ஆங்காங்கே இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டு அரசியல் உள்நோக்கங்களுடன் அரங்கேற்றப்படும் கொடூரமான நாடகங்களாகும். சொல்லப்படுகின்ற உடனடிக் காரணங்கள் யாவும் இட்டுக்கட்டப்படும் புனைகதைகளாகும்.
ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன, முஸ்லிம் அரசியல் தலைமைகள் எவ்வாறு போனாலும் சிவில் சன்மார்கத் தலைமைகள் முஸ்லிம்களை சரியாக வழிநடத்தியமை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டமை , சமாதான சகவாழ்வு நிகழ்ச்சி நிரலை தீவிரப் படுத்தியமை நாடு தழுவிய அமைதியின்மை ஏற்படுவதனை தவிர்த்தது. இது குறித்து பல தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் திருப்தியை வெளியிட்டிருந்தன.
இலங்கையில் 2015 ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தமை என்னவோ உண்மைதான், அதற்கு முஸ்லிம்களும் பிரதான பங்களிப்பினைச் செய்தார்கள், தமிழர்களும் செய்தார்கள், தேசிய அரசியல் சக்திகளும் செய்தன, பின்னால் சர்வதேச பிராந்திய சக்திகளும் செய்தன.
ஆனால், இனவாத சக்திகள் அழிந்துவிடவில்லை, அவர்களை பின்னாலிருந்து கருவிகளாக இயக்குகின்ற தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க சக்திகள் அழிந்துவிடவில்லை, மீண்டுமொரு ஆட்சிமாற்றத்தை விரும்புகின்ற புதிய சக்திகள் தோன்றுவதற்கான அதே வழிமுறைகளை புதுப் புது வடிவங்களில் களநிலவரங்களில் கையாள்வதற்கான சத்தியப் பாடுகளும் இல்லாமல் இல்லை.
முதலாம் இரண்டாம் தரப்புகளை விடவும் மூன்றாம் நான்காம் தரப்புகள் விடயத்தில் நாம் இரட்டிப்பு அவதானத்துடன் செயற்படல் வேண்டும், எமது சமயோசிதமும், சாமர்த்தியமும், சாணக்கியமும் இராஜ தந்திரமும் இங்கு தான் தேவேப்படுகின்றன, உள்வீட்டில் பங்காளிச் சண்டைகளுக்கல்ல.
ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ள மட்டுமல்ல அவற்றை அடைந்து கொள்வதற்கும் இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பகடைக் காய்களாக, கால் பந்துகளாக, பலிக்கடாக்களாக ஆக்க சர்வதேச பிராந்திய அரங்குகளிலும் தேசிய அரங்கிலும் பாரிய சதி முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன, யுகத்திற்கான அறப்பணி எங்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.
அரசியலும் இராஜ தந்திரமும் இந்த உம்மத்து பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
கடந்த காலங்களில் இனமத வெறி கடும்போக்கு நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னேடுத்த சக்திகள் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகிப்பதனையும் நாம் அறிவோம்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.
இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
அவ்வப்போது சந்தர்பங்களை சமாளிக்கவும் பின்னர் மறந்துவிடவும் கூடிய உஷார் மடையர்கள் போல் செலாற்றுவதில் அல்லது எதிர்வினையாற்றல்களோடு நின்று கொள்வதில் நாம் பிரசித்தமாக இருக்கின்றோம்.
ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ, பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் தமக்குள்ளே முரண் பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால் பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன் பெரும் நம்பிக்கையீனத்துடன் நாம் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே, எமது கடந்தகால பயிரிடல்களின் அறுவடைகளையே நாம் இன்று கண்கூடாக காணுகிறோம்.
அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.
தேசிய அரசியல் கள நிலவரங்களை, தேசிய அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன், சாணக்கியமாகவும், சாதுரியமாகவும் சமூகத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும்!
“தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை,அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!”
பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள்.
பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள் என்பதே தீய சக்திகளுக்கு முன்னுள்ள மிகப் பெரும் சவாலாகும். பொதுசன அபிப்பிராயத்தை திசை திருப்புவதற்கான முயற்சிகள் இடம் பெறுவதற்குரிய சாத்தியப் பாடுகள் நிறையவே இருக்கின்றன.
எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மையானவர்கள் மிக நல்லவர்கள், தத்தமது ஆன்மீக நம்பிக்கைகள் மீதும், மனிதாபிமான விழுமியங்கள் மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள்.
தீய சக்திகளுக்கு ஆன்மீக நம்பிக்கைகள் கிடையாது, அவர்களுக்கு மனிதாபிமானம் கிடையாது, மதம், இனம், மொழி, மனிதாபிமானம் போன்ற போர்வைகளை போர்திக் கொண்ட பசுத் தோல் போர்த்திய பசிஸ்டுகள் அவர்கள்.
தேசத்தின் ஒருமைப் பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும், ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும், ஜனநாயக ஆட்சி முறைக்கும் வலுச் சேர்கின்ற, ஏனைய சமூகங்களை விட எவ்விதத்திலும் குறைவில்லாது பாரிய விலையை கொடுத்துள்ள ஒரு சமூகத்தை பலிக்கடாவாக்குவதான் மூலம் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள சில தீய சக்திகள் கங்கணம் கட்டியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் முழு தேசத்தினதும் அமைதி சமாதானம் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை என்பவற்றிற்கு விடுக்கப்பபடும் . சவால்களாகும்.
எல்லா சமூகங்களிலும் தீய சக்திகள் மிக மிக சிறிய கூட்டத்தினரே. தீய சக்திகளை அரசியல் நோக்கங்களிற்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிராந்திய சக்திகள் கருவிகளாக கூலிக்கு அமர்த்தியுள்ளனர், அவர்களுக்கெதிரான எமது ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்கள் அல்லது எமது ஆக்ரோஷமான வார்த்தைப் பிரயோகங்கள், நிதானமற்ற செயற்பாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்து விடக் கூடாது, அதனையே அவர்கள் எதிர்பார்கின்றார்கள்.
எதிரிகளை இலகுவாக உருவாக்கி விடலாம், எங்களை சரியாக புரிந்து கொள்கின்ற நண்பர்களை உருவாக்குவதே கடினமான பணி, இடை நடுவில் இருப்பவர்களை ஒரேயடியாக மறுபக்கம் தள்ளிவிடும் எழுத்துக்கள் பேச்சுக்கள் எதிர் வினையாற்றல்கள் ஆபத்தானவை.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாம் மிகவும் விழிப்பாக, கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். குறிப்பாக தேசத்தில் உள்ள சகல முற்போக்கு சக்திகள், ஏனைய சமூகங்களை சேர்ந்த சமய, அரசியல், சிவில் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணிக் கொள்ளல் வேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற தரப்புக்களுடன் எல்லா நிலையிலும் ஒத்துழைப்புடன் செயற்படல் வேண்டும், தேவைப் படும் பட்சத்தில் சட்டத் தரணிகளின் சேவைகளை பெற்றுக் கொள்வதிகற்கான நிதியம் ஒன்றையும் ஏற்பாடுகளையும் ஊர் மட்டங்களில் நாம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை, என்றாலும் அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
குறிப்பாக சமூக ஊடகங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் பயன்படுத்துதல் வேண்டும், பதிவுகள் மாத்திரமல்ல பகிர்வுகளும் கூட, காட்டுத் தீ போல் வதந்திகளை பரப்புகின்ற சக்திகள் விடயத்தில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும், ஊர்ஜிதம் செய்யாது தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது சன்மார்கத்தில் தடுக்கப்பட்டுள்ள விடயமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி இந்த நாட்டில் வாழும் நல்லோர்கள் எல்லோர்கள் மீதும் கருணை காட்டுமாறும்,நேரிய வழியை நஸீபாக்குமாறும் துஆ செய்து கொள்வோம், தீய சக்திகளின் சதித் திட்டங்களை அவர்களுக்கெதிராகவே திருப்பிவிடும் வல்லமை அவனுக்கே உண்டு.
வெகுவாக உணரப்படும் தலைமைத்துவ வெற்றிடம்
தேசிய பிராந்திய மாவட்ட மட்டங்களில் மாத்திரமன்றி , ஊர் மற்றும் மஹா ல்லா மட்டத்திலான சகல தரப்புக் களையும் உள்வாங்கிய அடிமட்ட தலைமைத்துவ கட்டமைப்புகளை -மஜ்லிஸ் அல்-ஷூராக்களை- (ஆலோசனை சபைகளை ) பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள், இளைஞர், மாதர் பிரதி நிதிகள் ,அரசியல்,சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும் கொண்ட நிரந்தரமான ஆலோசன சபைகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை, வழிகாட்டல்களை மொத்தத்தில் தலைமைத் துவத்தை ஒவ்வொரு கிராமும் அவ்வப்போது பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஷூரா அமைப்பு முறை இலங்கை வால் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் சிறந்த தலைமைத்துவக் கட்டமைப்பாக வருவதோடு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவ்வப்போது மிகவும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கான மூலோபாயங்களையும் கொண்டிருக்கும்.
முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் குறுகிய நீண்ட மற்றும் இடைக்கால நிகழ்ச்சி நிரல்களை இந்த தலைமைத்துவம் வகுத்துக் கொள்ளும். தனி நபர்களையோ தனி நபர்களை மாத்திரம் நம்பியுள்ள அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ அல்லது தங்களுக்குள் கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் வேறு பட்டிருக்கும் இயக்கங்களையோ மாத்திரம் நம்பியிராது அந்த சகல் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்கின்ற தேசிய ஷூரா ஒன்றின் அவசியம் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை அல்லது சகோதர சமூகங்களை மாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப் பின்னால் சர்வதேச முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர மூலோபாயத் திட்டமிடல்களும் உளவுச் சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.
இவ்வாறான பல்வேறு பல்வேறு பரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் எமது குறுகிய சமூகத்தை மாத்திரம் மைய்யப்படுத்திய அரசியல், தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை ,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல் சக்திகளோடும் புரிந்துணர்வோடு சமயோசிதமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து செயற்பட வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
இத்தகைய தலைமைத்துவக் கட்டமைப்புகள், நமது சிவில் மற்றும் அரசியல், இயக்க தலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டிய நிகழ்ச்சி நிரல் களை, வேலை திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, அவர்களது சேவைக் காலத்தையும், தராதரத்தையும், மதிப்பீடு செய்து நிர்ணயிக்கின்ற தகுதியையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.
இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது…அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அன்று அல்லாஹ்வுடைய வஹியும் கட்டளைகளும் அல்லாஹ்வின் தூதருடைய பிரசன்னமும், வழிகாட்டல்களும் நேரடியாக சஹாபாக்களுக்கு கிடைத்தது, இன்று குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக இருக்கின்ற இலங்கை போன்ற நாட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாமல் குர்ஆனில் வரலாற்றில் சுன்னஹ்வில் இருகின்றதென ஆதாரங்களைக் கூறி சிலர் ஆவேசமான உரைகளை நிகழ்த்துவதை அவதானிக்க முடிகிறது.
அல்லாஹ்வின் வஹியோ தூதரோ இல்லாத பொழுது ஒன்று பட்ட முஸ்லிம்களின் உம்மத்தின் கூட்டுத் தலைமை இஸ்லாமிய சட்டவாக்க அடிப்படைகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு அறிஞர்கள் புத்திஜீவிகள் துறை சார் நிபுணர்கள் சமூகத் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை சார்ந்தோரையும் கலந்தாலோசித்து ஷூரா மூலம் எடுக்கின்ற முடிவுகளை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.
அல்லாஹ்வுக்காக எந்த பிரபலங்களும் தனி நபர்களும் அல்லது இயக்கங்களும் தத்தமது அடையாளத்தை செல்வாக்கை அல்லது நிகழ்ச்சி நிரலை அரசியலை முன்னிலைப்படுத்தாது இவாறான ஒரு கூட்டு முயற்ச்சியை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்களும் அடாவடித்தனங்களும் !
பின்புலம் :
- போருக்குப் பின்னரான உள்நாட்டு அரசியல் நகர்வுகள்.
- சர்வதேச மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பூகோள அரசியல் மற்றும் இராஜதந்திரமும் உளவுச் சக்திகளின் தொழிற்பாடுகளும்
- முஸ்லிம் அரசியல்வாதிகளின் சாணக்கியமின்மையும் சரணாகதி அரசியலும்…அவர்கள் தீர்வின் ஒரு பகுதியாகவன்றி சவால்களின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளமை.
-
முஸ்லிம் சமூகத்திற்கான நன்கு ஆராயப்பட்ட மூலோபாய தேசிய மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலின்மை…
- முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளை சரியான பரிமாணங்களில் கையாளத் தெரியாமையினால் புரையோடிப்போயுள்ள வேற்றுமைகளும் பிளவுகளும் பிணக்குகளும் எமது அரசியல் சமூக கலாச்சார கனதியை மதிப்பிழக்கச் செய்துள்ளமை.
- கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவி வந்த இன ரீதியிலான அடையாள அரசியலும், இன ரீதியிலான பாகு பாடுகளும் இனங்களுக்கிடையில் ஆழமாக வேரூன்டியுள்ள தப்பபிப்பிராயங்களும் சந்தேகங்களும்.
- முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம் , இன விகிதாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம்,கல்வித் துறையிலான ஆர்வம், திட்டமிடலின்றி அங்காங்கே தோன்றிவரும் பள்ளி வாயல்கள் குறித்த அச்சம் , இன ரீதியிலான காழ்ப்புணர்வு போன்ற உடனடிக் காரணங்கள் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளுக்காக தீய சக்திகளால்தீவிரமாக கையாளப்படல்.
- இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் “ஹலால் ” சான்றிதழ் விவகாரம் பெரும் தடையாக உள்ளதால் சர்வதேச அளவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் பிரச்சாரமும் முதலீடும் கூலிப்படைகளும்.
தீர்வுகள்:
- பலதரப்பு பிரதிநிதிகளையும் கொண்ட தலைமைத்துவ கட்டமைப்பொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்ளல்.
- முஸ்லிம் சமூகத்திற்கான சவால்களாக இவற்றை பார்க்காது மொத்த தேசத்தினதும் சமாதான சகவாழ்வுக்கான அச்சுறுத்தலாக அணுகுதல்.
- அரச உயர் மட்டத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தல்.
-
பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் மதத் தலைமைகளை அணுகி நியாய தர்மங்களிற்கான அவர்களது ஆதரவைப் பெறுதல்.
- அத்துமீறல்களை கையாள்வதற்கான ஒரு சட்ட ஆலோசனைக் குழுவையும் அவ்வப்போது தேர்ச்சிபெற்ற முஸ்லிம் முஸ்லிமல்லாத சட்டத் தரணிகளின் சேவைகளை நாடு தழுவிய மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான நிதியம் ஒன்றை தாபித்துக் கொள்ளல்.
- இந்த சவால்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் இராஜ தந்திர நகர்வுகளை இனம்கண்டு அவற்றை அரசியல் மற்றும் இராஜ தந்திர வழிமுறைகளில் முறியடித்தல்.
- தேசிய ஊடகங்களில் இன நல்லுறவை வளர்த்தெடுப்பதில் அக்கறையுள்ள பெரும்பான்மையின அரசியல் வாதிகள் மதத் தலைவர்கள் கல்விமான்கள் எழுத்தாளர்களைக் கொண்டு தீய சக்திகளின் பிரச் சாரங்களை முறியடிக்க முயற்சிகளை மேற்கொள்ளல்.
- இந்த நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரம் மதம் கலாச்சாரம் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் மற்றும் தேசிய வாழ்வில் அவர்களது பங்களிப்பு குறித்த சமூகம் சார்ந்த மூலோபாய திட்டமிடல் ஒன்றை வகுத்துக்கொள்ளல் .
- இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாறு தேசத்திற்கான பங்களிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு சகோதர இன புதிய தலைமுறையினரை அறிவுறுத்தல்.
- தேசிய சமூக அரசியல் பொருளாதார வாழ்வில் முஸ்லிம்களது அணுகுமுறை நடத்தைகளை மீளாய்வுக்கு உற்படுத்தல்.
- முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வலுப்படுத்தி எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதோடு தேசத்திற்கான பங்களிப்பையும் செய்தல்.
- கடல் கடந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் டயஸ்போரா கட்டமைப்பொன்று உடனடியாக தோற்றுவிக்கப் படல் வேண்டும்.
- தேச நலன்களிற்கு பாதகமற்ற மாறாக பங்களிப்புச் செய்கின்ற சமூகத்திற்கான சர்வதேச விவகாரபொறிமுறை ஒன்றின் தேவை தற்போது வெகுவாக உணரப் படுகிறது.
- மேலைத்தேய மேலாதிக்க சக்திகள், யூத சியோனிஸ சாதிகாரர்கள்,முஸ்லிம் உலகிற்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள நவீன காலனித்துவ சுரண்டல் மற்றும் சிலுவை யுத்தம் தொடர்பான சகலசமூகங்களுக்குமான அறிவூட்டல்.
அரசியல் இராஜ தந்திர அழுத்தக் குழு:
சகல முஸ்லிம் சிவில் தலைமைகளினதும் இஸ்லாமிய இயக்கங்களினதும் தொண்டர் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் இராஜ தந்திர அழுத்தக் குழு ஒன்று உடனடியாக தோற்றுவிக்கப் பாடல் வேண்டும், ஒவ்வொரு கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற பரி பாஷைகளை, வித்தைகளை கலைகளை, ஆயுதங்களை (சாதனாங்களை ) நாம் கையிலேடுத்தேயாக வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் அரசியல் செய்ய வேண்டுமென்பதில்லை, தனித்தனியாக இயக்கங்கள் தம்மை அரசியல்ரீதியாக அடையாளப் படுத்திக் கொள்வதும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமில்லை.
முஸ்லிம்களுக்கு தற்போது விடுக்கப் படும் சவால்களுக்குப் பின்னால் பாரிய அரசியல் இராஜ தந்திர நிகழ்ச்சி நிரல் உள்நாட்டு வெளி நாட்டு பின் புலன்களுடன் இருப்பதனை சகலரும் உணர்ந்த்குள்ள நிலையில் காலத்துக்கு தேவையான யுக்திகளையும்உத்திகளையும் நாம் -பேசுபொருளாக மாத்திரம் வைத்துக் கொள்ளாது- கையாளவும் வேண்டும்
சவால்களுக்குப் பின்னால் உள்ள சந்தர்ப்பங்கள்:
- வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்குகளில் உடன் படுகின்ற உயரிய பண்பாட்டை இந்த சமூகம் வளர்த்துக் கொள்ளல்.
- இந்த நாட்டு முஸ்லிம்களுக்கான நன்கு ஆராயப்பட்ட சிவில் மற்றும் அரசியல் தலைமைக் கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ளல்
- இந்த நாட்டு முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார கல்வி கலை கலாச்சார மற்றும் இன்னோரன்ன துறைகளிலான வாழ்வினை வளப்படுத்துகின்ற தேசத்திற்கான நமது பங்களிப்பை வடிவமைக்கின்ற மூலோபாய திட்டமிடல்களை மேற்கொள்ளல்.
- இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நிலவுகின்ற விஷமப் பிரச்சாரங்களினை முறியடித்து தப்பபிப்பிராயங்களையும் களைதல்.
- இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதோடு சமாதான சகவால்விற்கான சரியான அடித்தளங்களை இடுதல்.
- முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.
- இஸ்லாமிய கலநிலயங்கள் தவா அமைப்புக்களின் பரப்புக்களை பன்முகப்படுத்தல்.
- சிவில் சமூகத்தை வலுப்படுத்தல்.
- கடல் கடந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் டயஸ்போரா கட்டமைப்பொன்று தோற்றுவிக்கப் பட்டு சமூகத்திற்கான சர்வதேச விவகார பொறிமுறை ஒன்றினை உருவாக்கிக் கொள்ளல்.
- சர்வதேச அரங்கில் அடாவடித்தனம் புரியும் தீய சக்திகளின் சதிவலைகளில் இருந்து தேசத்தையும் சமூகத்தையும் காத்தல்…