகள் கொண்டிருக்கின்றார்களோ அதேபோன்றே அறிவில் ஆற்றல்களில், திறமைகளில், நுட்பங்களில் தனித் தன்மைகள் வாய்க்கப் பெற்றிருக்கின்றார்கள், அதேபோன்றே எல்லோருக்கும் எல்லா வகையான ஞானங்களும் நிபுனத்துவங்களும் கிடைக்கப்பெறுவது அசாத்தியமான விடயமாகும், அவற்றை அறிந்து கொள்வதற்கும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கும் மனிதனுக்கு மொழியாற்றலை கல்வி ஞானத்தை அல்லாஹ் கொடுத்துள்ளான்.

ஒரு தனியாள் தனது சொந்த விவகாரங்களை சிந்தித்து கர்மமாற்றுவது போல் தான் அறியாதவற்றை கற்று அறிந்து கொள்ளுதல், ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளுதல் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதேபோன்றே இருவரோ அல்லாதோ பலரோ இணைந்து செயற்படுகின்ற பொழுதும் அங்கு அறிவும், ஆலோசனைகளும், திட்டமிடல்களும் தேடல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அல் குரானும் இறை தூதரின் ஸுன்னஹ்வும் எவ்வாறு அல்லாஹ்வின் இறைவன் மனிதனுக்கு அருளிய வழி காட்டல்களோ அதேபோல் தான் மனிதனில் பொதிந்துள்ள பகுத்தறிவும் நல்லுணர்வுகளும் மனச் சாட்சியும் அல்லாஹ்வின் மிகப் பெரிய வழிகாட்டல் மூலங்களாகும். அவற்றை எல்லாம் வல்ல அல்லாஹ் விரும்புகின்ற வாழ்வு நெறியின் வழி வயப்படுத்துவதற்காகவே அல் குரானும் ஸுன்னஹ்வும் அருளப்பட்டனவே அன்றி அவற்றை முற்று முழுதுமாக நிராகரிப்பதற்காக அல்ல.

“கலந்தாலோசனை” செய்வது விசுவாசிகளின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகும்.

Shoora4விசுவாசிகளின் பண்புகளை அல்-குரானிலே விபரிக்கின்ற எல்லாம் அல்லாஹ் அவர்கள் வாழ்வை மரணத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்,தமது இறைவன் மீது எத்தகைய ஆழமான நம்பிக்கையை கொடிருக்க வேண்டும் என்று கூறி விட்டு அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு கோபம் வரும் பொழுது பொறுமை சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்கள் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்கள் என்றும் தங்களது விவகாரங்களை தங்களுக்குள் கலந்தாலோசிக்கக் கூடியவர்கள், தமக்களிக்கப்பட்டுள்ள செல்வங்களை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள், தாக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக எழுந்து நிற்கக் கூடியவர்கள் என கூட்டு வாழ்வில் அவர்களது பண்புகள் எவ்வாறு இர்கஊம் என்பதனையும் எடுத்துக் கூறியுள்ளான்.

“ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (ஸுரதுஷ் ஷூரா 42:36,37,38,39)

இறுதி இறை தூதர் எம் உயிரிலும் மேலான எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு அல்-குரானாகவே இருந்தது என்று ஹஸ்ரத் ஆயிஷா நாயகி (ரழி) குறிப்பிடுவது போல் மேற் சொன்ன பண்புகளை இறை தூதர் கொண்டிருப்பதனையும், கொண்டிருப்பதன் அவசியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அல்- குரான் மூலம் உணர்தியிருக்கின்றான், இறை தூதர் கூட தனது தோழர்களை அரவணைத்து அவர்களை கலந்தாலோசித்து அவர்களது அறிவிற்கும் உணர்வுகளிர்கும் மதிப்பளித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தது.

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (ஸுரத் ஆல இம்ரான் 3:159)

உம்மத்தின் இருப்பிற்கு அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற பொழுது
அதே போன்றே உம்மத்தின் இருப்பிற்கு அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற பொழுது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனபதனையும் அல்-குரான் தெளிவாக எடுத்துரைக்கின்றது, அவ்வாறான செய்திகளை உடனடியாக உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்கள் எடுக்கின்ற பொருத்தமான தீர்வுகளை பின்பற்றுவதையே அல்குரான் வலியுறுத்துகின்றது, மாறாக அவ்வாறான செய்திகளை மக்கள் மத்தியில் காட்டுத் தீபோல் பரவச் செய்வதனால் நிலைமைகள் கட்டுக்கடங்காமல் மோசமடையலாம் சமூகக் கட்டுக் கோப்பு சீரழிந்து விடலாம் அல்லது விளைவுகள் பாரதூரமானவையாக மாறிவிடலாம் என்று அல்-குரான் வலியுறுத்துகின்றது.

“மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.”
(ஸுரத் அந்நிஸா 4:83)

“இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; ‘எங்களுடைய இறைவன் ஒருவன்தான்’ என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.”
( ஸுரத்துல் ஹஜ் 22:40)

தலைமைத்துவ வெற்றிடமும் “ஷூரா” வின் முக்கியத்துவமும்

Shoora 3இஸ்லாமிய வாழ்வியலில் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு தூதர்கள் வருவதில்லை அல்-குரான், சுன்னாஹ் நபிகளாரது வழிமுறை என்பவற்றின் நிழலில் முஸ்லிம் உம்மத்து வழி நடாத்தப் படல் வேண்டும், இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள ஜமாஅத் கூட்டு வாழ்வில் அழகிய தலைமைத்துவக் கட்டுக் கோப்புக்கள் வலியுறுத்தப் பட்டுள்ளன.

ரஸுல் (ஸல்) அவர்களது வபாத்திற்குப் பின்னர் அடுத்த தலைமை “ஷூரா” முறையிலேயே தெரிவாகியது, அதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது ரஸுல் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசுகள் இருக்கவுமில்லை, அல்-குரான் அவ்வாறானதொரு வாரிசுரிமை தலைமைத்துவக் கட்டமைப்பை வலியுறுத்தவுமில்லை.

என்றாலும் அன்று ஏற்பட்ட க்ஹிலாபத் சர்ச்சைகள் இன்று வரை முஸ்லிம் உம்மத்தின் பிரதான சவாலாக இருந்து வருகின்றது, உமையாக்கள் அப்பாஸியர்கள் முதல் உத்மானியர்கள் காலம் வரையும் உள்வீட்டு சர்ச்சைகளாக இருந்த அதிகாரத்திற்கான போராட்டங்கள் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் சரவதேச அரங்கின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமன்றி இன்று முஸ்லிம் உலக ஒருமைப்பாட்டிற்கு மிகப் பாரும் சவாலாக மாறி இருக்கின்றது.

முதலாம் உலக மகா யுத்தம் நிறைவுற்ற பொழுது முஸ்லிம் உலகம் உத்மானிய கிலாபத் சாம்ராஜ்யத்தை இழந்தது, இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுறும் பொழுது முதலாவது கிப்லாவையையும் பாலஸ்தீன் பூமியையும் பறிகொடுத்து விட்டது, இன்று முஸ்லிம் அறபுலகில் முடுக்கி விடப்பட்டுள்ள மூன்றாம் உலகப் பேரழிவின் பிரதான மூலோபாய மூலதனமாக முஸ்லிம் உலகில் நிலவி வந்த வரலாற்று கிலாபத் இமாமத் சர்ச்சைகளும் உள்வீட்டு அதிகார இழுபறிகளும் முரண்பாடுகளும் காணப் படுகின்றன.

அறபு முஸ்லிம் தேசங்களையும் அங்கிருக்கும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்களையும் ஷீஆ சுன்னி வேறுபாடுகளையும் தமது மூலோபாய திட்டமிடல்களுக்காக பயன்படுத்தியே நவயுக காலனித்துவ மேலாதிக்க சக்திகள் முஸ்லிம் உலகை சின்னபிஇனப் படுத்தி அங்குள்ள வளங்களை சூறையாடி வருகின்றன.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் முஸ்லிம்கள் தம்மை எவ்வாறான தலைமைத்துவக் கட்டமைப்பில் வைத்துக் கொள்வது என்பதில் இன்றுவரை பூரண தெளிவில்லாமலே இருக்கின்றார்கள்.

சிறுபான்மைச் சமூகங்களில் சன்மார்க்க விவகாரங்களில் வழிகாட்டுகின்ற தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் நிறுவனங்கள், அடிமட்டத்தில் மஸ்ஜிதுகள் உலமாக்கள் என பல்வேறு தரப்புக்கள் இருந்தாலும் முஸ்லிம் சமூக வாழ்வியலில் காத்திரமான தலைமைத்துவக் கட்டுக் கோப்பை அவற்றால் கொண்டு வர முடியாது போயிருக்கின்றது.

அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை முஸ்லிம் உம்மத்தின் இருப்பு, பாதுகாப்பு உரிமைகள் சலுகைகள் போன்ற இலக்குகளை தேர்தல் பிரதிநிதித்துவ, ஆட்சி அதிகார அடைவுகளிற்கான வழிமுறைகளாக மாத்திரமே பிரயோகித்து வருவதானால் இலக்குகள் அவர்களிற்கு இரண்டாம் பட்சாமாகி விடுகின்றன, அதிகார மையங்களில் அவர்கள் விலை போகின்ற சந்தர்ப்பங்களே அதிகரித்துக் கணப் படுகின்றன.

அரசியல் அதிகாரங்கள், இல்லாத சிவில் சனமார்க்கத் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் செய்யவேண்டிய பணியினைச் செய்வதும், அரச சார்பற்ற விவகாரங்களில் அரசியல் தலைமைகள் தலையீடுகள் செய்வதுமாக எத்தகைய மூலோபாயத் திட்டமிடல்களும் ஒருங்கிணைப்பு பொறி முறைகளுமில்லாது முஸ்லிம் உம்மத்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்ற பொழுது முஸ்லிம் சமூகத்திற்குள் அரசியல் குழுக்களும், இஸ்லாமிய அமைப்புக்களும், மேலாதிக்கம் செலுத்த முனைவதால் முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி பிளவுபட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகின்றமையால் தேசிய வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

அதேவேளை பிரதான அரசியல் குழுக்களாக இருப்பினும் அமைப்புக்களாக இருப்பினும் அங்கு தனி நபர்களது ஆதிக்கம் மிகைத்து நிற்பதால் அவற்றிற்குள்ளும் காலத்திற்குக் காலம் பிளவுகளும் பிணக்குகளும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறான கவலைக்குரிய கள நிலவரங்களின் பின்புலத்திலேயே வேற்றுமைகளுக்கு மத்தியில் சமூகத் தளத்தில் உள்ள அரசியல், சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளை எல்லோருக்கும் பொதுவான விவகாரங்களில் ஒருமைப்பாடு காணச்செய்கின்ற ஒருங்கிணைப்புப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

அறபு இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்தவரை அங்கு ஆட்சி ஆதிகாரம் அவர்களது கைகளில் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் உம்மத்தை இன்று நட்டாற்றில் விட்டுகின்றனர், முஸ்லிம் உம்மத்தை அழிவின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியுள்ளனர், மஹதி அலைஹிஸ்ஸலாம் வரும் வரை அங்கு கிலாபாத் இமாமத் விலாயத் முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருக்கும்.

மேற்சொன்ன தேசிய சர்வதேசிய கள நிலவரங்களை கால் நூற்றாண்டுகாலம் கண்டு கொண்டதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் தேசிய வாழ்வில் மஜ்லிஸ் அல்-ஷூரா அல்லது தேசிய ஷூரா என்ற ஒரு ஒருங்கிணைப்புப் பொறிமுறை ஒன்றின் அவசியம் குறித்து தனிப்பட்ட முறையிலும் கடந்த இரு தசாபதன்களாக எழுதியும் பேசியம் வருகின்றேன்.

ஷூரா பொறிமுறை என்பது தனி நபர்களினதோ குழுக்களினதோ மேலாதிக்கத்திற்கான மற்றுமொரு அமைப்பாகவன்றி தேசிய அளவில் உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை சமூகத்தில் உள்ள சகல தரப்புக்களினதும் பங்குபற்றல்களை வலியுறுத்துகின்ற அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பாகும்.

உம்மத்தின் ஒருமைப்பாடும் கட்டுக்கோப்பும் “ஷூரா பொறி முறையும்”

SHOORA2தனிப்பட்ட ஒரு விவகாரத்தைக் கூட திட்டமிட்டுக் கொள்ளும் பொழுது குறிப்பிட்ட விடயம் பற்றி தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்பது மனித இயல்பு, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அல்-குரான் வலியுறுத்துகின்றது, தீனுடைய விவகாரங்களில் ஒரு குழுவினர் நிபுணத்துவம் பெறுமாறு அது வலியுறுத்துகின்றது, ஆலோசனை வழங்குவது ஒரு அமானிதம், தெரிந்த ஒரு விடயத்தை மறைப்பது அநீதியாகும்.

“மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”

“யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.(ஆல இம்ரான் 3:104,105)

“முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.”(அல்- தவ்பா 9:122)

சமூக வாழ்வில் அன்றாடம் பல்வேறு துறைகள் சார்ந்த தீர்மானங்கள் எடுப்பதற்குரிய தேவை இருக்கின்றது, துறை சார்ந்த அறிவு அனுபவம் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதும் அவர்களிடம் பொறுப்புக்களை வழங்குவதும் அமானிதம் பேணுதலாகும், தகுதி அற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப் படும் காலம் அராஜகம் நிறைந்த அந்திம காலமாகும்.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (அந்நிஸா 4: 59)

அல்-குரானும் சுன்னாஹ்வும் கூறுகின்ற வழியில் காலத்துக்குக் காலம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சவால்களிற்கு கூட்டுப் பொறுப்புடன், ஜமாத்தாக தீர்மானங்களை எடுத்து அமுல்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும், அவ்வாறான ஜமாஅத் கட்டுக் கோப்பிலிருந்து விலகும் நபர் ஒதுங்கும் தளம் நரகமாகவே இருக்கும்.

ஒவ்வொரு மனிதனிலும் பல்வேறு விதமான ஆற்றல்களும் திறமைகளும்,துறை சார் அறிவு ஞானங்களும் நல்ல குணாதிசியங்களும் இருப்பது போல் பலவீனங்களும், சில தீய குணாதிசியங்களும் இருக்கும், கூட்டு ஜமாஅத் வாழ்வில் தனி நபர்களது நல்ல அம்சங்களும் ஆற்றல்களும் அறிவு ஞானங்களும் பகிரப்பட்டு பலவீனங்களும், தீய குணாதிசியங்களும் களையப் படுகின்ற பொழுதே அந்த சமூகத்தில் நீதி நிலை பெறுகின்றது, அமைதி சமாதானம் அபிவிருத்தி மேலோங்குகின்றது.

இல்லாத பொழுது தனிநபர்களதும், குழுக்களதும் இச்சைகள், விருப்பு வெறுப்புக்கள், இலாப நஷ்டங்கள், ஆசாபாசங்கள் அவர்களுக்கிடையில் போட்டியையும்,பொறாமையையும்,மேலாதிக்கவெறியையும்,முரண்பாடுகளையும், தோற்று விக்கும் அதனை இஸ்லாம் விரும்பவில்லை, அங்கு சமூக ஐக்கியம் குலைந்து போகின்றது, அந்த சமூகம் பலவீனப் பட்டு அதன் கட்டுக் கோப்பு ஆட்டம் காணுகின்ற பொழுது, அவர்களை இலக்கு வைத்திருக்கின்ற சக்திகள் பார்வையில் அவர்கள் குறித்த மதிப்பும், மரியாதையும், பயமும் இல்லாமல் போய் விடுகின்றது.

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” (ஆல இம்ரான் 3: 103)

“மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”

“யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
(ஆல இம்ரான் 3: 104,105)

உயரிய இஸ்லாமிய சிறப்பம்சங்களைக் கொண்டதே “ஷூரா” எனும் தலைமைத்துவக் கட்டமைப்பாகும்.

shoora5இஸ்லாமிய தனி நபர், குடும்ப சமூக வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதன் மீதும் பல்வேறு கடப்பாடுகள் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன, அடியார்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே உள்ள உறவுகளாயினும், அடியார்களுக்கும் அடியார்களுக்குமிடையே உள்ள உறவுகளாயினும் ஒவ்வொரு விசுவாசியும் தமது கடப்பாடுகளை உளத் தூய்மையுடன் நிறைவேற்றுதல் அவன் மீது சுமத்தப் பட்டுள்ள பொறுப்பு ஆகும்.

மார்க்கம் என்பது அல்லாஹ்விற்கும், அவன் அருளிய கிதாபிற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களை வழி நடாத்துகின்ற இமாம்களிற்கும், பொது மக்களிற்கும் விசுவாசமாக, உண்மையாக, நேர்மையாக, தூய்மையாக நடந்து கொள்ளும் “நஸீஹா” ஆகும் இந்த நபி மொழி புஹாரி முஸ்லிம் ஆகிய இரண்டு கிரந்தங்களிலும் காணப்படுகின்றது.

இத்தகைய தனி நபர், சமூக கடப்பாடுகள் யாவும் அமானிதங்களாகும், அத்தகைய அமானிதங்கள் பாழ் படுத்தப் படுகின்ற பொழுது உலகில் ஒழுங்கு கேட்டுப் போகின்றது, சீர்கேடுகள், அத்து மீறல்கள், அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன.

இஸ்லாம் வலியுறுத்துகின்ற கூட்டு வாழ்வில் தலைமைத்துவக் கட்டுக் கோப்பு பிரதான அம்சமாகும், தலைமைத்துவக் கட்டுக் கோப்பு என்பது ஒரு சமூகத்தின் விவகாரங்களை மிகச் சரியாக திட்டமிட்டு இன்மை மறுமை வாழ்வில் அந்த சமூகம் வெற்றிகாணும் வழியில் நடாத்திச் செல்வதாகும். ஒவ்வொரு தனி நபரும், குடும்பங்களும், குழுக்களும், கோத்திரங்களும் தத்தமது விருப்பு , இலாப நஷ்டங்களிற்கு ஏற்ப ஒவ்வொரு திக்கில் பயணிப்பதற்கு அங்கு இடமிருக்காது, இன மத மொழி, நிற வேறுபாடுகளிற்கு மதிப்பு இருக்க மாட்டாது.

அல்குரானும், அல்-சுன்னாஹ்வும் காட்டித் தந்த வரையரைகளிற்குள் ஒரு சமூகத்தின் அன்றாட விவகாரங்களை தீர்மானிப்பதில் கருத்துவேற்றுமைகளை களைந்து இணக்கப்பாடுகளை எய்துகின்ற கலந்தாலோசிக்கும் “ஷூரா” பொறிமுறை இஸ்லாமிய சமூக வாழ்வில் காணப்படுகின்ற சிறப்பம்சமாகும். இஸ்லாம் வலியுறுத்துகின்ற சமூக ஐக்கியம், ஒற்றுமை அவ்வாறானதொரு சிறந்த அடித்தளத்திலேயே கட்டி எழுப்பப் பட்டுள்ளது.

“ஷூரா” பொறிமுறை என்பது ஒரு சில வலியவர்களிற்கு அதிகாரத்தை, தலைமையை, மேலாதிக்கத்தை நிரந்தரமாக பெற்றுக் கொடுக்கின்ற அல்லது அவர்கள் தமது செல்வம் செல்வாக்கினை அதிகாரத்தினை பிரயோகித்து கைப்பற்றிக் கொள்கின்ற தலைமைத்துவக் கட்டமைப்பு அல்ல.

அது மிகப்பெரிய அமானிதமாகும்,அங்கு அமானிதங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும், துறை சார் நிபுணர்களின் தகைமைகளுக்கும் , திறமைகளிற்கும் மதிப்பளிக்கப்படும், தகுதியானவர்கள் இனம்காணப்பட்டு பொறுப்புக்கள் வழங்கப்படும், அங்கு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கள், இலாப நஷ்டங்கள், செல்வம் செல்வாக்குகளிற்கு இடமிருக்காது, குடும்ப ,கோத்திர வர்க்க பாகுபாடுகள் இருக்காது, உண்மை, நீதி நேர்மை, உளத் தூய்மை போன்ற பண்புகள் மிகைத்திருக்கும்.

“ஷூரா” பொறிமுறையில் அமானிதங்கள் ஒப்படைக்கப்பட்டால் பாழ் படுத்துகின்ற, பேசினால் பொய் கூறுகின்ற, வாக்களித்தால் துரோகமிழைக்கின்ற நயவஞ்சகர்களிற்கு இடமிருக்காது.

அல்லாஹ்வை அஞ்சுகின்ற, நபி வழி நடக்கின்ற, உளத்தூய்மை பேணுகின்ற, உண்மை நீதி நேர்மை இதய சுத்தியுடன் அமானிதங்களை பொறுப்புக்களை கையாளுகின்ற, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற, வெளிப்படைத் தன்மையுள்ள, கூட்டுப் பொறுப்புள்ள, சகல துறை சார், தரப்புக்கள், நிபுனத்துவங்களிற்கு மதிப்பளிக்கின்ற அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு ஒன்றே இஸ்லாம் கூறும் ஷூரா முறையாகும்.

கருத்து வேற்றுமைகள் களைந்து பொது விவகாரங்களில் இணைக்கப்பாடுகளை எய்துவதன் மூலம் மாத்திரமே இஸ்லாம் வலியுறுத்துகின்ற சமூக ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும், அத்தகைய பரஸ்பரம் புரிந்துணர்வும், சகோதரத்துவமும், கூட்டுப் பொறுப்பும் நிறைந்த ஒரு சமூகமே அடுத்த சமூகங்களிற்கு முன்மாதிரியாக இருக்க முடியும்.

கருத்து முரண்பாடுகளும், கருத்தியல் வன்முறைகளும் பிளவுகளாகவும், பிணக்குகளாகவும், உள்வீட்டுச் சண்டை சச்சரவுகளாகவும் வெடித்துச் சிதறுகின்ற ஒரு சமூகம் அதன் தன் மானத்தை இழந்து விடும், ஏனைய சமூகங்களின் மத்தியில் அதன் கீர்த்தி, கௌரவம் இல்லாமல் பொய் விடும், அத்தகைய சமூகம் எதிரிகளால் இலகுவாக இலக்கு வைக்கப் படும்.

“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.”

(அல் அன்பால் 8:46)

About author

No comments

உரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும்

Post Views: 2,917 (எனது முகநூல் பதிவுகளில் இருந்து…) உரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும் இஸ்லாம் வலியுறுத்தும் பிரதான அடிப்படை விடயங்களாகும். 15 வயது தாண்டிவிட்டால் சொந்த எதிர்காலம் ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com