Wednesday, September 17, 2025

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, எங்கிருந்து ஆரம்பிப்பது..?

O போரிற்குப் பின்னரான இலங்கையில் பூதாகராமாக உருக்கொண்டு வரும் கட்டுக் கடங்காத பேரினவெறிப் பூதம் குறித்த எனது சில அவதானங்களை வஸிய்யதாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அன்பிற்குரிய சகோதரர்களே,

ஹலால் அளுத்கமை முதல் அம்பாறை திகனை வரை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகள் குறித்து நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்து உணர்ந்து பட்டுத் தெரிந்து வைத்துள்ளோம்.

உடனடியாக அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசின் பக்கம் விரல் நீட்டினோம் இன்று ரணில் மைத்ரி அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றோம், அவர்களோ முன்னாள் அதிபர் மஹிந்தவின் பக்கமும் பின்னாற்களில் உயர்பதிவிகளை இலக்கு வைக்கும் பலரின் பக்கமும் விரல் நீட்டுகின்றனர்.

எமது அரசியால் வாதிகளும் தாம் அரசின் பங்காளிகள் என்பதனை எல்லாம் மறந்து “இவற்றிற்கெல்லாம் அரசு தான் வகை சொல்ல வேண்டும், பொறுப்புக் கூற வேண்டும், பாதுகாப்பு தரப்புக்கள் பிழை விட்டுள்ளன, அரசு அசமந்தமாக இருக்கிறது என்று ஆக்ரோஷமாக கண்டனக் கணைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவில் சன்மார்க்கத் தலைமைகள் சட்ட நடவடிக்கைகள், நிவாரண உதவிகள், சமாதான சகவாழ்வு முனைப்புக்கள், உலவல ஆலோசனைகள், பாதிக்கப் பட்டோரது வாழ்வாதரங்களை மீளக் கட்டியமையமைத்தல், அரச தலைமைகளை ஆரசியல் தலைமைகளை சந்தித்தாழ் என தங்களால் இயலுமானவற்றை இயன்றவரை செய்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நாம் உடனடியாக குற்றம் சுமத்துகின்ற அரசியல் தலைவர்கள் கட்சிகள் கூலிப் படைகள் என்பவற்றிற்குப் பின்னால் பிராந்திய தேசிய சர்வதேசிய பின்புலங்களுடன் கட்டுக்கடங்காமல் பூதாகரமாக வளர்ந்து வரும் பேரினவெறி பயங்கரவாதத்தினை அதன் சரியான பரிமாணங்களில் விளங்கிக் கொள்ளாது களநிலவரங்களை கையாளும் குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.

பாரிய சுனாமியாக பரிணாமம் பெற்று வரும் கட்டுக் கடங்காத இனவெறிப் பயங்கரவாதத்தின் அழுங்குப் பிடிக்குள் இந்த நாட்டின் முன்னாள் இந்நாள் அரசியல் தலைமைகளும் அவர்களுடன் சரணாகதி அரசியல் செய்யும் நமது அரசியல் முகவர்களும் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றமையே யதார்த்தமான உண்மையாகும்.

தீர்வுகளை நோக்கிய முனைப்புகள்..

இன்று எம்மை சுனாமி போல் சூழ்ந்து வரும் கட்டுக்கடங்காத இனமதவெறி அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் அன்றுபோல் சில சம்பவங்களோடு முடிந்துவிடும் மோதல்கள் அல்ல அது தேசிய பிராந்திய சர்வதேச பின்புலங்களைக் கொண்ட தெளிவான பெருந்தேசிய சங்கிலித் தொடர் நிகழ்ச்சி நிரல் என்பதனை நாம் அறிவோம்.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இவ்வாறான சவால்கள் ஏற்கனவே அல்குர்ஆனிலும் ஸுன்னாஹ்விலும் உம்மத்திற்கு எதிர்வு கூறப்பட்டுள்ள சோதனைகள் என்பதனையும் அவற்றிற்கு எவ்வாறு உம்மத் முகம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதமான வழிகாட்டல்களும் அவ்வாறே சொல்லித்தரப்பட்டுள்ளன என்பதனையும் நாம் முதற்கண் ஈமானிய உணர்வுடன் பரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக எமது தனிப்பட்ட , குடும்ப, சமூக, தேசிய வாழ்வினை அதன் எல்லா துறைகளிலும் அரசியல், சமூக, பொருளாதார, சமய கலாசார வாழ்வியலை எல்லா மட்டங்களிலும் ஊர் மஹல்லா மட்டங்களில் இருந்து தொகுதி மாவட்ட மாகாண தேசிய மட்டங்கள் வரை தீவிரமான ஆனால் நிதானமான மீள்பரிசீலனை செய்தல் தீர்வுகளை நோக்கிய மூதலாவது படியாகும்.

நிச்சயமாக எவ்வாறு நாம் தனிநபர்களாக எமது சொந்த வாழ்வை, குடும்ப வாழ்வை, உறவு முறைகளை, செலவினங்களை, இருப்பு பாதுகாப்பை, கொடுக்கள் வாங்கல்களை, போக்குவரத்துகளை, பொறப்புக்களை கடமைகளை அன்றாடம் வாராந்தம் மாதாந்தம் வருடாந்தம் தனியாகவும் கூட்டாகவும் மீளாய்வு செய்து திட்டமட்டுக் கொள்கிறோமோ தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை சேவைகளை வளங்களை பெற்றுக் கொள்கிறோமோ அவ்வாறே ஒவ்வொரு மஹல்லா ஊர் மட்டத்திலும் கூட்டாக ஷுரா முறையில் எமது சமூக வாழ்வை கூட்டுப் போறுப்புடன் திட்டமிட்டுக் கொள்வது எமக்கு இஸ்லாம் சொல்லித்தரும் அதி உன்னதமான கட்டாயமான வழி முறையாகும்.

நாம் வாழுகின்ற தேசத்தைப் பொறுத்தவரை எமது குடிசனப்பரம்பல் எம்மைச்சூழ வாழும் பெரும்பான்மை சமூகங்கள், எமது அமைவிடங்கள், எமது சன்மார்க்க, சிவில், அரசியல் தலைமைகள், எமது புத்திஜீவிகள், எமது மஸ்ஜிதுகள், எமது வளங்கள், எமது பலம் பலவீனங்கள் என்பவை பிரதைசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டவைகளாகும்.

எனவே எமது அரசியல் சிவில் சன்மார்க்க தேசியத் தலைமைகளின் நெறிப்படுத்தல்களின் கீழ் ஊர் மட்டம் மாவட்ட மாகாண மட்டங்கள் முதல் தேசிய மட்டம் வரை சமூகத்தின் எல்லா தரப்புகளையும் உள்வாங்குகின்ற கலந்தாலோசனை (ஷுரா) கட்டமைப்புகளை எம்மை ஒருங்கிணைக்கும் பொறிமுறைகளை நாம் ஏற்படுத்தி அந்தந்த மட்டங்களிற்கான அழகிய கட்டுக்கோப்பான தலைமைத்துவக் கட்டமைப்புகளை தோற்றுவிப்பதே தீர்வுகளை நோக்கிய அடுத்தபடி தயார் நிலையாகும்.

ஷூராவின் முக்கியத்துவம்

நுபுவ்வத்திற்கு பிறகு இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நுபுவ்வத் சார் வாரிசுகள் எவரும் இருக்கவில்லை, அல்லாஹ்வின் நாட்டமும் அவ்வாறே இருந்தது, நபியவர்கள் (ஸல்) அவர்களது ஆண்வாரிசுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மீள் அழைத்துக் கொண்டான்.

சன்மார்கம் பூரணப்படுத்தப்பட்ட பின்னர் இறுதிநாள் வரைக்கும் வாழ்வின் சகல துறைகளுக்குமான ஆன்மீக அறிவியல் வழிகாட்டல்களை அல்குர்ஆனும் ஸுன்னாஹ்வும் கொண்டுள்ளன.

இந்த சன்மார்க்கம் முழு மனித குலத்திற்குமானது, இறுதி இறைதூதர் (ஸல்) அவர்கள் அகிலத்தார் அனைவருக்கும் அருட் கொடையாக அனுப்ப் பட்டவர்கள்.

நுபுவ்வத்திற்குப் பின்னர் உம்மத்துடைய விவகாரங்களை அவர்களுக்கு மத்தியில் நுபுவ்வத் ஒளியில் ஆய்வுகள் செய்து கலந்தாலோசனை செய்து முடிவகளை எடுத்து கையாள வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகவும் கட்டளையாகவும் இருந்து.

ஐவேளை தொழுகைகளுக்கும் மஸ்ஜிதில் தினமும் ஒன்று கூடுங்கள், வாராவாரம் ஜும்மாஹ்வில் ஒன்று கூடுங்கள், தொழுகையில் ஒரு இமாம் இருந்து வழிநடத்துவது போன்று ஏனைய விவகாரங்களிலும் ஒரு தலைமைத்துவ கட்டுக் கோப்பை கடைபிடியுங்கள் என்பதனை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களில் ஒரு கூட்டத்தினர் சன்மார்க்கத்தை ஆழமாக கற்கட்டும், இன்னுமொரு கூட்டத்தினர் நன்மையை ஏவி தீயதை தடுக்கட்டும், ஒரு கூட்டத்தினர் ஸகாத்தை சேகரித்து வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டும், இருப்பு பாதுகாப்பு விவகாரங்களில் நீங்கள் அவதானமாக ஆயத்தமாக இருந்து கொள்ளுங்கள் அவ்வாறான விடயங்களை ஆய்வு செய்து கலந்தாலோசனை செய்து தீர்மானங்களை எடுக்கின்ற தலைமைத்துவ கட்டுக்கோப்பை கடைப்பிடியுங்கள்.

உங்களுக்கு மத்தியில் பிளவுகளை பிணக்குகளை தவிர்ந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் தீனை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள், இருசாரார் பிளவுபட்டால் சமரசம் செய்து வையுங்கள், ஒருபிரிவினர் மற்றுமொரு பிரிவினரை ஏளனம் செய்யாதீர்கள் என சமூக கூட்டு வாழ்வின் கட்டுக்கோப்புகளை இஸ்லாம் அழகாக சொல்லித்தருகிறது.

நிச்சயமாக இத்தகைய அழகிய வாழ்வு நெறியை தனிமனிதர்களாக குடும்பங்களாக கிராமங்களாக நகரங்களாக தேசங்களாக உம்மத்தாக அமுலாக்கம் செய்வது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.

இத்தகைய கூட்டுப் பொறுப்பை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் எல்லா மட்டங்களிலும் “ஷுரா” எனும் அழகிய இஸ்லாமிய தலைமைத்துவக் கட்டமைப்பின் கட்டுக்கோப்பின் கீழ் மாத்திரமே அமுலிற்கு கொண்டுவர முடியும்.

ஒரு குடும்பத்தின் வாழ்வொழுங்கு கடமைகள் பொறுப்புக்கள் தங்களுக்கிடையே திட்டமிடப்படுவது போன்று தேவையான நிபனத்துவ ஆலோசனைகள் அவ்வப் பொழுது பெறப்படுவது போன்று ஒரு சமூகத்தினது வாழ்வொழுங்கும் மூலோபாய திட்டமிடல்களின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்.

தனித்து எம்மால் பயணிக்க முடியாது..

நாம் யாருக்கு பிள்ளையாக பிறந்தோம், எந்த வீட்டில், எந்த ஊரில், எந்த நாட்டில் பிறந்தோம், யார் எவருடன் வாழுகிறோம் என்பது எமது தெரிவாக இருக்கவில்லை, அதற்குப்பின்னால் அல்லாஹ்வின் விதி எனும் கழாவும், திட்டம் எனும் தக்தீரும் இருக்கின்றன.

ஆக நாம் பிறந்த வீட்டில்(பெற்றார், உடன் பிறப்புகள், உற்றார், உறவினர்) ஊரில் (அண்டை அயலவர், ஊர் மக்கள்) நாட்டில் ( சமூகம், இனமத மொழி வேறு பாடுகளுக்கு அப்பால் மக்கள்) எமக்குத் தரப்பட்டுள்ள வாழ்க்கை நிச்சயமாக சோதனைக்குரியது, வாழ்வும் மரணமும் ஒரு சோதனைக்களத்தின் ஆரம்பமும் முடிவுமாகும்.

வீட்டின் பால், ஊரின் பால், நாட்டின் பால் எம்மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகள் ஏராளம் இருக்கின்றன, குறிப்பாக முழு மனித வர்க்கத்திற்கும் அருட் கொடையாக அனுப்பப்பட்ட எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத்தினர் முழு மானுட வர்க்கத்திற்காகவும் வெளிக் கொணரப்பட்ட ஒரு சர்வதேச உம்மத்து என்ற வகையில் எமது வாழ்வு மகத்தான ஒரு தூது சார்ந்தது.

எனவே இந்த உம்மத்தின் பாலும் உலகத்தின் பாலும் எமது கடமைகளும் பொறுப்புக்களும் நுபுவ்வத்துடனும் கிலாபத்தடனும தொடர்புபட்டது, நாம் பெரும்பான்மையாக வாழுகிறோமா? சிறுபான்மையாக வாழுகிறோமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் இனம் மதம் மொழி நிறம் கடந்த மகத்தான ஒரு பணி எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.

நாம் பிறந்த தேசத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் நேரிய வாழ்வு நெறியில் உயரிய ஒழுக்க பண்பாடுகளில், நீதி நேர்மை சமாதானம் சமத்துவம் போன்ற உயரிய மானுட நாகரீக பண்பாடுகளில் சிறப்புற்று வாழ்வதில் இன்புறும் ஒரு தன்னலமற்ற ஒரு சமூகமாக நாம் வாழக் கடமைப்பட்டுள்ளோம்.

இங்கு நாம் புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கின்ற ஒரு அடிப்படை உண்மை இருக்கிறது, அதாவது நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதுவும் நீதி அநீதிக்காக போராடுவதும், சமூக பொருளாதார, அரசியல், கலை கலாசார தீமைகளை, அக்கிரமங்களை களைவது ஒரு உள்வீட்டு உம்மத்து சார்ந்த சமூகம் சார்ந்த விவகாரமாக மாத்திரமே பார்க்கப்படுகின்றமை அல்லது அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படாமை மிகப்பெறிய வரலாற்றுத் தவறாகும்.

ஷஹாதா கலிமாவை கூறியதற்கு பின்னரான ஹிதாயத் இஸ்லாஹ் பற்றியே இதுவரைகாலமும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், உயரிய இஸ்லாமிய ஆன்மீக வாழ்வை, தனிநபர் ஒழுக்க விழுமியங்களை, அழகிய குடும்ப வாழ்வை, சமூக கட்டுக்கோப்பை, அரசியல், பொருளாதார கலை கலாசார கோட்பாடுகளை விழுமியங்களை சந்தைப்படுத்துவதை நாம் தவிர்ந்திருக்கின்றோம்.

எங்களிடம் ஏனைய சமூகங்கள் பார்த்து பயப்படும் எந்தவொரு அம்சமும் கிடையாது மாறாக ஷைத்தானிய தஜ்ஜாலிய பிர்அவுனிய ஜாஹிலிய்ய சக்திகள் பார்த்து பொறாமைப்படுகின்ற அதி உன்னதமான செல்வம் அழகிய வாழ்வு நெறிதான் இருக்கிறது, சத்தியம் இருக்கிறது, சத்தியத்தின் காவலன் எம்மோடு இருக்கிறான்.

மேற்படி தேசிய பிராந்திய சர்வதேசிய பிர்அவுனிய தஜ்ஜாலிய ஷைத்தானிய ஜாஹிலிய்ய சக்திகளிடமிருந்து தேசத்தை மக்களை காப்பாற்றும் போராட்ட வடிவங்களில் தான் இந்த உம்மத்தின் இருப்பும் பாதுகாப்பும் அமைதி சமாதானமும் இருக்கிறது என்பதனை காலாகாலமாக நாம் உணரத் தவறியுள்ளோம்.

கோளாறு எங்கே இருக்கிறது, நாம் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் தான் பாரிய தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறோம்…

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles