Tuesday, October 19, 2021

கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை!

இறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் ?

வேறுபாடுகள் களைந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையிலும் முஸ்லிம்கள் இழந்த மேய்ச்சல் விளைச்சல் பாய்ச்சல் நிலங்கள் இன்னும் மீட்கப் படவில்லை. அவர்களது குடிசனப் பர்ம்பளுக்கேற்ற உரித்தாக வேண்டிய அரச நிலங்கள் இராணுவ, புதைபொருள் ஆராய்ச்சி, திட்டமிட்ட குடியேற்றங்கள், புனித பிரதேசங்களுக்கென, பயிர்ச் செய்கைகளுக்கென ஆக்கிரமிக்கப் படுகின்றன.

அவர்களது உள்ளூராட்சி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உரித்தாக வேண்டிய நிலம் மற்றும் வளங்கள் எல்லை நிர்ணயங்களின் பொழுது திட்டமிட்ட அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளன.

தீகவாபி விஸ்தீரணம் இறக்காமத்தினூடாக ஒலுவில் துறைமுகத்தை எட்டிப் பார்க்கிறது, துறைமுகத்திற்கு கப்பல் வந்ததோ என்னவோ கடல் வந்து விட்டது, சுனாமிப் பேரலை அனர்த்தங்களால் வீடிழந்த முஸ்லிம்களுக்கு கட்டப் பட்ட ஐநூறு வீடுகளும் காடுகளாக மாறியிருக்கின்றன, அடிமட்ட அரசியல் அதிகார அலகுகளான உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகின்றன.

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப் படும் புதிய கிராமங்கள், வீடமைப்புத் திட்டங்கள், நகராக்கங்கள், காணிப் பங்கீடுகள், தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் எதுவுமே அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர்களை சென்றடைவதில்லை.

கரயோர மவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகள் மிகவும் நெருக்கடிமிக்கவையாக இருக்கின்றன, வீடுகள் வளைவுகள் காணி நிலம் என்பன இனிமேல் அடுக்குமாடிகளில் தான் என்ற நிலை.

நிலத் தொடர்பற்ற தனி மாகனம் கேட்டு, பின்னர் தென்கிழக்கு அலகு கேட்டு, கல்முனைக் கரையோர மாவட்டம் கேட்டு இன்று தென்கிழக்கு அலகின் தலை நகர் கல்முனை மாநகர சபையையே இழக்கும் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற சரணாகதி நிலையில் எமது சத்திய, சாணக்கிய தனித்துவ அரசியல் சாந்தி சிரிக்கும் நிலையில் இருக்கிரது.

இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில் இருப்பவற்றைத் தக்க வைத்துக் கொள்ள நாம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

பேரம் பேசும் வலிமையை இழந்து நமது போராட்ட அரசியல் குபெரார்களின் குட்டி சுல்தான்களின் ஏட்டிக்குப் போட்டியான சூதாட்ட அரசியலாய் மாறி நிற்கும் இந்த நிர்க்கதி நிலையில் புதிய தலைமுறைகள் எந்த இடத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிப் பயணிக்கலாம் என திக்குத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

“அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாக இறுகப் பற்றிப் பிடியுங்கள்” என்ற எமது சங்க நாதம் இன்று யதார்த்தத்தில் சாத்தியமற்ற ஒரு விடயமாக பார்க்கப் படுகிறது, எமது உரிமைகள் சலுகைகள் கொள்கை கோட்பாடுகளை விட குட்டி சுல்தான்களின் முகாம்களும் அதிகாரங்களும் பூதாகரமாய் முன்னே வந்து அச்சுறுத்துகின்றன.

எந்தத் தீர்வை யோசித்தாலும் குட்டி சுல்தான்களின் சிவம் செல்வாக்கு ஆதரவுத் தளம் என வங்குரோத்து அரசியலின் அனைத்து அம்சங்களையும் புறந்தள்ள முடியாத திரிசங்கு நிலையில் புத்திஜீவிகள்.

இலங்கை முஸ்லிம் அரசியலின் தாயகம் என அழைக்கப் படும் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலுக்கு தென்னிலங்கை முஸ்லிம்களும் இணைந்துதான் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொடுத்தோம், மத்தியில் ஆட்சியமைப்பவர் யார் என்பதனை தீர்மானிக்கும் அளவிற்கு.

ஆனால் மத்தியிலும் பிராந்தியத்திலும் குபேரர்களின் சூதாட்டமாகிப்போன எமது போராட்ட அரசியல் இன்று தென்னிலங்கை தேசிய அரசியலிலும் கிழக்கிலங்கை பிராந்திய அரசியலிலும் சாதனைகளை விட சோதனைகளையே கொண்டு வந்து தந்திருக்கின்றது, அரசியல் அனாதைகளாக இருந்த நாம் அரசியல் பணயக் கைதிகளாக இன்று மாறியிருக்கின்றோம்.

இனி என்ன செய்யலாம் ?

ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம்களதும் பிரச்சினைகளை நிரல் படுத்தி அந்தந்த மாவட்டத்தின் முன்னுரிமைப் பட்டியல்களைத் தயார் செய்தல் வேண்டும்.

அடுத்த கட்டமாக அவற்றை மையமாக வைத்து கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிரல்படுத்தப் பட்ட முன்னுரிமைப் பட்டியலை மையமாக வைத்து உடனடி இடைக்கால நீண்டகால மூலோபாய திட்டங்களை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்!

இதனை பலமான சிவில் சமூக முன்னெடுப்பாக அந்தந்த தொகுதிகளிலும் மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்படும் புத்திஜீவிகள் நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புக்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மேற்கொள்ளுதல் வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் வருவதற்கு முன்னர் அத்தகைய “கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரல்” ஒன்றை தயார் செய்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்தே எதிர்வரும் ஜானாதிபதி, பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்கல் குறித்தும் பிராந்திய தேசிய அரசியலில் எமது நகர்வுகள் குறித்தும் நாம் உடன்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்!

எந்தவொரு கட்சியினதும் தலைவர்களினதும் எதேச்சாதிகார தற்துணிபு அரசியலுக்கும் இடம் கொடுக்கலாகாது.

வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமை காணும் இந்த இறுதிக் கட்ட முயற்சியை உடனடியாக சாத்தியப் படுத்துவதற்கு சகல கட்சிகளும், ஷூரா சபைகளும் பள்ளி வாசல் சம்மேலனங்களும், பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும், இளைஞர் மாதர் சங்கங்களும் ஒரு கலந்தாலோசனைப் பொறிமுறையில் ஒன்றிணைய வேண்டும்!

கிழக்கு மற்றுமொரு காஸாவாக மாற்றப் படுமா ?

கிழக்கில் முஸ்லிம்கள் கடலிற்குள் தள்ளப் படுகின்றார்கள், கிழக்கில் கரையோரப் பகுதிகளில் சங்கிலித் தொடராக அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சனநெரிசல் அதிகரித்து வருகிறது, இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களில் அல்ல இப்பொழுதே (வானில்) அடுக்குமாடிகளில் அன்றி கிழக்கில் புதிய தலைமுறையினருக்கு வீடு வளவு என்று காணிகள் கிடையாது.

Eastern Sri Lanka – Early settlement

கிழக்கில் 40% முஸ்லிம்கள் 4% நிலத்தில் இருக்கின்றார்கள், விவசாய நிலங்களிற்கான அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப் படுவதில்ல, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை, சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கரையோர குடியிருப்புக்களில் வதிவிடங்களிற்கான இடப்பற்றாக்குறை நிலவுகின்றது.

70% நிலம் அரச கட்டுப் பாட்டில் இருக்கின்றது, புதைபொருள் ஆய்வுகள், புராதான சின்னங்கள், புனிதபிரதேசங்கள் என பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இராணுவம் காணிகளை கட்டுப்பாட்டில்வைத்திருக்கின்றது, திட்டமிட்ட குடியேற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வர்த்தக பயிர்ச் செய்கைகளிற்கென காணிகள் பெறப்பட்டுள்ளன.

கிழக்கில் அரச காணிகளில் புதிய திட்டமிடப்பட்ட நகரங்கள், கிராமங்கள் உருவாக்கப் படுவதும் குறிப்பாக திருமணமாகும் இளைஞர் யுவதிகளுக்கு வீடு வளவிற்கான காணிகள் பெற்றுக் கொடுக்கப் பட வேண்டும்! உதாரணத்திற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் மாற்றுக் கிராமங்கள் (கிராமோதயங்கள், நகரோதயங்கள்) அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப் பாடல் வேண்டும்.

அடிப்படை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் கிடப்பில் இருக்க கிளிப்பிள்ளைகள் போல் தனியலகு கரையோர மாவட்டம் எனக் கூவிக் கூவி இருப்பதையும் இழக்கும் நிலையில் உள்ள முஸ்லிம் தலைமைகள் தற்பொழுது தலையெடுக்கும் புதிய சவால்கள் அச்சுறுத்தல்கள் குறித்து கரிசன்யின்றி இருக்கிறார்கள்.

சர்வதேச பிராந்திய சக்திகளின் பின்புலத்தில் தீய சக்திகள் தலையெடுக்கின்றன, இன்று விழித்துக் கொள்ளா விட்டால் நாளை இளைஞர்கள் வன்முறைகளின் பால் தள்ளப் படுவது தவிர்க்க முடியாமல் போய்விடும், கடந்த மூன்று தசபதங்களிற்கு முன்னால் முஸ்லிம் இளைஞர்களை ஜனநயாக வழியில் வழிநடதிய எம்மால் மீண்டும் ஒருமுறை வழிநடத்த முடியாத நிலை வரலாம்!

தமது இராஜதந்திர இராணுவ பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும் பாரிய பூகோள பிரந்திய மூலோபாயசதிமுயற்சிகளில் பல்வேறு உள்நாட்டு பிறநாட்டு சகதிகளும் ஈடுபடுவதனை உணர் முடிகிறது.

தென்னிலங்கையில் போல் வடகிழக்கில் முளைவிடும் மற்றுமொரு காவிப் பயங்கரவாதம் எமது அடிப்படை உரிமைகளில் கைவைப்பதனை எதிரியின் எதிரி நண்பன் என்ற கைகோர்ப்புக்களை பெருந்தேசிய, பிராந்திய, சர்வதேசிய சக்திகளுடன் மேற்கொள்வதனையும் கண்டும் காணாமல் நமது தலைமைகள் எட்டிக்போட்டியாக உள்வீட்டில் அதிகார வேட்டையில்ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர், நூதனமான் சவால்களைப் புரிந்துகொள்ளும் திராணியும் அவர்களுக்கு இல்லை.

அத்தகைய சதிவலைகளில் இருந்து சமூகத்தை காப்பதாயின் தவறாக வழிநடத்தப் படும் ஏனைய சமூகங்களையும் மீட்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த சமூகத்தின் மீது இருக்கிறது, குறுகிய அரசியல் இலாப நஷ்டங்களிற்கு அப்பால் தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் தோளோடு தோள் நின்று புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை கட்டாயம் இருக்கின்றது.

எமது போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மாற்றி “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்று அலறும் சரணாகதி நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள குட்டி சுல்தான்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விரண்டோடும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்து ஜனநயாக கட்டமைப்பிற்குள் நின்று பிரதான தேசிய நீரோட்டத்தில் சரியான தளங்களில் களங்களில் சரியான பரிமாணங்களில் எம்மை எமது போராட்ட வடிவங்களைத் தகவமைத்துக் கொண்டு பாரம்பரிய வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி புதிய பாதையில் பயணிக்க புதிய தலைமுறையினர் தயாராக வேண்டும்.

“காலம் கடந்துவிட முன்” என்பதனை விட “காலம் வெகுவாக கடந்து விட்டது” விழித்துக் கொள்ளுங்கள் என்று கிழக்கிலங்கை இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!

ஐ தே க வில் இணைந்து மறைந்த ஏ.சீ. எஸ் ஹமீதுடைய வெற்றிடத்தை கண்டி மாவட்டத்தில் நிரப்புமாறும் கிழக்கிலங்கை அரசியலை அந்த மண்ணின் மைந்தர்களிடம் ஒப்படைக்குமாறும் 2003 – 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மு கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கூறினேன்.

எல் டீ டீ ஈ உடன் ரணில் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு உடன்பாட்டின் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு வெற்றிடம், அதாவுல்லாஹ்வின் வெளியேற்றம், ஹரீஸ், அன்வர் இஸ்மாயீல் ஆகியோரின் அதிருப்தி உற்பட இன்னோரன்ன களநிலவரங்களை கருத்தில் கொண்டு ஹக்கீமிடம் அவ்வாறு சொன்னேன்.

சொல்வதற்கு பல கரணங்கள் இருந்தன:

தலைவரின் மறைவிற்குப் பின்னர் அவர் எதிர் கொண்ட உள்வீட்டு சவால்களும் இரண்டுமுறை மத்திய அரசு கவிழ்க்கப் படுவதற்கு காரணமாக இருந்தமையும் விளைவாக தென்னிலங்கையில் ஏற்பட்ட முஸ்லிம் விரோத வைராக்கிய அரசியல் அலைகளும்.

அன்று சந்திரிக்காவின் ஆட்சியைக் கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணிலையும் அதிகாரத்திற்கு கொண்டு வந்து அதன்மூலம் தமிழ் தேசிய அரசியலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் டயஸ்போராவிற்கும் சாதகாமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் அந்த உறவின் பலிக்கடாவாக முஸ்லிம்களே மாறும் நிலை ஏற்பட்டமை.

ரணில் நோர்வே புலிகள் உடன்பாடுகளில் பஷீர் சேஹு தாவூதின் பங்கேற்றேபுடன் அவரும் கட்சியும் பணயமாக மாறியிருப்பதையும் அதனால் முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் தடம் புரள்வதை தடுப்பதற்கும், நீண்ட மற்றும் குறுகிய கால பின் விளைவுகளையும் கவனத்திற்க் கொண்டமை.

சந்திரிக்காவின் ஆட்சியைக் கவிழ்த்து ரணில் ஆட்சி அமைக்க உதவிய போதும் எந்தவொரு சமாதனப் பேச்சு வார்த்தைகளிலும் முஸ்லிம்களை ஒரு தனித் தரப்பாக அங்கீகரிக்க ரணில் மறுத்தமையும் அரசின் தரப்பில் சென்ற பொழுதும் முஸ்லிம்களது நியாயமான எந்தவொரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட சந்தர்ப்பங்கள் வழங்கப் படாமையும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ரணில்) அவருக்கும் இடையிலுள்ள தவிர்க்க முடியாத நிர்பந்தமான உறவை கருத்தில் கொண்டு: அவர் எனது மைத்துனன் என்ற வகையில் தென்னிலங்கையில் தனது ஆற்றல் திறமைகளை வைத்துக் கொண்டு தேசிய அரசியலில் அவர் கால பதித்தால் தேசிய முஸ்லிம் அரசியல் தலைமையாக தன்னை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம்.

மூதூர் புலிகளால் தாக்கப் பட்ட பொழுது துறைமுக இராணுவ முகாமில் இருந்து கொண்டு ரணிலை இங்கு வராமல் நான் கொழும்பு செல்ல மாட்டேன் என அடம் பிடித்த போதும் ரணில் தனது இயலாமையை வெளிக்காகட்டியமை, வாழைச்சேனையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மையத்துகளைக் கூட பெற முடியாத நிலை வந்தமையும் ஜனாதிபதி சந்திரிக்கா மோதல் தவிர்ப்பு உடன்பாடுகளை மீறி பாதுகாப்பு தர வேண்டிய நிலை ஏற்பட்டமையும்.

வராலாறு மீளும் சுழல்கிறது, ஐக்கிய தேசிய முன்னணியை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பிரதான பங்காளிகளாய் நமது காங்கிரஸ்கள் இருந்த பொழுதும், கடந்தவருடம் மஹிந்த தரப்பினால் ஆட்சி கவிழ்க்கப் பட்டபொழுது ஆட்சியை மீண்டும் ரணிலுக்கு பெற்றுக் கொடுத்த பின்னரும் “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற “சராணகதி” நிலையில் முஸ்லிம் தனித்துவ அரசியல் இன்று கணப் படுகின்றது.

2015 இல் தேசிய அரசு அமைந்த பொழுதே கண்டியில் தனது இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியில் ரவூப் ஹக்கீமும் வன்னியில் ரிஷாத் பதியுதீன் அவர்களும் பேரம் பேசி உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.

இங்கு ரவூப் ஹகீமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்கவோ அவரோடு தனிப்பட்ட நலன்களுக்காக முரண்பட்டு அடம்பிடித்து அவரை அச்சுறுத்தி கட்சியை விட்டு வெளியேறியவர்களை தூய்மை படுத்தவோ நான் விரும்பவில்லை.

மறாக முஸ்லிம் தேசிய அடையாள தனித்துவ அரசியலை ஒட்டுமொத்தமாக ஏட்டிகுப் போட்டியாக விலைபேசி ஒருவருக்கொருவர் குறைவின்றி பேரம் பேசும் வலிமையை சோரம் போவதற்கு பகரமாக்கிக் கொண்ட சகலரையும் தான் சொல்கின்றேன்.

ரவூப் ஹக்கீமின் பக்கம் விரல் நீட்டியே இன்று அரசியல் பிழைப்பு நடத்தும் பலர் கடந்தகால வரலாற்றில் அவரது பங்காளர்கள்! அவர் இல்லாவிட்டால் காட்டியும் கூட்டியும் கொடுத்து அரசியல் செய்யும் பலரது அரசியல் வாழ்வு அஸ்தமித்து போயிருக்கும்.

எமது தனித்துவ அடையாள அரசியல் உச்சக் கட்ட வங்குரோத்து நிலையை அடைவதற்கு காரணம் தலைவர்கள் மட்டுமல்ல அடிமட்ட அமைப்பாளர்கள் வரை கட்சிகளின் அண்டிப் பிழைக்கும் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் தத்தமது சுய இலாபங்களுக்காக தலைமைகளுடன் மல்லுக் கட்டுவதும் பேரம் பேசுவதும் தமது வாக்கு வங்கியிற்கு விலை பேசுவதுமாக போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மற்றியமையும் தான்.

அதே போன்றே, சூதாட்டமாகிப் போன இந்தப் போராட்ட அரசியலால் சாதனைகளை விட சோதனைகளையே நாம் நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம், தென்னிலங்கையில் முஸ்லிம்கள் பாரிய சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டு வருகின்றார்கள்.

கிழக்கிலங்கை அரசியலை அந்த மாகாண மாவட்டத் தலைமைகளே கையாள வேண்டும்! அரசியல் சூதாட்டத்தில் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

மிகவும் தீர்க்கமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம்! வட கிழக்கில் நிலத்தொடர்பற்ற தணி மாகாணம் கேட்டு பின்னர் தென்கிழக்கு அலகு கேட்டு, கரையோர மாவட்டம் கேட்டு இன்று அதன் தலைநகரை யே இழக்கும் சரணாகதி நிலை.

இறுதியாக ஒன்றை மாத்திரம் எல்லா காங்கிரஸ் காரர்களையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்: தயவு செய்து உங்களது தனிப்பட்ட குறுகிய நிகழ்ச்சி நிரல்களை மையப் படுத்திய இனவாத அரசியலை தென்னிலங்கையில் இனிமேலும் சந்தைப் படுத்தாதீர்கள்.

தேசிய அரசியலில் தேசிய வாழ்வில் இந்த முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு உங்களைப் போலவே உங்கள் அரசியலும் மிகப் பெரும் தடையாக, தலையிடியாக மாறிவிட்டது. தேசிய அரசியலில் மட்டுமல்ல தேசிய வாழ்விலும் முஸ்லிம்கள் பணயக் கைதிகள் போல் நடத்தப் படும் நிலை வந்துள்ளது.

அரபு முஸ்லிம் நாடுகளில் இல்லாத அரசியல் சுதந்திரம் எமக்கு இருந்தும் பாழாக்கப் படுவது முஸ்லிம்களது அரசியல் அமானிதம் மட்டுமல்ல தேசிய அரசியல் அமானிதமும் தான்!

குறிப்பு: 1980 களில் பிறந்திராதவர்கள் 2002-2004 இல் பாலர் வகுப்பில் படித்தவர்கள் சற்று நிதானமாக விருப்பு வெறுப்பு பந்த பாசங்களுக்கு அப்பால் விடயங்களை உள்வாங்க வேண்டும், இது எமது வரலாறு, கசப்பாயினும் உண்மை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles