அமானிதங்களில் பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும்….

0

அகிலம் முதல் அண்ட சராசரங்களின் ஆட்சியும் அதிகாரமும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது, அகிலத்தில் ஆட்சியதிகாரம் அவனது கட்டளைகளுக்கமைய இடம்பெறுவதை, இறை நீதி நிலை நிறுத்தப்படுவதனை அவன் எதிர்பார்க்கின்றான், அதனாலேயே மனித வர்க்கத்தை தனது கலீபாக்கள் பிரதிநிதிகள் என அடையாளப் படுத்தியிருக்கின்றான்.

அமானிதங்களில் மிகப்பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும், அக்கிரமங்களில் மிகப்பிரதானமானது ஆட்சி அதிகார அமானிதங்களை பாழ் படுத்துவதாகும், வரம்பு மீராலாகவும் அக்கிராமாமாகவும் அதனை இஸ்லாம் கூறுகிறது. அமானிதங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாத பொழுது யுக முடிவை எதிர்பாருங்கள் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆன்மீக அடித்தளங்களுடன் கூடிய சத்தியத்திற்கும் ஷைத்தானிய இச்சைகளை மையப்படுத்திய அசத்தியத்திற்கும் இடையிலான மிகப் பிரதானமான போராட்டம் பிரவுன்,காரூன், ஹாமான்,நும்ரூது, ஆது ,சமூது, அபூ ஜஹல்,உத்பா, உமையா, அவ்சு , கஸ்ராஜு, யஹூது, நஸாரா என அதிகார வர்க்கங்களுடனேயே இடம் பெற்றிருப்பதனை அல் குர்ஆனும், நபிமார்களின் வரலாறும், சுன்னஹ்வும் , சீராவும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

peace-2நல்லாட்சி, அதிகாரம், நீதியை நிலை நிறுத்தல், அநீதிக்கு எதிராக போராடுதல், நிதி நிர்வாக சீர்கேடுகளை ஒழித்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், சமாதானம், சமத்துவம் பேணல், தேசத்தின் சமூகங்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தல், சமூக பொருளாதார, கல்வி சுகாதார மேம்பாடுகளுக்காக உழைத்தல் இன மத குல மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இடம் பெறுவதனை உறுதி செய்தல் ஒவ்வொரு விசுவாசியின் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.

“நிச்சயமாக (இறைதூதை சுமந்த நீங்கள்) முழு மனித குலத்திற்கும் சிறந்த உம்மத்தாக அனுப்பப்பட்டுள்ளீர்கள்.” என அல் குர்ஆன் கூறுகிறது.

நபிமார்களின் வரலாற்றைப் பார்த்தாலும், இறுதித் தூதர் (ஸல்) அவர்களதும் ஸஹாபாக்களது வரலாற்றைப் பார்த்தாலும் அசத்தியம் கோலோச்சுவதும் அதற்கெதிராக சத்தியம் சமர் செய்வதும் பிரபஞ்ச நியதியாய் இருந்திருக்கிறது.

பிராவுனும், ஹாமானும்,காரூனும், நும்ரூதும்,உத்பாஹ்வும், உமையாவும், அபூஜஹ்லும்,ஆது ,சமூது கூட்டங்களும் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அடியார்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் தான்.

அடியார்களின் அடிமைத் தனங்களில் இருந்து, அல்லாஹ்வின் அடிமைத்தனத்திற்கு மனித குலத்தை விடுவிப்பதென்பது அவனது கட்டளைகளுக்கு மதிப்பளித்து தனிமனித வாழ்வு முதல் சமூகங்களின் தேசங்களின் வாழ்வு வரை அத்தனையும் நீதி நேர்மை சமாதானம், சமத்துவம் கோலோச்சுகின்ற வாழ்வு நெறியை தோற்றுவிப்பதாகும்.

வறுமை, கண்ணீர், துன்ப, துயரங்கள்,அநீதி,அக்கிரமம், பாகுபாடுகள் அத்தனையும் இனம் மதம் மொழி குலம் என பாகுபாடிலாத தீமைகள் ஆகும், அதேபோன்றே சமாதானம், சமத்துவம்,பொருளாதார சுபீட்சம், சமாதான சகவாழ்வு என்பவை இனம் மத மொழி குல நிற வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஆசிக்கும் நன்மைகளாகும்.

நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற அவற்றை இறைகட்டளைகள் எனும் தராசில் பெறுமானங்களில் மனித குலத்திற்கு முன்வைக்கின்ற, கருணையின் தூதை சுமந்து நிற்கின்ற சிறந்த சமூகமாகவே இஸ்லாமிய உம்மத்து இருக்க வேண்டும்,

உலகின் நெருக்கடிகளில் இருந்து ஆகிராவின் சௌகரியங்களுக்கு மனித குலத்தை இட்டுச் செல்கிற போராட்டம் என்பது தனிமனித,குடும்ப,சமூக,தேசிய, பொருளாதார,அரசியல், கலை கலாச்சார,பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் இன மத குல நிற மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிரான சமரில் பங்கு கொள்வதாகும்.

மனித குலத்திற்கான மகத்தான தூதை சுமந்துள்ள உம்மத்து நவ யுகத்தின் நம்ரூதுகள், காரூன்கள், ஹாமான்கள், அபூஜஹ்ல்கள், உத்பாக்கள், ஆதுகள் சமூதுகளின் சதிவலைகளில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு உள்வீட்டில் தம் எதிரிகளுக்கே அரியணைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என சகலதும் மறுஉலகை மறந்த இவ்வுலக மாயைகளில் மாத்திரம் மதிமயங்கிய ஒற்றைக் கண் தாஜ்ஜாலியத்தில் உம்மத்தை ஆக்கிரமித்து அது சுமந்துள்ள மனித குலத்திற்கான மகத்தான செய்தியை மறக்கடிக்கச் செய்துள்ளது.

Warஅழகிய உலகை அணுகுண்டுகள் கொண்டு அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள மனிதன் இன்று செவ்வாயில் வாழ்விடம் தேடுகிறான்..அங்கு ஆக்சிஜனும் நீரும் இருக்கிறதா என ஆய்வுகளை செய்கின்றான்.

நவயுக ஜாஹிலிய்யத்தில், தாஜ்ஜாலியத்தில்,அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மனித குல விமோசனத்திற்கு அன்றி தேசங்களின் ஆக்கிரமிப்பிற்கும், யுத்தங்களிற்கும், போர்களிற்கும், உள்வீட்டுச் சண்டைகளுக்கும் விண்ணிலும், மண்ணிலும், கடலிலும் விவேகமாக விரயமாக்கப்படுகின்றன.

உலகெங்கும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் அத்தனை பிரதான சவால்களுக்கும் பின்னால் இருக்கின்ற பிரதான காரணம் உலக அரங்கிலும் உள்ளகங்களிலும் அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் கோட்டை விட்டிருப்பதாகும்.

நவயுக ஜாஹிலிய்யத்தில், தாஜ்ஜாலியத்தில் இருந்து சமூகங்களையும் தேசங்களையும் விடுவிக்கின்ற கடப்பாடு முழு மனித குலத்திற்குமென மகத்தான தூது ஒன்றை சுமந்து நிற்கும் சமூகங்களில் சிறந்த சமூகத்திடம் இருக்கிறது.

அவ்வாறான ஒரு சத்தியச் சமருக்கான பிரதான ஆயுதங்களை இஸ்லாமிய உம்மத்து எதிரிகளிடமே எல்லா மட்டங்களிலும் எல்லா தேசங்களிலும் பறி கொடுத்து பரிதவிக்கிறது. இஸ்லாமிய உம்மத்தின் தலைவிதி, ஆட்சியும் அதிகாரமும் பொருளாதாரமும் வெள்ளை மாளிகையிலும், கிறேம்ளினிலும், பீஜிங்கிலும், இன்று டெல்அவிவிலும் தீர்மானிக்கப்படுகின்றது.

முஸ்லிம்களது வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன ?

மகத்தான ஒரு தூதை சுமந்துள்ள சிறந்த உம்மத்து நவீன உலகிற்கு அந்த தூதை உரிய முறையில் முன்வைக்காமையின் விளைவுகளை நாம் இன்று கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

உலகம் வாழ்வு மரணம் பிரபஞ்சம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் மதம் மார்க்கம் ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம் குறித்த அனைத்துக் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் மனிதனை மனிதன் மிகைப்பதற்கும் கொன்று குவிப்பதற்கும், ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்கும், ஆயுதங்களை விற்பதற்கும், போரினை விதைப்பதற்கும், இரத்தத்தை ஓட்டுவதற்கும், இரசாயண, உயிரியல், மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளுக்கும் மையப் படுத்தியுள்ளன.

Spaceஉலகை பிணக்காடாக்கிய மனிதன் சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணீரை தேடுகின்றான்..! முஸ்லிம் உம்மத்தோ உலகிற்கு எத்தனை சந்திரன் எததனை பிறை என்று அடிபட்டுக் கொண்டிருக்கிறது,சுலைமான் நபிகாலத்து ஷைத்தான்கள் இன்னும் சூனியம் செய்கிறார்களா என்று மேடை போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் உம்மத்து இறுதி இறைதூதருக்குப்பின் யார் கலீபா என்பதனை தீர்மானிக்க இன்னும் சண்டை பிடித்து தமக்குள் போர் தொடுத்து இலட்சக் கணக்கில் இறந்து மடிந்து கொண்டிருக்கிறது, இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு கூறுகளையும் தீவிரவாதத்தின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று ஆயுதம் தரிக்கச் செய்து தம்மைத் தாமே உள்வீட்டில் அழிவை அரவணைக்கச் செய்துள்ளது.

முதலாம் உலக மகா யுத்தத்துடன் மத்திய கிழக்கை இலக்கு வைத்து கூறு போட்டு உஸ்மானிய சாம்ராஜ்யத்தை வீழச் செய்து அங்கே யூத சியோனிஸ சாம்ராஜயத்தை தோற்றுவித்து இன்று வரை அரபு முஸ்லிம் உம்மத்தை விட்டு வைக்க வில்லை.

பனிப்போர் முடிவுக்கு வருமுன் சோவியத் ரஷ்யா எனும் வல்லரசை ஆப்கானின் முஸ்லிம் முஜாஹிதகளைக் கொண்டே வீழ்த்திய மேலைத்தேயம், இன்று வரை ஆப்கானை விட்டுவைக்க வில்லை.

ஷியா சுன்னி சண்டையை தீவிரபப்டுத்தி வளைகுடா சுன்னிகளை தூண்டிவிட்டு ஈராக்கை ஏவிவிட்டு இரானை இலக்குவைத்த அமெரிக்கா இன்றுவரை ஈராக்கை விட்டுவைக்கவில்லை.

அறபு வசந்தத்தை காவுகொண்டு, அதன் தொடராய் எகிப்தையும், லிபியாவையும் சிரியாவையும் சின்னாபின்னப்படுத்தி அரபுலக முகவர்களைக் கொண்டே இஸ்ரவேலை அண்டியுள்ள ஈராக் சிரியா உள்ளிட்ட ஷாம் தேசத்தை கூறு போட அடுத்த கட்ட அதிரடிகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

அருளப்பட்ட வேதங்களில் கிறிஸ்தவத்தையும், யூத மதத்தையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாய் வளர்த்துவிட்ட மேலைத்தேய மேலாதிக்க சக்திகள் இன்று ஆசிய நாடுகளில் இந்துக்களையும் பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திட்டமிட்டு மோதவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இராணுவ ஊடுருவல்கள், உலகம் தழுவிய ஊடகப் போர்கள், கலை கலாச்சாரப் படையெடுப்புக்கள், சிந்தனை சித்தாந்தப் போர்கள், நாகரீக பண்பாட்டு விழுமிய ஆதிக்கங்கள், பொருளாதார கோட்பாட்டு சுரண்டல்கள்,அரசியல் இராஜ தந்திர மேலாதிக்க நகர்வுகள் என முஸ்லிம் உலகை முற்றுகையிட்டுள்ள இஸ்லாத்தின் எதிரிகள்…உள்வீட்டு முகவர்கள் கொண்டு முரண்பாட்டு முகாம்களை இனம் கண்டு மோதல்களை முடுக்கி விட்டுள்ளார்கள்.

இவ்வளவு முற்றுகைக்கு மத்தியிலும் நம்பிக்கை இழக்காத விசுவாசிகள் கூட்டம் அனாதரவாய் அந்தரப் பட்டவர்களாய், அறிமுகமில்லாதவர்களாய் ஒரு விடியலுக்காக காத்திருக்கின்றார்கள், அடுத்த நிமிடம் மறுமை என்றிருப்பினும் கையில் உள்ள பேரீச்சம் குற்றியை நம்பிக்கையுடன் நடுவதுபோல் தமது பாதையிலும் பயணத்திலும் தெளிவாக இருக்கின்றார்கள்.

முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக மாத்திரமன்றி, எதிரிகளின் தேசங்களில் மூளை முடுக்குகளில் எல்லாம் வாழும் மனித குலத்தின் விமோசனத்திற்காக ஒவ்வொரு விசுவாசியான ஆணும் பெண்ணும் அந்தகாரத்திலும் ஒரு நம்பிக்கை எனும் விளக்கை ஏந்தி முன்னோக்கிப் பயணிக்கின்றார்கள்.

நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்களே அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இலங்கை மண்ணில் எமது கடப்பாடுகள்..

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தைப் போன்றே இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும் சிவில், சன்மார்க்கத் தலைமைகள் இயன்றவற்றை இயன்றவரை சிறப்பாக செய்தாலும் அரசியல் தலைமைகள் பல தலைமுறைகள் சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றமையே கசப்பான உண்மையாகும், அவர்கள் தீர்வின் பங்காளர்களாக அன்றி பிரச்சினைகளின் பிரதான பங்காளர்களாக இருக்கின்றனர்.

Librarayமுஸ்லிம் உலகில் அறிவு முதிசங்களின் பற்றாக் குறையோ, பொருள் வளப் பற்றாக்குறையோ அந்த நாடுகளை அழிவின் விளிம்பிற்கு அழைத்து வரவில்லை மாறாக அவர்கள் மேலாதிக்க சக்திகளிடம் பறி கொடுத்துப் பரிதவிக்கும் அரசியலும் இராஜ தந்திரமும் கையாலாகாத அரசியல் தலைமைகளுமே பிரதான காரணமாகும்.

உலக அரங்கில் இடம் பெறுவது போன்றே, கடந்த மூன்று தசாப்த கால நமது முஸ்லிம் அரசியல் கொண்டு வந்த சாதனைகளை விடவும் சோதனைகளே அதிகமாகும். அண்மைக்- காலமாக தேசிய வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் சவால்களிற்குப் பின்னால் பாரிய அரசியல் இராஜ தந்திர நிகழ்ச்சி நிரல்களே இருக்கின்றன.

புதியதோர் அரசியல் பிரவாகம் முஸ்லிம்களின் தேசிய வாழ்வில் ஏற்படுவது காலத்தின் கட்டாயமாகும், தனி நபர்களை விமர்சிப்பதனை விட அவர்களால் தோற்றுவிக்கப் பட்டுள்ள அல்லது அவர்களையும் காவு கொண்டுள்ள கையாளாகாத, வங்குரோத்து, சரணாகதி அரசியல் கலாச்சாரத்திற்கான மாற்றீடு குறித்தே நாம் பேச வேண்டும்.

நாளை எங்கள் சந்ததிகளுக்கு எதனை நாம் விட்டுச் செல்லப் போகின்றோம் ? என்பது எங்கள் முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

இனி, கோளாறுகள் எங்கே இருக்கின்றன, யார், எவர், எங்கிருந்து ஆர்பிப்பது போன்ற வினாக்களிற்கு விடை தேடுவதும், நகர்விற்கான பாதையை அடையாளப் படுத்திக் கொள்வதும் எம்முன்னுள்ள பணியாகும்.

இந்த வரிகளை எழுதுகின்ற பொழுதே நீங்கள் என்னிடம் எதனை கேட்பீர்கள் எம்பதுவும் தெரியும், சார், எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது, ஆனால் நீங்கள் முன்வந்து அடித்தளமிட்டு எங்களை வழி நடத்துங்கள் என்று வழமைபோல் பந்தை என் பக்கம் வீசி விடுவீர்கள்.

அப்படியல்ல, இனியொரு இளம் தலைமுறையினர் புறப்பட வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான முகவர்கள், இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு தசாப்தம் கழிவதற்குள் மாற்றத்திற்கான அடித்தளங்கள் இடப்படல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக எனது கால் நூற்றாண்டு கால கற்கைகளும், இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகால சமூக அரசியல் களப்பணி அனுபவங்களும், இனிவரும் காலங்களில் உங்கள் பயணத்தில் பயனுள்ளவைகளாக பகிர்ந்து கொள்ளப் படும்.

ஒரு வெற்றிடம் உணரப்படும் பொழுதெல்லாம் பிழையான பிழையான தரப்புக்கள் முந்திக் கொண்டு முண்டியடிப்பதால் புதிய தலைமுறைத் தலைவர்கள் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர்.

SL MUSLIMSதயவு செய்து ” என்னால் முடியும்” என்று ஒவ்வொருவரும் திட சங்கற்பம் பூணுங்கள், “என்னால் மட்டுமே முடியும்” என்று எண்ணி விடாதீர்கள், இது எமது கூட்டுப் பொறுப்பு, தனிநபர் விவகாரமல்ல, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை, பற்றுகளை, பந்த பாசங்களை, நட்பு விசுவாசங்களை, இலாப நஷ்டங்களை, விருப்பு வெறுப்புகளை மறந்து இலட்சியப் பணிக்காக களம் இறங்க தயாராகுங்கள்.

இன மத மொழி வேறுபாடுகள் கடந்த மனிதநேய, நல்லாட்சி அரசியல் எமது உயரிய அழைப்புப் பணியும் இலட்சியப் பணியுமாகும், பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக களத்தில் பணி செய்ய புறப்படுங்கள்.

அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்.

 

அரசியலும் இராஜ தந்திரமும் இஸ்லாமியர்கள் பறிகொடுத்து பரிதவிக்கின்ற பிரதான ஆயுதங்களாகும்.

About author

No comments

ஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.!

சமூகப் புணரமைப்பில் மஸ்ஜிதுகளின் வகிபாகம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுதலும் குத்பாப் பேருரைகள் தரம் வாய்ந்தவையாக அமைவதனை உறுதிசெய்வதும் காலத்தின் கட்டாயமாகும். ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழத்தப்பட வேண்டிய குத்பாக்களை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com