Monday, December 9, 2024

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசலைகள் இயங்க வேண்டுமா ?

இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலைகள் இருப்பதுவும் அதேபோன்று நோன்பு காலத்தில் அவற்றிற்கு விடுமுறை வழங்கப் படுவதும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் கடந்த காலங்களில் வென்றெடுத்த உரிமைகள் அல்லது சிறப்புச் சலுகைகள் என்று குறிப்பிடலாம்!

இலங்கையில் சமூக ரீதியிலான பாடசாலைகள்:

பல்லின பல்மொழி பல் சமய கலாசார சூழலில் வாழ்வின் ஆரம்ப பருவத்தில் சமய கலாசார தனித்துவங்கள் பேணி கல்வி கற்பதற்குரிய சூழல் அவசியம் என்பதனை அன்றைய தலைமைகள் உணர்ந்ததனால் அவ்வாறான சிறப்புச் சலுகைகள் பெறப்பட்டு அவை அந்தந்த சமூகங்களின் தனித்துவத்தின் அடையாளமாகவும் கருதப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

என்றாலும் இவ்வாறான தனித்தனியான சமூக ரீதியிலான, மொழி ரீதியிலான பாடசாலைகள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதோடு புரிந்துணர்வின்மைக்கும் வழி சமைத்துள்ளதாக கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்தமை நாம் அறிந்த விடயமாகும்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனியான பாடசாலைகள் இல்லாத பிரதேசங்களில் நகர்ப்புறங்களில் அவர்கள் ஏனைய சமூகப் பாடசாலைகளுக்கும் சென்று கற்கின்றதனையும் காண்கிறோம், அவ்வாறு என்தொவொரு அரச பாடசாலையிலும் எந்தொரு இலங்கைப் பிரஜைக்கும் கற்கின்ற உரிமையும் இருக்கின்றது.

கடந்த காலங்களில் இன மத மொழி ரீதியிலான பாடசாலைகள் ஒழிக்கப் படவேண்டும் என்ற ஒரு கோஷமும் முன்வைக்கப்பட்டது, ஆனால் தாய்மொழி எந்த மொழியோ அதில் கற்பிக்கப் படவேண்டிய தேவை இருப்பதால் மொழி ரீதியிலான பாடசாலைகளை ஒழிப்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமெனவும் அவ்வாறு தமிழ் சிங்கள மொழிப் பாடசாலைகள் இருந்தால் சமை கலாசார மரபுகள் பேணப்பட வேண்டியதான அவசியம் கருதியும் அவ்வாறான கோசங்கள் ஓரளவு அடங்கிப் போயுள்ளன.

விடுமுறைகள் ஒரே கல அட்டவணைப்படி அமைய வேண்டும் என்போர்:

இப்பொழுது எல்லாப் பாடசாலைகளுக்கும் அரச விடுமுறைகள் ஒரேமாதிரியாக அமைதல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப் பட்டு வருகிறது தேசிய கல்வியாண்டு கல்வி நிர்வாக சேவை என இன்னோரன்ன விடயங்களில் இருக்கின்ற அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு கோரிக்கை முனவைக்கப் படுகிறது, குறிப்பாக முஸ்லிம்களது நோன்புகால விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு ஏனைய பொது விடுமுறைகளுக்கு ஏற்ப அவை வழங்கப் படுத்தல் அவசியம் என ஒரு சில தரப்புக்கள் வலியுறுத்துகின்றன.

அவ்வாறு நோன்பு கால விடுமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கூறும் தரப்புக்கள் பல நியாயங்களை வைக்கின்றார்கள் குறிப்பாக அரச கல்வி சார் நிர்வாக நடவடிக்கைகள் தேசிய விடுமுறைகளை கருத்திற் கொண்டே மேற்கொள்ளப் படுவதாலும் தேசிய பிராந்திய வளைய இணைப் பாட விதான செயற்பாடுகலும் அவ்வாறே மேற்கொள்ளப் படுவதானாலும் முஸ்லிம் பாடசாலைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்று கூறுகின்றனர்.

அதேபோல ஏனைய சமூகங்களைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வர மறுக்கின்றார்கள் அவர்களது சமூகத்தில் விடுமுறைகளை கழிக்கின்ற பொழுத அல்லது திட்டமிடுகின்ற பொழுதும், வீட்டில் பிள்ளைகளுடைய விடுமுறைகளின் பொழுதும் தாம் தொழில் செய்வதனை அவர்கள் விரும்புவதில்லை, முஸ்லிம் கல்வி பின்னடைவிற்கு இதுவும் ஒரு பிரதான் காரணம் என சிலர் வாதிடவும் செய்கின்றனர்.

நோன்பு காலத்தில் கல்வித்துறை தவிர்த்து ஏனைய அனைத்து தனியார் அரச துறைகளும் இயங்குவதுபோல் ஏன் கல்வித்துறை இயங்க முடியாது என அவர்கள் கேட்கின்றனர், அதேபோன்று நோன்பு காலத்தில் பசித்து தாகித்து இருப்பதனால் வினைத்திறன் குறைகிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ரமழானில் முஸ்லிம்கள் சோர்ந்துபோய் இயக்கமற்று இருப்பதனை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

பல இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள தமிழ் பாடசாலைகளில் கற்கின்றார்கள், புகுதிநேரவகுப்புக்களுக்கு செல்கின்றார்கள், முஸ்லிம் பாடசாலைகளிலும் மேலதிக வகுப்புக்கள் இடம் பெறுகின்றன, மாவட்ட வளைய தேசிய நிகழ்வுகளில் பங்கு கொள்கிறார்கள் ஏன் முஸ்லிம் பாடசாலைகளால் மாத்திரம் முடியாது என்றும் வாதிடுகின்றனர்.

தனித்துவமான ரமழான் விடுமுறையில் விட்டுக் கொடுப்பு வேண்டாம் என்போர்:

இல்லை, நோன்புகால விடுமுறை இந்த சமூகம் வென்றெடுத்துள்ள உரிமை அல்லது சிறப்புச் சலுகை அதில் கை வைக்க வேண்டாம் எனக் கூறுபவர்கள் தாமும் பல நியாயங்களை கூறுகின்றனர் குறிப்பாக எந்த நோக்கத்திற்காக முன்னோர்கள் ரமழான் விடுமுறையை சிறப்புச் சலுகையாக வென்றேடுத்தார்களோ அந்த நோக்கத்திற்காக அதனை பயன்படுத்துதல் வேண்டும், இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் உச்ச பயனை முஸ்லிம் சமூகம் அடைந்து கொள்ள வேண்டுமே அல்லாது அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

இவ்வாறு நாம் ஒரு சிறப்புரிமையை விட்டுக் கொடுத்தால் காலப் போக்கில் இன்னும் பல உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற நிலை ஏற்படலாம் என்றும்  ஒருசில அரசியல் வாதிகளின் அறிக்கைகளை மையமாக வைத்து குறிப்பிட்ட விவகாரம் பற்றி கருத்தாடலை ஆரம்பிக்கவும் வேண்டாம் என திட்டவட்டமாகவும் கூறுகின்றனர்.

இளம் சந்ததியினரின் ஆன்மீகப் பயிற்சியில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் இரவு வணக்கங்கள் ஹிஸ்புல் குரான், கியாமுல்லைல் போன்று பகல் பொழுதுகளில் குரான் ஹதீஸ் வகுப்புகள் ஆன்மீகப் பயிற்சிகள் உற்பட தர்பியாஹ் நிகழ்வுகள் என பல விடயங்களில் சமூகம் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது, அவ்வாறு இரவு பகல் இபாத்த்களில் ஈடுபடுகின்ற மாணவர்கள் ஆசிரியர்கள் போதிய ஓய்வின்றி வினைத்திறன் கூடிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதே யதார்த்தமாகும் எனவும் சொல்கின்றனர்.

பெரும்பான்மையான முஸ்லிம் பாடசாலைகள் கலவன் பாடசாலைகளாக இருப்பதனால் இளம் வயதினர் நோன்பின் மாண்புகள் பேணி ஒழுக்கமாகவும் கட்டுக் கோப்புடனும் பேணுதலாகவும் நடந்துகொள்வதில் நடைமுறை பிரச்சினைகள் இருப்பதாகவும் இயன்ற வரை ரமழான் மாதம் முழுவதும் அவர்களை பெற்றார்களின் தனிப்பட்ட நேரடி கட்டுக்கோப்பில் வைத்திருப்பதே சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

முஸ்லிமல்லாத ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரிவதற்கு இந்த விடயம் ஒரு தடையாக இருப்பது பற்றி பேசப்படுகிறது ஆனால், பெரும்பாலான தமிழ் சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் குறிப்பாக பன்மொழிப் புலமை உள்ளவர்கள் கூட நியமனம் பெறுவதில்லை என்றும் அவ்வறு பாகுபாடு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் ஒருவழிப்பாதை திறந்துவிடப் படும் நிலைவரின் கல்வித் துறையிலும் எமது தொழில் வாய்ப்பு விகிதம் கீழே செல்ல இடமிருப்பதாக அச்சம் தெரிவிக்கப் படுகிறது.

முஸ்லிம் சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகளின் கூட்டுப் பொறுப்பு:

இந்த விடயம் இன்னும் விரிவாக துறைசார் நிபுணர்களால் இஸ்லாமிய அறிஞர்களால் ஆராயப்பட வேண்டிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த  தேசிய  விவகாரமாகும், அது வரைக்கும் முஸ்லிம்களின் ஒரு தேசிய விவகரமாகிய இந்த விடயத்தை மாகாண அளவிலோ மாவட்ட அளவிலோ அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் தலையீடுகள் மூலம் கையாள்வது ஆரோக்கியமான நகர்வாக இருக்க மாட்டாது.

அதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் அவற்றின் விடுமுறைகள் குறித்த முடிவுகள் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் சார் விடயமாகும், அவை குறித்த தீர்மானங்கள் சமூகத்தின் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளால் கூட்டுப் பொறுப்புடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப் படவேண்டியவை, மாறாக அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் தனிப்பட்ட புரிதல்கள் தீர்மானங்கள் மூலம் காலத்திற்குக் காலம் கையாளப்பட்டு அரசியலாகி விட நாம் இடமளிக்கவும் கூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles