Friday, December 2, 2022

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்து விடக் கூடாது!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம் சமூகம் சார்பாக ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாயின்  சுயாதீனமான அணிசேரா பிரதிநிதி ஒருவரே களமிறங்க வேண்டும், வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இவ்வாறான தேசிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கூட்டுப் பொறுப்புடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் நடந்து கொள்ள வேண்டும்.

பிரதான தேசிய அணிகளுடன் புரிந்துணர்வு உடன் பாடுகளை மேற்கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளோ சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளோ துணிந்துவிடக் கூடாது, அவ்வாறு செய்வார்களாயின் ஜனாதிபதி தேர்தல்களம் எரிகின்ற இனமதவெறி நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற முட்டாள்தனமான கைங்கரியமாக மாறிவிடும்.

ஆனால் நேடியாகவே ஒரு பிரதான தேசிய அணிக்கு வக்காலத்து வாங்க ஒருவரோ பலரோ குதித்தால் முஸ்லிம் ஆரசியல் சந்திசிரிக்கிற கேளிக் கூத்தாக மாறிவிடும், எனவே முஸ்லிம் சமூக சிவில் சன்மார்கத் தலைமைகளை கலந்தாலோசிக்காது எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் முண்டியடித்துக் கொண்டு களமிறங்கவோ, இறக்கப்படவோ கூடாது. (இது ஒரு சமூகம் சார் அறிவுறுத்தல் மாத்திரமல்ல எச்சரிக்கையுமாகும்)

அவ்வாறு சுயாதீனமான ஒரு நபர் களமிறங்கும் பட்சத்தில் முஸ்லிம் அரசியல் சிவில் தலைமைகள் யாவும் அவருக்கு நேரடியான ஆதரவை வழங்காவிட்டாலும்  முஸ்லிம் சமூகம் சார்பாக இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தெளிவான செய்தியை தேசத்திற்கும் முஸ்லிம் உலகிற்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கு தம்மால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.

களமிறங்கும் வேட்பாளர் தந்து இஷ்டப்படி பிரச்சாரங்களை மேற்கொள்ளவோ ஊடகங்களில் கருத்துக்களை தெரிவிக்கவோ கூடாது, மாறாக நன்கு ஆராயப்பட்டு தயாரிக்கப்படும் உரைகளை அறிக்கைகளை தரவுகளோடும் தகவல்களோடும் ஆய்வுபூர்வமாக   சமூகம் தேசம் சார் நிலைப்பாடுகளை மாத்திரமே அவர் மேற்கொள்ள வேண்டும்.

இம்முறை இரண்டாவது மூன்றாவது தெரிவுகள் முக்கியத்துவம் பெற இடமிருப்பதனால் தமது இரண்டாவது தெரிவை தாம் விரும்பும் ஜனாதிபதி அபேட்சகருக்கு வழங்களாம்..உ+ம் இரண்டாவது தெரிவு அனுர குமார என்றாலோ, அல்லது பிரிதொருவர் என்றாலோ இனமத வேறுபாடுகளின்றி தேசிய அரசியல் களத்தில் ஏனைய சமூகங்களோடு இணைந்து செயற்படலாம்.

இம்முறை ஜாதிக ஜன பலவேகய தேசிய மக்கள் சக்தியை தேசிய அரசியலில் மூன்றாவது பலமான அணியாக கொண்டுவர விரும்புவோரும் தமது முதலாவது தெரிவை அவர்களுக்கும் இரணாடாவது தெரிவை பிரதான பிரவாக அணி வேட்பாளருக்கும் வழங்க முடியும்.

அபிவிருத்தி அரசியல் மாயையில் சூதாட்ட சராணாகதி மனநிலை தொடருமெனில் இன்னும் பல திகனைகள் தவிர்க்க முடியாதவை, மாற்றத்தை நோக்கி தேசத்தை நகர்த்தும் பணியில் பங்கெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்!

ஜனாதிபதித் தேர்தலில் மூவர் அல்லது அதற்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் முறையில் தான் மூன்றாவது பலமான அணியின் அல்லது சிறு அல்லது சிறுபான்மை கட்சிகளின் பலம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் இருவருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50% திற்கு ஒரு வாக்கு தானும் அதிகம் பெற்றவர் வெற்றி பெறுவார்.

இருவரெனில் செல்லுபடியான வாக்குகளில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெறுவார், போட்டியிட்டவர்கள் மூவர் எனில் வாக்குச் சீட்டில் முதல் தெரிவும் இரண்டாம் தெரிவும் மாத்திரமே இருக்கும், மூவருக்கு மேல் எனில் முதற் தெரிவுடன் இன்னும் இரண்டு தெரிவுகள் இருக்கும்.

வாக்களிக்கும் பொழுது முதல் தெரிவிற்க்கு (அரபு இந்திய இலக்கம்) 1 என்றும் இரண்டாம் தெரிவிற்கு 2 என்றும் மூன்றாம் தெரிவு இருந்தால் 3 என்றும் இலக்கங்களால் வாக்களிக்க வேண்டும்.

முதல் தெரிவிற்கு 1 என்ற இலக்கம் அல்லது X புள்ளடி இருந்தாலும் செல்லுபடியாகும். ஆனால் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் இலக்கங்களாக தெளிவாக குறிப்பிடப் பட வேண்டும்.

இருவருக்குமேல் போட்டியிட்டு 50% மேல் எவரும் வாக்குகளை பெறாதவிடத்து முதலிருவர் தவிர்த்து ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்..

பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் முதலிருவருக்கும் இருப்பின் அவற்றை வேறுபடுத்தி கணக்கிட்டு கூடுதல் வாக்கைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அங்கும் 50% நிபந்தனை இல்லை.

பிரதான வேட்பாளருக்கு புறம்பாக சிறுபான்மை சமூகங்கள் சார்பாக அல்லது இடது சாரி கொள்கை சார்பாக, அல்லது மூன்றாவது அணியாக பல வேட்பாளர்கள் களமிறங்கும் சாத்தியப் பாடுகள் இருப்பதனால் இம்முறை இரண்டாவது மூன்றாவது வாக்குகளும் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கலாம்.

தேர்தல் வியூகங்களுக்காகவும் பிரதான கட்சிகள் அவ்வாறான வேட்பாளர்களை களமிறக்களாம், உதாரணமாக விக்னேஸ்வரன் அல்லது ஹகீம் அணியினர் தாம் ஆதரிக்கும் பிரதான அணிகள் சார்பாக களமிறக்கப்படலாம்.

சிறுபான்மை சமூகங்கள் மிகவும் விளிப்புடன் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை.

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது.

வாக்கு என்பது “சாட்சியமாகும்”,

வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்”


வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,


வாக்கு என்பது “ஆயுதமாகும்”,


வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,


வாக்கு என்பது “ வகிபாகம்” ஆகும்,


வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும், 


வாக்கு என்பது “சோதனை” ஆகும்,


வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”.

இந்த அமானிதம் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

நாம் வாழுகின்ற தேசத்தில் அமைதி பாதுகாப்பு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, பொருளாதார சபீட்சம், உடகட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்…

கல்வி கலை கலாசார பண்பாடுகளில் விருத்தி, ஊழல் மோசடிகளற்ற நல்லாட்சி, மனித உரிமைகள் மதிக்கப்படல், நீதி நிலைநாட்டப்படுவது, சுகாதாரம், சுற்றுச் சூழல் பேணிப் பாதுகாக்கப்படுவது, வறுமை ஒழிப்பு, மது போதை வஸ்துகள் ஒழிப்பு…

என எல்லோருக்கும் பொதுவான பொது வாழ்வின் சகல துறைகளிலும் நாம் போற்றுகின்ற உயரிய விழுமியங்களை கொள்கை கோட்பாடுகளை நியாய தர்மங்களை மேலோங்கச் செய்வது தஃவா மற்றும் ஜிஹாத் எனும் விதியாக்கப்பட்ட அறப்பணிகளாகும்.

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பன அக்கிரமக்கார்களிடமிருந்து மீட்கப்படுவதற்கான போராட்டம் வரலாறு நெடுகிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான தொடர்ந்தேர்ச்சியான சமராக இடம் பெற்று வந்தள்ளதை நாம் நன்கு அறிவோம்.

சத்திய வழி நின்று அரசியல் எனும் மிகப்பெரிய அமானிதத்தை பேணிக்காப்பதில் வேட்பாளராயினும் வாக்காளராயினும் எமது வரலாற்றக் கடமையினைச் சரியாகச் செய்வோம்.

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் இல்லை இடையில் வந்த ஹனுமான் தான் ஆண்டாலும் மாறிமாறி சோற்றுக்காக சோரம் போகும் முதுகெலும்பற்ற முஸ்லிம் அரசியல் மாறாத வரை முஸ்லிம்களுக்கு விமோசனம் இல்லை.!

ஹலால் அழுத்கமை முதல் திகன மினுவங்கொட வரை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சங்கிலித் தொடரான சவால்களுக்கு பின்னால் இருந்ததுவும் தேசிய பிராந்திய பல்தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் தான்.

தெளிவான தேசிய சமூக பார்வையும், கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்!

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்

15/08/2019

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles