O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது.
அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், தீர்மானிக்கும் , சுயவிசாரணை செய்யும் பொழுதுகளில் தன்னை ஒரு சுயநலமியாக மட்டும் காண்பவர் தன்னை ஒரு முஸ்லிமாக சொல்லிக் கொள்வது பற்றி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
மனித குலத்திற்கு மகத்தான ஒரு தூததை சுமந்தள்ள ஒரு உம்மத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் ஒரு கடமை பொறுப்பு இருப்பதனை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.
தானும் தன் சந்ததிகளும் வாழுகின்ற தேசத்தை உலகை சூழலை அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புகிற அன்பு கருணை, அமைதி சமாதானம், நீதி நேர்மை, அறிவு ஞானம் என உயரிய பண்பாடுகள் ஆளுகின்ற பூமியாக கட்டியெழுப்புவதில் கரிசனை இல்லாத மனிதப் பிறவிகள் தன்னைச் சேர்ந்தோர் இல்லை. என ஒரு எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வின் கலீபா ஆவான், அவனது கிலாபத்திற்குரிய பணி அவன் படைக்கப்பட்ட இடத்திலும் காலத்திலும் ஆரம்பமாகின்றது…”
பலஸ்தீனை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பைத்துல் மக்திஸில் கால்பதிக்க விரும்புகின்றீர்களா..?
இஸரேலின் அன்றாட அடாவடி அடக்குமுறைகள் அஆக்கிரமிப்புக்கள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமா..?
மியன்மாரில் ரோஹிங்கியாவில் அஸின்விராதுவின் அக்கிரமக்காரர்களின் அடக்குமுறை அழிந்து இஸ்லாமியர்கள் தாயகம் திரும்ப வேண்டுமா..?
முஸ்லிம் அறபு நாடுகளில் அராஜகம் ஒழிந்து இஸ்லாம் கோலோச்ச வேண்டுமா..?
அறபு வளைகுடா நாடுகள் அமெரிக்க இஸரேலிய மேலைத்தேய சதி வலைகளில் இருந்து விடுதலை பெற்று இஸ்லாத்தின் வழி செல்ல வேண்டுமா..?
சிரியாவில், இராக்கில், யமனில் யுத்தம் ஓய நீங்கள் போராடவிரும்புகின்றீர்களா..?
எகிப்தில் அராஜக ஆட்சி ஒழிந்து சட்டபூர்வமான ஆட்சி நிலைபெற வேண்டுமென கரிசனை கொண்டுள்ளீர்களா..?
லிபியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டுமா..?
மத்திய கிழக்கு மத்திய ஆசிய நாடுகளில் நாம்விரும்பும் மாற்றங்கள் ஏற்படவேண்டுமா..? ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமா..?
கஷ்மீர்ருக்கு விடிவும் விடுதலையும் வேண்டுமா?
சோமாலியாவில் போரோய்ந்து வறுமையும் ஒழிய வேண்டுமல்லவா..?
ஐரோப்பாவில் துருக்கி ஸ்திரமடைய வேண்டுமா, முஸ்லிம் உலக எழுச்சியில் அது பிரதான வகிபாகத்தை கொண்டிருக்க வேண்டுமா..?
அழுது தொழுது அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்திப்போம், இப்போதைக்கு நாம் துஆவை விட சிறந்ததோர் ஆயுதம் விசுவாசிகளிடம் இல்லை.
எழுதுவோம், பேசுவோம், குரல் கொடுப்போம்…ஏனென்றால நாங்களும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர்…
ஆனால்…
பொங்கி யெழும் உணர்வலைகளுக்கு வடிகான் அமைத்து நாங்களும் பங்காளிகளாக ஒரு நகர்வை மேற்கொள்ள வேண்டுமா…?
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான சமர் உலகெங்கும் இறுதிநாள் வரை இடம்பெறும்…
சத்தியத்தின் கரவானில் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் என்றோ நாம் இடப்பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்…
சொந்த மண்ணில் நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து தான் நமது இலட்சியப் பணி துவங்குகின்றது..
சொந்த மண்ணில் நாம் ஒரு சமூகத்தவர், தேசத்தவர் என்ற வகையில் நாங்கள் எதிர்கொள்ளும் எமது இருப்பு, பாதுகாப்பு, அடிப்படைஉரிமைகள் சார்ந்த சமூக, அரசியல், பொருளாதார சவால்களிற்கு களத்தில் முகம் கொடுப்போம்..!
சொந்த வாழ்வில், சொந்த வீட்டில், சொந்த ஊரில், சொந்த மஹல்லாவில் சொந்தமண்ணில், சொந்த அமைப்பில், சொந்த கட்சியில், மாற்றத்தின் முகவர்களாக ஒரு எட்டை முன்வைத்து எங்கள் தேசத்தில் நாம்கடந்து வந்த பாதைகளை மீள்பார்வை செய்து சர்வதேப் பார்வையின் ஒளியில் நகர்விற்கான பாதையை வகுத்துக் கொள்வோம்..!
ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வின் கலீபா ஆவான், அவனது கிலாபத்திற்குரிய பணி அவன் படைக்கப்பட்ட இடத்திலும் காலத்திலும் ஆரம்பமாகின்றது…!
இறுதி இறைதூதர் எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னறிவுப்புச் செய்த தஜ்ஜாலின் வருகைக்கு முன்னரான களநிலவரங்களையே உம்மத் கடந்து கொண்டிருக்கின்றதோ என உள்ளம் சொல்லுகிறது.
பிரபஞ்சத்தின் நாயகன் அகிலங்கள் மண்டலங்கள் அண்டசராசரங்களை ஆளுகின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தக்தீர் குறித்த எமது ஈமானிய பலத்தை நாம் மென்மேலும் வலுவூட்டிக் கொள்வோம்.
தவ்பா இஸதிஃபார் அதிகம் செய்து, அமல் இபாத்துக்கள் தான தர்மங்கள் தவறாது செய்து ஹலால் ஹராம் பேணி வாழ்ந்து அவன் விரும்பும் திசையில் எம்மை நகர்த்துமாறு மன்றாடிப் பிரார்தனை செய்வோம்.
யுகத்தின் தோற்றம் முதல் முடிவுவரை சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் சங்கிலித் தொடராக இடம் பெறும் போராட்டத்தில் எமது இடத்தை ஊர்ஜிதம் செய்து கொள்வோம்.
சத்தியம் மேலோங்கி நிற்கும், அசத்தியம் அழிந்தே தீரும், சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அத்தியமாகவும் புரிந்து கொண்டு சத்திய வழி நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அழுது தொழுது மன்றாடிப் பிரார்திப்போம்.
சத்தியத்தின் காவலர்களது கரங்களையும் கால்களையும் அவனது வல்லமைகள் கொண்டு பலப்படுத்துமாறும் அக்கிரமக் காரர்கள் மீது அவனது அத்தாட்சிகளை காட்டி அழித்து விடுமாறும் அவனிடம் மன்றாடுவோம்.
இறுதி இறைதூதர் நன்மாரயம் கூறிய ஷாமிலும் யமனிலும் இருந்து சாரிசாரியாக சுவனம் செல்லும் சிட்டுக்கள் சொல்லும் சுபசோபனங்களுக்கு பாத்தியதை உடையவர்களாக எம்மை நாம் புனர்நிர்மாணம் செய்து கொள்வோம்.
ஆட்சி அதிகாரங்கள் செல்வம் செல்வாக்குகள் அழிந்து போகும் உலகின் செல்வங்கள், சலுகை சந்தர்ப்பங்கள், சொத்து சுகங்கள் என்பவற்றின் மாயைகளில் கவர்ச்சிகளில் இருந்து எம்மை மீட்டு நிலையான மறுமை வாழ்வு குறித்து ஆழமாக சிந்தித்து செயற்படுவோம்.
எமக்கிடையில் நிலவும் வேற்றுமைகள் முரண்பாடுகள் கோப தாபங்கள் பிளவுகள் பிணக்குகள் களைந்து எம்மை சூழ்ந்து சுற்றி வலைக்கும் சோதனைகளின் ஆழ அகலம் அறிந்து நாம் அல்லாஹ்விற்காக ஒன்றுபடுவோம்.
(அன்பர்களே உங்கள் பிரார்தனைகளில் எனது பெற்றார் உடன்பிறப்புக்கள் மனைவி மக்கள் உற்றார் உறவினர் சந்ததிகளையும் மறவாது சேர்த்துக் கொள்ளுங்கள்)
யா அல்லாஹ், நாங்கள் பலவீனர்கள், எங்களது இயலாமையை, பலமின்மைகளை, நிர்க்கதி நிலைமைகளை உன்னிடமே முறையிடுகின்றோம் இந்த உம்மத்திற்கு அரணாக அபயம் தரவல்ல ஏக வல்லோன் உன்னைத்தவிர வேறு யாரும் இலர், உலகெங்கும் ஒடுக்கப்படும் உனது அடியார்கள் மீது கருணை காட்டுவாயாக!
றப்பே ரஹ்மானே எங்களை நீ பொருந்திக் கொள்வாயாக!