“மனிதனுக்கு மௌத்தே போதுமான உபதேசியாகும்.”

0

அஷ்-ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி)                                                                                                                   பிரதிப் பணிப்பாளர் – ஜாமியா நளீமியாஹ்,  பிரதித் தலைவர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

அல்லாஹ் மனிதர்களுக்கு இரண்டு உபதேசிகளை வழங்கியிருக்கின்றான்

 1. பேசுகின்ற உபதேசி
 2. மௌன உபதேசி

இவை என்றும் எப்போதும் எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இரண்டு பெரும் உபதேசிகள். வேறு எந்த உபதேசங்களும் அவசியப்படாத அளவுக்கு இவ்விரு உபதேசிகளும் எமது வாழ்வை சீரமைக்கப் போதுமானவை. பேசுகின்ற உபதேசிதான் புனித அல்குர்ஆன். இது எம்மோடு பேசிப் பேசி எமக்கு எப்போதும் உபதேசம் செய்து கொண்டேயிருக்கிறது. பேசாமலேயே எமக்கு உபதேசம் செய்கின்ற அடுத்த மௌன உபதேசிதான் மரணம்.

மனிதன் மரணத்தை நினைத்துப் பார்க்கின்ற அளவுக்கு அவன் அதன் மூலம் நல்லுணர்ச்சி பெறுவான். மனிதனுக்கு மரணம் ஒன்றே போதுமான உபதேசியாக இருக்கிறது.

deathஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “எவ்வாறு இரும்பு துருப்பிடிக்கிறதோ அதேபோல உள்ளங்களும் துருப்பிடிக்கின்றன என்று சொன்னபோது “உள்ளத்திலே படியக்கூடிய துருவைப் போக்க என்ன செய்யலாம் அல்லாஹ்வின் தூதரே?” என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று அல்குர்ஆனை ஓதுவது (திலாவதுல் குர்ஆன்). இரண்டாவது மரணத்தை நினைவுபடுத்துவது (திக்ருல் மௌத்)” எனக் கூறினார்கள்.

உள்ளத்தில் படியும் துருவைப் போக்க, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்தி, பண்படுத்தி மனிதன் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமோ அந்த இலக்கை நோக்கி அவனை வழிநடத்த இந்த இரண்டு உபதேசி களும் போதுமானவை என்ற கருத்தை நபியவர்கள் இங்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மற்றொரு தடவை நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் சொன்னார்கள்.

மனிதனுக்கு மௌத்தே போதுமான உபதேசியாகும்.

மனிதன் மரணத்தை நினைத்துப் பார்ப்பது அவனுக்குப் போதுமான பக்கு வத்தை, பேணுதலைக் கொடுக்கும் என்ற கருத்தை நபியவர்கள் இங்கும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். எமது வாழ்க்கைப் புத்தகத்தின் முடிவுரையை நாம் அடிக்கடி நினைவுகூர வேண்டும். எமது ஆயுளின் நிறைவை நினைத்துப் பார்ப்பது உள்ளத்தைப் பக்குவப்படுத்துகின்ற மிக முக்கியமான ஒரு தர்பிய்யத். அது ஒரு பெரும் ஆன்மிகப் பயிற்சி என்பதனை நாம் நினைவிற் கொண்டு மரண சிந்த னையை எம்மில் குடியமர்த்திக் கொள்ள வேண்டும்.

நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் சொன்னார்கள்.

ஆசைகளையெல்லாம் அறுக்கக் கூடிய மௌத்தை நீங்கள் அதிகம் அதிகம் நினைவுகூருங்கள்.

death1மரணம் நினைவுபடுத்தப்படுகின்ற அளவுக்கு மனிதனுடைய அற்ப ஆசைகளெல்லாம் அறுபட்டுப் போய்விடும். மனிதன் தனது மரணத்தை நினைத் துப் பார்ப்பது அதுவே அவனுக்கு மிகப் பெரும் பயிற்சியாக அமையும் என்ற கருத்தை நபியவர்கள் இந்த ஹதீஸுக்கூடாக தெளிவுபடுத்துகிறார்கள்.

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோரும் மரணத்தை சுவைத்தாக வேண்டும். அது வாழ்வின் நியதி. இது மாபெரும் உண்மை. இதனை மனித சமுதாயம் மறந்து வாழ்வதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். உலகத்தில் எந்தவொரு விடயத்திலும் வேறுபாடுகள் தோன்றலாம் அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஜீவனும் குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னர் மரணத்தை சுகித்தே தீர வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அதில் அபிப்பிராய பேதம் கிடையவே கிடையாது. ஆனால், மனிதர்கள் எல்லோரும் இந்த அடிப் படையான உண்மையை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

வாழ்க்கையின் சோலிகள், சுமைகள், பிரச்சினைகள், இன்பங்கள், துன்பங்கள் அனைத்தும் வாழ்வின் இந்த யதார்த்தத்தை மனிதர்களுக்கு நினைவுபடுத்தத் தவறிவிடுகின்றன. மனிதர்கள் வாழ்வு பற்றி கரிசனை கொள்ளும் அளவுக்கு மரணம் பற்றி சிந்திப்பதில்லை. துன்யாவைப் பற்றி சிந்திக்கின்ற அளவுக்கு தான் சந்திக்க இருக்கும் மரணம் பற்றியோ ஆகிரத்தைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை. பலபோது மேதைகள், அறிஞர்கள், உபன்னியாசிகள், பேச்சாளர் கள் உலக விவகாரங்களை அலசுகின்ற அளவுக்கு, மனித சமூகம் இந்த உலகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து பேசுகின்ற அளவுக்கு இந்த மரணத்தைப் பற்றி, மரணத்துக்குப் பின்னரான வாழ்வு பற்றி மிகக் குறைவாகவே பேசுகின்றனர். எனவே, அடிக்கடி மௌத்தை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

நாம் மரணத்துக்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனென் றால் மரணம் எப்போது வரும், எந்த நிலையில் வரும் என்று எவராலும் உத்தரவாதப்படுத்த முடியாது. ஒரு மனிதன் நாளை என்ன செய்வான் என்ப தனை அந்த மனிதனால் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது. தான் மரணிக் கும் இடம், நல்லடக்கம் செய்யப்படும் இடம்… பற்றி எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. ரப்புல் ஆலமீனான அல்லாஹ் மாத்திரமே அனைத் தையும் ஆழமாக அறிந்தவன்.

நோயாளி சுகதேகி, உடலியல் ரீதியில் பலசாலி, உடல் பலவீனமானவன் என்ற வேறுபாடின்றி குழந்தைப் பருவம், சிறுபராயம், இளமைப் பருவம், மத் திம பருவம், முதிர்ந்த பருவம்… என்ற பாகுபாடின்றி வாழ்வின் எந்த நேரத்திலும் மரணம் எமது வீட்டுக் கதவைத் தட்டலாம். மரணம் பல உருவங்களில், பல வடிவங்களில் எம்மை வந்தடையும். அதனை எவராலும் தவிர்க்க முடியாது. இது குறித்து அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது.

நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.” (ஸூரதுல் அன்பியா: 35)
death3நிச்சயமாக மனிதனின் செயற்பாடுகளுக்கான கூலி மறுமையில்தான் நிறைவாகக் கிடைக்கும். மரணத்துக்குப் பின் யார் சுவனம் நுழைகிறாரோ அவர்தான் வெற்றி பெற்றவர். உலகம் இன்பங்கள் மனிதனை மதி மயக்கக் கூடிய அற்பமான, தற்காலிக இன்பங்கள் என அல்குர்ஆன் அடித்துச் சொல்கிறது.


ஈமான் கொண்டவர்களே! உங்கள் சொத்து செல்வமும் உங்களுடைய மக்களும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களைப் பராமுகமாக்கி விடக் கூடாது. எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.” (ஸூரா அல்முனாபிகூன்: 09)

இவ்வாறு கூறிவிட்டு அல்லாஹ் தொடர்ந்து சொல்கிறான்.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே நாம் உங்களுக்க அளித்த பொருளி லிருந்து தான, தர்மம் செய்து கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாது மரணிக்கம் சமயம்) எனது இறைவா எனது தவணையை இன்னும் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படி யாயின் நானும் தான, தர்மம் செய்து நற்காரியங்கள் புரிந்து ஸாலிஹான மனிதர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே என்று கூறுவான். (ஸூரா அல்முனாபிகூன்: 10)

எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் தவணை (அஜல்) வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் அதனைப் பிற்படுத்த மாட்டான். போவதில்லை. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவாக இருக்கிறான்.” (ஸூரா அல்முனாபிகூன்: 11)

எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அஜல் வருவதற்கு முன்னால் அவன் நற்கருமங்களில் ஈடுபட கடமைப்பட்டிருக்கிறான் ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட கடமைப்பட்டிருக்கிறான். நிர்ணயிக்கப்பட்ட அஜல் வந்து விட்டால் கண்ணிமைப் பொழுதுகூட முற்படுத்தப்படவோ பிற்படுத்தப்படவோ மாட்டாது என்று அல்குர்ஆன் தெளிவாகச் சொல்லி விட்டது.

இன்று பலரும் மரணம் சம்பவிப்பதற்கான அடயாளங்கள் பற்றி விசாரிப் பதுண்டு. ஆம், மரணம் நிகழ்வதற்கு மிகத் தெளிவான ஒரே ஓர் அடையாளம் இருக்கிறது. அதுதான் ஒரு மனிதனின் பிறப்பு. ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால் அவர் மரணிப்பார் என்பது உறுதி. அதுதான் மிகத் தெளிவான அடையாளம். இதைத் தவிர வேறு அடையாளைங்களை எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

இந்த நிலையிலேயே சமூகத்தில் பலர் தமது பிறந்த நாளை நினைத்துப் புளகாங்கிதம் அடைகின்றார்கள். பிறந்த நாளைக் கொண்டாடி அதற்கு விழா எடுக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து ஒரு முஸ்லிம் கொண்டிருக்க வேண்டிய நிலைப்பாட்டை விளக்குவது பொருத்தம் எனக் கருதுகின்றேன்.

பிறந்த நாள் என்பது சந்தோசமான நாளல்ல. அது மிகவும் கவலைக்குரிய நாள். அன்று அவரை வாழ்த்துவதை விட அவருக்கு அனுதாபம் தெரிவிப் பதுதான் பொருத்தம். ஏனென்றால், குறித்த நபர் தனது ஆயுளில் ஒரு வருடத்தை இழந்து விட்டார். அவருக்கென நிர்ணயிக்கப்பட்ட நாட்களின் தொகுதியில் 365 நாட்களை இழந்த கவலையில் அவர் இருக்கிறார். அவர் முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து “உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனச் சொல்வதுதான் நியாயமானது.

death4பிறந்த நாளில் வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துப் பார்ப்பது சிறந்தது. அன்றைய நாளில் நல்லுணர்ச்சி பெற வேண்டும். ஆயுட் காலத்தில் மீளப் பெற முடியாத மற்றுமொரு வருடத்தை இழந்து நிற்கும் ஒருவர், தான் கடந்த வருடத்தில் செய்த பாவங்கள், தவறுகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, மன்றாடி அடுத்த வருடத்தை மிகவும் நல்ல முறையில் பயன்படுத் துவது பற்றி சிந்திக்கின்ற, திட்டமிடுகின்ற ஒரு நாளாக அன்றைய நாளை அமைத்துக் கொள்வார் என்றால் அதுவே சிறந்தது வரவேற்கத்தக்கது. இஸ்லாமிய நோக்கில் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எந்தவொரு ஆதார மும் இல்லை. முட்டாள்தனமான எந்தவொரு வழமையையோ மரபையோ இந்த மார்க்கம் அங்கீகரிக்காது.

பிறந்த நாளுக்கு விழா எடுக்கின்ற சிந்தனையை விட்டுவிடுமாறு எமது பிள்ளைகளுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும். “எனது அன்பு மகனே, மகளே உனக்காக வரையறுக்கப்பட்ட ஆயுளிலே மற்றுமொரு வருடம் கடந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் நீ எதனை சாதித்தாய்? நீ பிறந்த நோக்கம் என்ன? நீ எங்கு செல்ல இருக்கிறாய்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உடல், அறிவு, ஆன்மாவை விருத்தி செய்வதற்காக என்ன செய்திருக்கிறாய்… என்பது பற்றி கேள்வி எழுப்பி அது குறித்து சிந்திக்கிற, ஒரு சுயமதிப்பீடு செய்கின்ற சந்தர்ப்பமாக அந்த நாளை அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது.

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மனிதனைப் பார்த்து சொல்வதைப் பாருங்கள்.

மனிதனே நீ யார் தெரியுமா? நீ சில நாட்களின் தொகுதி. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல உன்னிலே ஒரு பகுதி அழிந்து அழிந்து உனக்குரிய நாட்கள் நிறைவு பெறுகின்றபோது நீயும் சென்று விடுவாய்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் சில நாட்களை வரையறுத்து வைத்திருக்கிறான். அவை முற்றுப் பெறுகின்றபோது அவரது உலக வாழ்வு முற்றுப்பெறுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் முடிவடைகின்ற போது எனது ஆயுளின் ஒவ்வொரு பகுதி கழிந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பியதாக சரித்திரம் கிடையாது. உலகில் நீண்ட ஆயுளைப் பெற்ற இறைதூதர்களில் ஒருவர்தான் நபி நூஹ் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்கள். அவர் இவ்வுலகில் சுமார் 1000 வருடங்கள் வாழ்ந்த வர். அன்னாரின் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்த மலகுல் மௌத் அவரை நெருங்கி,

“நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்த மனிதரே! உலக வாழ்க்கையை நீர் எப்படிப் பார்க்கிறீர்கள்” எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் இந்த உலகத்தை இரண்டு வாயில்கள் உள்ள ஒரு வீட்டைப் போல் காண்கிறேன். ஒரு வாயிலால் நுழைந்து அடுத்த வாயிலால் வெளியேறுவதைப் போன்று இருக்கிறது” எனப் பதிலளித்தார்.

ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நபி இந்த வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதுதான் உலக வாழ்க்கை.

death5உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் மரணத்தை சுவைத்தார்கள் மரணத்தின் கசப்பை உணர்ந்தார்கள். நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர் கள் தனது வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள். அப்போதும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார். பின்னர் அவருக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்தது. அந்த நிலையிலும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார்கள்.

வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் ஆரம்பத்தையும் இறுதியையும் புரிந்து கொள்ளாத மனிதனைப் போல அறிவிலி உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

நபி யூஸுப் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்தபோது அவர் பிரார்த்தித்த துஆவை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

யா அல்லாஹ் நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்றுத் தந்தாய் வானங்களையும் பூமியையும் படைத்தவனே இம் மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக! (ஸூரா யூஸுப்: 101)

இதுதான் அவர்களுடைய பிரார்தனையாக இருந்தது. ஒவ்வொரு முஃமினு டைய பிரார்தனையாகவும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முஃமினுடைய கவலையாக, சிந்தனையாக மரணம் இருக்க வேண்டும். மரணத்தை மையமாக வைத்தே அவனுடைய அனைத்து நகர்வு களும் அமைய வேண்டும். நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஆயுளும் 63வயதோடு முடிகிறது.

நபியே! நீங்களும் மரணிக்கக் கூடியவரே அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே என்று அல்குர்ஆன் நபியவர்களை விளித்துப் பேசியிருக்கிறது.

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் மௌத்தின் கசப்பை அனுபவித்தார்கள் ஸகராத் வேதனையை அனுபவித்தார்கள். ஸகராத் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் கண்மணியான ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வரவழைத்து அதில் கையை விட்டு தண்ணீரை எடுத்து தனது முகத்திலும் மேனியிலும் தடவிக் கொண்டார்கள். இதனைப் பார்த்த பாத்திமா ( ரழியல்லாஹு அன்ஹா ) அவர்கள் கவலை மேலீட்டால் “ரஹ்மதுன் லில் ஆலமீன் ஆகிய எனது தந்தைக்கு இப்படி யொரு வேதனையா?” என்று ஆதங்கப்பட்டபோது நபியவர்கள் மரணப் படுக்கையில் இருந்தவாறே,

எனதருமை மகளே, கவலைப்படாதீர்கள். இன்றோடு உமது தந்தையின் எல்லாக் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கி விட்டன. இதுதான் நான் கஷ்டப்படுகின்ற கடைசித் தருணமாக இருக்க முடியும் என்று தனது மகள் பாத்திமாவுக்கு ஆறுதல் சொன்னார்கள். (இப்னுமாஜா)

உலக மாந்தர் அனைவருக்கும் அருட்கொடையாக வந்த நபியவர்களே ஸகராத்தின் வேதனையை அனுபவித்தார்கள் என்றால் நானும் நீங்களும் எம்மாத்திரம்? அந்த ஸகராத் வேதனையை நோக்கி நானும் நீங்களும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

கலீபா ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் மிகப் பெரும் ஆட்சியாளர்களுள் ஒருவர். பெரும் சாம்ராஜ்யத்தின் சொந்தக்காரர். இஸ்லாமிய சாம்ராஜ்யத் தின் தலைவராக விளங்கிய அவர் நோயுற்று மரணப்படுக்கையில் இருக்கின்ற சமயத்தில் தனது மகனைப் பார்த்து ஓர் அல்குர்ஆன் வசனத்தை ஓதுகிறார்.

“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே! (நான் இறந்தபோதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வாக்கும் அதிகா ரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே! (என்று அரற்றுவான்).” (ஸூரதுல் ஹாக்கா: 2529)

கலீபா ஹாரூன் அர்ரஷீத் அவர்களின் மகன் மஃமூன். அவரும் ஒரு பிரபலமான கலீபா. அவர் மரணத் தறுவாயில் “நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கக் கூடிய ரப்பே ரஹ்மானே ஆட்சியை இழந்துவிட்ட இந்த அடியானுக்கு நீ ரஹ்மத் செய்வாயாக!” என பிரார்த்தித்ததாக வரலாறு கூறுகிறது.

மற்றுமொரு பிரபலமான ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வான். இவர் மரணப் படுக்கையிலே இருக்கும் சந்தர்ப்பத்தில் எழுந்து தனது வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று வெளியே பார்க்கிறார். அப்போது துணி துவைத்து வாழ்வை ஓட்டிவரும் ஒரு சலலைத் தொழிலாளியைக் காண்கிறார். அப்போது அவர்,

death6“நான் அந்த சலவைத் தொழிலாளியைப் போல இருந்திருக்கக் கூடாதா! நாளாந்தம் துணியைத் துவைத்து எளிமையாகவும் ஹலாலாகவும் சம்பாதித்து வாழ்க்கை நடத்தியிருக்கக் கூடாதா! பெரும் ஆட்சி, அதிகாரங்கள் எல்லாம் எனது கைக்கு வராமல் இருந்திருக்க வேண்டுமே! இதற்கெல்லாம் நான் எப்படி மறுமையில் பதில் சொல்வேன்!” என்று அவர் ஆதங்கப்பட்டார்.

இதனைக் கேள்வியுற்ற இமாம் அபூ ஹாதிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், “அல்ஹம்துலில்லாஹ். ஆட்சியாளர் அப்துல் மலிக் மர்வான் அவர்கள் தனது கடைசிக் காலத்தில் எங்களைப் போன்று வாழ்ந்திருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். நாம் எமது மரணத் தறுவாயில் நிச்சயமாக அவர்கள் இருந்த நிலையில் நாம் இருந்திருக்க வேண்டுமே என்று கைசேதப்பட மாட்டோம். இந்த நிலையை எமக்கு அமைத்துத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று சொன்னதையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

கப்ருகளை ஸியாரத் செய்வது மரண சிந்தனையை ஏற்படுத்து. கப்ருகளை தரிசிப்பது முக்கியமான ஸுன்னாவும்கூட.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
கப்ருகளை திரிசிப்பதை நான் ஆரம்பத்தில் தடைசெய்திருந்தேன். ஆனால், இப்போது கப்ருகளைத் தரிசியுங்கள். அது உங்களுக்கு உலக வாழ்வில் பற்றைக் குறைத்து மறுமையை நினைவுபடுத்தும்.

ஒரு முஸ்லிம் உரைகள், விரிவுரைகள், மார்க்க உபந்நியாசங்களின்… மூலம் கிடைக்காத பயிற்சியை, பக்குவத்தை, நல்லுணர்ச்சியை கப்ருகளைத் தரிசிப்பதற்கூடாக பெற்றுக் கொள்ள முடியும். உலகத்தில் ஆண்டான் அடியான், முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை… என்று பாகுபாடு காட்டியவர்கள், வர்க்க பேதங்களுடன் வாழ்ந்தவர்கள் அனைவரும் மையவாடியில் எவ்வித வேறுபாடுமின்றி சமத்துவமாக ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள். அங்கு பாகுபாடு கிடையாது. உலகில் உண்மையான சமத்துவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் அதை மக்பராக்களில்தான் பார்க்க முடியும்.

மரணம் வெகு தூரத்தில் இல்லை மரணம் எம்மைத் துரத்திக் கோண்டே இருக்கிறது. பெரும்பாலானோர் மௌத்தைப் பற்றி அலட்டிக் கொள்வ தில்லை. ஆனால், கியாமத் நாள் எப்போது வரும் என்பது குறித்து அலட்டிக் கொள்கிறார்கள்.

உலக அழிவு தொடர்பாக போலியாக பரப்பப்படும் வதந்திகளை நம்பி இன்ன ஆண்டில் இன்ன திகதியில் உலகம் அழிந்து விடுவதாக நம்புகின்ற வர்களும் இருக்கிறார்கள். மறுமை எப்போது வரும் என்று எவருக்கும் சொல்ல முடியாது. ஈமானில் குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்கத்தோடு சொல்லப்படும் இத்தகைய கருத்துக்களை உண்மைப்படுத்துவது, நம்பவுது ஈமானைப் பாதிக்கும். ஆனால் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை ஊகிக்க முடியா விட்டாலும் மரணம் எமக்கு மிகவும் நெருக்கமாக இருப்ப தனை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஒவ் வொருவருடைய மரணமும் அவரவரது கியாமத். மனித சமுதாயத்தின் மரணம்தான் பெரிய கியாமத். எனவே, எம்மைத் துரத்திக் கொண்டிருக்கும் மௌத் எனும் சிறிய கியாமத்தை நாம் ஒவ்வொரு கணப்பொழுதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

காலையில் உயிர் வாழ்ந்த ஒருவருக்கு அன்றைய மாலை நேரத்தை அடைய முடியாமல் போகலாம். தான் அணிந்த ஆடையை அவரால் களைய முடியாத நிலை ஏற்பட்டு மற்றோருவர் அவரது ஆடையைக் களைகின்ற நிலை நாளாந்தம் நடைபெறகிறது. காலையில் குளித்து, மணம் பூசி வீட்டிலிருந்து வெளியேறிச் செல்பவர் மாலையில் மற்றோருவரால் குளிப்பாட்டப்படுகின்ற நிலை!

இதுதான் வழ்க்கையின் யதார்த்தம். இதுதான் மிகப் பெரிய உண்மை.

ஒப்பீட்டு ரீதியில் இந்தக் காலத்தில் திடீர் மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. இயற்கை அனர்த்தங்கள், செயற்கை அனர்த்தங்கள், திடீர் விபத்துகள், யுத்தங்கள், கொடிய நோய்கள் என்று பல்வேறு வடிவங்களில் மரணம் எம்மைத் துரத்திக் கொண்டிருக்கின்றது. டெங்கு, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல்… என்று உயிரைக் காவுகொள்ளும் பயங்கர நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒப்பீட்டு ரீதியில் மரணம் மிக நெருக்கமாக இருக்கின்ற ஒரு காலம் இது என்று சொல்லலாம். மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்:

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே.” (அந்நிஸா: 78)

சிலர் இந்த நாட்டில் பாதுகாப்பில்லை அந்த நாட்டிற்குச் செல்வோம். இந்த ஊரை விட அந்த ஊர் பாதுகாப்பானது என்றெல்லாம் திட்டமிட்டு செயற்படு கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலமும் நேரமும் முடி வடைந்து விட்டால் அவர் எங்கிருந்தாலும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.

மரணத்துக்காக நாம் எம்மைத் தயார்படுத்துவது அவசியம். மரண சிந்த னையோடு இருப்பது கட்டாயம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,

தனது ஆசைகளை அடக்கி மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கைக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்பவனே புத்திசாலி எனப் பகர்ந்தார்கள்.

death-8இன்று இக்குறுகிய கால உலக வாழ்க்கையில் வெற்றி பெற நாம் நீண்ட கால, குறுகிய காலத் திட்டங்களை வகுக்கிறோம். அவ்வாறு திட்டமிடுபவர்களை வெற்றியாளர்கள் என்கிறோம். ஆனால், உலக வாழ்வில் நாம் வகுக்கின்ற எல்லாத் திட்டங்களும் குறுகிய காலத் திட்டங்களே. மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கைக்காக நாம் திட்டமிடுகின்ற அந்த திட்டமிடல்தான் உண்மையில் நீண்ட கால திட்டமிடல் என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இன்று இரு வகையான மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒரு சாராரர் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்கையை நம்பதவர்கள். அவர்கள் மறுமை விசாரணையையோ கூலியையோ சுவர்க்கம், நரகத்தையோ நம்புவதில்லை.

இவர்கள்தான் நாஸ்திகர்கள் அல்லது மதச்சார்பற்றவர்கள். இந்தக் கருத்திலுள்ள பலர் தமக்குள்ளே குப்ரை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இச்சிந்தனையுடையவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையிலும் இருக் கிறார்கள். இவர்களுடைய ஈமானில் குறையிருக்கிறது. இவர்கள் நல்வழிபடுத்தப்பட வேண்டும்.

உலகில் மிருகங்களும் பிறந்து வாழ்கின்றன மனிதர்களும் பிறந்து வாழ்கிறார் கள். மிருகங்களும் செத்து மடிகின்ற மனிதர்களும் மரணிக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு மற்றோரு வாழ்க்கை இல்லை என்றோரு வாதத்தை எந்த மனித உள்ளத்தினால் ஜீரணிக்க முடியும்! என்பதை சிந்துத்துப் பாருங்கள்.

உலகத்தில் நல்லவர்கள் வாழ்கிறார்கள் மிக நல்லவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தாம் செய்த நன்மைகளுக்கான கூலியை இந்த உலகத்தில் பெறுவதில்லை. பெற்றாலும் நிறைவாகப் பெறுவதில்லை. அவ்வாறே இவ்வுலகில் தீயவர்கள் வாழ்கிறார்கள் அக்கிரமக்காரர்கள், பொய்யர்கள், நயவஞ்சகர்கள், பஞ்சமா பாதகங்கள் புரிந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் எவ்வித தண்டனையையும் அனுபவிப்பதில்லை. தண்டைனையைப் பெற்றாலும் தகுந்த தண்டனை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்விரு சாராருக்கும் ஒரே முடிவுதான் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது?

இரண்டு சாராரும் மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவார்கள் என்றால் நல்லவர்களுக்குத் தகுந்த கூலி எங்கும் கிடைக்கப் போவதில்லை. தீயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காது என்று சொன்னால் இந்த வாதத்தை எந்தப் பகுத்தறிவுவாதியினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா?

Thawba2உலகத்திலே சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த இடத்திலே மரணிக்கிறோம். கடைசியாக ஒரு தடவை பிள்ளையைப் பார்க்க நினைத்திருந்தோம். ஆனால் பார்க்கக் கிடைக்கவில்லை. மனைவிக்கு ஒரு செய்தி சொல்ல இருந்தோம். ஆனால், சொல்லக் கிடைக் கவில்லை. இது ஒரு நிலையான பிரிவாக இருக்க முடியுமா? இருப்பது சாத்தியமா? அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மனைவியைப் பார்ப்பதில்லையா? கணவனைக் காண்பதில்லையா? சகோதரனை நாம் சந்திப்பதில்லையா? எமது குழந்தைகளை நாம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காதா? கிடைக்க வேண்டும். இது நிலையான, நிரந்தரமான பிரிவாக இருக்கக் கூடாதே! இதைத்தான் மனித உள்ளம் சொல்கிறது மனிதனுடைய அறிவும் இதைத்தான் சொல்கிறது.

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை வேண்டும் என்பதற்கு அல்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு அப்பால் மனிதனுடைய பகுத்தறிவும் மனிதனின் தர்க்கவியல் பார்வையும் போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது. இந்த உலகம் எவ்வளவு அற்புதமாகவும் நுணுக்கமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வானம், பூமி, கோள், நட்சத்திரம்… என அனைதும் மிக நுணுக்கமாக, துல்லியமாக திட்டமிடப்படிருப்பதைப் பாருங்கள். இவையெல்லாம் ஒரு நாள் அழிந்து மண் ணோடு மண்ணாகிவிடும். இதற்குப் பின்னால் இன்னொரு வாழ்க்கை கிடையாது என்ற வாதத்தை எந்த உள்ளத்தால் ஏற்றுக் கொள்ள முடியும்?

அல்லாஹ் இந்தப் படைப்புகளை வீணாகப் படைக்கவில்லை. இதற்குப் பின்னால் ஓர் அர்த்தம் இருக்கிறது ஒரு நோக்கம் இருக்கிறது. மறுமை நாளில் நிச்சயம் நாம் விசாரிக்கப்படுவோம். எமது நன்மை தீமைகளை பதியப்பட்ட ஏடு எமது கரங்களில் தரப்படும். அதனைத் தொடர்ந்து சுவன வாழ்வோ நரக வாழ்வோ கிட்டும் என்ற என்ற உண்மையை அல்குர்ஆன் சொல்வதைப் பார்க்கிறோம். இதனை மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும். அப்படித்தான் அதனை அல்லாஹ் படைத்திருக்கிறான். யார் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்கான கூலியை நிச்சயமாக அவர் அதனை மறுமையில் பெற்றுக் கொள் வார். யார் அணுவளவு தீமை செய்கிறாரோ அதற்குரிய விளைவையும் அவர் அங்கு காண்டு கொள்வார் என அல்குர்ஆன் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறது.

மறுமையை நம்பாத ஒரு சாரார் இருப்பது போலவே மற்றோரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் மறுமையை, விசாரணையை நம்புபவர்கள். சுவனம், நரகம்… என நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் மறுமையை, மண்ணறை வாழ்வை, ஸிராத்தை, மீஸானை, ஹிஸாபை, சுவர்க்க நரகத்தையெல்லாம் மறந்து வாழ்கிறார்கள். அவர்களது உலக மோகம் மறுமையை மறக்கடித்து விடுகிறது. படைப்பினங்களின் மீதான ஆசை படைத்தவனை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. மாளிகைகளும் கோபுரங்களும் அவர்களது மண்ணறைகளை மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. இத்தகைய ஒரு பரிதாபகரமான நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மரணத்துக்குப் பின்னர் மண்ணறை வாழ்க்கை, மஹ்ஷர், விசாரணை, மீஸான், பட்டோலை, ஸிராதுல் முஸ்தகீம் பாலம் இவற்றக்குப் பின்னர் சுவர்க் கம் அல்லது நரகம். இவற்றையெல்லாம் நாம் எதிர்கொண்டேயாக வோண்டும்.

உஸ்மான் (ரழியலல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு கப்ரைக் கண்டு விட்டால் தாடி நனையும் அளவுக்கு தேம்பித் தேம்பி அழுவார்களாம். அப்போது அவரிடம்,

அமீருல் முஃமினீன் அவர்களே நரகத்தை நினைத்து கண்ணீர் வடிக்காத நீங்கள் ஏன் மண்ணறையைப் பார்த்தவுடன் கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது அவர்கள் ஒரு மனிதனுடைய மறுமை வாழ்க்கையின் முதலாவது கட்டம்தான் கப்ரு. இக்கட்டத்தில் ஒருவன் வெற்றி பெற்று விட்டால் எல்லாக் கட்டங்களும் அவனுக்கு இனிமையாக இருந்துவிடும். கப்ருடைய வாழ்க்கையில் அவன் தப்பித்துக் கொள்ளவில்லையானால் அதன் பின் வருகின்ற அத்தனை கட்டங்களும் மிகவும் கடுமையானதாக இருக்கும். உலகத்தில் கப்ருடைய காட்சியைப் போல பயங்கரமான மற்றோரு காட்சியை நான் பார்த்ததில்லை என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவேதான் இதனைக் காணும்பொழுதெல்லாம் நடுநடுங்கி கண்ணீர் வடித்து அழுகிறேன் என பதிலளித்தார்கள். (அஹ்மத், இப்னு மாஜா, அத்திர்மிதி, அல்ஹாகிம்)

சுவர்க்கத்தின் சொந்தக்காரர் என நன்மாராயம் சொல்லப்பட்ட பத்துப் பேர்களில் ஒருவரான உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மறுமை வாழ்வு பற்றிய மனோநிலை எப்படி இருந்திருக்கிறது!

நாம் மறுமையை, மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்வை நம்புவது மாத்தி ரமல்ல, என்றும் எப்போதும் மரண சிந்தனையை பசுமையாக உள்ளத்தில் நிறுத்தி நிரந்தர மறுமை வாழ்வுக்காக எம்மைத் தயார் படுத்துபவர்களாக நாம் மாற வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிமும் மரணத்தை நினைத்து வாழ்ந்தால், மறுமையை, மீஸானை, ஸிராத்தை, சுவனத்து இன்பங்களை, நரகத்து வேதனைகளை மனதில் நிறுத்தி சிந்தித்து செயலாற்றினால் ஓர் உன்னத சமூகம் உருவாகும். உலகத்தில் நிறையப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஏமாற்று, பொய், புரளி, அநியாயம், அக்கிரமம், அராஜகம்… அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். இன்று எல்லா வகையான தீமைகளும் வேரூன்றியிருப்பதற்கான பிரதான காரணம், மனிதர்கள் மரணத்தை, மறுமையை, மண்ணறை வாழ்க்கையை மறந்திருப்பதுதான்.

இப்ராஹீம் அல்அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒருநாள் சந்தைக்குச் சென்று மனிதர்களை விளித்து இவ்வாறு உபதேசம் புரிந்தார்கள்:

“அன்பர்களே, நீங்கள் பத்து விடயங்களை விட்டுவிட்ட காரணத்தினால் உங்களது உள்ளங்களெல்லாம் இறந்து விட்டன.

 1. அல்லாஹ்வை அறிந்த நீங்கள்,அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையைச் செய்யவில்லை.
 2. அல்குர்ஆனை ஓதும் நீங்கள்,அல்குர்ஆனின் அடிப்படையில் செயற் படவில்லை.
 3. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அனுபவிக்கும் நீங்கள்,அவனுக்கு நன்றி செலுத்தவில்லை.
 4. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கும் நீங்கள்,நபியவர் களின் ஸுன்னாவை முறையாகப் பின்பற்றவில்லை.
 5. ஷைத்தானை உங்களுடைய எதிரி என்று நம்புகின்ற நீங்கள்,அவனுடைய அழைப்புக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
 6. நரகம் உண்மையானது என்று நம்புகின்ற நீங்கள்,அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில்லை.
 7. சுவர்க்கம் சத்தியமானது என்று நம்பிக்கை கொள்ளும் நீங்கள்,சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக செயற்படுவதில்லை.
 8. மரணம் உண்மை என்று நம்புகின்ற நீங்கள்,அதற்காக உழைப்பதில்லை.
 9. எத்தனையோ ஜனாஸாக்களை நீங்கள் தூக்கிச் சுமந்து நல்லடக்கம் செய்கிறீர்கள். ஆனால்,அவற்றின் மூலம் படிப்பினை பெறுவதில்லை.
 10. காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டால் அடுத்தவர்களுடைய குறையைத் தேடுவதிலேயே காலம் கழிக்கிறீர்கள். உங்களது குறைகளை மறந்து விடுகிறீர்கள்.

இத்தகைய தீய குணங்கள் உங்களிடத்தில் இருப்பதன் காரணமாக அல்லாஹ் உங்களது உள்ளங்களை மரணிக்கச் செய்து விட்டான். உங்களுடைய பிரார்த் தனைகளைக்கூட அவன் ஏற்றுக் கொள்வதில்லை” எனக் கூறினார்கள்.

எனவே, நாம் மரணத்தை மிகச் சிறந்த உபதேசியாக எடுத்துக் கொள்ள வேண் டும். யா அல்லாஹ் என்னையும் உங்களையும் மரண சிந்தனையோடு வாழ்ப வர்களாக ஆக்கி அருள்வாயாக! எம் அனைவருக்கும் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கும் பேற்றையும் உயர்ந்த சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸினுள் நுழைகின்ற பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!

 

About author

No comments

அமானிதங்களில் பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும்….

அகிலம் முதல் அண்ட சராசரங்களின் ஆட்சியும் அதிகாரமும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது, அகிலத்தில் ஆட்சியதிகாரம் அவனது கட்டளைகளுக்கமைய இடம்பெறுவதை, இறை நீதி நிலை நிறுத்தப்படுவதனை அவன் எதிர்பார்க்கின்றான், அதனாலேயே மனித வர்க்கத்தை தனது ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com