Monday, October 18, 2021

முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு விடயங்களில் அதிகரித்த அழுத்தம் ஆரோக்கியமானதல்ல!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

நிகாப் விடயத்தில் புரிந்துணர்வு ஏற்பட்ட பின்னரும் முஸ்லிம் மாதரின் ஆடை சீருடை விடயத்தில் மேலதிக அழுத்தங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது, பலிக்கடவாக்கப்படுவது முஸ்லிம்களாக இருப்பினும் இலக்கு வைக்கப் படுவது இந்து சமுத்திரத்தின் முத்தான இந்த அழகிய தேசமாகும்!

அரசியல் உள்நோக்கங்களைக் கொண்ட இனமத வெறி கூலிப் படைகளின் அழுத்தங்களிற்கு அரசாங்கம் தலைசாய்க்கக் கூடாது, நிராபராதிகளான முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு விடயங்களில் அளவுக்கதிகமான தலையீடுகள் இடம்பெறவோ பலவந்தமாக தீர்மானங்கள் திணிக்கப் படவோ கூடாது!

ஐ எஸ் ஐ எஸ் ற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று அறிந்த பின்னரும் முஸ்லிம்கள் மீது இஸ்லாமோ போபிய அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது! முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டுக் கொடுப்புக்களிற்கு முந்திக் கொள்வதனை விட விலகிக் கொள்வதற்கு முந்திக் கொள்ளலாலம்!

அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் முஸ்லிம் சன்மார்க்க சிவில் தலைமைகள் அவற்றை தாமாகவே கலந்தாலோசித்து பொருத்தமான முடிவுகளை எடுப்பார்கள், அவற்றையே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பேச வேண்டும்! மாறாக முஸ்லிம் சமூகத்தை நோவித்து அதன் மீது திணிப்புக்களை செய்வதற்கு எத்தனிப்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்!

பெரியமுல்லை முதல் குளியாபிடிய மினுவங்கொட வரை இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் காடையர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனங்களிற்கு ஒட்டு மொத்த சிங்கள பௌத்த சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும் என்றோ அவர்களது மத கலாசார விவகாரங்களில் தீவிரவாதம் பயங்கரவாதம் அடிப்படை வாதம் இருக்கின்றது என்றோ எவரும் குரல் எழுப்பவில்லை, அவர்களின் வீடுகளில் ஆயுதங்களை வெடிபொருட்களை கத்தி வாள்களை தேடுமாறும் எவரும் கேட்டுக் கொள்ளவில்லை.

99 % முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வை தேசத்தின் ஐக்கியத்தை ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள், எந்தவொரு நெருக்கடியான நிலைமைகளிலும் வன்முறைகளை நாடாதவர்கள் என்பதனை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் அதீதமான அழுத்தங்களை அரசியல் நோக்கங்களுடன் எந்தவொரு தரப்பும் கொண்டுவருவதனை நாம் அனுமதிக்க முடியாது!

தம்புள்ளை அளுத்கமை முதல் அம்பாறை திகனை கண்டிவரை அப்பாவி முஸ்லிம்களின் மீது வன்முறைகள் காடைத் தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபொழுது கூட அரசபடைகளும் அவரசரகால சட்டமும், ஊரடங்குச் சட்டமும் அமுலில் இருந்தன, ஆனால் அந்த இனமதவெறி கூலிப் படைகள் வெடிபொருட்களுடன் ஆயுதங்களுடன் கத்திகள் வாள்களுடன் வன்முறைகளில் ஈடுபட்ட பொழுதும் நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் வன்முறைகளை நாடவில்லை அங்கு தீவிரவாதமும், அடிப்படை வாதமும்  பயங்கரவாதமும் இருக்கவில்லை.

ஆனால், சர்வதேச பிராந்திய சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு விலை போகும் உள்நாட்டுமுகவர்களே நெறிதவறிய பலயீனமான சக்திகளை எல்லா சமூகங்களில் இருந்தும் தத்தமது நிகழ்ச்சிநிரல்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர், இல்லாத பயங்கரவதத்தை ஸ்தாபித்தனர், அதன் அடுத்த கட்டமே  ஐ எஸ் ஐ எஸ் எனும் பூகோள வில்லங்கம்!

இலங்கை வாழ் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவதும், அவர்கள்மீது காடைத் தனங்களை, வன்முறைகளை கட்டவிவிழ்த்துவிடுவதும், அரச யந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது அதிகரித்த அழுத்தங்களை பிரயோகிப்பதும் ஐ எஸ் ஐ எஸ் ஐ பின்னாலிருந்து நகர்த்தும் சர்வதேச பிராந்திய சதிகாரர்களதும், உள்நாட்டு பயனாளிகளதும் அடுத்த கட்ட நகர்வாகும்!

சமாதான விரும்பிகளான முஸ்லிம்களின் வீடுகளில் வியாபாரங்களில் சமய கலாசார விவகாரங்களில் இல்லாத எதிரியைத் தேடும் அபத்தமான முயற்சிகளை விட்டுவிட்டு இந்த நாட்டைக் காவுகொள்ள வலைவிரித்திருக்கும் சர்வதேச பிராந்திய வல்லூறுகளின் கெடுபிடிகளில் அதிக கவனம் அரசும் பாதுகாப்புத் தரப்பும் செலுத்துதல் வேண்டும்.

தவறும் பட்சத்தில் உண்மையான எதிரிகள் உள்வீட்டில் உருவாவதனை எந்தவொரு சமூகத் தலைமைகளாலும் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் என்பதனை சகல அரசியல் சமூக சமய புத்திஜீவித்துவ தலைமைகள் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஐ எஸ் ஐ எஸ் இற்கும் முஸ்லிம் அரபு நாடுகளிற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்புகள் இல்லை அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் இராக், சிரியா, லிபியா போன்றமுஸ்லிம் நாடுகளையே ஆக்கிரமித்து அழித்துள்ளார்கள் என இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கைத் தூதுவர்கள் கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் அரச தலைவர்களுக்கு உணர்த்தியுள்ளார்கள், அந்த மாநாட்டு அமைப்பு இலங்கையில் இடம் பெரும் கெடுபிடிகளை அவதானித்து அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

இத்தகைய இக்கட்டான நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களையும் அரபு முஸ்லிம் நாடுகளையும் தமது பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கான தேசியக் கொள்கைகளை மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை அரசு வகுப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டுயன்றி மிகவும் மலிவான மட்டரகமான காடைத் தனமான இனமதவெறித் தனங்களின் பின்னால் இழுபட்டுச் செல்லக் கூடாது!

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை பின்னால் இருந்து நகர்த்தும் நாடுகள் சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மணித் உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் சாட்டுக்களை கொண்டுவந்த பொழுது கொழும்பு நகரில் ஆர்பாட்டங்களை மேற்கொண்ட முஸ்லிம்கள் மீதுதான் அளுத்கமை பேருவளை உற்பட தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டன.

இலங்கை அரசிற்கும் மக்களிற்கும் ஆதரவாக முஸ்லிம் சன்மார்க்கத் தலைமைகள் ஜெனீவா வரை சென்ற பின்னர்தான் மதரசாக்கள், ஹலால், நிகாப் ஹிஜாப் இஸ்லாமிய வங்கிவரை இஸ்லாமோபோபிய காழ்ப்புணர்வு வன்முறை பரப்புரைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

ஆனால் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக குரல் கொடுத்தவர்கள் மனித உரிமை மாநாடுகளில் இலங்கைக்கு ஆதரவாக கை உயர்த்தியவர்கள் ஆதரவு திரட்டியவர்கள் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் நாடுகள் என்பதனையும் அதற்காகவே அதிதீவிரமாக முஸ்லிம்கள் தென்னிலங்கை சமூகத்திற்குள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள் என்பதனை அரசியல் இராஜதந்திர இராணுவ வட்டரங்கள புரிந்து கொள்ளவேண்டும்!

சங்கிலித் தொடரான தொடர்ந்தேர்சியிலான இந்த நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதனை சுயாதிபத்தியத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதனை, நாடு பிளவுறும் அச்சுறுத்தல் இருப்பதனை இலங்கை அரசியல் தலைமைகளும் பாதுகாப்புத் தரப்பினரும் நன்கு உணர்ந்து அங்கே மூளையை செலவிட வேண்டும்!

சிறுபிள்ளைத் தனமான தேர்தல் அரசியல் சித்துவிளையாட்டுக்களில் தேசிய அரசியல் தலைமைகளும் பதவிகள் பறிபோய் பரிதவிப்பவர்களும் ஈடுபட்டிருப்பது இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியிருக்கிறது, நாளை பல தசாப்தங்களிற்கும் விடிவுகாண முடியாத பூகோள, பிராந்திய  அரசியல் இராணுவ கெடுபிகளுக்குள் இந்த அழகிய தேசம் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது , இங்கு பலிக்கடவாக்கப்படுவது முஸ்லிம்களாக இருப்பினும் இலக்கு வைக்கப் படுவது இந்த தேசத்தின் தென்னிலங்கை பெருமபான்மைச் சமூகம் என்பதனை இந்த நாட்டின் சகல சமூகங்களையும் சேர்ந்த அரசியல் சமய சிவில் தலைமைகள் உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அரசியல் அரங்கில் இனவாதம் கொக்கரிக்கும் முதிர்ச்சியற்ற அரசியல் கூட்டளிகளுக்கும், விளம்பரங்களுக்காக விலைபோயுள்ள ஊடகங்களிற்கும், கூலிப்படைகளான பலகாயகள் சேனாக்களிற்கும், சமூக ஊடக சாத்தான்களிற்கும் கடிவாளமிடுவதனை விடுத்து முஸ்லிம் மாதரின் நிகாபுகளிற்குள்ளும் காதுகளுக்குள்ளும், சமயகலாசார பண்பாடுகளுக்குள்ளும் அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் தேடுகின்ற அபத்தமான நெருக்குவாரங்களை அரசு முடிவிற்கு கொண்டுவரவேண்டும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles