அல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும், அடியார்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகள்.

0

ஒரு முஸ்லிமின் வாழ்வின் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என இரு வகையான கடமைகள் இருக்கின்றன.

islamic_quotes_and_sayings__220_அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறுகள், குறைகுற்றங்கள் ஏற்படின் குற்றப் பரிகாரங்களோடு மன்னிப்புக் கேட்கின்ற அடியானை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்துவிட இடமிருக்கின்றது.

ஆனால், ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின்அடியார்களுடன் தொடர்பு படுகின்ற கடமைகளில், விவகாரங்களில் தவறிழைகின்ற பொழுது சம்பந்தப்பட்ட அடியார்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.

தன்னோடு தொடர்புடைய கடமைகளில் தவறிழைகின்ற ஒரு அடியான், தனது அடியார்களுடன் தொடர்புபடுகின்ற விவகாரங்களில் கடமைகளில் சிறப்புறுகின்ற பொழுது அவனை மன்னித்து அருளுகின்றான்.

பெற்றார்கள், உடன்பிறப்புக்கள், அண்டை அயலவர்கள், தமது பொறுப்பில் உள்ள ஊழியர்கள், அன்றாட வாழ்வில் எம்மோடு தொடர்புபடுபவர்கள், ஆசான்கள், மாணவர்கள், ஏழை எளியவர்கள், அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள், நண்பர்கள், ஏனைய உயிரினங்கள், படைப்புக்கள் ,சமூகத்தினர், தேசத்தினர், உம்மத்தினர் என பல்வேறு தரப்புக்களுடன் நாம் கடப்படுகளுடன் கடமைப்பட்டு வாழ்கின்றோம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் இருக்கின்றது, அதாவது அல்லாஹ்விற்கு அடியான் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்புறச் செய்கின்ற ஒரு அடியானே தனக்கும் அடியார்களுக்குமிடையில் உள்ள உறவினை எல்லாம் வல்ல அல்லாஹ் திருப்திப்படுகின்ற வண்ணம் சீர்படுத்திக் கொள்கின்றான்.

அதனால்தான், அல்லாஹ்வுடன் தொடர்புடைய விவகரங்களாயினும் சரி, அடியார்களுடன் தொடர்புடைய விவகரங்களாயினும் சரி எல்லாவற்றையும் அல்லாஹ்வின் திருப்தி ஒன்றை மாத்திரமே நாடி அடியான் செய்யக்கடமைப்பட்டுள்ளான்.

அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளாயினும், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாயினும்; அல்லாஹ்வோ பின்னர் அடியார்களோ மன்னித்து விட்டாலும் இவவுலக வாழ்வில் தமது பண்பாடுகள் செயற்பாடுகளின் பிரதி விளைவுகளை நாம்அ னுபவித்தேயாக வேண்டும். அவ்வாறானதொரு பிரபஞ்ச நியதியிலேயே எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்புக்களை இயங்கச் செய்துள்ளான்.

ஒவ்வொருவரும் பொறுப்புடையவர்கள், தமது பொறுப்புக்கள் பற்றி நிச்சயமாக வினவப்படுவார்கள்,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (புஹாரி/முஸ்லிம்)

”ஒரு முறை நபியவர்கள்,தோழர்களே வங்குரோத்து நிலைக்கு ஆளானவன் யார் என வினவினார்.அதற்கு அவர்கள் கையில் பணப்பெறுமானம் எதுவுமின்றி வெறுங்கையுடன் தவித்திருப்பவன் என்றனர்,ஆனால் நபிகளார் அந்த விடையை மறுத்து,நாளை மறுமையில் ஒரு மனிதன் வருவான்.மூட்டை மூட்டையாக நன்மைகளை அள்ளிக்கட்டிக்கொண்டு வருவான்.

இடைநடுவில் அவனால் உள்ளத்தால், உடலால், உணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் குறுக்கிட்டு அவனை சுவனம் செல்ல விடாது அவனால் இழைக்கப்பட்ட அநீதங்களை சொல்லிக்கொண்டிருப்பார்.இங்கு நியாத்தை அளிக்க விரும்பும் அல்லாஹ் அவனின் நன்மைகளை ஒவ்வொன்றாய் குறைத்து அவனது நன்மை மூட்டைகளை காலியாக்குவான்.

பின்பும் அவனுக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் முடிவு வந்திருக்காது.பதிலுக்கு கொடுக்க நன்மையையும் இல்லை ஆகையால் அவர்களது பாவங்களை அவன் சுமக்கும் விதமாக,அவர்களின் பாவங்களை அவனது மூட்டையில் அள்ளிக்கொட்டுவான்.இந்த அவல நிலைக்குள் சிக்கித்தவிப்பவன் தான் வங்குரோத்து நிலையடைந்தவன்.”என்று விளக்கமளித்தார்கள்.

அல்லாஹ்விற்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையும் கிடையாது…

எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கின்ற உறவுகளில் இபாதத்துகளில், வணக்க வழிபாடுகளில், திக்ரு அவ்ராதுகளில் அசிரத்தையாக, ஈடுபடும் பொழுது கவனயீனம், சோம்பல், கடமைக்காக செய்வது, பேருக்காக, புகழுக்காக அல்லது பொடுபோக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு பிரதானமான காரணம் அல்லது அறியாமை இருக்கின்றது.

gani2உண்மையில் மேலே சொல்லப்பட்ட வழிபாடுகளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையும் கிடையாது அவற்றின் பிரதிபலன்கள் எமது அன்றாட தனிப்பட்ட, குடும்ப, சமூக, தேசிய வாழ்வில் எமக்கு ஹிதாயாத்தையும், ரஹ்மத்தையும், பறக்கத்தையும் நிறைவாக பெற்றுத் தருகின்ற ஆன்மீக அடித்தளங்கள் என்பதனை எம் ஆழ் மனதில் கொண்டு வரத் தவறி விடுகின்றோம்.

அதே போன்றே எமக்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கும் இடையில் உள்ள உறவுகளில் எமது உயரிய ஒழுக்க விழுமியங்கள், பண்பாடுகள், பரோபகாரம், தாராளத் தன்மைகள், தான் தர்மங்கள் என்பவற்றில் கூட நாம் பொடுபோக்காக, கவனயீனமாக இருப்பதற்கும் பல காரணங்கள இருந்தாலும் பிரதானமான காரணம் ஒன்று இருக்கின்றது.

அவற்றை நாம் பிறருக்காக செய்கின்றோம், எமக்கு ஏது நன்மை இருக்கின்றது, நாம் ஏன் முந்திக் கொள்ள வேண்டும் என்று சுய நலமாகவும், அகங்காரமாகவும் நாம்நடந்து கொள்கின்றோம்,அல்லது பேருக்காக, புகழுக்காக செய்கின்றோம்.

உண்மையில் எம்மிடமிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் செயலும் எமது அன்றாட தனிப்பட்ட, குடும்ப, சமூக, தேசிய வாழ்வில் எமக்கு ஹிதாயாத்தையும், ரஹ்மத்தையும், பறக்கத்தையும் நிறைவாக பெற்றுத் தருகின்ற ஆன்மீக, பண்பாட்டு அடித்தளங்கள் என்பதனை எம் ஆழ் மனதில் கொண்டு வரத் தவறி விடுகின்றோம்.

எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கின்ற உறவுகளாக இருந்தாலும் சரி, எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அடியார்களுக்கும் படைப்புகளிற்கும் இடையில் உள்ள உறவுகளாக இருந்தாலும் சரி அவை எமது மறுமை வாழ்வில் மாத்திரமன்றி இவவுலக வாழ்விலும் நேரிடையானதும் எதிர் மறையானதுமான தாக்கங்களை விளைவுகளை கொண்டுவருகின்ற பிரபஞ்ச நியதிகளின் (கழா கதரின்) இயங்கு தளத்தில் உள்ளவை என்பதனை நாம் மறந்து விடுகின்றோம்.

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். ( ஸுரத்துல் மாஊன் 107 )

இதய சுத்தியுடன் கூடிய அழகிய ஆன்மீக அடித்தளங்கள் ஆழமாக இடப்படாத மனித வாழ்வில் உயரிய மானுட விழுமியங்கள் அழிந்து போகின்றன.

பிரபஞ்ச நியதிகளுடன் இயைந்து செல்கின்ற பகுத்தறிவும், மனச்சாட்சியும், உள்ளுணர்வுகளும் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளே, அங்கிருந்தே மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் ஊற்றெடுக்கின்றது, உயரிய மானுட விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கான ஆன்மீக அடிததளங்களையும் உச்ச வரம்புகளையுமே அருளப்பட்ட சன்மார்க்கங்கள் போதிக்கின்றன.

“இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.”

“ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.”

(ஸுரத்துல் அன்கபூத் 29: 6,7)

அடுத்தவர் அகத்தில் மகிழ்வை விதைத்தால் சொந்த முகத்தில் அது மலரும்!

Salamsஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பார்கள், ஒருவரது மனது அமைதியிழந்திருந்தால் அதற்குபல புறக்காரணிகள் இருக்கலாம், துயர், சோகம், கவலை,கடன், கஷ்ட நஷ்டங்கள், அடுத்தவர் தொல்லைகள், குடும்ப, தொழில் நிலவரங்கள், சகபாடிகள், மேலதிகாரிகளின் நடத்தைகள், இல்லாமை, இயலாமைகள் என இன்னோரன்ன பிரச்சினைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெரும்பாலும் எமது குணாதிசியங்கள், நடவடிக்கைகள், நடத்தைகள், பொடுபோக்குகள், கவனயீனங்கள், புறக்கணிப்புக்கள், ஆத்திர அவசரங்கள், பெருமை, பொறாமை, பேராசை, கர்வம், விட்டுக் கொடாமை, பிடிவாதங்கள், நிதானமின்மை, திட்டமிடலின்மை, சம்யோசிதமின்மை போன்ற புறக் காரணிகளும் எமது மன அமைதியை கெடுத்து விடுகின்றன.

எமது மேற்படி பண்புகளை, நடத்தைகளை நிதானமாக மதிப்பீடு செய்து எங்களை நாங்களே ஒருபடி முன் நகர்த்த முற்படாவிடின் எமது நிலைமைகளை வேறு எவராலும் சீர் செய்ய முடியாது எமது உயரிய பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்களால் அடுத்தவர் பயன் பெறுகின்றார்கள் என்பதனை விட எங்கள் சொந்த வாழ்வே வளமாகின்றது என்பதுவே உண்மையாகும்.

நாம் ஏன் ஒருவருக்கு முந்திக் கொண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும்?, நாம் ஏன் கை கொடுக்க வேண்டும்? நாம் ஏன் உதவ வேண்டும், நாம்ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் ஏன் ஒருவரை மதிக்க வேண்டும்.? என எல்லா நேரமும் சுய நலமிகளாக சிந்திக்கின்றவராக நாம் இருந்தால் எமக்கு நாமே அநியாயம் செய்து கொள்கின்றோம் என்பதே அர்த்தமாகும்.

நல்ல கருமங்களை செய்வதில் முந்திக் கொள்வதும்போட்டி போடுவதும் மறு உலகில் எமக்கு சுவன வாழ்வை ஈட்டித் தருவதற்கு முன்னர் இவவுலக வாழ்விலும் எமது வாழ்க்கையில் வசந்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றன, அவ்வாறான இறைவன வகுத்த இயற்கை நியதியின் கீழ் தான் இந்த உலகம்இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

எங்களால் முடிந்தவரை அடுத்தவர் மனதில் சிறந்த நேரிடையான மனப்பதிவுகளை, தடயங்களை விட்டுச் செல்கின்ற பொழுது எங்களிடமே அவை போற்றத்தக்க விளைவுகளுடன் மீண்டு வருகின்றன, எமது அனைத்து சொல்,செயல், அங்கீகாரங்களுக்கும் நிச்சயமாக பிரதி விளைவுகள் இருக்கவே செய்கின்றன.

எமது இறையச்சமும், தொழுகையும், நோன்பும் இன்னோரன்ன வணக்க வழிபாடுகளும் தான தர்மங்களும் எம்மில் விதைக்கின்ற உயரிய பண்பாடுகள், மனித நேய விழுமியங்கள் நிச்சயமாக எமது மறு உலக வாழ்வை மாத்திரமன்றி இவவுலக வாழ்வையும் அருள் நிறைந்ததாக மாற்றி விடுகின்றன.

இந்த உலக வாழ்வு ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வினைகள் எதிர்வினைகளால் இயல்பாகவே இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது…!

எங்கள் எண்ணங்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள், உயரிய குண நலன்கள், நல ஒழுக்கங்கள்,பண்பாடுகள், பிரார்த்தனைகள், இறையச்சம், உளத்தூய்மை, பெரும்தன்மை, பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதாபிமானம், ஜீவ காருண்யம், அன்பு, கருணை, அனுதாபம், அர்ப்பணம், தன்னம்பிக்கை, துணிவு, வீரம், பிறருக்கு உதவும் தயாளத் தன்மை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கெடுத்தல், அடுத்தவர் உணர்வுகளை மதித்தல், என இன்னோரன்ன நேரிடையான பண்புகளே எமது வாழ்வின் வசந்தங்களை வடிவமைக்கின்றன, அவைதான் எமது சுற்றுச் சூழலில்,குடும்ப , சமூக தேசிய வாழ்வில் எமக்கு பிரதி பலித்து பிரதிபலன்களை கொண்டு வருகின்றன.

ஒரு விசுவாசி மற்றுமொரு விசுவாசிக்கு கண்ணாடி போன்றவன் என்பது நபி மொழி, குறை நிறைகளை சுட்டிக்காட்டுவது, அவற்றை தமக்கு மட்டும் சுட்டிக் காட்டுவது போன்ற உடனடி விளக்கங்கள் அதற்கு தரப்பட்டிருக்கின்றன, அதற்கப்பாலும் மேலே சொன்ன எமது உயர் குணங்களின் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் அன்றாட பிரதிபலிப்புக்களை மிகச் சரியாக வாழ்வின் சகல படித்தரங்களிலும் மற்றுமொரு விசுவாசியிடமிருந்து கண்டு கொள்ள முடியும் என்பதனையும் இந்த நபி மொழி உணர்த்துகிறது.

இவ்வாறான உயரிய ஆன்மீக பண்பாட்டு பக்குவமிக்க தனிநபர்கள், குடும்பங்கள் சமூகங்கள் தான் “கைர உம்மத்” மிகச் சிறந்த சமூகம் என வர்ணிக்கப்படுகிறது, அதேபோன்றே அத்தகைய பண்பு ஒழுக்கங்கங்களுக்கு நேர் எதிரான அல்லது எதிர் மறையான அம்சங்கள் கொண்டோரின் வாழ்வு பாழடைந்த வீடாக, வறண்டு போன நிலமாக சோபை இழந்து காணப்படும்.

இறையச்சமினமை, உளத்தூய்மை இன்மை, பெருமை, பொறாமை பேராசை,சுயநலம், உலோபத்தனம், அடுத்தவரை மதியாமை, பழிவாங்கும் மனப்பான்மை, விட்டுக் கொடாமை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாமை, அடுத்தவர் உணர்வுகளை மதியாமை, பகைமை பாராட்டல், அடுத்தவர் குறை தேடல், கோல் புறம் போய் பேசல், அகங்காரம்,அகம்பாவம், குரோதம்,நய வஞ்சகம் கோழைத்தன்மை, என கொடிய உளவியல் கோளாறுகள் நடத்தைகளில் பிரதிபலிக்கின்ற பொழுது மறுமை வாழ்வு மட்டுமல்ல இன்மை வாழ்வும் இருண்டு போய் விடுகின்றது.

நான் உயரிய பண்பொழுக்கங்களை நிறைவு செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன் என அருமை நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னதோடு அத்தகைய பண்பாடுகள் அற்றவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் மிகத் தெளிவாக அழகாக பல செய்திகளை சொல்லியுள்ளார்கள்.

அதனால் தான் நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வோருக்கு இரட்டிப்பான நன்மைகள் இருக்கின்றன என அல் குரானும் ஹதீசுகளும் உணர்த்தி நிற்கின்றன, ஏனெனில் அதன் நல்ல பிரதிபலிப்புக்கள் அடுத்தவரிடம் இருந்து வெளிப்படுகின்ற பொழுது அவற்றிற்கான நன்மைகளில் எமக்கும் பங்கு இருக்கிறது.

சிறிய ஒரு உதாரணம்: நீங்கள் சந்திக்கும் ஒருவரை மலர்ந்த முகத்துடன் முஸ்லிம் ஆக இருந்தால் ஸலாம் சொல்லியும் பிர மதத்தவராக இருந்தால் ஒரு சிறந்த வளத்தையும் சொல்லி அதன் பிரதிபலிப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.. எடுத்ததெற்கெல்லாம் அடுத்தவரை குறை கூறும் நாம் எமது தனிப்பட்ட குடும்ப சமூக வாழ்வில் சுற்றுச் சூழலில் நிம்மதி சந்தோஷம் அங்கீகாரம் அமைதி சமாதனம் நிலவுவதனை பெரும்பாலும் நாமே தீர்மானித்துக் கொள்கின்றோம் என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனித உறவுகளை பேணிப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும், வளப்படுத்தவுமே உயரிய மானுட பண்பாட்டு விழுமியங்கள் போதிக்கப்படுகின்றன.

ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது ஸலாம் சொல்லிக் கொள்வதுவும்,
மலர்ந்த முகத்துடன் பிறரை அணுகுவது,
நல்ல சந்தர்ப்பங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதுவும்,
அடுத்தவர் உணர்வுகளை மதித்து நடக்கும் பொழுதும்,
அடுத்தவர் திறமைகளை ஆற்றல்களை அடைவுகளை அங்கீகரித்து நடந்து கொள்கிற பொழுதும், சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வதுவும்,
பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்வதுவும்,
அடுத்தவர் குறை நிறைகளை குறிவைத்து துருவித்துருவி ஆராயாமல் இருப்பதுவும்,
மனக் கசப்புக்களை ஏற்படுத்தும் பரிகாசம் கேளிக்கைகள் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதுவும்,
கோல் புறம் பேசாமல் இருப்பதுவும்,
உறவுகளை முறிக்குமெனக் கருதும் தகவல்கள் கிடைத்தல் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்வதுவும்,
வீண் சந்தேகங்களை தவிர்த்துக்கொள்வதுவும்..
அகங்காரம், அகம்பாவம், தற்பெருமை தவிர்ந்து பணிவன்புடன் நடந்து கொள்வதுவும்,
அண்டை அயலவரோடு பண்போடு பகிர்வோடு நடந்து கொள்வதும்…
இயன்றவரை புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்பதும்,
தாராளத் தன்மையுடன் மன்னிப்பதும் ,
சிறுசிறு குறைபாடுகளை கண்டு கொள்ளாதிருப்பதும் (உரிய வகையில் உணர்த்துவதும்)
வாதப் பிரதி வாதங்களில் எல்லைகள் மீராதிருப்பதுவும்,
குதர்க்க வாதங்களை தவிர்ந்து கொள்வதும் அல்லது அவற்றில் இருந்து முதலில் பின்வாங்குவதுவும்,
சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படின் முந்திக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வதும்,
உறவு முறிவு ஏற்படுமாயின் முந்திக் கொண்டு சீர்செய்து கொள்வதுவும்,
கோபம் ஏற்படும் பொழுது கட்டுப்படுத்தி நிதானமாக செயலாற்றுவதுவும்,
உறவு விரிசல்கள் ஏற்படும் தரப்புக்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்தலும்,
வயதில் உயர்ந்தவர்களை மதித்து நடப்பதுவும், சிறியவர்கள் மீது கருணை காட்டுவதுவும்.
ஏழைகள், அனாதைகள், விதவைகள், அங்கவீனர்கள் நலன்களை கவனித்து க்கொள்வதுவும்.
அடுத்தவர்களோடு சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதுவும்,
பரஸ்பரம் உதவி ஒத்தாசை செய்து கொள்வதுவும்,

இஸ்லாம் சொல்லித் தருகின்ற உயரிய குணாதிசியங்களாகும், பொதுவாக எல்லா மாதங்களும் மானுட பண்பாட்டு விழுமியங்களும் இவற்றை சொல்லித் தருகின்றன, உண்மையில் மனித உறவுகளை பேணிப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும், வளப்படுத்தவுமே இவ்வாறான உயரிய மானுட பண்பாட்டு விழுமியங்கள் போதிக்கப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் பிறிதொரு முஸ்லிமுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாதிருப்பது கூடாது , குறிப்பாக பெற்றார் உற்றார் உறவினரை பிரிந்து வாழ்பவர் நல் அமல்கள் கூட உயர்த்தப் படுவதில்லை அவை வானிற்கும் பூமியிற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என பல்வேறு என அறிவிப்புக்கள் இருக்கின்றன.

தமது வாழ்வாதாரங்களில் விஸ்தீரணத்தை பறக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் உறவுகளை பேணி நடந்து கொள்ளட்டும் என்று இஸ்லாம்வலியுறுத்துகின்றது. உறவுகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்ற பொழுது, சொந்த பந்தங்களை அனுசரித்து வாழுகின்ற பொழுது வாழ்க்கை வசந்தமாகின்றது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வெறும் ஆயிரங்கள் மாத்திரமல்ல, வேகமாக சுழன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் பொருளாதாரப் பிராணியாக, சுயநலன்களில் மாத்திரம் கரிசனை கொண்டவனாக வாழ்கின்ற ஒரு காலத்தில் வாழ்வின் இதமான பக்கங்களை மறந்து விடுகின்றான்.

 

 

 

About author

No comments

இடைநிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருக்கு அழைப்பை எடுத்தேன்..

இன்று ஸுபஹு தொழுதுவிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருக்கு அழைப்பை எடுத்தேன்: நேற்று (04/02/2017)  மாலை  இடம் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தின் போது கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் பதவியில் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com