ஆரம்ப கட்ட விசாரணைகளை அறிந்தவர்கள் அவசப்பட வேண்டாம்!
மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்களைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினைத் தணிப்பதற்கு சமூகத்தின் அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சமூக ஊடகங்களில் முன்யோசனைகள் இன்றி வெளியிடப்படும் கருத்துக்கள் எதிர்வினைகளை நாமாகவே வரவழைத்துக் கொள்ளும் வகையில் காணப்படுகின்றன.
குறிப்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் குறித்த தகவலறிந்த சிலர் விசாரணைகள் முடியுமுன் முடிவுகளிற்கு வந்து கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர், குறிப்பிட்ட விடயத்தில் இல்லாவிட்டாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்கள், அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட விதங்கள் குறித்தெல்லாம் பல தரப்புக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
தற்பொழுது முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சமூகத் தலைமைகளின் முனைப்புக்களினால் பொலிஸ்மா ஆதிபரின் விஷேட பணிப்புரையின் பேரில் கொழும்பிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள சிறப்புக் குழு ஒன்று அங்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
எனவே, விசாரணைகள் முடிவுறும் வரை சட்டத்தை வேறு சக்திகள் எவ்வாறு கையிலெடுக்க கூடாதோ அவ்வாறே தீர்ப்பு வழங்குகின்ற முடிவுகளை எடுக்கின்ற அதிகாரத்தையும் நாம் கையிலெடுக்க முனையக் க்கூடாது.
அவ்வாறு உஷார் மடையர்களாக ஆத்திர அவசரத்தில் நாம் செயற்படுகின்ற பொழுது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த பாடுபடுகின்ற தரப்புக்களிற்கு பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிஎற்படுவதொடு சிலவேளைகளில் நிலைமைகள் கட்டுக் கடங்காமல் சீர்குழைந்து விடவும் இடமிருக்கிறது!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்கள் நிரபராதிகளா?, தூண்டப்பட்டவர்களா?, பலவந்தப் படுத்தப் பட்டவர்களா?, அல்லது குற்றவாளிகள் தானா ? என்பதனைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை அவர்கள் விடயத்தில் எடுப்பதற்குரிய அவகாசத்தை சட்ட ஒழுங்கு நீதித்துறைக்கும் சமூகத் தலைமைகளிற்கும் வழங்குவதே அறிவு பூர்வமான ஆரோக்கியமான சமயோசிதமான அணுகுமுறையாகும்!
பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை:
இந்த நடவடிக்கைகளால் மீளவும் கண்டி பகுதிகளில் இன வன்முறைக்கு திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எந்த அசம்பாவிதமும் இடம்பெறாமல் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கண்டி மற்றும் மாவனெல்லை பகுதிகளில் தேவையான பாதுகாப்புக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் உதவிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணவீரவின் கீழ் விஷேட பாதுகாப்பு கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இந்த புத்தர் சிலை உடைப்பு விவகாரங்கள் தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழான சிறப்புக்குழு கண்டி மற்றும் மாவனெல்லை நோக்கி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (விடிவெள்ளி)
செய்தி:
கடந்த 27.12.2018 மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்றையும் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த வேளையிலேயே பிடிபட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர்கள் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (டெய்லி சிலோன்)
ஏனைய தகவல்கள் :
மேற்படி சம்பவம் தொடர்பாக தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் மௌலவி இப்ராஹீம் அவர்கள் ஒரு குரல்பதிவை தாய் டி,வீ இற்கு வழங்கியுள்ளார், சம்பவத்துடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ள தனது மகன்மார் உற்பட ஏனைய இளைஞர்களை தனிப்பட்ட முறையில் அறிவதாகவும் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் ஏதோ ஒருவகையில் அவர்கள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறி அவர்களுக்காக பிரார்த்திக்கின்றார்.
தகவல்களை தீர விசாரிக்காது கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப் படும் விசாரணைகளுக்கு தான் முழுமையாக் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தலைமறைவாகி உள்ளவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதே உணமைகளை கண்டறிந்து உரிய தரப்புக்கள் யாராயினும் தண்டிப்பதற்கும் அல்லது நீதி வழங்குவதற்குமான ஒரே வழிமுறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மௌலவி இப்ராஹீம் ஏற்கனவே ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்ததாகவும் அவரது தீவிர போக்குகளின் காரணமாக அமைப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாகும் கூறப்படுவதாலும் அவர் ஜமாத்தின் முன்னாள் அமீர் ஷெய்க் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுடைய சகோதரன் என்பதாலும் அவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஜமாத்தே இஸ்லாமி அறிக்கை:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய நிகழ்வை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் இணக்கப்பாட்டைத் தோற்றுவிக்க சமூக நிறுவனங்கள் அயராது முயற்சித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய இழிவான செயல்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்.
சிலையைச் சேதப்படுத்தியமை தொடர்பில் மாவனல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல சமூகத் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் மாவனல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இதனைப் பின்னணியாகக் கொண்டு வீண் புரளிகளைப் பரப்பும் வேலைகளில் ஒரு சிலர் பொறுப்பற்ற விதமாக ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கது.
முன்னெப்போதையும் விட சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு வலியுறுத்தப்பட வேண்டிய இக்காலகட்டத்தில் இது போன்ற நாசகார வேலைகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேட்டுக் கொள்கிறது.
ஊடகப் பிரிவு – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி (27.12.2018)
விசேட உயர்மட்ட கூட்டம்
மாவனெல்லையில் இனங்களுக்கிடையில் அசாதாரண நிலை உருவாகாமலிருப்பதற்காக நேற்றுக் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவனெல்லை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் கபீர் ஹாசிமும் கலந்து கொண்டார். மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், விசேட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவனெல்லை பிரதேச செயலாளர், சர்வ மதத் தலைவர்கள், மாவனெல்லை பிரதேசத்தின் பள்ளி வாசல்களின் நிர்வாகிகள் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள், பன்சலையின் பௌத்த குருமார்கள் என்போர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேசத்தின் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரியுமாறும் பொலிஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மதத்தினை நிந்திக்கும் இவ்வாறான செயல்கள் தனிப்பட்டவர்களினாலே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை. இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை இனங்காண பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக முஸ்லிம்கள் தரப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டதாக ஹிங்குள பள்ளிவாசல் தலைவரும் மாவனெல்லை பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான ஹமீத் ஏ.அஸீஸ் தெரிவித்தார். (விடிவெள்ளி)
தேசிய ஷூரா சபை :
சம்பவங்கள் இடம்பெற்றதை யடுத்து தேசிய ஷூரா சபை குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு களநிலவரங்களை அவதானித்து உண்மைமைத் தன்மைகளை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு, முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி இதுவரை பல்வேறு தரப்புகளுடனும் உறுப்பு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறது.
உலமா சபையின் அவசர கூட்டம்
புத்தர் சிலை உடைப்பு தொடர்பாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நேற்று ஆராய்ந்தது, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய உலமாசபை நேற்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
நாட்டில் இனக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சகவாழ்வினை அழிவுக்குள்ளாக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என உலமா சபை கோரியுள்ளது என உலமா சபையின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்தார். (விடிவெள்ளி)
இன்ஷா அல்லாஹ், தொடரும்….