கடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் 28 வயதுடைய அவஸ்திரேலிய பிரஜை அமைதிக்குப் புகலிடமான நியூசிலாந்தில் அரங்கேற்றுகிறான்.
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள நூர் மஸ்ஜித் மற்றும் லைன்வுட் மஸ்ஜித் எனப்படும் இரு பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக, அவர்களது பாவங்களை மன்னித்து நன்மைகளை அங்கீகரித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக! பிரிவால் வாடும் உறவுகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மன அமைதியையும் ஆறுதலையும் வழங்குவானாக!
மிகவும் நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வரலாற்றுப் பகைமைகளை மையப்படுத்திய இஸ்லாமோபோபிய சதிவலைப்பின்னலின் காட்டுமிராண்டித்தனம் என்பதற்கான ஆதாரங்களும் தற்பொழுது ஊடகங்களில் வெளிவருகின்றன. குறிப்பாக அவர்கள் ஏந்திய ஆயுதங்களில் எழுதப்பட்டுள்ள சுலோகங்கள்.
கீர்த்திமிகு நியுசிலாந்து சுதேசிகளுக்குரியது, புலம்பெயர்ந்து வாழ்வோருக்கு இது நரகம் என அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டு இருந்த ‘வரலாற்று பகை’யை வெளிப்படுத்தும் சுலோகங்கள்!
#turkofagos என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு “துருக்கி கொலைக்காரர்கள்” என பொருள்.
#Miloš_Obilić– 1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்
#John_Hunyadi – காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் || வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயர்
#Vienna_1683– உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு
இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத் திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள், இவைமட்டுமல்லாமல், ‘Refugees welcome to Hell’ என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது.
இது ஒரு மனநோயாளி நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான பாசிஸ தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலாகும்.
இவ்வாறான காட்டு மிராண்டித் தனங்களை எவ்வாறு ஒரு உண்மை விசுவாசி பார்க்க வேண்டும்!
வாழ்வும் மரணமும்
ஒரு விசுவாசியைப் பொறுத்தவரை “நாம் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியவர்கள், இன்னும் நாம் நிச்சயமாக அவ்வனிடமே மீளுவோம்” என்றும் இந்த வாழ்க்கை ஒரு சோதனைக் களமாகும், செயல்களில் சிறந்தவர் யாவர் என்பதனை பரீட்சிப்பதற்காகவே வாழ்வையும் மரணத்தையும் அல்லாஹ் படைத்துள்ளான் என்றும், பசி, அச்சம், வறுமை, உயிர் உடமை பொருள் அழிவுகள் என்பவற்றைக் கொண்டு நாம் அல்லாஹ்வால் சோதிக்கப் படுவோம் என்றும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் இடம் பெறும் சமரில் உயிர் துறப்போர் ஷஹாதத் எனும் உயரிய அந்தஸ்த்தை அடைவர் என்றும் அவர்கள் கியாம நாள் வரையும் மரணிப்பதில்லை அவர்கள் அல்லஹ்வினால் அழைக்கப்பட்டு போஷிக்கப் படுகின்றார்கள் என்றும் ஆழமாக விசுவாசிக்கின்றான்.
சரித்திரமும் சம்பவமும்
கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் இடம் பெற்ற சம்பவம் எவாரான ஒரு சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கின்றது என்பதனை பாசிஸ பயங்கரவாதி பயன்படுத்திய ஆயுதங்களில் எழுதப்பட்ட சுலோகங்கள் அத்தாட்சிப் படுத்துகின்றன, அது ஒரு தனியாளின் செயல் அல்ல அதற்குப் பின்னால் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான சரித்திர சமர் இருக்கிறது, ஒரு வரலாற்றுக் புரையோடிப்போன குரோதம் இருக்கிறது, அதற்குப் பின்னால் சர்வதேச இஸ்லாமோபோபிய வலைப்பின்னல் இருக்கிறது, உலகில் ஆதிக்கம் செலுத்தும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் சியோனிச சக்திகளின் பக்கபலம் இருக்கின்றது, உலகில் போர்விதைக்கும் ஆயுதக் கம்பனிகளும் அவற்றின் ஊதுகுழல்களான சர்வதேச ஊடகங்களும் இருக்கின்றன போன்ற இன்னோரன்ன விடயங்கள் இப்பொழுது உலகிற்கு எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.
சர்வதேச இஸ்லாமோபோபிய வலைப்பின்னல் மீது விழுந்த பாரிய தாக்குதல்!
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள நூர் மஸ்ஜித் மற்றும் லைன்வுட் மஸ்ஜித் எனப்படும் இரு பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு சர்வதேச இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது.
நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் அரசு அன்றைய தினத்தை வரலாற்றில் ஒரு கரிநாளாக பர்கடனம் செய்து தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு விடுத்த அறிக்கைகள் நேரில் சென்று தெரிவித்த அனுதாபங்கள் மாத்திரமன்றி நியுசிலாந்திலும் மேற்கு கிழக்கு என உலகின் சகல நாடுகளிலும் இருந்து வெளியிடப்பட்ட கண்டனங்களும் குறிப்பாக மஸ்ஜிதுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் அணிதிரண்டு வைத்த மலர் வலையங்களும் இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலின் போலிப் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கி இருக்கின்றன.
முட்டைப் பையன் ஹீரோ வில் கனொலி விடுத்த செய்தி :
நியூசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த தீவிர வலதுசாரி செனட்டர் பிரேசர் அன்னெங் குறித்த சம்பவம் நியூஸிலாந்தின் குடிவரவுக் கொள்கையில் உள்ள கோளாறினால் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஊடுருவலை அது அதிகரித்துள்ளது என்றும் சட்டமன்றில் கூறியிருந்தார், அதனால் அவருக்கு பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன, மெல்போர்னில் பத்திரிகையாளரை சந்தித்த பொழுது வில் கனொலி எனும் 17 வயது இளைஞன் தனது இடக்கரத்தில் அலைபேசியால் புகைப்படம் எடுத்தபடி செனட்டர் பிரேசர் அன்னெங்கின் வழுக்கை மண்டையில் ஒரு முட்டையை அடித்து உடைத்தான்.
பின்னர் அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி உலகெங்கும் வைரலாக பரவிவருகிறது, “நான் மனிதனாக பிறவி எடுத்ததமை குறித்து இந்தக் கணப் பொழுதில் தான் பெருமைப் படுகின்றேன், நான் உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லர், பயங்கரவாதத்திற்கு மார்க்கம் கிடையாது, முஸ்லிம்களை பயங்கரவாத சமூகம் எனக் கருதுவோருக்கு மண்டையில் மூளை இல்லை செனட்டர் அன்னெங் போன்று”
வில் கனொலி செய்தி குடிவரவுக் கொள்கைகளை கேள்விகுற்படுத்தும் சரவதேச தலைவர்களின், மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் போலிப் பிரச்சாரங்களை தீவிர வலதுசாரி பாசிஸ்டுகளின் பொய்களை சந்தி சிரிக்கச் செய்துள்ளது.
இந்த இளைஞனின் கைது செய்யப்பட்ட போதும் இன்று சர்வதேச அளவில் புதிய தலைமுறையினர் மத்தியில் அவனுக்கான ஆதரவு அலைகள் பெருகி வருகின்றன, அவனது விடுதலைக்காக நிதி சேகரிக்கப் பட்டு வருகின்றது! கிடைக்கப் பெரும் நிதியைக் கூட பாதிக்கப் பட்டவர்கள் குடும்பங்களுக்கு கையளிப்பதாக வில் கனொலி தெரிவித்துள்ளான்.
ஷஹாதத் மூலம் உலகறியச் செய்யப்பட்ட உண்மைகள்!
நிச்சயமாக ஷஹீதாக்கப் பட்ட உறவுகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஒரு உயரிய பணிக்காக தெரிவு செய்யப் பட்டவர்கள் அவர்களது ஷாஹதத் இன்று சர்வதேச இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலை ஆட்டங்காணச் செய்துள்ளது, மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் அதனை இலக்கு வைத்து தாக்குகின்றது, சாந்திமார்க்கம் இஸ்லாத்தின் செய்தி உலகெங்கும் உயிர்பிக்கப் படுகிறது.
இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலங்களில் ஒழிவு மறைவுகிடையாது, பாதுகாப்புகெடுபிடிகள் கிடையாது, அவை சமாதானத்தின் சகவாழ்வின் ஜீவ காருண்யத்தின் மத்திய நிலையங்கள், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோர் நிராயுதபாணிகள், அங்கு அச்சமின்றி எவரும் உட்பிரவேசிக்கலாம் என பலநூறு செய்திகளை இந்த அர்பணிப்புகள் உலகறியச் செய்துள்ளன.
இன்ஷா அல்லாஹ், அந்த ஷுஹதாக்களின் அர்பணிப்பு இன்னும் ஆயிரமாயிரம் இதயங்களில் சத்தியத்தின் தீபத்தை ஏற்றிவைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை, அவர்களது தியாகம் ஒவ்வொரு உண்மை விசுவாசியின் வாழ்விலும் அவன்/ள் இருக்கின்ற இடத்தில் பாரிய மாற்றங்களை நிச்சயமாக ஏற்படுத்தும்!
தீய சக்திகள் உங்கள் மீது காழ்புணர்வை கக்குகின்ற வேகத்திலும் பார்க்க அன்பையும் காருண்யத்தையும் மனித குலத்தின் மீது காட்டுங்கள், மனித குலத்திற்கான காருண்யத் தூது உலகெங்கும் வியாபிப்பது கண்டே ஷைத்தானிய பட்டாலங்கள் அமைதியிழந்திருக்கின்றன!
- மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்