Monday, October 18, 2021

அனாவசியமான பதற்றம், அச்சம் வேண்டாம், இனி கூட்டுப் பொறுப்புடன் ஆக வேண்டியவற்றைப் பார்ப்போம்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கடந்த 21/04/2019  கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு (ஈஸ்டர்) ஞாயிறன்று மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்து தேசம் சர்வதேசம் உற்பட அனைத்து மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததோடு கண்டனங்களையும் தெரிவித்திருக்கின்றனர்.

தாக்குதல்களை மேற்கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றைச் சேர்ந்த குழுவினர் அல்லது ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புள்ள குழுவினர் முஸ்லிம்களாக இருப்பதனால் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் இயல்பாகவே அச்சம் கொள்வதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன, அந்த வகையில் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் சன்மார்க தலைமைகள் பாதிக்கப் பட்ட மக்களுடனும் அரசுடனும் பாதுகாப்புத் தரப்புடனும்  இந்த நெருக்கடி மிகு தருணத்தில் பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உண்மையில் அரங்கேற்றப்பட்ட மேற்படி தாக்குதல்கள் ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மீதும் அதிலும் குறிப்பாக பல்பரிமாண சவால்களுக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் உண்மையில் முஸ்லிம் நாடுகளின் நன்மைகளுக்காக தோற்றுவிக்கப் பட்டவையா? அல்லது சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்காக அவற்றின் உளவு நிறுவனங்களால் உருவாக்கப் பட்டவையா? என்பதனையும் அதேபோன்றே இந்த தீவிரவாத ஜிஹாதிய குழுக்கள் எவ்வாறு ஐ எஸ் ஐ எஸ் அமைப்பிற்குள் உள்வாங்கப் பட்டுள்ளார்கள் ? என்பதனையும் இலங்கை வாழ் மக்களும், அரசியல் தலைமைகளும் ஏன் புத்திஜீவிகளும் கூட அறிந்திருக்க நியாயமில்லை.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை தமது அரசியல் இராஜதந்திர இராணுவ பொருளாதார நலன்களுக்காக மத்திய கிழக்கில் நகர்த்திய நகர்த்திக் கொண்டிருக்கிற சக்திகளுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எத்தகைய நலன்கள் இருக்கின்றன, அமெரிக்க மொசாத் இந்திய புலனாய்வுத் துறைகளுக்குத் தெரிந்த விடயங்கள் உலகிலேயே கொடிய பயங்கரவதத்தை ஒழித்துக் கட்டிய இலங்கை புலனாய்வுத் துறைகளுக்கு எட்டாத மர்மங்கள் வெளிவர நீண்ட காலம் செல்ல மாட்டது என்று மாத்திரம் இப்போதைக்கு நம்பலாம்!

இலங்கையில் தமிழ்த் தீவிரவாதிகள் வன்முறைகளைக்  கையாண்ட பொழுது எல்லாத் தமிழர்களும் தீவிரவாதிகள் எனப் பார்க்கப் படவில்லை, சிங்கள பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்கிய பொழுது ஒட்டு மொத்த சிங்கள பௌத்தர்களும் தீவிரவாதிகளாக பார்க்கப் படவில்லை, அதேபோல் ஒரு சிறு குழுவினர் செய்த தீவிரவாத தாக்குதல்களால் ஒட்டுமொத்த சமூகமும் ஏன அச்சம் கொள்கின்றனர் என பலரும் கேட்கின்றனர்.

உலகெங்கும் வேறு எந்த மதத்திற்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப் பட்ட “போபியா” பலம் வாய்ந்த சக்திகளின் பின்புலத்தில் இயங்கவில்லை, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் எதிராக மாத்திரமே “இஸ்லாமோபோபியா” எனும் பாரிய அரசியல் இராஜதந்திர இராணுவ பொருளாதார உள்நோக்கங்கள் கொண்ட சர்வதேச சதிகார வலைப்பின்னல் இயக்கப் பட்டு வருகிறது, அந்த வகையில் நெருப்பில்லாமல் புகை கொண்டுவந்து பின்னர் புகைக்குள்ளிருந்து தீப் பிழம்புகளை கொண்டுவந்து முஸ்லிம் தேசங்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளிச் சென்றிருக்கிறது அந்த “இஸ்லாமோபோபியா”.

SRI LANKA-BLAST/

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான இலங்கையில்  பல்வேறு தேசிய, சர்வதேசிய  பிராந்திய சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக அவர்கள் மீது “இஸ்லாமோபோபியா”. போர் திணிக்கப்பட்டமையும் அழுத்கமை முதல் திகனை வரை அது முஸ்லிம்களைக் காவு கொண்டமையும் வரலாறாகிவிட்டது, நெருப்பில்லாமலே புகை கொண்டுவந்து புகைக்குத் தேவையான தீயைக் கொண்டு வந்த சக்திகள் இன்று ஒரு தீப்பிழம்பையே இந்த நாட்டில் கொண்டு வந்து தீயைக் கொளுத்தி விட்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் இங்கு பூர்வீகம் கொண்டவர்கள் ஆரிய சிங்களவர்கள் போல திராவிட தமிழர்கள் போல வடதென் இந்திய பூர்வீகம் கொண்டவர்களும் இலங்கையில் இருப்பது போல அரேபிய பூர்வீகம் கொண்டவர்கள் கூட இங்கு  இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்தே இருக்கின்றார்கள், சமாதான சகவாழ்வு என்பது அவர்களது தொன்றுதொட்டு வந்த பாரம்பரியமாகும், இங்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அடிப்படைவாதிகளோ தீவிரவாதிகளோ அல்லர் என அரிச்சுவடியிலிருந்து எவருக்கும் பாடம் நடத்த வேண்டிய அவசியலமில்லை, அவ்வாறு தமது நல்லெண்ணத்தை வெளிப் படுத்துவோரை நாம் குறை கூறவும் இல்லை, முஸ்லிம்கள் குறித்து இந்த நாட்டின் அரசியல் தலைமைகளும் உத்தியோகபூவமான ஏனைய சமூகத் தலைமைகளும், மதகுரு பீடங்களும் தெளிவாக இருக்கின்றன.

இனி நடந்தவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதும், சமூக ஊடகங்களில் வருபவற்றைப் பகிர்வதுமாக எமது காலத்தைக் கடத்தாது, கற்ற பாடங்கள் பெற்ற படிப்பினைகளை மையமாக வைத்து நாம் ஆக்கபூர்வமாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து  அந்தந்த மட்டங்களில் கந்தாலோசனை செய்து அரச மற்றும் பாது காப்புத் தரப்புக்களின் அறிவுறுத்தல்களையும் சமூகத் தலைமைகளின் வழிகாட்டல்களையும் பெற்று ஆரவாரங்களின்றி நிதானமாக நாம் செயற்பட வேண்டும்.

இந்த நட்டு முஸ்லிம்கள் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அங்கீகரிப்பவர்கள் அல்ல என்பதனை எமது சமூகத்தின் சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி அறிஞர்கள் உலமாக்கள் புத்திஜீவிகள் எல்லோருமாக காலத்திற்கு காலம் வலியுறுத்தி வந்திருப்பது போல் இந்த சோகம் நிறைந்த தருணத்திலும் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

பாதிக்கப் பட்ட மக்களுடன் அவர்களது துயரில் பங்கெடுத்து தம்மால் இயன்ற அனைத்தையும் ஒரு சகோதர சமூகமாக செய்து கொண்டிருக்கின்றார்கள், அதேபோன்றே இந்த நாட்டில் கடந்த காலங்களில் எவ்வாறு வன்முறைகளுக்கும், தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிராக அரசங்கங்களுடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் ஒத்துழைத்தர்களோ அதே போன்றே இன்றும் ஒத்துழைக்கிறார்கள்.

இவ்வாறான மாமூலான நடவடிக்கைகளுக்கு அப்பால் நாட்டின் பலபாகங்களிலும் பரந்துவாழும் முஸ்லிம்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்?  கொழும்பில் உள்ள அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் அரசியல் , இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூக அமைப்புக்கள் புத்தி ஜீவிகள் இளைஞர் கழகங்கள் கல்வி உயர்கல்வி வர்த்தக சமூகத்தினர் என சகல தரப்புக்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை அமைத்து அடிமட்டத் தலைமைத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

SRI LANKA-BOMBINGS-CHURCH-HOTEL

ஊரில் உள்ள உலமக்களோ, மஸ்ஜித் நிர்வாகங்களோ, அல்லது ஒரு சில அரசியல் வாதிகளோ, பிரமுகர்களோ மாத்திரம் தமது ஊரின் இருப்பு பாதுகாப்பு சார்ந்த அனைத்து விடயங்களையும் பார்த்துக் கொள்வார்கள் என்றோ, கொழும்பில் உள்ள தலைமைகள் பார்த்துக் கொள்ளட்டும் என்றோ நாம் இருந்து விடுவது தவறானதாகும், கூட்டுப் பொறுப்புடநும் தலைமைத்துவக் கட்டுக்கோப்புடனும் அடிமட்டத்தில் களநிலவரங்களை கையாளுகின்ற பொறிமுறைகளை எமது சமூகம் கொண்டிருக்க வேண்டும், நாட்டின் அரச நிர்வாக கட்டமைப்புகள், பாதுகாப்புத் தரப்புக்கள், பிராந்திய தொகுதி மாவட்ட மாகாண அரசியல் தலைமைகள் ஏனைய சமயத் தலைமைகள் என பல்வேறு தரப்புக்களுடனும் எத்தகைய தொடர்புகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதனை அந்தந்த மட்டத்தில் நாம் தீர்மானித்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக ரமாழான் மாதம் எம்மை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் விழிப்புக் குழுக்கள் நியமிக்கப் படல் வேண்டும் ஆண்களும் பெண்களுமாக தராவீஹ் தொழுகைகள், பயான்கள், இப்தார்கள் இரவுத் தொழுகைகள் என பல்வேறு வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துகின்ற இந்தக் காலப் பகுதியுள் எமது பாதுகாப்பு குறித்து நாம் அவதானமாக இருப்பதோடு பாதுகாப்புத் தர்புக்களுடனும் மிகவும் சுமுகமான் உறவுகளை மேகொல்வத்ர்கு இத்தகைய அடிமட்ட தலைமைத்துவக் கட்டமைப்புக்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

ஏற்கனவே மேற்படி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறித்து அறிந்த நிலையிலும் ஏன் ஈஸ்டர் ஞாயிறன்று உங்களால் அவற்றைத் தடுக்க முடியாமல் போனது என்ற கேள்வியிற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாலளர் சொன்ன ஒரு பதில் முக்கியமானது, ஆமாம் எங்களுக்கு தகவல் கிடைத்தது, எங்களுக்கு சில வரையறைகளுக்குள் தான் செயற்பட முடியும் எல்லா தேவாலயங்களிற்கும் எவ்வாறு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியும்? நாங்கள் அது குறித்து உரிய தர்புக்களிற்கு அறிவித்திருந்தோம் என்றார்.

நாட்டில் பலபாகங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கும், மஸ்ஜிதுகளுக்கும், எமது வர்த்தக, வியாபார நிலையங்களிற்கும் அரசினால் முழுநேர பாதுகாப்பு வழங்கப் பட முடியுமா? எமது சிவில், அரசியல் சன்மார்க்கத் தலைமைகளுக்குத் தான் அடிமட்ட மக்களின் அனைத்து விவகாரங்களையும் கவனித்துக் கொள்ள முடியுமா? என்பதனை நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.

வந்தபின் கைசேதப் படுவதனைவிட வருமுன் காப்பவர்களாக அவ்வப்பிரதேசங்களுக்கு ஏற்ற யுக்திகளை வழிமுறைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு ஊர்மக்களினதும் கூட்டுப் பொறுப்பாகும்! வந்தபின் பாதுகாப்புப் படைகள் குவிக்கப் படுவதும் தலைமைகள் வந்து பார்வையிடுவதும், அறிக்கை விடுவதும், கண்டனங்கள் அனுதாபங்கள் தெரிவிப்பதுவும், சிவில் தலைமைகள் புள்ளி விபரங்கள் திரட்டுவதும், கண்கேடுப்புக்கள் நடத்துவதும் அடுத்த கட்ட மாமூல நடவடிக்கைகளாகவே இருக்கும்.     

இந்த அடிப்படையில் நமது சமூகம், ஊர் மற்றும் மஹல்லா  மட்டத்திலான சகல  தரப்புக்  களையும்  உள்வாங்கிய மஜ்லிஸ் அல்-ஷூராக்களை (ஆலோசனை சபைகளை ) பள்ளி  வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள், இளைஞர், மாதர் பிரதி நிதிகள் ,அரசியல்,சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும் கொண்ட நிரந்தரமான ஆலோசன சபைகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை, வழிகாட்டல்களை மொத்தத்தில் தலைமைத் துவத்தை ஒவ்வொரு கிராமும் அவ்வப்போது பெற்றுக்கொள்ளும்.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இது புதிய ஒரு தலைமைத்துவ கட்டமைப்பு  அல்ல, மாறாக மஸ்ஜித்களை மையமாகக் கொண்ட சமூக கூட்டு வாழ்வை , கூட்டுக் கடமைகளை , மிம்பர் எனும் வழிகாட்டும் அரியாசனத்தை, வார வார வெள்ளி பிரசங்கங்களை , ஷூரா முறையினை , இமாம், மாமூம், அமீர், மாமூர் கட்டுக் கோப்புகளை இஸ்லாம் அல்குரான் .அல்-ஸுன்னா   மூலம் மிகத்தெளிவாக அடையாள படுத்தியுள்ளது. அவற்றை அடிப்படியாக கொண்டு வாழ்ந்த நபித் தோழர்கள், முன்னோர்கள் என ஒரு அழகிய வரலாற்றுப் பாரம் பரியமும் எமக்கு இருக்கிறது.

அல்லாஹ்வின் வஹியோ, தூதரோ இல்லாத பொழுது முஸ்லிம் உம்மத்தின் கூட்டுத் தலைமை; இஸ்லாமிய சட்டவாக்க அடிப்படைகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு அறிஞர்கள் புத்திஜீவிகள் துறை சார் நிபுணர்கள் சமூகத் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை சார்ந்தோரையும் கலந்தாலோசித்து ஷூரா மூலம் எடுக்கின்ற முடிவுகளை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு  அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஷூரா அமைப்பு முறை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் சிறந்த தலைமைத்துவக் கட்டமைப்பாக வருவதோடு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவ்வப்போது மிகவும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கான மூலோபாயங்களையும் கொண்டிருக்கும்.

முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் குறுகிய நீண்ட மற்றும் இடைக்கால நிகழ்ச்சி  நிரல்களை இந்த தலைமைத்துவம்  வகுத்துக் கொள்ளும். தனி நபர்களையோ தனி நபர்களை மாத்திரம் நம்பியுள்ள  அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ அல்லது தங்களுக்குள் கொள்கையிலும் அணுகு முறைகளிலும் வேறு பட்டிருக்கும் இயக்கங்களையோ மாத்திரம்  நம்பியிராது அந்த  சகல் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்கின்ற தேசிய ஷூரா ஒன்றின் அவசியம் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை அல்லது சகோதர சமூகங்களை மாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு  முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப்   பின்னால் சர்வதேச முஸ்லிம்  உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர  முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர  மூலோபாயத் திட்டமிடல்களும் உளவுச் சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.

இவ்வாறான பல்வேறு பல்வேறு பரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் எமது குறுகிய  சமூகத்தை மாத்திரம் மைய்யப்படுத்திய அரசியல், தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை ,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல் சக்திகளோடும் புரிந்துணர்வோடு சமயோசிதமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து செயற்பட  வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

இத்தகைய தலைமைத்துவக் கட்டமைப்புகள், நமது சிவில் மற்றும் அரசியல், இயக்க தலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டிய நிகழ்ச்சி நிரல் களை, வேலை திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, அவர்களது சேவைக் காலத்தையும், தராதரத்தையும், மதிப்பீடு செய்து நிர்ணயிக்கின்ற தகுதியையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.

பொதுவாக ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ, பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் தமக்குள்ளே முரண்பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால் பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன் பெரும் நம்பிக்கையீனத்துடன் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே.

இன்றைய நிலையில் இந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் நாம் நமது இருப்பையும், பாதுகாப்பையும், அரசியல் சமூக பொருளாதார, கல்வி கலாச்சார, மற்றும் இன்னொரன்ன விவகாரங்களிலான நமது உரிமைகளையும், சலுகைகளையும் உறுதி செய்து கொள்ளுகிற வலுவுள்ள சிறு பான்மை சமூகமாக மாற முடியும்.

வாழ்க்கையில் தனி மனிதர்களாக, குடும்பங்களாக, சமூகங்களாக நாங்கள் இன்னோரன்ன சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம், சவால்ககளுக்கு முறையாக முகம் கொடுப்பது தான் வாழ்க்கை, உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் விடுக்கப்படும் சவால்கள் கண்டு நிலை குழைந்து போவது அல்லது அஞ்சுவது, நம்பிக்கை இழந்து விடுவது உண்மை விசுவாசிகள் பண்பாக இருக்க முடியாது.

சவால்களைக் கண்டு அஞ்சவோ நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை, மாறாக அவற்றிற்கு பொறுப்புணர்வுடன் நாம் முகம் கொடுக்க வேண்டும்.நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எமது உறவுகள் குறித்த கரிசனை போன்று எதிர்கால சந்ததியினர் குறித்தும் நாம் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலக நாடுகளின் அமைதி சமாதனத்திற்கு எதிரான தீய சக்திகளாக காட்டுவதற்கான பரப்புரைகள் “இஸ்லாமோபோபியா” எனும் பாரிய பில்லியன் டாலர் வேலைத் திட்டத்தினூடாக இஸ்லாத்தின் எதிரிகளால் சர்வதேச அரங்கில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

எமது அழகிய தேசத்தின் சமாதான சகவாழ்வை இலக்கு வைத்து இன்று கூலிப் படைகள் களமிறக்கப் பட்டுள்ளனர், சிலர் அறிந்தும், பலர் அறியாமையினாலும் அந்த சர்வதேச சதி வலைப்பின்னலில் சிக்கியுள்ளனர்,மேற்படி சதி வலைகளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதனை விடவும் பெரும்பான்மை சமூகங்களை பாதுகாக்கின்ற மிகப் பெரும் பணி எம்மீது சுமத்தப் பட்டுள்ளது.

இன்றைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை அல்லது அச்சம், சவால்களுக்கு முன்னால் நாங்கள் வெவ்வேறு அணிகளாக பிரிந்திருப்பதும், உள்வீட்டில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் தான். ஊர் மட்டங்களில் கூட நாம் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்று கூடிப் பேசுகின்ற மஷூரா செய்கின்ற ஒழுங்குகளையாவது செய்யாது ஒருவகை ஸ்தம்பித நிலையில் இருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் தமது அறிவு, பெற்ற பயிற்சிகள், சமூக கரிசனை, தலைமைத்துவ பண்புகள், கட்டுக் கோப்பு என்பவற்றை பிரயோகித்து அடிமட்ட (ஊர்) தலைமைத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழுவதற்கு ஒன்று கூடும் நாம், நோன்பு காலங்களை ஹயாத்தாக்க ஒன்று கூடும் நாம், சகாத் சதகாவை சேர்த்து பகிர்ந்தளிக்க ஒன்று கூடும் நாம், ஜும்மாவிற்கு ஒன்று கூடும் நாம் எமது இருப்பு பாதுகாப்பு குறித்த அடிப்படை அம்சத்திற்காக ஒன்று கூடுவதை ஏன் பர்ளு ஐன் ஆக பார்க்காது வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஐக்கியமும், ஒழுங்கும், கட்டுக்கோப்பும், கூட்டுப் பொறுப்பும் இல்லாத ஒரு சமூகம் ஏனைய சமூகங்களை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. வெளியில் இருந்து வரும் சவால்களை விடவும் உள் வீட்டில் இருந்து வரும் சவால்களே எமக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles