Monday, December 9, 2024

தற்போதைய பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரை.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து  ஜனாதிபதி ஆற்றிய  உரையின் முழு விபரம் வருமாறு :

இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் தலைவராக உங்களுக்கு உரைநிகழ்த்தும் இவ்வாய்ப்பானது நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்நாட்டின் மக்கள் வழங்கிய வரலாற்று மிக்க வெற்றியினாலேயே எனக்குக் கிடைத்துள்ளது.

அமைதியானதும் அத்துடன் நியாயமானதுமான தேர்தல் ஒன்றிற்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் பிரஜைகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான் இவ்வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ் உயர் சபையில் அமர்ந்திருக்கும் நீங்கள் எக்கட்சியைச் சேர்ந்தவராகவிருப்பினும் இந்நாட்டு மக்களது நலன் கருதி சேவையாற்றுவது எம் அனைவரதும் அடிப்படைப் பொறுப்பாகும். நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவராகவும், பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் சேவையாற்றினேன்.

நான் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிராவிடினும் மக்கள் சேவை யாதென்பது பற்றி நான் சிறிய வயதிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். எனது தந்தையின் மூத்த சகோதரரான டி.எம்.ராஜபக்ஷ 1936 ஆம் ஆண்டில் அரசப் பேரவையில் அம்பாந்தோட்டை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன், 1945 ஆம் ஆண்டில் அவர் காலமான பின்னர் அம்பாந்தோட்டை மக்கள் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அரச பேரவைக்காகத் தெரிவு செய்தனர். அதன்பின் அவர் மக்கள் வாக்கினால் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் உறுகுணை கிருவாபத்துவையின் கிராமப்புறமான மெதமுலனயை அடிப்படையாகக் கொண்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த ராஜபக்ஷவினர் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாகச் சேவையாற்றியுள்ளனர். 

இக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், உப சபாநாயகர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராக மட்டுமல்லாது ஜனாதிபதிகள் இருவர்களாகவும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த இந்நாட்டின் பொதுமக்கள் எம்மை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அன்று உறுகுணையின் சிங்கமாக அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைதந்த முதல் நாளிலிருந்தே குரக்கன் நிறமான சால்வையொன்றை அணிந்திருந்தார்.

அவர் கிருவாபத்துவையின் குரக்கன் செய்கைபண்ணும் விவசாயிகளையே அந்தச் சால்வையின் மூலம் அடையாளப்படுத்தினார். டி.எம்.ராஜபக்ஷவின் பின் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அவரின் பின் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்தக் குரக்கன் நிறமான சால்வையை அணிந்திருந்தனர்.

நான் அந்தச் சால்வையை அணியாதிருப்பினும் இந்நாட்டின் கஷ்டத்திற்குள்ளான மக்கள் சார்பில் என்றென்றும் தம்மை அர்ப்பணித்த குரக்கன் சால்வையினால் அடையாளப்படுத்துகின்ற அந்த ஆழமான தத்துவத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.

அத்தத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்காக நான் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கிறது.

2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் இந்நாட்டு மக்கள் எனக்கு மிகத் தெளிவானதொரு மக்கள் வரத்தினை பெற்றுக் கொடுத்தனர். என் மேல் வைத்த மிகுந்த நம்பிக்கையைக் கொண்டே அவ் வரத்தினை எனக்கு வழங்கினர். அந்நம்பிக்கையை எவ்வகையிலும் மீறாது நாம் உறுதியளித்த அதேவாறு மக்களுக்காகச் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்நாட்டு அரசியல் கலாசாரத்தில் பாரியதொரு மாற்றத்தைச் செய்யவே தேவையேற்பட்டு இருந்தது. குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்ரீதியான நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்தனர். 

மேலும் அரசர்களை உருவாக்கும் வகிபாகத்தை நடித்துக் கொண்டு நாட்டின் அரசியலை வழிநடாத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என்பதை பெரும்பான்மை மக்கள் நிரூபித்தனர்.

இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நான் அழைப்புவிடுக்கின்றேன் கடந்த காலத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்திய அரசியலைத் தற்போதாவது கைவிட்டு மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றுசேருமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும். 

எமது நாட்டின் உன்னதமான அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரசையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் இதன்போது வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

சிறுவயதில் எனது தந்தையார் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனது ஞாபகத்திலுள்ளது. நான் பெரும்பாலும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியில் இருந்து பாராளுமன்றச் செயற்பாடுகளைக் கண்டு களித்துள்ளேன். கடந்தகாலத்தில் நாங்கள் கண்ட பாராளுமன்றம் மிகவும் முன்மாதிரியான இடமாக இருந்தது. இதில் மிக முக்கிய கருத்துமிக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. மிகத் தர்க்கரீதியான வாதவிவாதங்கள் இடம்பெற்றன. பாடசாலைப் பிள்ளைகளைப் போன்று மூத்தவர்களும் அவற்றைப் பார்க்கும், செவிமடுக்கும் ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள உறுப்பினர்கள் எல்லா வகையிலும் முயற்சித்தனர். 

மக்கள் அன்று பாராளுமன்றத்தை மதித்தனர். மக்கள் பிரதிநிதிகளை மதித்தனர். எனினும் பிற்பட்ட காலங்களில் இந்த மரியாதை படிப்படியாக குறைந்து போயிற்று. 

இந்தப் பாராளுமன்றம் மீண்டுமொருமுறை மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடும், தேசியக் கொள்கைகளை விவாதிக்கும் சட்டவாக்கத்துறையின் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றும் முன்மாதிரியானதொரு இடமாக மாற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தை மக்களின் மதிப்பை வென்றெடுக்கும் ஒரு இடமாக மாற்றியமைக்கும் அடிப்படைப் பொறுப்பு இங்கிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளிடமே தங்கியுள்ளது.

இன்று இந்நாட்டில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் கழிந்த பின்னரும்கூட இந்நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் நாம் திருப்தியடைய முடியாது. 

இந்நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது சார்பில் தேவையான அர்ப்பணிப்புக்களைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படைப் பொறுப்பாவது மக்களுக்குச் சேவையாற்றுவதேயாகும்.

எமக்குக் கிடைத்துள்ள பதவிகள் சிறப்புரிமைகள் அல்ல அவை பொறுப்புக்கள் என்பதை நாம் அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நாடொன்றை முன்னேற்றுவதற்காகச் சீரான தொலைநோக்கும், திட்டங்களும் தேவைப்படுகின்றது.

 ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டின் மக்களுக்கு அறிமுகப்படுத்திய “சுபீட்சத்தின் நோக்கு”: எனும் கொள்கைக் பிரகடனமானது சுமார் 4 வருடங்களுக்குக் கிட்டிய காலமாக ‘வியத் மக’ போன்ற தேசிய அமைப்புக்களூடாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தினூடாகவும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நிகழ்த்திய விவாதங்களூடாகவும் மக்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டும் எனது நோக்கையும் அதில் சேர்த்துக் கொண்டும் தயாரித்த தேசிய வேலைத்திட்டமாகும்.

அத் திட்டத்திற்கமைய மக்களுக்குச் சுமையாகவிருந்த வரிச்சுமையை தளர்த்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறமையுடன் கூடிய உயர்ந்த நிருவாகத் திறமுறையை ஆரம்பித்தல், வீணான அரசாங்கச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளல் போன்ற பல நடவடிக்கைகளைத் தற்போது நாங்கள் எடுத்துள்ளோம்.

எமது கொள்கைகளினிடையே தேசியப் பாதுகாப்புக்காக உச்சக் கட்ட முன்னுரிமை கிடைக்கின்றது. தேசியப் பாதுகாப்புப் பொறிமுறையை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். திறமை வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பொறுப்புக்களை கையளித்துள்ளோம். தேசியப் பாதுகாப்புக்கான பொறுப்புடைய முப்படைக்கும், பொலிசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய உளவுப் பிரிவு வலையமைப்பை மறுசீரமைத்து வலுப்படுத்தியுள்ளோம்.

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

எமது அடிப்படை நோக்கமானது உற்பத்திப் பெருக்கமுள்ள ஒரு பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற குடும்பம், ஒழுக்கம் மிக்க சமூகம் மற்றும் சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவதேயாகும்.

இந் நாட்டில் வாழுகின்ற, வேலை செய்யக்கூடிய வயதிலுள்ள ஒவ்வொரு ஆரோக்கியமான பிரஜையையும், சமூகத்திற்கு உழைக்கக் கூடிய உற்பத்திப் பெருக்கமிக்க பிரஜையாக மாற்றுவதில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்வதே எமக்குத் தேவையாகிறது.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரப்படுவதில் நாங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டு மக்களின் தேவைகள் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றனவா, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக புதிய திறமுறையொன்றையும், சுட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். 

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கான மக்களின் பதிலை ஆராய்வதற்காகத் தேர்தல் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அனைவரதும் ஆதரவு எமக்குத் தேவைப்படுகிறது. 

கடந்த நாட்களில் நாங்கள் வியாபாரத்துறைக்காக வழங்கிய வரிச்சலுகைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கமைய வரிகள் குறைக்கப்பட்ட ஒவ்வொரு பண்டத்தினதும், ஒவ்வொரு சேவையினதும் குறிப்பிட்ட விலை குறைக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

வறுமையை ஒழிப்பது எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் ஏழைகளாவதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். தகுந்த கல்வியோ அல்லது திறமையோ இல்லாமை, பயிரிடுவதற்குக் காணிகள் இல்லாமை, சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மூலதனம் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும் நடைமுறை சாத்தியமான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்வரும் மாதத்தில் இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். அரச துறையையும், தனியார் துறையையும் ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலின்மைக்காகப் நடைமறை சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது.

குணநலமிக்க, சட்டத்தை மதிக்கும், ஒழுக்கப் பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவோம் என்பது கடந்த தேர்தலின்போது எமது தொனிப்பொருளாக இருந்தது. மக்கள் அதற்காக எமக்கு வரமொன்றை அளித்துள்ளார்கள்.

எமது நாடு மிகவும் பண்டையகால வரலாற்றுமிகுந்த பௌத்த தத்துவத்தைப் போன்று உலகினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல மத போதனைகளினால் போஷிக்கப்பட்ட சமூகம் வாழும் நாடாகும். எமது விழுமியங்களையும், கலாசாரங்களையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். இலங்கையை அபிவிருத்தியடைந்ததொரு நாடாக உருவாக்குவது எமது இலக்காகும். அது இறைமையான, சுதந்திர நாடாதல் வேண்டும். அதேபோன்று அது பாதுகாப்புமிக்க அமைதியான நாடாதல் வேண்டும். இவ் அனைத்துப் பிரிவுகளும் நிறைவுபெறுமிடத்தே இலங்கை உண்மையிலேயே சுபீட்சமானதொரு நாடாகும்.

ஒவ்வொரு பிரஜைக்குமாக ஏற்றுக் கொள்ளத்தக்க மட்டத்திலான பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல், முன்னேறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குதல், மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தூய்மையான அத்துடன் வினைத்திறன்மிக்க அரச சேவையை உறுதிப்படுத்தல் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாத்து அவர்களை வலுவூட்டுதல் அதன் முக்கிய நோக்கமாகும்.

மக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தினை வெற்றிகரமாகத் தாபிப்பதாயின் அரசாங்கத்தின் உச்சக் கட்ட உத்தியோகத்தர்கள் தொடக்கம் குறைந்தபட்ச உத்தியோகத்தர் வரை நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எமது நோக்கு மற்றும் நோக்கங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போது அவர்களின் கடமைகளை மிகவும் செயற்திறனான முறையில் நிறைவேற்றலாம்.

ஊழல்கள் மற்றும் மோசடிகளைப் புறக்கணிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நாங்கள் செயற்படுத்த வேண்டியுள்ளது. ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நாங்கள் அந்தஸ்த்தைக் கருதாது சட்டத்தை விரைவில் செயற்படுத்தவுள்ளோம்.

இன்று அநேகமான நாடுகள் அரசதுறையின் வினைத்திறமையை உயர்த்துவதற்காகத் தொழில்நுட்பத்தை தீர்வொன்றாக பயன்படுத்தியுள்ளனர். அதனூடாக அனைவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்க முடியும். அதனால் அரச நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பரவலாக்குவதன்பால் நாங்கள் விசேட கவனத்தைச் செலுத்துகின்றோம்.

எமது நாட்டின் பூகோள ரீதியிலான அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது. இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையானது கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா உள்ளிட்ட பல்லின வியாபாரிகள் வருகின்ற சர்வதேச வியாபார நிலையமாகவிருந்தது. இலங்கை அவ்வாறு உலகில் பிரபல்யமாவதற்கு முக்கிய காரணமானது கீழைத்தேய மற்றும் மேலைத்தேய இணைப்பை ஏற்படுத்தும் கடல்பாதையில் மிக முக்கியமானதொரு இடத்தில் எமது நாடான இலங்கை அமைந்திருத்தலாகும். இன்றும் நாம் அச்சலுகையை அவ்வாறே பெற்றுக்கொள்ள முடியுமாகவுள்ளது.

2005 – 2014 இடைப்பட்ட காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை தென் ஆசியாவின் பொருளாதார மையமாக முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்தது. மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகமானது தென் மாகாணத்தின் மாபெரும் தொழில்நுட்ப நகரத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே தெரிவு செய்யப்பட்டது.

இலங்கையை ஆசியாவில் நிதிசார் மற்றும் வர்த்தக மையமாக உருவாக்குவதற்காகவே கொழும்பு துறைமுக நகரத்தை கட்டியெழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. நீண்டகால நோக்கங்களுடன் திட்டமிடப்பட்ட அக்கருத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

நாங்கள் செவ்வையான ஒரு திட்டத்தின்படி செயற்பட்டால் பிராந்திய அயல் நாடுகளுக்குப் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற பல்வேறு சர்வதேச வியாபாரங்களை இலங்கையில் நிலைப்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அம்முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் தேவையான சகல வசதிகளையும் துரிதமாக வழங்குவதற்காகவும் நாங்கள் தயாராகவிருத்தல் வேண்டும்.

அதிவேகப் பாதைத் தொகுதிகளைப்போன்று நெடுஞ்சாலைத் தொகுதிகளை முன்னேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் இன்னுமொரு இடத்திற்குச் சில மணித்தியாலயங்களினுள் பயணிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. புகையிரதச் சேவையை மேம்படுத்துதலும் இவ்வேலைத்திட்டத்தின் அவசியமானதொரு பிரிவாகும். 

வினைத்திறன்மிக்க அத்துடன் சொகுசு முறையிலான புகையிரதச் சேவையின் மூலம் இன்று பாரியதொரு பிரச்சினையாக நிலவுகின்ற வீதி நெருக்கடிக்கான தீர்வுகளைக் காண முடியும். நகரமயமாக்கல் ஒரு நாட்டிற்கு நன்மையைப்போன்று தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. 

அபிவிருத்தி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எமக்கு மீள் நகரமய வேலைத்திட்டமொன்று தேவைப்படுகிறது. இதனூடாக நகரப்புற நெருக்கடியைக் குறைப்பதற்கும், சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கும், அதேபோன்று வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கும் எமக்கு வசதி கிடைக்கிறது.

இலங்கைபூராகவும் பரந்திருக்கும் மக்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகள், சுகாதாரச் சேவைகள் மற்றும் தொழில்கள் என்பவற்றை நடாத்திச் செல்வதற்காக தமது பிரதேசத்தினுள் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டும். வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைத் தொகுதிகளின் முன்னேற்றத்தைப்போன்று நாடு முழுவதிலும் அதிவேக சர்வதேச வலையமைப்பு வசதிகள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் என்பவற்றை இதற்காக வழங்குதல் முக்கியமாகிறது.

பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டின்போது மின்சார விலைகள் முக்கிய காரணியாகும். குறிப்பாக பொருளாதாரத்துறைகளுக்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும்போது இது அழுத்தம் செலுத்துகின்றது. நியாயமான விலைக்கு வலுசக்தியை உற்பத்தி செய்வதற்காக எமக்குக் குறுகியகால அத்துடன் நீண்டகாலத் தீர்வுகள் தேவைப்படுகிறது. நீண்டகாலத் தீர்வுகளைத் தேடும்போது சூரிய சக்தி, காற்றின் சக்தி, நீர் மின்சாரம் போன்ற சுற்றாடல் நேயமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய மூலங்களின்பால் முக்கிய கவனம் செலுத்துவது எமது கொள்கையாகும்.

எமது நாடு இரத்தினக்கற்கள் மற்றும் கனிய வளங்கள் நிறைந்த நாடாகவிருப்பினும் அவற்றின் பெறுமதியை அதிகரிக்கும் தொழில்கள் இற்றைவரைக்கும் சர்வதேச ரீதியில் முன்னேற்றமடையவில்லை. பெறுமதியை அதிகரிக்காது இத்தகைய இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகளவிலான அந்நியச் செலாவணியை வருடாந்தம் இழக்க நேரிடுகிறது.

இலங்கையில் மட்டுமன்றி ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலிருந்துகூட கொண்டுவரப்படும் இரத்தினக்கற்களின் பெறுமதியை அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய சர்வதேச ரீதியிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொகுதியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல்கள் மற்றும் புவிச்சரிதவியல் அளவைகளுக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டுமென்பதுடன், இலங்கையின் கனிய வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும் கைத்தொழில்களுக்கான முதலீடுகளுக்கு விசேட சலுகைகளை வழங்கி அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

பல்வேறு சட்டதிட்டங்கள், அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றின்மீதான தடைகளின் மூலம் இலங்கையின் பாரம்பரிய வாழ்வாதாரங்களாகிய இரத்தினக் கல் தொழில், ஓட்டுக் கைத்தொழில், செங்கல் கைத்தொழில், தச்சு வேலை மற்றும் கைத்தொழில்கள் போன்ற துறைகளுக்காக அநாவசியமான அத்துடன் அநீதியான வரையறைகளை விதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையேற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் முதலியன தொடர்பாகத் தற்போது இருப்பதைவிட முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்ததொரு காலநிலை இருக்கின்ற அத்துடன் அதிவிசாலமான கடல்சார் பொருளாதார வலயத்திற்கு உரித்துடைய நாடென்ற ரீதியில் நம்மால் இத்தொழிலை இதை விட மிகவும் முன்னேற்ற முடியும்.

சரக்குப் பொருட்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், தானியங்கள், மாமிசம் மற்றும் மீன் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய கமத்தொழில் உற்பத்திகள் பல இருக்கும்போது இதைவிட ஏற்றுமதி வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். 

நாட்டில் வாழும் மக்களின் 1/3 பங்கினர் கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் என்பவற்றின்மீது வாழ்கின்றனர். நாங்கள் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

இத்தொழில்களை முன்னேற்றுவதற்காகப் பாரம்பரிய செய்கை முறைகளுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது. அதேபோன்று நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை நோக்காகக்கொண்ட கமத்தொழிலுக்காகச் சேதனப் பசளைப் பயன்பாட்டை பரவலாக்குதலும் எமது கொள்கையில் ஒரு பகுதியாகும். எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கையில் கமத்தொழிலை முற்றுமுழுதாகச் சேதனப் பசளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும். உள்ளூர் ரீதியாக சேதனப் பசளை உற்பத்தியை விருத்தி செய்யும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்குகின்றது.

கமத்தொழில் உற்பத்திகளை வரையறையின்றி மீள் ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால் சிறிய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செயற்பட்டது. கமத்தொழில் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்வதை முற்றும் முழுதாக நிறுத்துவதற்கு தற்போது பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக முறையானதொரு வேலைத்திட்டமொன்றை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகச் சகல கடற்றொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்துவதுடன், தேவைகளுக்கேற்ப புதிதாக துறைமுகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்நீர் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுதலும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதலும் எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்காலச் சந்ததியினர் சார்பில் சூழலைப் பாதுகாத்தல் எமது அடிப்படைப் பொறுப்பாகும். அரச கொள்கைகளைத் தயாரிக்கும்போதும், செயற்படுத்தும்போதும் சூழல் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் முக்கிய கவனத்தைச் செலுத்துவோம்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றும் போது உலகில் முன்னணியில் திகழ்கின்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு நாடென்ற வகையில் எமக்குள்ள மிகப் பெறுமதியான வளமானது எமது எதிர்காலச் சந்ததியாகும். அதனால் மனிதவள அபிவிருத்தியை எமது அரசாங்கத்தின் முக்கியமானதொரு பொறுப்பு என நாங்கள் இனமறிந்துள்ளோம்.

நாட்டின் எதிர்காலச் சந்ததியைப் பயன்மிகுந்த பிரஜைகளாக்குவதற்குத் தேவையான அறிவினால் அவர்களைப் போஷிப்பதற்கும், அவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவங்களை விருத்தி செய்வதன்பால் முக்கிய கவனம் செலுத்துவதற்கும் எமக்கு நேர்ந்துள்ளது. இளைஞர் யுவதிகளை வழிதவறவிடாது அவர்களுக்காக உயர்கல்விக்கும், தொழில்நுட்ப கல்விக்குமுள்ள வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மிகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும், அரசாங்கத்தின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இயலளவுகளை வினைத்திறமையாக பயன்படுத்துவதன் வாயிலாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும்

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இன்று பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்ற சில பாடநெறிகள் தொழிற்சந்தைக்கு ஏற்றவாறாக அமைவதில்லை. தற்கால தொழிற்சந்தை தேவைகளுக்காக எமது பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு தற்போது கற்கும் பாடநெறிகளுக்கு மேலதிகமாக அவர்கள் தன்னிச்சையாக பங்குபற்றக் கூடிய குறுகிய கால மேலதிக பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மாணவர்களை அனுமதிக்கும் போதும் அதேபோன்று சந்தை தேவைகளை இலக்கிட்டு பாடநெறிகளைத் திருத்தும் போதும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் கூடிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

நாட்டில் தற்போது உள்ள டிப்ளோமா மட்ட பாடநெறிகளை நடத்தும் நிறுவனங்களை முறையே பட்டமளிக்கும் தரத்திற்கு உயர்த்துவது அவசியமாகும். இதற்கான ஆரம்பமாக எமது ஆசிரியர் பயிற்சி பாடசாலைகள் மற்றும் தாதியர் பயிற்சி பாடசாலைகள் என்பவற்றை பட்டமளிப்பு தரத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையானது தற்போது கல்வித்துறையினுள் பிரச்சினையாகவுள்ளது.

அதேபோன்று தாதியர்களுக்காக தற்போது வழங்கப்படும் மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருடகால பட்டப் படிப்பு வரை உயர்த்துவதன் மூலமும், அவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு சர்வதேச தர அளவுகளின் கீழ் வெளிநாடுகளிலும் கூட சேவையாற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தி பெறாதவர்களும், சாதாரண தரம் வரை கற்றுக் கொண்டவர்களுமான மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் பிரிவின் அறிவினை விருத்தி செய்து கொள்வதற்காக இயந்திரவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரித் தொகுதியை வலுப்படுத்த வேண்டும். குறித்த நிறுவனங்களுக்காக வழங்கப்படும் ஒதுக்கீடுகளையும் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக சர்வதேச ரீதியில் தொழில்பயிற்சி பெற்ற ஊழியப்படையை உருவாக்க முடியுமானதுடன், உள்நாடு போன்று வெளிநாட்டுச் தொழிற்சந்தையிலும் உயர்ந்த சம்பளத்தைப் பெறக் கூடிய தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்க முடிகிறது.

தொழிற்துறையினுள் ஆங்கில அறிவு போதாமை பெருமளவிலான இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புக்களை இழக்கச் செய்கிறது. இதனால் இலங்கையின் ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கிலமொழியைக் கற்பிப்பதற்கான வசதிகளை முன்னேற்றுவதற்கும் அதற்குத் தேவையான ஆசிரியர்களை இணைப்புச் செய்வதற்கும் விசேட திறமுறையொன்றை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.

இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பதற்காக எமது வெளிநாட்டு தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்படாத ஊழியர்கள் அநேகமானோரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக ஒவ்வொரு துறையிலும் பயிற்சிபெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் எமது நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கும் சர்வதேச தொழிற்சந்தையினுள் எமது நாட்டின் பிரதிமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் முடிகிறது.

கல்வித்துறையானது ஒரு நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்குரிய வழியாகும். இலங்கைப் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையானோர் இன்று ஆசிய உயர்கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொண்டு இருக்கின்றனர். கல்விக்காக எமது பிள்ளைகளை அதி கூடிய பணச் செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கையின்பால் கவரச் செய்யும் விதத்திலான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சர்வதேச ரீதியில் தமது

தரப்படுத்துகைகளிலிருந்து மேலுயர்வதற்காக குறுகிய கால அத்துடன் நீண்டகால திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எமது நாடு முன்னேற்றமடைந்து வரும் நாடாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் உண்மையிலேயே இதிலிருந்து மீண்டு முன்னேறிய நாடாக வேண்டுமாயின் அதற்காக உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல் வேண்டும்.

5 பில்லியனுக்கும் கூடிய மக்கள் வாழ்கின்ற ஆசியாவினுள் இன்று மாபெரும் பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டு உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பணம் செலவழிக்கும் ஆற்றலுள்ள மத்திய வகுப்பின் சமுதாயம் கடுகதியாக விருத்தியடைவது இவ்வலயத்திற்குள்ளேயாகும். ஆகையால் எமது உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் ஆசிய பிராந்தியத்தினுள் புதிய சந்தைகளைத் தேடிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

21 ஆவது நூற்றாண்டானது அறிவை மையமாகக் கொண்ட நூற்றாண்டாக அழைக்கப்படுகிறது. செயற்கை புத்திக்கூர்மை (Artificial Intelligence) , உயிரினத் தொழில்நுட்பம் (biotechnology), ரொபோ விஞ்ஞானம் (robotics), 3D அச்சீடு, IOT உதிரிப்பாகங்கள் (Internet of Things) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னேற்றமடைகின்ற பல நாடுகள் இவ்யதார்த்தத்தைப் புரிந்துள்ளன. தொழில்நுட்ப மைய முதலீடுகளுக்காக அவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

எமது முதலீட்டுக் கொள்கையை முகாமை செய்யும் போது நாங்கள் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக எமக்கு எந்த வகையான முதலீடுகள் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கமைய நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி நாங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

எமது இளம் சந்ததியை புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதற்கும் அவற்றிற்குரிய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் ஈடுபடுத்துவது மிக முக்கியமாகும். அதற்காக தாமதிக்காமல் துரிதமாக தயாராவதற்கு நாங்கள் கல்வித்துறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோன்று இளம் சந்ததியினருள் ஆங்கில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமக்கான சந்தை வாய்ப்புக்கள் இருப்பது தொழில்நுட்பத்துறைகளில் மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எம்மால் இலகுவாக முன்னேற்றக் கூடிய மற்றுமொரு துறையாவது சுற்றுலாத்துறை கைத்தொழிலாகும். 2018 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறைக் கைத்தொழிலானது இன்னும் பல ஆண்டுகளினுள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாறுவதற்கு அவகாசம் உள்ளது. இதற்காக மிக முறையானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

ஜனநாயகத்தின் உச்சக்கட்ட பயனை அடைவதாயின் அரச நிருவாகத்தையும் உரியவாறு செயற்படுத்த வேண்டும். அரச நிறுவனங்களை இலாபகரமாக அத்துடன் வினைத்திறமையாக நிருவகிப்பதற்காக உயர் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்யும் போது உரிய துறையின் அறிவும் பொறுப்பை வகிப்பதற்கான தகைமையும் கொண்டுள்ளவர்களை நியமிப்பதாக நாங்கள் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டோம். அதற்கமைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் அரச நிறுவனங்களை நிருவகிப்பதற்காக பொருத்தமானவர்களைப் பரிந்துரைப்பதற்கு நாங்கள் குழுவொன்றைத் தாபித்துள்ளோம்.

2004 – 2014 இடைப்பட்ட காலத்தினுள் நாங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் துரிதமான அபிவிருத்தி ஏற்படும் விதத்தைக் கண்டோம். வீதித் தொகுதி, வீடமைப்பு, மின்சாரம், நீர், தொடர்பாடல் வசதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளிலும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவம், நகர அலங்கரிப்பு போன்ற துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. திறமையான நிருவாகத்தினை தாபித்தலின் மூலம் எம்மால் மீண்டும் இந்த நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமை தங்கியிருக்கும் அடிப்படையாவது அரசியலமைப்புச் சட்டமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற மற்றும் குழப்பமான தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

எமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதாகவிருப்பின் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டும். விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான இலட்சணங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றது.

இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் ஒரு நாட்டிற்கு பொருந்தாது. மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் விசேட அமைவினால் உலகரீதியான புவி அரசியலினுள் முக்கிய கவனம் தற்போது இலங்கையின்பால் செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவோம்

நாங்கள் அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆயினும் ஒருபோதும் நாம் எமது சுயாதீனத் தன்மையைக் விட்டுக் கொடுக்க முடியாது. இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாடோடும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசிய அபிமானத்தைப் பாதுகாக்கின்ற கௌரவமான ஆட்சியை நாம் உருவாக்குவோம்.

முக்கியமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எமது நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு உடமையாக்காதிருத்தல் எமது கொள்கையாகும்.

இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது எனது அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் போது ஒரு இனம் என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எமது முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றி பெறவும் முடியும்.

நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமைப்படுகின்றேன். எனக்கு எனது நாடு தொடர்பான தொலைநோக்குள்ளது. வரலாற்றினால் தற்கால சந்ததிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பைக் கையேற்பதற்கு என்னுடன் ஒன்று சேருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles