Friday, April 19, 2024

மத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25% வெளிநாட்டில் உழைக்கின்றார்கள் அவர்களில் 40% பெண்கள், ஆனால் இவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அரசாங்கங்களின் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறலாம்.

இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுச் செலாவணியில் கணிசமான பகுதியை மத்திய கிழக்கில் தொழில் புரிவோரே உழைக்கின்றார்கள், சுமார் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பற்றக்குறையை ஈடு செய்வதில் அவர்களது வைப்புக்கள் கணிசமான பங்களிப்பினை செய்கிறது.

மனித வள அபிவிருத்திக்கு இலங்கை மொத்த தேசிய வருமானத்தில் குறைந்தது 10% மாவது ஒதுக்கீடு செய்தல் வேண்டும், ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையை நிறுத்திவிட்டு எட்டாம்வகுப்பில் ஒரு திறன்மதிப்பீட்டு பரீட்சையை நடாத்தி மாணவர்களை துறைரீதியான நிபுணத்துவக் கற்கைகளிற்கு வழிநடாத்த வேண்டும்.

FE6இலங்கையில் சுமார் 99% எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள் என பெருமைப் பட்டுக் கொள்கின்றோம், கபொத சாதாரணதர பரீட்சையில் தோற்றும் சுமார் 400,000 மாணவர்களில் 25,000 அரச பலகலைக் கழகங்களில் இலவச உயர்கல்வி வாய்ப்பு இருக்கின்றது.

சுமார் 375,000 வருடாந்தம் மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு செல்கின்றனர், அதிலும் சிறிய தொகையினரே உயர் தொழில்களிற்கு செல்கின்றனர். அரைவாசிப் பணிப் பெண்கள்.

O/L, A/L சித்தியடையாதோர் பல்கலைக் கழகம் கிடைக்காதோர் என ஆயிரக்கணக்கானோர் போதிய தொழிற்கல்வி தொழிற்பயிற்சி இன்றி செல்கின்றனர்.

உண்மையில் இவர்கள் மிகவும் திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள் இவர்களை விட திறமை ஆற்றல் குறைந்த அயல் நாட்டவர்கள் MBA, BCom, HRM, MSc, மற்றும் உயர் தொழில் நுட்ப சான்றிதழ்கள் என பல்வேறு தகைமைகளுடன் மத்திய கிழக்கிற்கு வந்து முகாமையாளர்களாகவும், நிர்வாக தராதரங்களிலும் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.

இலங்கையர் 1000-2000 ரியால்கள் திர்ஹம்கள் சம்பளம் பெற அவர்கள் 5000-10000- 15000 என ஊதியமும் சலுகைகளும் பெறுகின்றார்கள்.

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேண்டாம் என போராட்டமும் நடைபெறுகின்றது, ஆரம்பக் கல்வி, உயர்கல்வி என சகலதையும் இலவசமாக கற்று அரச தொழிலையும் அவர்கள் கேட்டு போராடுகின்றார்கள்.

இங்கு வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கடல் கடந்து செல்வோருக்கு மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு ஏற்ப போதிய தகைமைகளை பெற்றுக் கொடுக்க மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அவ்வாறு கடல்கடந்து தொழிலுக்காக செல்வோரே இன்று இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை ஈட்டி இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பினை செய்கின்றார்கள். அவர்கள் வரியிருப்பாளர்களிடமிருந்து எதனையும் கோரி போராடுவதுமில்லை.

இலங்கையில் உள்ள தொழிற் பயிற்சிக் கல்லூரிகள், தொழில், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள் பல்கலைக் கழக மாணவர்களுக்கு வழங்குகின்ற சலுகைகளை தமது மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோன்றே, இலங்கையிலோ பிறநாடுகளிலோ தொழில் அனுபவமும் சிறப்புத்தேர்ச்சி, நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் தகமைச் சான்றிதல்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டையும் அரசாங்கம் கட்டாயம் செய்தல் வேண்டும்.

குறைந்த பட்சம் அத்தகைய மத்திய கிழக்கில் அங்கீகாரம்பெற்ற இந்திய கல்வி தகைமை சான்றிதல்களை இலங்கை மாணவரும் பெற்றுக் கொள்ள அரசு ஆவன செய்து கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மத்திய கிழக்கு தூதுவராலயங்களில் கல்வித் தகைமைகளை அத்தாட்சிப் படுத்தும் கல்வி கலாசார தூதான்மை உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

Attestationதற்பொழுது மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்வோர் தமது உயர்கல்விச் சான்றிதழ்களை அத்தாட்சிப் படுத்திக் கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களூடாக இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என பிறநாடுகளில் உள்ள கல்லூரிகளின் சான்றிதழ்களை பெற்றவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள அறபுத் தூதுவராலயங்களூடாக அத்தாட்சிப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றனர்.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், சூடான் உற்பட பலநாடுகள் மிகவும் தெளிவான உடன்பாடுகளை மத்திய கிழக்கு நாடுகளுடன் செய்து கொண்டுள்ளனர்.

மத்தியகிழக்கு தூதுவராலயங்களில் இருக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளில் ஒரு சிலருக்காவது அறபு மொழியில் பரிட்சயம் இருத்தல் வேண்டும், குறிப்பாக தொழிலாளர் நலன் பேணும் உத்தியோகத்தர்களுக்கு அறபு மொழி மற்றும் குறிப்பிட்ட நாட்டின் சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அந்த தொளிலார்களே அவர்களை சௌகரியமாக வாழ வைத்திருக்கின்றார்கள்.

அறபு நாடுகளில் உள்ள அத்தனை தூதுவராலயங்களும் தொழிலாளர் நலன் பேணவே ஸ்தாபிக்கப்பட்டன, பல பில்லியன்கள அவற்றிற்காக செலவிடப்படுகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் 99% அறபு மொழி தெரியாது, பணியகத்திலும், தூதுவராலயங்களிலும் நிரந்தரமற்ற ஒப்பந்த அடிப்படையிலான உத்தியோகத்தர்களே மிகக் குறைந்த கொடுப்பனவுகளுடன் அறபு மொழி பெயர்ப்பாளர்களாக பணி புரிகின்றார்கள். மிக அண்மையில் ஒரு சிலரை நிரந்தர உத்தியோகத்தர்களாக ஆக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு சட்ட உதவிகள் பெற்றுக் கொடுக்க நிதியம் ஒன்று இல்லை, அல்லது போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை, மொழி பெயர்ப்பாளர்களே சட்டத்தரணிகளின் அலுவல்களை பார்க்க வேண்டும். உதாரணமாக சகோதரி றிசான நாபிக் அவர்களுக்கான சட்ட உதவிகளை தனியார் நிறுவனம் ஒன்றே பெற்றுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

HMசகோதரி றிசான நாபிக் அவர்களை காப்பாற்றவென பல தூதுக்குழுக்க புறப்பட்டுச் சென்று வந்தன அவர்களுக்கான செலவு சுமார் ஐந்து மில்லியன்களையும் தாண்டியிருக்கலாம், ஆனால் தேவைப்பட்ட பொழுது சுமார் மூன்று மில்லியன்களை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் சட்ட ஏற்பாடுகள் இருக்க வில்லை காசும் வழங்கப்படவில்லை.

இவர்கள் புறப்படும் பொழுது செய்து கொள்ளும் காப்பு றுதி காப்புறுதி நிறுவனங்களையே வளர்த்துவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முகவர்கள் விடயத்திலும் போதிய கவனம் செலுத்தப்படல் வேண்டும், பொறுப்புக்கூறல், காசு கொடுக்கல் வாங்கல், வெளிப்ப்டைத்தன்மை என இன்னோரன்ன விவகாரங்களில் கண்டிப்பான சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும்.

நிதியமைச்சும், வெளிநாட்டமைச்சும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து சில அரபு தெரிந்த சட்டத்தரணிகளை, பட்டதாரி அறபு மொழி பெயர்ப்பாளர்களை தெரிவு செய்து மத்திய கிளைக்கு நாடுகளில் உள்ள சட்டதிட்டங்கள் குறித்த பயிற்சிகளை வழங்கி அவர்களை நிரந்தர இராஜ தந்திர படித்தற உத்தியோகத்தர்களாக உள்வாங்க வேண்டும்.

இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு தயாரெனில் அதற்குரிய பூரண ஒத்துழைப்பை மனிதாபிமான அடிப்படையில் பிரதி உபகாரம் பாராது வழங்க நாங்கள் ஒரு சிலர் தயாராக இருக்கின்றோம்.

ஜித்தாவில் கொன்ஸல் ஜெனரலாக கடமை புரிந்த பொழுது, கடமை நேரத்திற்கு பின்னரும் இரவு பகலாக நாங்கள் நேரடியாகவே சட்ட விவகாரங்களை கையாளவும் அதேபோல் தொழில் வழங்குனர்களுடன் பிணக்குகளை சுமுகமாக அழைத்துப் பேசி தீர்க்கவும் அறபு மொழி மற்றும் ஷரீஅத் சட்ட அறிவு தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியது.

அவர்களது இன்னல்கள் கண்டு இறுதியில் மனஅழுத்த நோயுடனேயே நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது, குறிப்பாக இந்த நாட்டில் இருந்து பெண்கள் தொழிலுக்காக கடல் கடந்து சென்று அனுபவிக்கும் அவலங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதவை, எங்களை விட வறுமையான பங்களாதேஷ் கூட பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை.

வெளிநாடுகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட தொளிலார்களாக செல்ல விரும்பும் மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு ஆர்வமுள்ள, சந்தைக்கு தேவைப்படுகின்ற தொழில் கல்விகளை, தொழில் நுட்ப ,உயர் தொழில் நுட்ப கல்விகளை அரசு வழங்குவதற்கு அவர்கள் உழைக்கும் வெளிநாட்டுச் செலாவணி போதுமானதாகும்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் சகோதர சகோதரிகளின் நலன்கள் குறித்து இந்த அரசு கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும், அவர்களது உரிமைகள், சலுகைகள், சட்ட உதவிகள், அவர்களது குடும்பங்களின் சேம நலன்கள் குறித்து தெளிவான சட்டவலுவுள்ள தொழிலார் சாசனம் வரையப்பட்டு பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.

மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர் அமைப்புக்கள் தமக்குள் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு தமது உரிமைகள் சலுகைகள், சட்ட உதவிகள் மற்றும் ஏனைய நலன்கள் விடயத்தில் அவ்வப்போது, அரசின் கவனத்தை ஏற்றக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles