Tuesday, October 19, 2021

யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ?

யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ?

இந்தக் கேள்வியை புரிந்துகொள்ள தீன், ஷரீஆ, பிக்ஹு போன்ற அடிப்படை விடயங்களில் அல்லது பிரயோகங்களில் எமக்கு ஆழமான தெளிவு அவசியமாகும், அதாவது  அல்-இஸ்லாம் அல்லாஹ்வால் பிரபஞ்சத்திற்கென தெரிவான “தீன்” எனும் நிலையான சன்மார்க்கமாகும்.

“ஷரீஅத்” என்பது மனித வர்க்கத்தின் பரிணாமத்திற்கு ஏற்ப   –அடிப்படை கோட்பாடுகள் தவிர்ந்த ரஸுல்மார்களூடாக அனுப்பப்பட்ட இறை தூதுகளின் ஒளியில் காலத்திற்கு காலம் வேறுபட்ட சட்ட வரம்புகளை குறிக்கும் சட்டங்களாகும்.

இறுதி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத்தாகிய எமக்கு “ஷரீஅத்” அல்குர்ஆன் அல்-சுன்னாஹ் எனும் மூலாதாரங்களினூடாக நிறைவு செய்யப் பட்டிருக்கின்றது.

இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்வி தீனையோ, ஷரீஆவையோ பற்றியதல்ல மாறாக கால இட சூழல் மாற்றங்கள் தேவைகளிற்கேற்ப “இஜ்திஹாத்” ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டிய பரப்புகளைக் கொண்ட பிக்ஹு துறை சார்ந்ததாகும்.

எனவே மேற்படி பிரயோகங்களின் தெளிவு இல்லாதவிடத்து “பிக்ஹு”,“இஜ்திஹாத்” எனும் ஆய்வுப் பரப்பிற்குள் பேசப்படுகின்ற விடயங்களை சிலர் ஷரீஆவில் கைவைப்பதாக அல்லது தீனில் புத்துப்புது விடயங்களை புகுத்துவதாக பாமர மக்களை மாத்திரமன்றி படித்தவர்களைக் கூட குழப்பி விடுவதற்கு இடமுண்டு, அதுவே இன்று மக்களை பல்வேறு விடயங்களில் சர்ச்சைகளிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இறுதி இறைதூதர் (ஸல்) அவர்களது வபாத்திற்குப் பிறகு சஹாபாக்கள் குலபாஉ ராஷிதூன் காலத்திலும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து வந்த தாபியீன்கள் உமையாக்கள் அப்பாசியர்கள் காலங்களில் இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை மூலாதாரங்களாகிய அல்குர்ஆன் அல்-சுன்னாஹ் ஆகியவற்றின்  ஒளியில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாத் ஆய்வுகள் கால சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப் பட்டிருப்பதனை நாம் காணுகிறோம், அதனையே நாம் பிக்ஹு கலையின் தோற்றமாகவும் வளர்ச்சியாகவும் கருதுகிறோம்.

காலவோட்டத்தில் இஜ்மாஉஸ் ஸஹபா, கியாஸ், உருஃப், இஸ்திஹ்சான், இஸ்தின்பாத், அல்-மஸாலிஹ் அல்-முர்ஸலஹ், ஸத்துஸ்தராயிஹ் என பல்வேறு ஆய்வுக் கருவிகளை கண்டறிந்து பல்வேறு நுட்பமான   அணுகுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதுகளின் வாயிலாகவே பிரபலமான மத்ஹபுகள் தோன்றின.

அதேவேளை பிரபலமான மத்ஹபுகளின் இமாம்களிற்குப்  பின்வந்த மத்ஹப் சார்ந்த இமாம்கள் கூட காலவோட்டத்தில் கருத்து வேறுபாடுகளுடன் கூடிய ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதனையும் அவற்றிலும் பெரும்பானமையினர் அபிப்பிராயம், மிக ஆதாரபூர்வமான அபிப்பிராயம் அல்லது அபூர்வமான, அரிதான அபிப்பிராயம் என்றெல்லாம் பிரயோகங்கள் இருப்பதனை நாம் அறிவோம்.

குறிப்பிட்ட ஒரு காலகட்டத்துடன் இஜ்திஹாதுடைய வாயல் மூடப்பட்டு விட்டது, நான்கு இமாம்களின் மத்ஹபுகளிற்கு வெளியே செல்லாது கண்டிப்பாக பின்வருவோர் சகலரும் “தக்லீத்” செய்ய வேண்டும் என்ற அபிப்பிராயம் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களிற்கு முன்னர் அதிகம் பேசப்பட்டாலும் யுகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப உலகின் பல பாகங்களிலும் பாத்வா மற்றும் பிக்ஹு கவுன்ஸில்கள் இருப்பதனையும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதனையும் நாங்கள் அறிகிறோம்.

இன்றைய இஸ்லாமிய உலகில் பிக்ஹு கலையின்  வளர்ச்சியின் பயனாக அடிப்படை மூலாதரங்களிற்கு முரணில்லாத வகையில் பிரபலமான மத்ஹபுகளுடைய கருத்துக்களையும் ஒப்பீடு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதனையும் அவற்றிற்கிடையில் ஆதாரங்களில் பலமான கருத்துக்கள் பிரயோகங்களிற்காக பெற்றுக் கொள்ளப் படுவதனையும் நாம் அறிவோம்.

இஸ்லாமிய பிக்ஹுக் கலை பெரும்பாலும் இஸ்லாமிய கிலாபாவின் நிழலில் அறிமுகமாகி அமுலாக்கப் பட்டு வந்தாலும் காலவோட்டத்தில் முஸ்லிம்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து சிறுபான்மையினராக வாழுகின்ற சூழலில் காலாகாலமாக இஸ்லாமிய அறிஞர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதனை காண முடிகிறது.

யுகத்தின் சவால்களிற்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் யுகத்தின் பரிபாஷைகளில் சன்மார்க்க வழிகாட்டல்களை மார்க்கத் தீர்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் மகாசிதுஸ் ஷரீஆ எனும் இஸ்லாமிய ஷரீஆவின் மூலாதார அடிப்படை இலக்குகள், பெறுமானங்கள் ஆரம்பகால பிக்ஹுகலையின் அடிப்படை உஸுல்களின் ஒளியில் இன்று பரந்த ஆய்வுப் பரப்பாக வளர்ந்துவருவதனை நாம் காணுகிறோம்.

அறபு இஸ்லாமிய உலகிற்கு வெளியில் மேலைத்தேய கீழைத்தேய நாடுகளில் எல்லாம் முஸ்லிம்கள் சிற்பனமயினராக வாழுகின்ற புதிய கள நிலவரங்களில், நவீன விஞ்ஞான தொழில் நுட்ப யுகத்தில் இஸ்லாமிய பிக்ஹுக் கலையை பண்டைய மத்ஹபுகளுடன் சுருக்கிக் கொள்தல் அல்லது அவற்றின் வரையறைகளுக்குள் மாத்திரம் வலிந்து நின்று தீர்ப்புக்களை கூற முனைவது அல்லது கட்டாயப் படுத்துவது இஸ்லாமிய ஷரீஆவிற்கும், பிக்ஹுக் கலைக்கும், இஜ்திஹாத் எனும் ஆய்வு முயற்சிகளுக்கும் இழைக்கும் மிகப் பெரிய அநீதியாகும்.

உண்மையில் இத்தகைய இஜ்திஹாத் எனும் பரந்த பரப்பினுள் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் நாம் எமது முன்னோர்களான இமாம்களை மத்ஹபுகளை அல்லது மத்ஹபுடைய இமாம்களை  பிக்ஹுக் கலைக்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய வரலாற்றுப் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடுதலோ அல்லது அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதோ பிக்ஹுக் கலைக்கு நாம் இழைக்கின்ற ஆநீதியுமாகும் என்பதனையும் ஆழமாக கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

உண்மையில், நேரடியாக அல்-குர்ஆன் சுன்னஹ்விடம் மீளுவோம் மத்ஹபுகளை நிராகரிப்போம் என்று மேலோட்டமான வாதங்களினை முன்வைப்போர்கள் கூட நாளுக்கு நாள் தங்களை அல்லது தங்கள் பிரதான குருநாதர்களை “தக்லீது” செய்கின்ற பொதுமக்களிற்கான புதிய சிந்தனைப் பள்ளிகளையே தோற்றுவித்து வருகின்றார்கள் என்றே கூறுதல் வேண்டும்.

தங்களிடம் தீர்ப்புக்கள் கோரப்படுகின்ற பொழுது அவர்களும் தங்களுக்கென பிரத்தியேகமான “இஜ்திஹாத்” ஆய்வுக் கருவிகளையே தோற்றுவித்து வருவதனை அல்லது கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளதனை நாம் அவதானிக்கின்றோம். ஏனெனில் பாமர மக்களைப் பொறுத்தவரை அவர்கள் துறைசார் அறிஞர்களின் வழிகாட்டல்களைப் பெற வேண்டிய கட்டாயத் தேவை சகலரும் அறிந்த உண்மையாகும்.

தொடரும்…..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles