Monday, October 18, 2021

ஜனாதிபதித் தேர்தல் : தேசிய அரசியலில் புரட்சிகரமான மாற்றம் தேவை!

இன மத மொழி பேதமின்றி இந்த நாட்டு மக்களிற்கும் பிரதான கட்சிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை இந்தத் தேர்தல்கள் மூலம் சொல்ல வேண்டிய கடப்பாடு புதிய தலைமுறையினருக்கு இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி முன்மொழிகின்ற புரட்சிகரமான அரசியல் பொருளாதார சீர்திருத்தங்கள் இம்முறை பரவலான வரவேற்பை நாட்டு மக்கள் மத்தியில் பெற்றிருப்பதாலும், (அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகா விட்டாலும்) எதிர்காலத்தில் ஆளும் கட்சியில் அல்லது எதிர்க் கட்சியில் பிரதான வகிபாகத்தை அவர்கள் வகிக்கவேண்டுமென புதிய தலைமுறையினர் விரும்புவதாலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கு அளிக்கப் படும் வாக்குகள் வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை..

இம்முறை 35 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாலும் அதில் 30 இற்கும் மேற்பட்டோர் பினாமி வேட்பாளர்களாக இருப்பதாலும் எந்தவொரு வேட்பாளரும் முதலாவது சுற்று கணக்கெடுப்பில் 50% வாக்குகளைப் பெறப்போவதில்லை எனபதே அரசியல் அவதானிகளின் கணிப்பு.

எனவே, இரண்டாவது சுற்று கணக்கெடுப்பிலேயே பிரதான வேட்பாளர்களில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகும் நிலை இருப்பதால் முதலாவது வாக்கை தேசிய மக்கள் சக்தியிற்கும் இரண்டாவது வாக்கை பிரதான வேட்பாளருக்கும் வழங்கலாம்!

உங்கள் கட்சி சொல்லும் அல்லது வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றவர்களென நீங்கள் கருதும் பிரதான வேட்பாளர்கள் சஜித் பிரேமதாச அல்லது கோட்டபாய ராஜபக்ஷவாகவோ இருந்தாலும் அவர்கள் இரண்டாவது சுற்று கணக்கெடுப்பிலேயே தெரிவாகும் நிலை இருப்பதால நீங்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு அளிக்கும் முதலாவது வாக்கு ஒரு பொழுதும் வீண்போவதில்லை என்பதனை மனதில் கொள்ளுங்கள்!

ஜனாதிபதித் தேர்தல்: வாக்குகள் எண்ணப்படும் முறை!

இருவருக்குமேல் போட்டியிட்டு 50% மேல் எவரும் வாக்குகளை பெறாதவிடத்து  இரண்டாவது சுற்று கணக்கெடுப்பு இடம்பெறும், அப்பொழுது முதலிருவர் தவிர்த்து ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் முதலிருவருக்கும் இருப்பின் அவற்றை வேறுபடுத்தி கணக்கிட்டு கூடுதல் வாக்கைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் இங்கு  50 % நிபந்தனை இல்லை.

வாக்களிக்கும் பொழுது முதல் தெரிவிற்க்கு (அரபு இந்திய இலக்கம்) 1 என்றும் இரண்டாம் தெரிவிற்கு 2 என்றும் மூன்றாம் தெரிவு இருந்தால் 3 என்றும் இலக்கங்களால் வாக்களிக்க வேண்டும்.

முதல் தெரிவிற்கு 1 என்ற இலக்கம் அல்லது X புள்ளடி இருந்தாலும் செல்லுபடியாகும். ஆனால் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் இலக்கங்களாக தெளிவாக குறிப்பிடப் பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல்,வாக்குகள் எண்ணப்படும் முறையும் உங்கள் அபிமான வேட்பாளரும்:

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணும் நிலை வரின் உங்கள் அபிமான வேட்பாளர் முதலிருவரில் ஒருவராக வருவதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்!

உதரணத்திற்கு நீங்கள் தேசிய அரசியலில் புரட்சிகர மாற்றத்தை விரும்பி அனுரவிற்கு (தேசிய மக்கள் சக்தியிற்கு) ஒரு விருப்பு வாக்கை அளிக்க விரும்பினால் அவருக்கு (2 அல்லது 3 ) இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்கினை அளிப்பதில் அர்த்தமில்லை, அவருக்கு முதலாவது தெரிவை வழங்கி விட்டு உங்கள் தலைவர் அல்லது கட்சி சொல்லும் பிரதான வேட்பாளருக்கு (அது சஜித் அல்லது கோட்டாவாக இருக்கலாம்) வழங்குதல் வேண்டும்.

ஏனெனில் முன்னணியில் வரும் பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து அனைவரும் இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் போது போட்டியில் இருந்து நீக்கப் படுவார்கள்.

போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்களுக்கு வாக்களித்தவர்கள் முதலாவது இரண்டாவது இடங்களை வெற்றிகொண்ட பிரதான வேட்பாளர்களுக்கு அளித்துள்ள (இரண்டாவது அல்லது மூன்றாவது) வாக்குகள் மாத்திரமே இரண்டாவது சுற்று கணக்கெடுப்பில் கவனத்திற் கொள்ளப் படும்.

உதாரணமாக, சஜித் மற்றும் கோட்டா முதலிரு இடத்தில் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு வாக்களித்த அதிகமானோர் இரண்டாவது தெரிவாக அனுர விற்கு (தேசிய மக்கள் சக்தியிற்கு) வாக்களித்திருந்தாலும் அந்த இரண்டாவது மூன்றாவது வாக்குகள் எண்ணப்படுவதில்லை.

இரண்டாவது சுற்று கணக்கெடுப்பில் அவை கவனத்திற் கொள்ளப் படுவதில்லை என்றபோதும் அவற்றின் எண்ணிக்கையுடன் அனுர நேரடியாக பெற்ற வாக்குகளை கூட்டும் பொழுது முதலிருவரையும் விட அதிகமான வாக்குகளை அவர் பெற்றிருந்தாலும் 50%அதிகமாக என்று வைத்துக் கொள்வோம் அனுர மூன்றாவது இடத்தில் இருப்பதாலும் போட்டியில் இருந்து நீக்கப் பட்டிருப்பதாலும் அவரால் ஜனாதிபதியாக முடியாது.

சரி, மூன்றாவது இடத்தில் உங்கள் அபிமான வேட்பாளர் அனுர இருந்தால் நீங்கள் (தேசிய மக்கள் சக்தியிற்கு) அளித்த வாக்குகள் வீணாகிவிடுமா ? என்று கேட்டால் அதற்கும் இல்லை வீணாவதில்லை என்று கூற முடியும் .. ஏன் என்று கேட்கிறீர்களா..?

ஏனென்றால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணப் படும் பொழுது அனுர விற்கு வாக்களித்த மக்களில் பெருமபன்மையானோர் இரண்டாவது வாக்கை சஜித் ற்கு அளித்தர்களை என்று வைத்துக் கொள்வோம்.

இங்கு பல முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் முதலாவதாக (உதாரணத்திற்கு) அந்த வாக்குகள் சஜித்துடைய வெற்றியை தீர்மானித்தால் புதிய ஜனாதிபதி (தேசிய மக்கள் சக்தியின்) அவர்களது பங்களிப்பை மதித்து நடக்க வேண்டிய கடப்பாட்டில் இருப்பார்.

இரண்டாவதாக தொடர்ந்து வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் அவர்களது வகிபாகம் எவ்வாறு அமையப் போகிறது என்பதனை ஜனாதிபதி கவனத்திற்கொள்வார்.

மூன்றாவதாக அனுரவினை (தேசிய மக்கள் சக்தியினை) ஆதரித்த சிவில் தலைமைகளும் சிறு கட்சிகளும் தமது பொதுத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொள்வதில் அந்த முடிவுகள் தாக்கம் செலுத்தும்.

சிலவேளைகளில் மக்களது ஆதரவு அலையைப் பொறுத்து பிரதான வேட்பாளர்கள் அனுராவின் (தேசிய மக்கள் சக்தியின்) ஆதரவினைக் கோரும் பட்சத்தில் தேர்தலுக்கு முன்னரே சில உடன்பாடுகளும் எய்தப்படலாம்.

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை.

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது.

வாக்கு என்பது “சாட்சியமாகும்”,

வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்”

வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,

வாக்கு என்பது “ஆயுதமாகும்”,

வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,

வாக்கு என்பது “ வகிபாகம்” ஆகும்,

வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும், 

வாக்கு என்பது “சோதனை” ஆகும்,

வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”.

இந்த அமானிதம் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

நாம் வாழுகின்ற தேசத்தில் அமைதி பாதுகாப்பு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, பொருளாதார சபீட்சம், உடகட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்…

கல்வி கலை கலாசார பண்பாடுகளில் விருத்தி, ஊழல் மோசடிகளற்ற நல்லாட்சி, மனித உரிமைகள் மதிக்கப்படல், நீதி நிலைநாட்டப்படுவது, சுகாதாரம், சுற்றுச் சூழல் பேணிப் பாதுகாக்கப்படுவது, வறுமை ஒழிப்பு, மது போதை வஸ்துகள் ஒழிப்பு…

என எல்லோருக்கும் பொதுவான பொது வாழ்வின் சகல துறைகளிலும் நாம் போற்றுகின்ற உயரிய விழுமியங்களை கொள்கை கோட்பாடுகளை நியாய தர்மங்களை மேலோங்கச் செய்வது தஃவா மற்றும் ஜிஹாத் எனும் விதியாக்கப்பட்ட அறப்பணிகளாகும்.

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பன அக்கிரமக்கார்களிடமிருந்து மீட்கப்படுவதற்கான போராட்டம் வரலாறு நெடுகிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான தொடர்ந்தேர்ச்சியான சமராக இடம் பெற்று வந்தள்ளதை நாம் நன்கு அறிவோம்.

சத்திய வழி நின்று அரசியல் எனும் மிகப்பெரிய அமானிதத்தை பேணிக்காப்பதில் வேட்பாளராயினும் வாக்காளராயினும் எமது வரலாற்றக் கடமையினைச் சரியாகச் செய்வோம்.

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் இல்லை இடையில் வந்த ஹனுமான் தான் ஆண்டாலும் மாறிமாறி சோற்றுக்காக சோரம் போகும் முதுகெலும்பற்ற முஸ்லிம் அரசியல் மாறாத வரை முஸ்லிம்களுக்கு விமோசனம் இல்லை.!

ஹலால், நிகாப் அழுத்கமை முதல் திகன, குளியாபிடிய மினுவங்கொட வரை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சங்கிலித் தொடரான சவால்களுக்கு பின்னால் இருந்ததுவும் தேசிய பிராந்திய பல்தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் தான்.

தெளிவான தேசிய சமூக பார்வையும், கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles