Monday, October 18, 2021

ஹிலால் விவகாரம் : தீர்வுகளை நோக்கி சில அவதானங்கள். (பகுதி 1)

ஏற்கனவே இது தொடர்பாக எழுதிய ஆக்கங்களிற்கு மேலதிகமாகவே இதனைப் பதிவு செய்வதால் சந்தேகங்கள் ஏற்படின் அவற்றையும் வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இம்முறை ஷவ்வால் மாதம் உள்நாட்டில் (வெற்றுக்கண்ணால்) பிறை பார்ப்பதில் குளறுபடி தோன்ற வாய்ப்புள்ளதையும் அதற்கான தீர்வையும் மே மாதம் நடுப்பகுதியிலேயே மிகவும் தெளிவாக நான் எழுதியிருந்தேன், அந்த அடிப்படையில் தான் ஜம்மியத்துல் உலமா சபை தலைவரின் முன்கூட்டிய அறிவிப்பையும் மார்க்கத் தீர்ப்பையும் முன்னேற்றமான ஒரு நகர்வென வரவேற்றுமிருந்தேன்.

இனி, தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சைகளை நாம் கவனமாக அவதானிக்க வேண்டும், இங்கு பலரும் பல்வேறு கருத்துக்களை ஆய்வுகளை வரலாற்றுப் பின்னணிகளை வெவ்வேறு  நிலைப் பாடுகளை பேசுவதால் பொது மக்கள் எப்படிப் போனாலும் உலமாக்களும் கல்விமான்களும் கூட குழம்பிப் போயுள்ளார்கள்.

இலங்கை ஹிலால் கமிட்டியின் தெளிவான நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்ட தவறை மாத்திரமே நாம் முதலில் அவதானிக்க வேண்டும் அங்கிருந்து தான் சிக்கலின் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்க வேண்டும், தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினைக்கு சமூகத் தலைமைகள் காண விழைகின்ற தீர்வு  முயற்சிகளை வரவேற்று விரிசல்கள் மென்மேலும் விரிவடைந்து செல்லாது முற்றுப் புள்ளி வைப்பதற்கே -தனிப்பட்ட நிலைப்படுகளிற்கு அப்பால் நின்று- நாம் முயற்சிக்க வேண்டும்.

அடுத்தடுத்த நிலைப் பாடுகளை கொண்டுள்ள தரப்புக்கள் தற்போதைய சர்ச்சைகளை தமக்குச் சாதகமாக தீவிரமாக பயன்படுத்துவதில் அவர்கள் பக்க நியாயங்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து ஒட்டு மொத்த சர்வலோக பிரச்சினைகளையும் முடிவிற்கு கொண்டு வந்து விடலாம் என்று எவராவது எதிர்பார்ப்பதாயின் நிச்சயமாக ஏமாற்றமே காத்திருக்கிறது.

இலங்கையின் ஹிலால் கமிட்டியின் நிலைப்பாடு சர்வதேசப் பிறையோ, மக்கத்துப் பிறையோ, பிராந்தியப் பிறையோ, வான சாஸ்திரப் பிறையோ, அல்லது வானியல் தொழில் நுட்பப் பிறையோ அல்ல மாறாக வெற்றுக் கண்ணால் இலங்கையில் பிறைகண்டு நோன்பு நோற்றல் அல்லது பெருநாள் கொண்டாடுதல் என்பதாகும்.

ஒவ்வொரு மாதமும் 29 ஆம் நாள் இந்த நிலைப்பாட்டின்படி இலங்கை ஹிலால் கமிட்டி பிறை பார்க்கிறது, அந்த அடிப்படையில் ரமழான் மாத தலைப் பிறையை அவர்களது நாட்காட்டியின் படி  ஷஃபான் மாதம் 29 ஆம் நாள் பார்க்கிறார்கள், அதாவது மே மாதம் (16 ஆம் திகதி மாலை) நாடுமுழுவதும் மேக மூட்டம் காரணமாகவோ அல்லது பிறை தோன்றவில்லை என்பதனாலோ ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்வதாக முடிவை எடுத்து, மே மாதம் 18 ஆம் திகதி ரமழான் மாதத்தை ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களது உள்நாட்டுப் பிறை நிலைப்பாட்டின்படி அது தவறு இல்லை, ஆதாரமும் அந்த நிலைப் பாட்டிற்கு சாதகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், ஆனால் ரமழான் மாத முடிவில் ஷவ்வால் பிறை பார்க்கும் தினத்தை அவர்கள் ரமழான் முதல் தினத்தை தீர்மானித்த அதே தினத்தில் முடிவு செய்தமை தான் அவர்கள் இழைத்த முதலாவது தவறு ஆகும்.

ஏனென்றால் பிறை இருந்து மேகம் அதனை மறைத்திருந்தால் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து ரமழான் முதலாவது நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள் என்ற சலுகை அடுத்த மாதத்தில் (ஷவ்வால்) ஒரு நாளை தள்ளி ஆரம்பிப்பதற்கான நியாயமாக கருதப் பட முடியாது.

ரமழான் தலைப்பிறை மேக மூட்டத்தின் காரணாமாக தென்படவில்லை என்றிருந்தால் இரண்டாம் பிறையில் இருந்து நோன்பை ஆரம்பிற்கே சலுகை வழங்கப் பட்டுள்ளதனை நாம் மறந்து விடுகிறோம்.

அவ்வாறு நாம் நோன்பை ஆரம்பிக்கும் நாளில் தென்படும் பிறை ஒரு சில  நிமிடக் கணக்கில் அன்றி அரை மணித்தியாலம் ஒரு மணித்தியாலம் இருக்குமாயின் அது இரண்டாம் பிறையாகவும் இருக்கலாம் என்பதனை எம்மால் கணிப்பிட்டுக் கொள்ள முடியும் அவ்வாறு நாம் கணிப்பிட்டுக் கொண்டால் ஷவ்வால் பிறையை ரமழான் மாதம் 28 ஆம் நோன்பை நோற்றவர்களாகத் தான் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் ரமழானில் ஒரு திகதியை நாம் ஆரம்பத்தில் இழந்திருக்கின்றோம்.

மேலே சொன்ன விடயத்தை கணிப்பீடு செய்வதற்கோ பிறை பார்ப்பதற்கோ நாம் எத்தகைய வானியல் தொழில் நுட்பத்தையோ அறிவையோ பயன்படுத்தவில்லை வெற்றுக் கண்ணால் பார்த்து மேற்கொள்கின்ற கணிப்பீட்டை ஊர்ஜிதப் படுத்தலை மாத்திரம் தான் அடிப்படியாகக் கொண்டுள்ளோம்,

ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்பகமான வானியல் கணிப்பீடுகளை சாஸ்திரங்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் என்றும் உள்நாட்டுப் பிறை பார்க்கும் நாடுகளில் தீவிரமான கொள்கையாக கடைப்பிடிக்கவுமில்லை, பல அரபு நாடுகளில் பிராந்தியத்தில் பிறை தெரிவதற்கான வானியல் எதிர்வு கூறல்களை மற்றும் தொலை நோக்கிகளை ஓரளவிற்கு உபயோகிக்கவும் செய்கின்றனர்,  அவர்களும் உள்நாட்டில் பிறைகண்டு நோன்பு நோற்றல் பெருநாள் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டினைத் தான் கொண்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இலங்கை ஹிலால் கமிட்டியிற்கு நம்பகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வானியல் நிபுணர்களின் சில எதிர்வு கூறல்களை ஓரளவு கவனத்தில் எடுப்பதற்கான புரிதலுடன் பிராந்தியத்தில் பிறை தென்படக் கூடிய வாய்ப்புக்களை இலங்கை ஹிலால் கமிட்டி கவனத்தில் எடுத்து வருகின்றது, உண்மையில் அது வரவேற்கத் தக்க ஒரு முன்னேற்றமாகும்.

அத்தகைய சாத்தியப் பாடுகளையும், ரமழான் முதலாம் நாள் தென்பட்ட பிறையின் அளவு (பருமன்), மற்றும் அது நிலைத்திருந்த கால இடைவெளி என்பவற்றையும் கருத்தில் கொண்டு  இம்முறை நாம் ரமழான் மாதத்தை இரண்டாம் நாளே ஆரம்பம் செய்திருக்கின்றோமா? என்ற பலமான சந்தேகம் உள்நாட்டில்  எழுந்தது.

அதனால்தான் 28 ஆம் நோன்பை நோற்ற நிலையில் எமக்கு ஷவ்வால் பிறை தென்படலாம் என்ற சந்தேகமும்  வலுக்க ஆரம்பித்தது, அவ்வாறான நிலை ஏற்படின் அதற்கான மார்க்கத் தீர்ப்பையும் ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிழ்வி முப்தி அவர்கள் அல்லாஹ்வை பயந்தவர்களாக அறிவிப்பதாக வெளியிட்டுமிருந்தார்.

உண்மையில் சாதரண வெற்றுக் கண் கணிப்பீடுகளின் படியும் நம்பகமான வானியல் அறிஞர்களின் கணிப்பீடுகளின் படியும் 28 ஆம் நோன்பு தினமன்று ஷாவ்வால் பிறை தென்பட வாய்ப்பிருந்தும் அந்த தினத்தை ஷக்குடைய தினமாக கருதியோ அல்லது விதிவிலக்கான மேலதிக பேணுதலிற்காகவோ ஏன் ஹிலால் கமிட்டி கொழும்பிலும்  நாடுமுழுவதும் தமது பொறிமுறையை வழமைபோல் முறையாக நிதானமாக இயக்க வில்லை என்பது தான் இம்முறை ஏற்பட்ட பிரதான கேள்வியும் இரண்டாவது தவறுமாகும்.

எனவே இடம்பெற்றதாக கருதப்படும் ஒரு தவற்றை அல்லது சங்கடமான நிலைமையினை முற்று முழுதுமாக மறைத்து தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக ஏனைய நிலைப்பாடுகளை உடையவர்களை அல்லது தமது சமூக அந்தஸ்த்திற்கு சவாலாக வந்து விடுவார்களோ என்று தாம் வீணாக அச்சம் கொண்டுள்ளவர்களையோ குற்றம் சாட்டி  தாம் தப்பித்துக் கொள்ள ஒரு சில தரப்புக்கள் முனைந்தமை கவலைக்குரிய விடயமாகும்.

இம்முறை ஷவ்வால் மாத தலைப் பிறை உள்நாட்டு ஹிலால் கமிட்டியிற்கு 15 ஆம் திகதி வெள்ளியன்றே ஊர்ஜிதமாக தெரிந்திருக்கிறது 14 வியாழக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதாக கூறப்பட்ட சாட்சிகள்  யாவுமே அவர்களின் நியாயங்களின் படி நிராகரிக்கப் பட்டன.

இப்பொழுது எம்முன்னுள்ள கேள்வி யாதெனில் அன்று 15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பிறை தெரியாதிருந்தால் நாம் சனி நோன்பு நோற்று ஞாயிறு பெருநாள் கொண்டாடி இருத்தல் வேண்டும் அல்லவா? ஏனென்றால் ரமழான் மாதத்தை 30 நோன்புகளுடன் நாம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

அப்படியாயின், நாம் அடுத்த ஹிஜ்ரி மதமான துல் கஃதா பிறையை உள்நாட்டு ஷவ்வால் மாதம்  29 ஆம் நாள் பார்ப்பதாயின் (முன்னிரு மாதங்களும் மேக மூட்டத்தின் காரணமாக தள்ளிப் போன இரண்டொரு நாற்களையும் அடுத்தடுத்த மதங்களில் தள்ளித் தள்ளி முன் கொண்டு சென்றால் துல்ஹஜ் மாதத்திலும் எமக்கு இதே குழறு படி தொடரும் என்பதில் சந்தேகமில்லை வழமையாக அரபா நோன்பு நோற்கும் நாம் இவ்வாறு சிக்கல் நிலைகளை எதிர் கொள்கின்றோம்.

கடந்த ஆறு மாதங்களாக ஹிலால் கமிட்டி பிறை காண்பதற்காக கூடிய பொழுது நான்குமாதங்களில் பிறையை மேகம் மூடி இருந்திருக்கிறது அல்லது உதயமாகவில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் மாதங்களை 30 நாட்களாக பூர்த்தி செய்திருக்கின்றோம். அவ்வாறாயின் உண்மையில் பிறை காணாத ஒவ்வொரு மாதமும் 30 நாட்களில் தானா நிறைவுற்றன என்பதனை ஊர்ஜிதம் செய்துகொள்ள இரண்டாம் மூன்றாம் பதினான்காம் பிறைகளை அல்லது வானியல் சாஸ்திரங்களை ஏன் நாம் பயன்படுத்துவதில்லை?

அந்த விவகாரம் அவ்வாறு இருக்க:

சர்ச்சைக்குரிய  ரமழான் நோன்பு  28 அன்று  அதாவது  14 ஆம் திகதி வியாழக் கிழமை சந்தேகத்திற்குரிய பிறை பார்ப்பதற்காக பெரியபள்ளியில் மாத்திரம்  நேர காலத்துடன் கூடிக் கலைந்த கொழும்பு மைய ஹிலால் கமிட்டி  அன்று பின்னிரவு அதே பள்ளியில் கூடிய பொழுது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் குறித்து சமூகம் மிகவும் கவலையும் கரிசனையும் கொண்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பெருநாள் தினத்தை பெரிய பள்ளிவாயலை அண்டியுள்ள மஹல்லா வாசிகளோ ஜவுளி வர்த்தகர்களோ அல்லது இறைச்சிக் கடைக்  காரர்களோ அல்லது வேறு ஏதேனும் பின்புலங்கள் உள்ள குழுக்களோ பள்ளியில் திரண்டு கூடி கூச்சலிட்டு அடிதடிகள் அடாவடித் தனங்களினை அரங்கேற்றித் தான் தீர்மானித்தல் வேண்டுமா? என சமுதாயம் வெட்கித் தலை குணிந்து கேட்கின்றது?

முடிவை மாற்றாதே, முடிவை மாற்றாதே , முடிவை மாற்றாதே?  நோன்பு, நோன்பு, நோன்பு என்றெல்லாம் கத்திக் கூக்குரலிட்டு மஸ்ஜிதுக்குள்ளும் வெளியிலும் களேபர நிலையை தோற்றுவித்தவர்கள் யார்? அவர்கள் பெரிய பள்ளிவாயளிற்கு கட்டுப் பட்டவர்களா? கட்டுப் படாதவர்களா ? அன்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் திணைக்கள அதிகாரிகள் யாரால் சுற்றி  வளைக்கப் பட்டனர், ஜம்மிய்யாஹ்வின் தலைவரை சுற்றி வளைத்து செல்பிகள் எடுத்த வண்ணம் குழுமியிருந்தவர்கள் யார் எவர்..? இவ்வாறு தானா முஸ்லிம் உம்மத்தின் அதிமுக்கியய தீர்மானங்கள் எய்தப்படுதல் வேண்டும்!?

உண்மையில் முஸ்லிம்களது இருபெருநாட்கள் ரமழான் தினங்கள், ஹஜ், மஸ்ஜித் விவகாரங்கள், முஸ்லிம்களது வக்பு சார் விவகாரங்கள் யாவும் முஸ்லிம் சமய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முகாமைத் துவத்தின் கீழ் வருவது போல் ஹிஜ்ரி பிறை விவகாரமும் முறையான சட்ட ஏற்பாடுகளுடன் அதன் சட்ட வரம்பிற்கும் ஜம்மியதுல் உலமா உற்பட சமூக பிரதிநிதிகளை வானியல் அறிஞர்களை கொண்ட முற்றுமுழுதும் சுயாதீனமான குழுவின் நியாயதிக்கத்திற்குள் கொண்டு வரப்படுவதே இன்றைய உடனடித் தேவையாகும். அந்தக் குழுவில்   கொழும்பு பெரியபள்ளிவாயளின்  பாரம்பரிய பிரதிநிதித்துவம் இருப்பதிலும் ஆட்சேபனையுமில்லை.

(இதன் சாதாக பாதகங்கள் சமூகத் தலைமைகளினால் ஆராயப் பட்டு அங்கீகரிக்கப் படின் மாத்திரமே – இது எனது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளிற்கு இடமுள்ள ஒரு அபிப்பிராயம் மாத்திரமே)

தொடரும்…..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles