அது ஒரு சம்பவமல்ல சங்கிலித் தொடராக முஸ்லிம்கள் மீதும், அவர்களது உயிர் உடைமைகள் பொருளாதாரத்தின் மீதும் நன்கு திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித தனங்களின் ஒரு அரங்கேற்றமாகும்.
நிச்சயமாக அதற்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருக்கின்றது.
நாங்கள் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்.
இது நல்லாட்சி அரசு எனும் அழைக்கப்படும் அரசின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றிருக்கிறது!
இந்த அரசில் இரு பெரும் மக்களாணை பெற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பிரதான பங்காளர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிகளாக இருக்கின்றனர்.
ஐ தே க வின் தலைவர் பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் பொழுது இடம் பெற்ற சம்பவம்.
ஐக்கிய தேசியக் கட்சியிலும் முஸ்லிம் அமைச்சர்கள் பிரமுகர்கள் இருக்கிறார்கள்.
சுந்தந்திரக் கட்சியின் ஜனாதிபதி பாது காப்பு அமைச்சர் அங்கும் பிரதான முஸ்லிம் அமைச்சர்கள் பிரமுகர்கள் இருக்கிறார்கள்.
எல்லாக் கட்சியிலும் சட்டத் தரணிகள் சட்ட முதுமாணிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரிடமும் அதிகாரம் செல்வாக்கு மக்கள் ஆணை வளங்கள் சிறப்புச் சலுகைகள் எல்லாம் இருக்கின்றன.
ஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட இனவெறி வன்முறை தேசத்துரோகமாகும்.
அதில் தொடர்புபட்ட காடையர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ICCPR எனும் சர்வதேச நியமங்களிற்கேற்ப வரையப்பட்ட கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
மாறாக, தனித்தனி வன்முறைகளாக ஐந்து சம்பவங்களாக வழக்குகள் பதியப் பட்டுள்ளன.
தனித்தனியாக பாதிக்கப் பட்ட தரப்புக்கள மீது அழுத்தம் கொடுக்கப்படும் விதத்தில் சட்டம் கையாளப் பட்டுள்ளது.
ஒரு கடையின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ICCPR சட்டம் பொலிசாரால் கவனத்தில் கொள்ளப் படவில்லை.
வீடியோ காணொளிகளை பரிசீலனை செய்து இனிய காட்டு மிராண்டிகளை கைது செய்ய நடவடிக்கைகள எடுக்கப் படவில்லை.
வழமைபோல் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் களத்திற்கு விஜயம் செய்தார்கள், சிலர் வரவுமில்லை, பார்வையிட்டார்கள்.
ஆக்ரோஷமாக அறிக்கைகள் விட்டார்கள் மீண்டும் ஒரு தம்புள்ளையாக, அளுத்கமையாக, ஜின்தொடையாக விவகாரம் சமாதானமாக அல்லது இழுத்தடிப்பாக மூடி மறைக்கப் பட்டு மறக்கடிக்கப் படுவதற்கான அறிகுறிகள் அத்தனையும் தென்படுகின்றன.
இனிவரும் காலங்களிலும் இதே நாடகங்கள் தான் அரங்கேற்றப் படப் போகின்றன என்றால் முஸ்லிம்களது பாதுகாப்பிற்கு அரசோ, எமது தலைவர்கள் என்று அழைக்கப் படுகின்றவர்களோ, சட்டம் ஒழுங்கு அமைச்சோ, சட்டம் மற்றும் நீதித் துறையோ எத்தகைய உத்தரவாதத்தை தரப் போகின்றன?
அம்பாறை மஸ்ஜிதை அவர்கள் கட்டித் தரலாம், ஓரிரு கடிகளுக்கும் சிறு நஷ்டஈடு கொடுக்கலாம், இதனை அரசியலாக மாற்றி சிலர் தந்து சொந்த செலவில் செய்து தரலாம்!
ஆனால் நாமும் இந்த தேசத்தின் பிரஜைகள், நாமும் வரியிறுப்பாளர்கள், இவையெல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டும், அளுத்கமை ஜிந்தோட்டை உற்பட்ட தம்புள்ளை என நாட்டில் கிடப்பில் உள்ள அனைத்து விடயங்களிற்கும் தீர்வு இன்றேல் இனியும் ஆங்காங்கு அரங்கேற்றப் படுமென நாம் அஞ்சுகின்ற அடாவடித் தனங்களிற்கு யார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப் போகிறார்கள்?
அளுத்கமை ஜிந்தோட்டை கலவரங்களின் பொழுதும் பின்னரும் அவர்களிற்கு தேவையான மனிதாபிமான மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை எந்த வித அதிகாரமும் வளங்களும் சிறப்புச் சலுகைகளும் இல்லாத அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தேசிய ஷூரா சபை, சட்ட உதவிகளுக்கான அமைப்பு, சில இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தன, ஆனால் அரசும், பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையும் செய்ய வேண்டிய வற்றை அவர்களால் செய்ய முடியுமா?
இவ்வளவிற்கும் மத்தியில் அம்பாறையில் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் துணிந்து நீதிமன்றத்திற்கு (VOICES MOVEMENT) “குரல்கள் அமைப்பின்” சகோதரர்கள் சென்றுள்ளார்கள், அவர்களை உளமார பாராட்டுவதோடு அவர்களை தனித்து விட்ட நமது தலைமைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்!
முஸ்லிம்களது இருப்பு பாதுகாப்பு அரசியல் உரிமைகளின் காவலர்களென கூறிக் கொள்ளும் தலைமைகளும் அமைச்சர்களும் சட்ட முதுமாணிகளும் முகவரி தொலைத்து நிற்கின்ற வேளையில் இந்த இளம் தலைமைகள் களத்தில் இறங்கியுள்ளமை ஒரு செய்தியாக தகவலாக மட்டும் மறக்கடிக்கப் பட்டு விடக் கூடாது.
சகோதரர்கள் ரதீப் அஹமத், ஹஸன் ருஷ்தி, முஹைமின் காலித் Radheef Ahamed, Hassaan Rushdhy, Muhaimin Khalid போன்ற சகோதரர்களிற்கும் அவர்களுடன் களத்தில் துணிந்து நின்று செயற்பட்ட(VOICES MOVEMENT) அமைப்பினரிற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக.
இவர்களது தலைமையில் முஸ்லிம் உரிமைகளுக்காக நீதி மற்றும் சட்டத் துறைகளில் துணிந்து போராடக் கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப் படுவதும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிதிவளங்களையும் உருவாக்கிக் கொடுப்பதுவும் காலத்தின் கட்டாய தேவையாகும்.
கொழும்பில் இருந்து செயற்படும் RRT மற்றும் ARC போன்ற இளம் சட்டத்தரணிகள் அமைப்புகள் போன்று வடகிழக்கில் ஒரு பலமான அமைப்பின் தேவை வெகுவாக உணரப் படுகிறது.
சிந்தியுங்கள் மக்களே!
ஒவ்வொரு மஹல்லாவிலும், மாவட்டத்திலும் சகல தரப்புக்களையும் உள்வாங்கிய ஷூரா சபை ஆலோசனைக் கட்டமைப்புக்களை அவசரமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.