“அங்கீகாரங்கள் மிகப்பெரிய அமானிதங்களாகும், உரியவர்களுக்கு மறுக்கபடுவதும், உரித்தற்றவருக்கு வழங்கப்படுவதும் அக்கிரமமாகும்”
எமது சமூக,பொருளாதார, அரசியல் மற்றும் வாழ்வின் சகல துறை போராட்டங்களிலும்,சீர்திருத்தப் பணிகளிலும் மிகத் தெளிவான கொள்கை கோட்பாடுகளுடனும்,அமுலாக்கல் வழி முறைகளுடனும், நீண்ட, குறுகிய மற்றும் இடைக்கால மூலோபாய திட்டமிடல்களுடனும் மிகப் பெரிய அர்பணிப்புகளுடனும் மைல் கற்கள் இனம் காணப்பட்ட பாதையில் நாம் பயணித்துக் கொண்டிப்பதோடு புதிய தலைமுறையினரை பயிற்றுவித்துக் கொண்டுமிருக்கின்றோம்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்குக் காலம் தோற்றம் பெற்ற, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், பல்வேறு இஸ்லாமிய சீர்திருத்த அமைப்புக்கள் இயக்கங்கள், ஆன்மீக பண்பாடுகள் மற்றும் அரசியல் சமூக பொருளாதார சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை எங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச அரங்கிலும் முஸ்லிம் உலகிலும் முஸ்லிம் உம்மத்து எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு முன்னின்று முகம் கொடுக்கும் தரப்புக்கள், மற்றும் நவீன் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என சத்திய வழி போராடுவோர் எமக்கு சிறந்த முன்மாதிரிகளாகவும், புலமைச் சொத்துக்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த தேசத்தைப் பொறுத்தவரை பத்துவீத சிறுபான்மை முஸ்லிம்களாக நாம் இருந்த பொழுதும் ஒருமுஸ்லிம் தேசத்தில் வாழ்பவர்களை விடவும் பாரிய மற்றும் மகத்தான மனித நேயப் பணி எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மைக் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மிகச்சரியான அடித்தளங்களில் பல்லின,மத,கலாச்சார தேசமொன்றில் சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றை முதன்மைப்படுத்திய முன்மாதிரியான சமூகமாக மிளிர்வதற்கான நகர்வுகளில் கரிசனை செலுத்தி வருகின்றது.
இஸ்லாமிய ஷரீஆவின் மற்றும் அகீதாவின் அடிப்படை இலக்குகளை,மானுடவிழுமியங்களை துல்லியமாக கரிசனைக்கு எடுத்து தேசிய வாழ்வில் எமது வரைமுறைகளை பேணி காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வை நோக்கி இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும், சிந்தனை பள்ளிகளும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன.
எமது பாதையிலும் பயணத்திலும் தேசிய வாழ்விலும் சமூக வாழ்விலும் நாம் எதிர் கொள்கின்ற சவால்களை குறிப்பாக பிழையான தரப்புக்களை கையாளுகின்ற சமயோசிதமான வழிமுறைகள் ஒரு பொழுதும் எமது தனித்துவங்களை, கொள்கை கோட்பாடுகளை, இலட்சியங்களை விட்டுக் கொடுக்கின்ற சமரசங்களாகவோ அல்லது பிழையான தர்ப்புக்களிற்கு நாம் வழங்குகின்ற கௌரவங்களாகவோ அங்கீகரங்களாகவோ இருந்து விடக் கூடாது.
நாங்கள் பிழையான (ஜாஹிலிய) அரசியல் சமூக பொருளாதார கட்டமைப்புக்களுக்கும், தீமைகளுக்கும் பிழையான பரம்பரியங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கின்றோமே அல்லாது அவற்றின் இயல்பான உற்பத்திகளான தனி நபர்களுக்கும், தனி நபர்களின் தொகுதிகளான கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் எதிரான காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை ஒரு பொழுதும் மேற்கொள்வதில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும், அவ்வாறான எத்தகைய தேவைப்பாடும் உண்மையான விசுவாசிகளுக்கு இருக்க முடியாது.
நேரடியாகவோ மறைமுகமாகவோ பிழையான தரப்புக்களை அங்கீகரித்து அரங்கேற்றுவதன் மூலேமே எமது முகாம்களுக்கு முகவரியும் அபிமானமும் கிடைப்பதற்குரிய மார்க்கமாகும் என நாம் கருதின் அவர்களோடு சமானமாக நாங்களும் பாமரத்தனங்களின் மீது சவாரி செய்கின்றோம் என்று அர்த்தமாகிவிடும்.
பிழையான தரப்புக்களுக்கு நாம் வழங்குகின்ற அங்கீகாரங்கள் சரியான தரப்புக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாக அமைந்து விடுகின்றது, நாம் விசுவாசிக்கின்ற கொள்கைகள்,கோட்பாடுகள், நாம் சொல்லித் தருகின்ற பாதை இலக்குகள் பயணங்கள் என்பவற்றிற்கு முற்றிலும் முரணான தரப்புக்களை எம்மால் ஒரு பொழுதும் விளம்பரப்படுத்தவோ, சந்தைப் படுத்தவோ முடியாது.
(இங்கு சத்தியவழி அசத்தியவழி என்ற பிரயோகங்களை நான் பாவிக்க விரும்பவில்லை, ஏனெனில் இது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும் முரண்பாடுகளை மதிக்கின்றேன்)
புகழப் படுதலும், விரும்பப் படுதலும்.!
புகழப் படுதலுக்கும், விரும்பப் படுதலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன, புகழை விரும்புவது ஒரு உளவியல் கோளாறாகும், புகழப்படுதலுக்கு ஆசை கொள்வோர் உளத் தூய்மை இழந்து பிரபல்யத்துக்குப் பின்னால் ஓடுவர்கள், அவர்களிடம் சுயநலம் மேலோங்கி இருக்கும், உடனடி விளைவுகளை எதிர்பார்ப்பார்கள்,பின்னடைவுகளின் பொழுது அவர்கள் விரக்தியின் உச்ச நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.
இதய சுத்தியுடன் இயங்குகின்றவர்கள் விரும்பப்படுவார்கள், அவர்கள் பின்னால் பிரபல்யம் ஓடிவரும், ஆனால் அவர்களுக்கு பிரபல்யத்தின் மீது அவா இருக்காது,சுயநலன்களுக்குஅப்பால் அவர்களிடம் இலட்சிய வேட்கை மேலோங்கி நிற்கும் வெற்றியிலும் தோல்வியிலும் இவர்கள் நிதானமாகவே இருப்பார்கள், தமது வாழ் நாளில் அடைவுகளை எய்திட வேண்டும், அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட மாட்டார்கள்.
ஆட்சி அதிகாரம் பிரபல்யம் என பின்னால் ஓடாதீர்கள், அவை உங்கள் பின்னால் வரும் நிலைக்கு உங்கள் தகைமைகளை, திறமைகளை, ஆற்றல்களை, ஆன்மீக, மானுட பண்பொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது, ஒருமுறை அபூஹுரைரா (றலி) அவர்களிடம் மக்கள் கூடி, அவை கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் தெரிவிக்கிறேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தனக்குப் பாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் (மூன்று பேரில்) ஒருவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் ஆவார் . அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும் போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “இறைவா! உனக்காக நான் (அறப் போரில் ஈடுபட்டு) என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், “இல்லை நீ பொய் சொல்கிறாய், (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை) மாறாக “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப் படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு (உலகிலேயே) சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது) என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான மார்க்க அறிஞர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், ” இறைவா! கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “இல்லை நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை) “அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “காரி” என மக்களிடையே பேசப் படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது) என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கப்பட்டிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ” இல்லை, நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” (கொடை வள்ளல்) என மக்களிடையே பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு செலவு செய்தாய் . உன் எண்ணப்படி அவ்வாறு (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டது (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது) என்று கூறி விடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார் (ஆதாரம்: முஸ்லிம்).
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் ஆட்சியும் அதிகாரமும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது !
அல் ஹம்துலில்லாஹ்