மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
வாக்களிப்பது ஒருவருக்கென்றால் X புள்ளடி இடுங்கள் இருவர் அல்லது மூவருக்கு என்றால் 1, 2, 3 என இலக்கங்களைக் குறித்து வாக்களியுங்கள்.

நீங்கள் சஜித் பிரேமதாசவிற்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் அண்ணம் சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை X போட்டுவிட்டு வாருங்கள்.
நீங்கள் கோதாபய ராஜபக்ஷவிற்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் மொட்டு சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை X போட்டுவிட்டு வாருங்கள்.
சஜித்திற்கு முதலாவது வாக்கை வழங்குபவர்கள் கோதாபயவிற்கு இரண்டாவது வாக்கை அளிப்பதில் பயனில்லை அது எண்ணப்படுவதில்லை.

கோதாபயவிற்கு முதலாவது வாக்கை அளிப்பவர்கள் சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளிப்பதிலும் பயனில்லை அதுவும் எண்ணப் படுவதில்லை.
அவர்களில் ஒருவருக்கு வாக்களித்த பின் 2 ஆவது 3 ஆவது வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிப்பதில் பயனில்லை, அவையும் எண்ணப்படுவதில்லை.
பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து ஏனைய உதிரி/பினாமி வேட்பாளர்களுக்கு மட்டும் நீங்கள் வாக்கினை அளிப்பதிலும் பயனில்லை, வாக்களிக்காமல் இருந்து விடலாம்.
பிரதான வேட்பாளர்களாகிய சஜித் மற்றும் கோதாபய ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் அவர்கள் இருவரில் ஒருவரே ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது.

இருவரில் எவரும் அளிக்கப்பட வாக்குகளில் ஐம்பது விகிதத்திற்கு மேல் வாக்குகளை பெறாவிடின் மாத்திரமே இரண்டாவது சுற்று வாக்கு எண்ணப்படும்.
இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் பொழுது ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற முதலிருவர் (உதரணமாக அந்த முதலிருவரும் (கோத்தபாய சஜித்) தவிர்த்து ஏனைய 33 பேரும் போட்டியில் இருந்து நீக்கப் படுவர்.
பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து வேறு எவருக்கும் 2 ஆவது 3 ஆவது வாக்குகளை அளித்தால் பயனில்லை. முதலிருவரில் ஒருவர் 50% மேல் எடுக்கா விட்டால், அவர்களுக்காகவே (இரண்டாவது சுற்றில்) 2 ஆவத 3 ஆவது வாக்குகள் எண்ணப்படும்.
இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் பொழுது சஜித்திற்கு இரண்டாவது வாக்கினை எவரேனும் அளித்திருந்தால் அது அவரது குவியலில் சேர்க்கப்படும் மூன்றாவது வாக்கினை கோத்தபாயவிற்கு வழங்கி இருப்பினும் சரியே.
இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் பொழுது கோத்தபாயவிற்கு இரண்டாவது வாக்கினை எவரேனும் அளித்திருந்தால் அது அவரது குவியலில் சேர்க்கப்படும் மூன்றாவது வாக்கினை சஜித்திற்குற்கு வழங்கி இருப்பினும் சரியே.

இம்முறை தேசிய அரசியலில் புரட்சிகர மாற்றம் வேண்டி களமிறங்கியிருக்கும் தேசிய மக்கள் சக்தியிற்கு வேட்பாளர் அனுரா குமார திசானாயாகவிற்கு ஆதரவு அலை இருப்பதனை அவதானிக்கலாம் அவருக்கு வாக்களிக்க விரும்புவோர் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை அளிப்பதில் பயனில்லை.
தேசிய மக்கள் சக்தியிற்கு முதலாவது வாக்கினை அளிப்பதன் மூலம் எதிர்பார்க்கப் படும் முதலாவது வெற்றி; மாறி மாறி ஆட்சிக்கு வரும் பிரதான கட்சிகள் எவரும் முதல் சுற்றில் ஐம்பது வீத வாக்கினைப் பெற முடியாத நிலையை ஏற்படுத்துவதாகும், அதன் மூலம் நாட்டின் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப் படுவதை தேசிய மக்கள் சக்தி இலக்காக கொண்டுள்ளது.
அனுர குமாரவிற்கு வாக்களிக்க விரும்புவோர் முதலாவது வாக்கினை மாத்திரமே அளிக்க வேண்டும், ஏனென்றால் இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் போது இரு பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து ஏனைய 33 வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுவிடுவர், எனவே அவர்களுக்கு இரண்டாவது மூன்றாவது வாக்குகள் அளிக்கப் பட்டிருந்தால் அவை எண்ணப் படுவதில்லை.
உதாரணமாக சஜித் பிரேமதாசாவிற்கும் கோதாபய ராஜபக்ஷவிற்கும் வாக்களித்தவர்கள் அனுர குமாரவிற்கு இரண்டாவது மூன்றாவது வாக்குகளை அளித்திருந்தாலும் (அவர் முதலிருவரில் ஒருவராக இல்லாவிட்டால் போட்டியில் இருந்து நீக்கப் படுவதால்) அந்த இரண்டாவது மூன்றாவது வாக்குகள் கணக்கெடுக்கப் படுவதில்லை.

அதேபோன்றுதான் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்திருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்க விரும்புவோரும் முதலாவது வாக்கினை அவருக்கு அளித்து விட்டுத் தான் பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவருக்கு இரண்டாவது வாக்கினை வழங்க வேண்டும், இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் பொழுது அவர் போட்டியில் இருந்து நீக்கப் படுவதால் அவருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பு வாக்கினை அளிப்பதில் பயனில்லை.
தேசிய மக்கள் சக்தியிற்கு முதலாவது வாக்கை வழங்குவோர் நாட்டின் ஜனாதிபதியாக சஜித் அல்லது கோத்தபாய இருவரில் ஒருவரை தெரிவு செய்தல் அவசியமாகும் எனவே இருவரிலும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் சிறந்தவர் அல்லது குறைந்த தீமையை உடையவர் எனக் தாம் கருதுபவருக்கு காட்டாயம் இரண்டாவது வாக்கினை அளிக்கத் தவறாதீர்கள்.
இரண்டாவது வாக்கினை எவருக்கும் அளிக்க வேண்டாம் என பிரதான இரு வேட்பாளர்கள் தவிர்த்து எவர் கூறினாலும் நீங்கள் கேட்க வேண்டாம் (எனது அறிவுரை மாத்திரமே)
அதேபோன்றே பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவருக்கேனும் வாக்களிக்காது ஏனைய போட்டியில் இருந்து நீக்கப் படும் 33 வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிப்பதில் அல்லது அவர்களில் இருவருக்கோ மூவருக்கோ வாக்களிப்பதில் பயனில்லை.
இப்போ தெளிவான குழப்பத்தில் இருப்பீர்கள் அல்லவா ?
சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் பிரதான வேட்பாளர் இருவரில் ஒருவருக்கு வக்களிப்பதாயின் அவரது சின்னத்திற்கு மட்டும் புள்ளடியிட்டு விட்டு வாருங்கள், அனுரவிற்கோ அல்லது ஹிஸ்புல்லாஹ் போன்ற ஒருவருக்கோ வாக்களிக்க தீர்மானித்திருந்தால் அவருக்கு முதலாவது வாக்கை 1 என இலக்கத்தில் அளித்து விட்டு பிரதான வேட்பாளர்களான சஜித் அல்லது கோத்தபாய விற்கு இரண்டாவது வாக்கை 2 என இலக்கத்தில் அளித்து விட்டு பாதுகாப்பாக வீடு வந்து சேருங்கள்.