2020 பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களத்தில் எல்லாத் தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதே எமது பிரதான அடைவாக இருக்கும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் இன ரீதியிலான துருவமயப்படுத்தல் மிகவும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டமையும் அதற்கான சாதகமான களநிலவரங்கள் கட்டமைக்கப்பட்டமையும் நாடறிந்த உண்மையாகும், ஒரு சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகம் தேர்தல்கள பலிக்கடா ஆகிவிடுவது போருக்குப் பின்னரான இலங்கையில் புதியதோர் அரசியல் கலாசாரமாக ஆகிவிட்டுள்ளது.
அதே துருவமயமாக்கள் யுக்தியும் உஷ்ணமும் பொதுத் தேர்தல் காலத்திலும் சூடு பிடித்திருப்பதனை நன்கு அவதானிக்க முடிகிறது, துருவமயமாக்கள் எடுத்த எடுப்பில் சிறுபான்மை சமூகங்களிற்கு பாதகமானது போன்று தெரிந்தாலும் நீண்டகாலத்தில் அது ஒட்டு மொத்த தேசத்தையும் அழிவின் விளிம்பிற்கே அழைத்துச் செல்லும் என்பதனை எமக்கு கடந்தகால வரலாறு உணர்த்தியிருக்கின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் நிலவிய இனமுறுகல் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை காவு கொண்டுள்ளது, யுத்தத்திற்காக இந்த நாடு சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரயம் செய்துள்ளது, சுமார் ஒன்றரை இலட்சம் உயிர்களை இழந்துள்ளது, சரவதேச பிராந்திய சக்திகளின் பொறிகளுக்குள் நாட்டை சிக்க வைத்துள்ளது, மீள முடியா கடன் சுமைகளுக்குள் நாடு சிக்கித் தவிக்கிறது.
எனவே துருவமயமாக்கள் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு பாரிய சவாலாகும், அதற்குப் பரிகாரம் இனரீதியாக நாமும் துருவமயமாதல் ஆகாது, மாறாக ஏனைய தேசிய சக்திகளுடன் கைகோர்த்து அத்தைய சவால்களிற்கு முகம் கொடுப்பதே காலத்தின் கட்டாயமாகும், இனரீதியாக எமது பிரதிநிதித் துவங்களை தக்கவைத்துக் கொள்ள நாம் மேற்கொள்கின்ற தேர்தல் வியூகங்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் எம்மை மென்மேலும் தனிமைப் படுத்துவதாக அமைந்து விடக் கூடாது!
கடந்த காலங்களில் நாம் நல்லாட்சி பொல்லாட்சி என எல்லாத் தரப்புகளிடமிருந்தும் கசப்பான பாடங்களைக் கற்றிருக்கின்றோம், என்றாலும் தேசிய அளவில் எமது சமூகத் தலைமைகள் நிபந்தனைகளற்ற தமது ஆதரவை ஒரு சில தரப்புக்களுக்கு வழங்கியும் இருக்கிறார்கள்.
எமக்கெதிராக அரங்கேற்றப்பட்ட காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அத்தனைக்கும் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்களே இருந்திருக்கின்றன.
அத்தகைய அனைத்து அடாவடிகளுக்கும் பின்னால் சர்வதேசிய பிராந்திய உளவு தாபனங்களும் அவர்களது உள்நாட்டு கூலிப் படைகளும் இருப்பதனையும் நாம் அறிவோம்.
பெரும்பான்மையான பெரும்பான்மையினர் நல்லவர்கள் என்று பேசியபோதும் எமக்கும் அவர்களுக்கும் இடையில் அரசியல் உள்நோக்கங்களுடன் பாரிய இஸ்லாமொபீதிப் பிரிவினைச் சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டன.
பிரதான அரசியல் சக்திகளும் ஊடகங்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கவும் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கவுமாக தமது அரசியல் இழப் நஷ்டங்களில் குறியாக இருந்தார்கள்.
ஒட்டு மொத்த சமூகமும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலைமைகள் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட பொழுது நாடளாவிய ரீதியில் சமாதான சகவாழ்வு கேள்விக்கு உற்படுத்தப் படுவதனை நன்கு உணர்ந்து கொண்டோம்.
அத்தகைய கசப்பான அனுபவங்களின் பொழுது நாம் உணர்ந்த மிகப்பெரிய யதார்த்தம் நாம் இந்த தேசத்தில் குறிப்பாக தென்னிலங்கையில் அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தப் பட்டிருக்கின்றமையாகும்.
தேசிய வாழ்வில் நாம் தனிமைப் படுத்தப் படுகிறோமா அல்லது எம்மை நாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோமா என்ற ஆராய்கிற பொழுது ஒரு சமூகமாக நாம் பாரிய தவறுகளை இழைத்திருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்!
குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களாக தடம்புரண்டு பயணிக்கின்ற எமது தனித்துவ அடையாள அரசியல் கொண்டுவந்த சாதனைகளை விடவும் சோதனைகளே அதிகம் என்பதனையும் அதன் கசப்பான பின்விளைவுகளே எம்மை இன்று நாதியற்றவர்களாக நட்டாற்றில் விட்டிருக்கின்றன.
போருக்குப் பின்னரான இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜகங்களின் பொழுதும் எமது அரசியல் தலைமைகளால் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையே காணப்பட்டது.
எனவே, இந்தத் தேர்தல் காலத்தை மற்றும் களத்தை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தேசிய வாழ்வில் சமாதான சகவாழ்வின் களமாக திட்டமிட்டு கையாள வேண்டும், எமக்குள்ளும் ஏனைய சமூகங்களோடும் நல்லுறவைக் கட்டி எழுப்பிக் கொள்ளும் அரிய சந்தர்ப்பமாக இந்த தேர்தல் களத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளல் கட்டாயமாகும்.
நாம் எந்தக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தாலும், எமக்குள் பல்வேறு இயக்க வேறுபாடுகள் இருந்தாலும் தேசிய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை என்பதனை மனதில் கொள்ள வேண்டும், ஊரில் உள்ள ஆதரவாளர்கள் தமக்குள் பிவுகளை பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதியிலும் உள்ள பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்கள் தொண்டர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள இந்த சந்தர்பத்தை கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு பிரதான் கட்சிகள் உற்பட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள் பல கட்சிகளைப் போன்று பல இனங்களையும் மதங்களையும் சேர்ந்த வேட்பாளர்கள் அமைப்பாளர்கள் தொண்டர்கள் என தேர்தல் களத்தில் பிரச்ச்ரங்களில் ஈடுபட விருக்கின்றார்கள்.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அவர்கள் உங்கள் பிரதேசங்களுக்கு வரும் பொழுது சகலரும் ஓரணி நின்று வேறுபாடுகளை காட்டிக் கொள்ளது அவர்களை வரவேற்று உபசரித்து உங்கள் தேவைகளை எதிர்பார்ப்புகளைச் சொல்லி வழியனுப்பி வையுங்கள்.
சமாதான சகவாழ்வு என்பது வெறுமனே பள்ளிகளிலும் பன்சலைகளிலும், கோயில்களிலும் ஆலயங்களிலுமாக இருப்பதனை விட எல்லோருக்கும் பொதுவான தேசிய விவகாரங்களில் – அரசியல் சமூக பொருளாதார கல்வி கலை கலாசார சுகாதார சுற்றுச் சூழல் என பல்துறைகளிலும்- நாம் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதே யதார்த்தபூர்வமான சகவாழ்விற்கு இட்டுச் செல்லும்.
இந்த நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் 50 இற்கு மேற்பட்ட அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும், சுமார் 300 மாகாண சபை உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும் ஒன்பது ஆளுனர்களும் , 8400 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் இருக்கும் பொழுது நாம் இன ரீதியாக எம்மை தனிமைப் படுத்திக் கொள்வது உச்ச கட்ட அறியாமையாகும்!
அவர்களுக்குப் புறம்பாக அரச நிர்வாக சேவைகள் தனியார் துறைகள், காவல்துறையினர், பாதுகாப்புத் துறையினர் என பெரும்பான்மையான பெரும்பான்மை சமூக ஊழியர்களுடன் அரச பணியாளர்களுடன் எமது உறவுகளை வளர்த்துக் கொள்ள தவறி விடுகிறோம்.
குறிப்பாக இந்த தேர்தல் காலங்களில் மேற்படி மக்கள் பிரதிநிதிகளுடனும், கட்சி அமைப்பாளர்கள் தொண்டர்களுடனும், அரச பணியாளர்களுடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இந்த தேசத்தின் பிரஜைகள் என்ற வகையில் நெருக்கமான நல்லுறவை நாம் வளர்த்துக் கொள்வது தீய சக்திகளுக்கு நாம் வழங்கும் தண்டனையாக இருக்கும்.
ஜனாதிபதி, பொதுத் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய தேர்தல்களின் பொழுதும் இன ரீதியாக குறிப்பாக தென்னிலங்கையில் தனிமப்பட்டு முஸ்லிம்கள் செயற்படுவதனால் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது, தேவைகளின் பொழுது மட்டும் ஏனைய சமூக மக்கள் பிரதிநிதிகளை நாடுவது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப் படுகின்ற பொழுதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுகின்ற சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப் படுகின்ற பொழுதும் எங்கோ இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளை நம்பி அருகில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியாத நிலையில் சமூகம் இருந்திருக்கிறது.
நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தேசிய அரசின் பிரதானிகளை நேரடியாக அணுகும் வாய்ப்பு மிகவும் குறைவாகும், குறிப்பிட்ட ஒருசில அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுகளை அதிகாரிகளை அணுகுவதற்கும் பாதுகாப்பு கெடுபிடிகளின் பொழுதும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை உடனடியாக அணுகுவதற்கும் அவ்வப் பிரதேசத்திலுள்ள ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை நாம் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த நட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்கள் குறிப்பாக குளியாபிடிய மினுவங்கொட பகுதிகளில் நிர்க்கதியான முஸ்லிம்கள் தமக்காக குரல் கொடுக்கவும் கைகொடுக்கவும் அந்தப் பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையை உணர்ந்தனர்.
நாடளாவிய ரீதியில் முஸ்லிம் வீடுகள் முற்றுகையிடப் பட்ட பொழுதும் கைதுகள் இடம் பெற்றபொழுதும் ஹிஜாப் அபாயா அரபு நூல்கள் கத்தி வால்கள் என அனைத்தும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப் பட்ட பொழுதும், அரபு மதரசாக்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் செயற்பட்டாளர்கள் அச்சுறுத்தப் பட்ட பொழுதும் அரசை தங்கிப் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் கூட கையறு நிலையில் இருந்தனர்.
இதே நிலைதான் கடந்த அரசின் காலத்திலும் இருந்தது இன்றுவரை பதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடுகள் முறையாக பெற்றுத் தரப்படவில்லை, ஆட்சிபீடத்தில் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பாதிக்கப் பட்ட இடங்களை பார்வையிடவும் படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவும் மத்திரமே முடியுமாக இருந்தது.
இந்த பொதுத் தேர்தல் மட்டுமல்ல இனி வரவுள்ள அனைத்துத் தேர்தலகளிலும் முஸ்லிம்கள் தாம் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்களை மறந்து விடாது புத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும், மொத்த மற்றும் சில்லறை அரசியல் வியாபாரிகளை கொந்தராத்து முகவர்களை நம்பி அருகிலிருக்கும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளை கோட்டை விட்டு விடக் கூடாது.
இறுதியாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், நீங்கள் இன்று ஒரு கூட்டணி மேடையில் இருந்து கொண்டு பிரதான வேட்பாளர்களை விஞ்சுமளவிற்கு உஷார் மடையர்கள் போல் எதிரணியிணைத் தாக்கி நிகழ்த்துகின்ற ஆக்ரோஷமான உரைகள் நாளை முஸ்லிம் சமூகத்தை பாதிக்க இடமிருக்கிறது என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
தென்னிலங்கை தொண்டர்களை கட்சி அமைப்பாளர்களை புதிய களநிலவரங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக வழிநடத்துங்கள், கூட்டணியின் அரசியல் பிரச்சாரங்களை நீங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எல்லா சமூகங்களோடும் இனைந்து நடத்துங்கள், முஸ்லிம்களை தனிமப் படுத்தாதீர்கள்.
இறுதியாக இந்த செய்தியை வசிப்பவர்கள் தத்தமது ஊர் பிரமுகர்கள் கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள், முறையான திட்டமிடலும் அணுகுமுறைகளும் இல்லாத ஒரு சமூகம் அடுத்த சமூகங்களைக் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை, அரசியலும் இராஜ தந்திரமுமும் நாம் பறிகொடுத்துப் பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.