சகோதரர் அப்துல் ராசிக் குறித்தோ SLTJ குறித்தோ புதிதாக சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து அவர்களும் சமூகமும் மிகவும் நிதானமாக வெளியே வரல் வேண்டும்.
இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் மிகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றும் அவர்களது வேகத்தை விவேகத்துடன் நெறியாண்டு முதிர்ச்சியுள்ள சமூக அமைப்பாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
ஊழல் மோசடிகளும் பொய்யும் உருட்டும் புரட்டும் திருட்டும் காடைத் தனங்களும் நிறைந்த மட்டரகமான சூதாட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றீடு செய்ய அவர்களது தூய்மை வாத சீர்திருத்தப் பணிகள் எதிர்காலத்தில் உச்சகட்ட சாணக்கியத்துடன் இடம்பெற வேண்டும் நாளை ஒருநாள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பொறுப்புள்ள ஒரு முஸ்லிம் தலைமையாக அவர்கள் மிளிர வேண்டும் என்றும் எதிர்பார்கின்றேன்.
பல்கோண பல்பரிமாண சவால்கள் நிறைந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப் படாமல் இருப்பதனையும்,பலிக்கடாவாக்கப் படாமல் இருப்பதனையும் அவர்களும் சமூகத்தின் பொறுப்புள்ள தலைமைகள் அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
கருத்து வெளியீடுகள் எவ்வாறு அவர்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்கள் பிரச்சாரம் செய்யும் கட்டிக் காக்க விரும்பும் இஸ்லாத்திற்கும் எதிரான தவறான புரிதல்களை ஏற்படுத்தும், குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கு கீழ் காணும் கருத்துப் பரிமாறல் ஒரு எடுத்துக் கட்டாக இருக்கும் என நம்புகின்றேன்.
உணர்ச்சி வசப்படாது அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவோம், அரசியல் வாதிகளினதும் தீய சக்திகளினதும் கருத்து வெளியீடுகள் குறித்தும் நாம் நிதானமாக நாம் செயற்படல் வேண்டும்.
சம்பவங்களால் நிகழ்வுகளால் அறிக்கைகளால் உந்தப்பட்டு நிலைப்பாடுகளை தாறுமாறாக எடுக்காது நிகழ்வுகளிற்குப் பின்னால் உள்ள வெவ்வேறு முகாம்களின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து நாம் அவதானமாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்.