வாழ்க்கை ஒரு அழகிய விளையாட்டு அல்லது அழகியற் கலை; நெறிமுறைகள் நுட்பங்கள் தவறாது கழிகின்ற பொழுதுகள் இனிமையானவை!
எல்லா வித்தைகளும் கற்றவன் எதையுமே சாதிக்காமல் ஓரமாய் காத்திருக்க ஏதோ ஓரிரு வித்தைகள் கற்றவன் சாதனைக்கு மேல் சாதனைகள் புரிந்து உச்சம் தொட்டு விடுகிறான்!
பொய் என்பது சொல் மட்டுமல்ல செயலும் தான்; நீ, நீயாகவல்லாது பிரிதொருவர் பிரதியாக இருக்க முயல்வதும் பொய்தான், உண்மையாய் இரு, பிறர் வேடம் தாங்கி நடித்து மாய்வதில் தரப்பட்ட வாழ்வு தொலைகிறது.
சத்திய வழி நின்று சாதிக்க நீ துணிந்தால் சாதி சனம் கூட தள்ளி நிற்கும்!
நட்பு வட்டங்கள் தீண்டாமை மேலென தாண்டிச் செல்லும்; எதிரிகளின் அம்புகளே உன் முகவரி சொல்லும்!
உண்மையாக நீதியாக நேர்மையாக வாழும் உங்கள் அத்தனை கனவுகளும் சிதைந்து போனாலும் விரக்தியடையாதீர்; உங்களுக்கென தனித்துவமான பிறவிப்பயன் இறைநியதியாக இருக்கும்! நிச்சயமாக பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்!
சர்ச்சைகளைத் தவிர்ந்து சமயோசிதமாக நடந்துகொள்ளத் தெரியாத மேதாவிகள் சட்டப் புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் அலைய வேண்டும்!
உடன்படுவதற்கு பலநூறு விடயங்கள் இருக்க முரண்படுவதற்கென்றே ஓரிரு விடயங்களை தூக்கிப்பிடித்து தர்க்கம் செய்வது உள்ளங்களில் நோயுடையவர் பண்பு என்பது குர்ஆனிய சிந்தனை!
அரசியல் உள்நோக்கங்களுடன் கூடிய இன மத வெறி ஆர்பரிப்புகளுக்கு அஞ்சி இஸ்லாமிய அமைப்புகள் நிறுவனங்கள் தமது வழமையான செயற்பாடுகளை முடக்கிவிடக் கூடாது. காலோசிதமான பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும்!
ஸ்ரீலங்காவில் தினமும் 64 புதிய புற்று நோயாளர் கண்டுபிடிப்பு, 38 புற்று நோயாளர் மரணம்; உணவுபான பழக்க வழக்கங்களில் முறையான மாற்றம் தேவை!
உங்களை விட அறிவும் ஆற்றலும் திறமைகளும் உள்ள ஒருவருக்கு சேர வேண்டிய அங்கீகாரத்தை பதவியை நீங்கள் செல்வம் செல்வாக்கு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து குறுக்கு வழிகளால் அடைந்து கொள்வது ஹராமான பகற் கொள்ளையாகும்!
ஒருவரது அறிவை ஆற்றலை திறமையை அங்கீகரித்து உரிய அந்தஸ்தை வழங்குவது அமானிதமாகும்; மறுப்பது (கியானத்) நம்பிக்கை மோசடி ஆகும்!
எல்லாமும் எல்லாரும் இருந்தும் எதுவுமே யாருமே இல்லை எனும் நிலை வரும் பொழுதுகளில் அல்லாஹ் மட்டுமே இருக்கிறான் எனும் உணர்வு மிகைக்கிறது!
இறந்து உப்பிப்போன ஆட்டிற்கு இடையனிடம் பெறுமதி இல்லை, ஒரு கொசுவின் இறக்கை அளவேனும் இந்த உலகும் அதில் உள்ளவையும் பெறுமதியுடவை என்றால் இறை நிராகரிப்பாளர்களுக்கு அருந்த நீரும் தரப்பட்டிருக்க மாட்டாது; இறைதூதர் விசுவாசிகளுக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள்.
வார்த்தைகளை அல்ல அழகிய நினைவுகளை ஆழ் மனங்களில் விட்டுச் செல்லுங்கள்; ஆயிரம் வார்த்தைகளை விட அழகிய நடத்தைகள் ஆழமான மனப்பதிவுகளை விட்டுச் செல்கின்றன!
உங்களிடம் பூரணத்துவத்தை எதிர் பார்க்கும் பலர் தங்கள் நிலை அறிவதில்லை; பொதுப்பணிகளில் பங்கெடுத்துக் கொள்ளாது கழுவுற மீணில் நழுவுற மீணாக இருக்கும் பலர் விமர்சனங்களுக்கு மட்டும் முண்டியடிப்பார்கள்!
வளவாளர்களாக கொஞ்சம் வலவலாளர்கள்; மணி மணியாக பேசினால் புரியும் விடயங்களை மணித்தியாலங்கள் பேசி குழப்பியடிக்கின்றனர்!
சதகா ஸகாத் மஸ்ஜித் கிணறு ஏழை அனாதை விதவை என நல்ல கருமங்களை புரிவோர் மீது அல்லாஹ் அருள் புரிவாணாக; சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் போன்ற உன்னதமான முன்னெடுப்புக்களிற்கும் அதே உணர்வுடன் உதவ நாம் பழகிக் கொள்ள வேண்டும்!
அகிலத்தையும் அண்ட சராசரங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து நடாத்தும் அல்லாஹ்வின் கலாமில் எத்தனை ஸுராக்களை எம்மால் பொருளுணர்ந்து ஓத முடிகிறது? ஜாஹிலிய்ய அறபிகளுக்கு புரியும் வண்ணம் அருளப்பட்ட அல்குர்ஆனை விட்டும் எம்மை தூரமாக்கியவர்கள் யார் ?
சொந்த மண்ணில் தகைமைகளால் பெற முடியா நிறைவேற்றுத் தராதர பதவிகளை சலுகைகளை கடல் கடந்து பல உறவுகள் தமது திறமைகளால் அடைந்துள்ளனர்; தகைமைகள் இருந்தென்ன பயன் உழைத்துயர சந்தர்ப்பங்கள் இல்லையெனில்!
க.பொ.த.சாதாரண, உயர்தர கற்கைகளை உத்தரவாதம் செய்யாத அறபுக் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்ப்பது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்; அடிப்படை ஹலாலான வாழ்வாதாரக் கற்கைகளை வழங்குவது நிறுவனங்களின் கடமையாகும்!
உங்கள் நேரடி ஈடுபாடு இல்லாத தெளிவான சட்ட வலுவுள்ள உடன்பாடுகள் அற்ற முதலீடுகளை எவருடனும் மேற்கொள்ளாதீர்கள்; எனக்கு நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிய இருவர் மார்க்கப் பற்றுள்ளவர்கள் என நான் நம்பிய எனது நிழலில் வளர்ந்த இரு நண்பர்கள்.
இல்லத்தை ஆளுவது ஒரு கெளரவமான முழு நேரப் பணி, மன்னரின் துணைவி இரானி எனின் கனவனின் தொழிலிற்கு நிகரான அந்தஸ்து மனைவிக்கும் உண்டு, உண்மையான இல்லத்தரசிகள் உள்ளத்தரசிகளே!
ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதி நீ மாலிகுல் முல்க், உரோம பாரசீக பேரரசுகளை உன் தூதருக்கு காட்டிய நீ .. வல்லரசுகளின் வலிமைகளை விடச் சிறந்த அமானிதத்தை அவருக்கும் அவரது உம்மத்திற்கும் தந்துள்ளாய்..!
வாழ்வில் மிகவும் தீர்க்கமான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வை கோபப்படுத்துகின்ற முடிவுகளை எடுக்காதிருப்போம்; தாரம், வாழ்வாதாரம் சார்ந்த முடிவுகள் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துகின்றவைகளாக இருந்தால் அந்த வாழ்வில் சொந்தங்களோடு வசந்தங்களும் வந்து உறவாடும்!
தனிப்பட்ட நலன்களுக்காக ஆள் பிடித்து, வால் பிடித்து, கால் பிடித்து அதிஷ்ட வசத்தால் அரசியல் செய்வோர் சொந்த இலாப நஷ்டக் கணக்குப் பார்த்தே உரிமைகள் சலுகைகளை கையாள்வர்; அவர்களை அவர்தம் எஜமானர் நன்கு அறிவர்!
அமெரிக்க அதிபரின்அரசியலுக்கு மத்திய கிழக்கில் இன்னும் ஒரு பேரழிவு தேவைப்படுகிறது, அங்கிங்கெனாது அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காய்களாவது முஸ்லிம்கள் தான்;
உள்வீட்டில் தான் கோளாறு!
அனாதரவாக இருப்போருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்போருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் அல்லாஹ் இருக்கிறான்;இல்லாமை இயலாமைகளுடன் நிர்க்கதியில் இருப்போருக்கு கைகொடுத்து அல்லாஹ்வின் அரவணைப்பை அடைந்து கொள்வோம்!
தொடுகின்ற உச்சங்கள் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துபவையாக இல்லாவிடின் அவை வாழ்நாள் சாதனைகள் ஆக மாட்டா வாழ் நாள் சோதனைகளாகவே இருக்கும்;
எந்தப் புகழும் பெருமையும் வானைக் கிழித்து எம்மை உயரச் செய்வதுமில்லை, பூமியைப் பிளந்து ஆழம் காணச் செய்வதுமில்லை!
இயற்கை நியதிகளுடன் இஸ்லாம் முரண்படுவதில்லை, ஏனெனில் அவற்றைப் படைத்த பிரபஞ்ச கர்த்தாவே மனித குலத்தையும் படைத்தான், அதனால் தான் இயற்கை அத்தாட்சிகளில் இருந்து படிப்பினைகள் பெறுமாறு அல் குர்ஆன் எம்மை வலியுறுத்துகிறது!
இரட்சகா “துன்யா” ஒன்றே எமது பெரிய கரிசனையாகவோ, எமது கல்வியின் அடைவாகவோ இருக்கச் செய்து விடாதே; இன்று உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் உறவுகளுக்கு எமது வாழ்த்துக்கள்!
முஸ்லிம் தேசிய அரசியல் புதிய பரிமாணங்களில் பயணிக்க சித்தாந்த கொள்கை கோட்பாட்டுத் தெளிவு அவசியம்; உள்நாட்டு போரிற்குப் பின்னரான தேசிய பிராந்திய பூகோள அரசியல் களநிலவரங்களை உள்வாங்கும் திராணி எமது தலைமைகளுக்கு இருக்க வில்லை!
மதங்கள் தாண்டிய மனிதாபிமானத்தின் மகத்தான தூது சொல்ல சுவர் ஓவியங்களை ஊடகமாக பயன்படுத்துவது காலோசிதமான தார்மீகக் கடமையாகும்; .நல்ல விடயங்களில் முந்திக் கொள்வது விசுவாசிகளின் பண்பாகும்!
இறந்து உப்பிப்போன ஆட்டிற்கு இடையனிடம் பெறுமதி இல்லை, ஒரு கொசுவின் இறக்கை அளவேனும் இந்த உலகும் அதில் உள்ளவையும் பெறுமதியுடவை என்றால் இறை நிராகரிப்பாளர்களுக்கு அருந்த நீரும் தரப்பட்டிருக்க மாட்டாது; இறைதூதர் விசுவாசிகளுக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள்.
MCC உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் வாதிகள் டாலர்களால் சந்தோஷப் படுத்தப் படுவார்கள்;. உள்நாட்டு அரசியல் சூதாட்டம் போன்றே பூகோள பிராந்திய அரசியல் இராஜதந்திர சூதாட்டங்கள்!
இனத்துவ அடையாளங்களை சந்தைப்படுத்தும் அரசியல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் செல்லுபடியாக மாட்டாது. சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் புதிய களநிலவரங்களை உள்வாங்கி தேர்தல் வியூகங்களை வகுத்தல் வேண்டும்!
உரிமைக்கான போராட்ட அரசியல் அல்ல சலுகைக்கான சூதாட்ட அரசியலே பெருந்தேசியவாதத்தை பெரிதும் காயப் படுத்தியுள்ளது; தேசிய அரசியல் நீரோட்டத்தில் புதிய தலைமுறை களமிறங்கி கால் பதிக்க வேண்டும்!
ஸுபஹு தொழாத பொழுதுகள் விடிவதில்லை, ஐவேளை தொழுகைகளுக்கு விடுமுறை நாட்களும் இல்லை, இருள் சூழும் ஆன்மாக்கள் தொழுகைகளால் ஒளியூட்டப் படுகின்றன!
வெளியுலகில் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை வீட்டில் உம்மா வாப்பாவிடமோ மனைவி/ கனவன் மக்களிடமோ ஏனைய உறவுகளிடமோ எகிறுவதன் மூலம் காட்டிக் கொள்பவர்களை மிருகங்கள் என அழைப்பது அவற்றிற்கு இழைக்கும் அநீதியாகி விடும்.